Wednesday, 26 November 2014

செய்திகள் - 25.11.14

செய்திகள் - 25.11.14
------------------------------------------------------------------------------------------------------

பிரான்ஸ் நாட்டின் Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய அவை உறுப்பினர்களுக்கும் உரைகள் வழங்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இந்த அழைப்புக்களை ஏற்று, நவம்பர் 25, இச்செவ்வாயன்று, Strasbourg நகருக்கு திருத்தந்தை மேற்கொண்ட பயணத்தின் விளக்கம்.

Pope Francis addressing the European Council 2

1. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திருத்தந்தை

2. ஐரோப்பிய பாராளுமன்றம் ஒரு விளக்கம்

3. திருத்தந்தை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வழங்கிய உரையின் சுருக்கம்

4. ஐரோப்பிய ஒன்றிய அவையில் திருத்தந்தை

5. திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பிய ஒன்றிய அவையினருக்கு வழங்கிய உரையின் சுருக்கம்

------------------------------------------------------------------------------------------------------

1. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திருத்தந்தை

நவ. 25, 2014. பிரான்சின் Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தன் ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தை இச்செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், 1988ம் ஆண்டு சென்றுள்ளார்.
உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு Strasbourg வந்தடைந்த திருத்தந்தையை, திருஅவை அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கிருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தைத் திருத்தந்தை வந்தடைந்தபோது, உள்ளூர் நேரம் காலை 10 மணி 35 நிமிடங்கள். ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் மார்ட்டின் சுல்ஸ் வெளியே வந்து நின்று திருத்தந்தையை வரவேற்றார். பாராளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் ஏறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு கூடியிருந்த பாராளுமன்ற அங்கத்தினர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களை நோக்கிக் கையசைத்து புன்முறுவல் பூத்தார். திருத்தந்தை அந்த மேடையில் நின்றுகொண்டிருக்க, வத்திக்கான் தேசியப் பண் இசைக்கப்பட்டதுடன், வத்திக்கான் நாட்டுக் கொடியும் ஏற்றப்பட்டது. அதன் பின் நாடுகளின் தலைவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வாசல் வழியாக ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் திருத்தந்தை. அங்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தங்கப் புத்தகத்தில் 'ஐரோப்பா தன் நிகழ்காலத்தை நம்பிக்கையுடன் வாழ்வதற்கு உதவும் நோக்கில், தன் கடந்த காலத்தைக் கவனத்தில் கொள்ளவும், வருங்காலத்தை உற்று நோக்கவும், ஐரோப்பிய பாராளுமன்றம், உரிய இடமாக இருப்பதாக' என எழுதி கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 
அதன்பின், பாராளுமன்றத் தலைவருடன் சிறிது நேரம் தனியாக உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாராளுமன்ற அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் தலைவர் மார்ட்டின் செல்ஸ், திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்க, திருத்தந்தையும் தன் உரையை அங்கு குழுமியிருந்த ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கு வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை முடித்தபோது, பாராளுமன்ற அங்கத்தினர்களின் கைதட்டல் தொடர்ந்துகொண்டேயிருந்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் இடைவெளியின்றி தொடர்ந்து நீடித்த இந்த கைதட்டல், ஐரோப்பிய பராளுமன்றத்திற்கே புதியதாகவும் புதுமையானதாகவும் இருந்திருக்கவேண்டும்.
இந்த பாராளுமன்றக் கட்டிடத்தில் திருத்தந்தையைக் காண 97 வயது ஜெர்மன் மூதாட்டி ஒருவர் வந்திருந்தார். இவர் 1985ம் ஆண்டு, திருத்தந்தை ஒரு குருவாக ஜெர்மனியில் அந்நாட்டு மொழியைக் கற்றுக்கொண்டிருந்தபோது, அவருக்கு இருமாதங்கள் தன் வீட்டில் தங்குமிடம் கொடுத்தவர். தன் வயதையும் பொருட்படுத்தாமல் திருத்தந்தையைக் காண வந்திருந்த இந்த அம்மையாரை பாராளுமன்ற தலைவர் மார்டின் சுல்ஸ், திருத்தந்தைக்கு முன் அழைத்து வந்தார். திருத்தந்தையும் நன்றிப்பெருக்கோடு அந்த அம்மையாரைத் தழுவி சிறிது நேரம் தனியாக உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஐரோப்பிய பாராளுமன்றம் ஒரு விளக்கம்

ஐரோப்பிய பாராளுமன்றம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அவையாகும். இதில் 751 பிரதிநிதிகள் உள்ளனர். மக்களால் நேரடியாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பராளுமன்றங்களுள் இது இரண்டாவது மிகப் பெரிய பாராளுமன்றமாகும். முதலாவதாக வருவது இந்திய பாராளுமன்றம். உலகிலேயே நாடுகளுக்கிடையே ஏறத்தாழ 37 கோடியே 50 இலட்சம் வாக்காளர்களைக்கொண்டு இவ்வளவு பெரிய அளவில் தேர்தலைச் சந்திப்பதும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம்தான். இந்தியாவில் நடக்கும் தேர்தல் நாடுகளுக்கு இடையேயானதல்ல.
28 அங்கத்தினர் நாடுகளைக்கொண்ட இந்த பாராளுமன்றத்தின் அங்கத்தினர்கள், நாடு வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் செய்ல்படுவதோ கட்சிவாரியாகத்தான். 751 அங்கத்தினர்களும்  7 முக்கிய கட்சிக்கொள்கைகளின் கீழ் குழுக்களாக செயல்படுவதுடன், அந்த 751 அங்கத்தினர்களுக்குள்ளேயே, எந்தக்கட்சியையும் சாராமல் 52 பேரும் உள்ளனர். ஐந்தாண்டிற்கு ஒருமுறை ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும். எட்டாவது முறையாக, இப்பாராளுமன்றத்திற்கான தேர்தல், இவ்வாண்டு மேமாத இறுதியில் இடம்பெற்றது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள முக்கியக்கட்சிகளாக EPP எனப்படும் ஐரோப்பிய மக்கள் கட்சியையும் S&D எனப்படும் சோசலிஸ மற்றும் சனநாயக முன்னேற்ற கூட்டணியையும் குறிப்பிடலாம். ஐரோப்பிய பாராளுமன்றம், Strasbourg, Luxembourg மற்றும் Brussels என்ற மூன்று இடங்களிலுள்ள அலுவலகங்கள் வழியே செயலாற்றுகின்றது. ஐரோப்பிய பாராளுமன்றம் Strasbourgல் இருக்கும் அதேவேளை, அதன் பொதுச்செயலகம் எனப்படும் நிர்வாக அலுவலகங்கள் Luxembourgல் உள்ளன. பாராளுமன்றத்தின் பல்வேறு அவைகளின் கூட்டங்கள் Brusselsல் இடம்பெறும். தற்போது இந்த பாராளுமன்றத்தின் தலைவராக இருப்பவர் சோசலிச மற்றும் ஜனநாயக முன்னேற்றக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த, ஜெர்மன் நாட்டவரான மார்ட்டின் சுல்ஸ் (Martin Schulz) அவர்கள். இவருக்குக் கீழ் 14 துணைத்தலைவர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வழங்கிய உரையின் சுருக்கம்

நவ.25,2014. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் என்னைப்  பேசுவதற்கு அழைத்த உங்களுக்கு என் நன்றி. ஐரோப்பிய மக்களின் பிரதிநிதிகளாகிய உங்கள் வழியாக, 28 நாடுகளைச் சேர்ந்த 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களுடன் நான் பேசமுடிகிறது.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றியதற்குப் பின் 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழிந்துவிட்டன. இந்த ஆண்டுகளில் இரு கூறுகளாகப் பிரித்திருந்த ஐரோப்பா ஒன்றிணையத் துவங்கியுள்ளது. 
ஓர் ஆன்மீக மேய்ப்பர் என்ற முறையில், ஐரோப்பிய குடிமக்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் தரும் செய்தியை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். ஐரோப்பிய மக்களிடையே நிலவும் அச்சம் விலகி, இந்த நம்பிக்கையால் நாம் ஒன்றுபடுவோம். சாவை வாழ்வாலும், தீமையை நன்மையாலும் வென்ற ஆண்டவரிடமிருந்து வரும் நம்பிக்கை இது.
ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கிய முன்னோர், ஐரோப்பிய நாடுகள் அரசியல் வழியாக ஒருங்கிணைவதை விரும்பினர். மனிதர்கள் மீது கொண்ட நம்பிக்கையே, அந்த ஒற்றுமைக் கனவின் அடித்தளம். மனிதர்களை ஒரு பொருளாதார கண்ணோட்டத்தில் காணாமல், அவர்கள் இவ்வுலகைத் தாண்டிய மாண்புக்கு உரியவர்கள் என்ற எண்ணமே இந்த ஒற்றுமைக் கனவை உருவாக்கியது.
'மாண்பு', 'இவ்வுலகைத் தாண்டிய நிலை' என்ற இவ்விரு சொற்றொடர்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
மாண்பு என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள அடிப்படை உரிமை. மனித உரிமையை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம், இந்த மாண்பை உணரவேண்டும். இந்த மாண்பு மறக்கப்பட்டால், மனித உயிரை உருவாக்குதல், பல்வேறு தேவைகளுக்குத் தகுந்தாற்போல் மனிதர்களைப் பயன்படுத்துதல், தேவையற்ற மனிதர்களைத் தூக்கி எறிதல் ஆகிய நிலைகளுக்கு உள்ளாவோம்.
பல்வேறு பாகுபாடுகளால் தவிக்கும்போதும், உணவு முதற்கொண்ட அடிப்படை தேவைகளின்றி துன்புறும்போதும், மனிதர்கள், எவ்விதம் தங்கள் மாண்பை அனுபவிக்கமுடியும்?

மனித மாண்பு என்று சொல்லும்போது, தனிப்பட்ட மனிதர்களின் மாண்பை மட்டும் வலியுறுத்துவது, ஆழ்ந்த சுயநலத்தில் நம்மைப் புதைத்துவிடும். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள மாண்பு, மனித சமுதாயம் என்ற குடும்பத்திலிருந்து வருவது. எனவே, தனி மனிதருக்கும், சமுதாயத்திற்கும் மாண்பு வழங்கப்படவேண்டும். மற்றவரோடு தொடர்புகள் அற்ற தனி மனித மாண்பு, சுயநலத்தை வளர்த்து, அதன் விளைவாக, பல வன்முறைகளை வளர்க்கும்.
ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு காணப்படும் ஒரு தீமை, தனிமை. அவரவர் தன் தனிப்பட்ட நலனை மட்டும் வலியுறுத்துவதால், தனிமை என்ற தீமை பரவி வருகிறது. இந்தத் தனிமையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், முதியோரே! முதியோர் பயனுள்ளவற்றை உருவாக்கும் வயதைக் கடந்துவிட்டதால், அவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கு நம்மிடையே பரவியுள்ளது.
பயனுள்ளவற்றை மட்டுமே அளவுகோலாக கருதும் நமது அரசுகள், மேற்கொள்ளும் விவாதங்களில், பொருளாதாரமும், தொழில் நுட்பமும் அதிகம் இடம்பெறுகின்றனவே தவிர, மனிதர்கள் இடம்பெறுவதில்லை. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், மனிதர்களை மையப்படுத்தும் விவாதங்கள், திட்டங்கள் ஆகியவற்றை நிலைநிறுத்துவது உங்கள் கடமை.
தனி மனிதர்களையும், சமுதாயத்தையும் பேணிக் காப்பது என்றால், நமது நினைவுகளையும், நம்பிக்கையையும் பாதுகாப்பது என்று பொருள். நினைவுகளைக் கொணரும் முதியோரும், நம்பிக்கையைக் கொணரும் இளையோரும் நம் கவனத்திற்கு வரவேண்டும்.
விண்ணை நோக்கிய பார்வையும், மண்ணையும், மனிதர்களையும் நோக்கிய பார்வையும் நம் கருத்தில் இடம்பெறவேண்டும். இவ்விரு பார்வைகளையும் இணைக்கும்போது, அமைதி, தனிமனித மாண்பு, அடிப்படை உரிமை, ஒருங்கிணைந்த முயற்சி அனைத்தும் சாத்தியமாகும். ஒவ்வொரு தனி மனிதரும் கொண்டுள்ள மத உணர்வுகளின் வேர்களை மதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஐரோப்பிய மக்களிடையே குடியரசை போற்றிவளர்ப்பது உங்கள் கடமை. இன்றைய உலகில் குடியரசைக் கட்டிக்காப்பது ஒரு பெரும் சவால். பன்னாட்டு அரசுகளின் கட்டாயங்களால், ஒவ்வொரு நாடும் தன் குடியரசைக் காப்பது கடினமாகி வருகிறது.
இத்தகையச் சூழலில் மனித ஆளுமையை மையமாகக் கொண்டு செயல்படுவதே, ஐரோப்பாவிற்கு நம்பிக்கை தரும் விடயமாக அமையும். இந்த நம்பிக்கையை வளர்க்க, கல்வி என்ற அம்சத்தில் கவனமுடன் செயல்படவேண்டும். குடும்பங்களில் துவங்கும் இக்கல்வி, பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் என்று அனைத்து நிலைகளிலும் தொடரப்படவேண்டும். தனி மனிதர்கள் முழுமையான மனிதர்களாக உருவாக நமது கல்வி உதவியாக இருக்கவேண்டும்.
இயற்கையைப் பாதுகாப்பது ஐரோப்பிய நாடுகளின் முக்கியப் பண்பாக இருந்துள்ளது. இந்தப் பண்பைக் கைவிடாமல் காப்பாற்றுவது நம் கடமை. இயற்கையின் முதலாளிகள் நாம் அல்ல, அதனைப் பாதுகாப்பவர்கள் என்ற உணர்வோடு நாம் செயலாற்றவேண்டும்.
ஐரோப்பாவின் நம்பிக்கையை வளர்க்க நாம் மேற்கொள்ளவேண்டிய அடுத்த முயற்சி, நமது தொழில் உலகைப் பேணிக் காப்பது. மனிதர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது அவசியம்.
நாடுவிட்டு நாடு குடிபெயரும் மக்களைக் குறித்த கேள்விக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தகுந்த பதில் தரவேண்டும். குடிபெயர்தல் என்ற நிலையின் வேருக்குச் சென்று பதில் தர கடமைப்பட்டுள்ளோம். மத்தியத்தரைக் கடல், பரந்து விரிந்த ஒரு கல்லறையாக மாறிவிடக் கூடாது! ஒவ்வொரு நாளும், ஆண்களையும், பெண்களையும் நிரப்பிய வண்ணம் ஐரோப்பியக் கரைகளை அடையும் படகுகளில் வருவோரை வரவேற்கவும், உதவிகள் செய்யவும் நாம் தயாராக இருக்கவேண்டும்.

இறுதியாக, ஐரோப்பா தனது மிகச் சிறப்பான பண்புகளை மீண்டும் கண்டுபிடிக்க நீங்கள் அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று உங்களைத் தூண்டுகிறேன். "உடலுக்கு  ஆன்மா என்பதுபோல், உலகிற்கு கிறிஸ்தவர்கள்" என்று இரண்டாம் நூற்றாண்டில் பெயர் தெரியாத ஒருவர் எழுதிச் சென்றார். இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறு, ஐரோப்பாவையும், கிறிஸ்தவத்தையும் இணைத்துள்ளது. இந்த வரலாறு பிரச்சனைகள் அற்றது அல்ல. ஆனால், அனைத்து பிரச்சனைகள், போராட்டங்கள் மத்தியில், உண்மையை, அழகை, நன்மையை அனைவரும் காணவேண்டும் என்ற உந்துதல் இருந்து வந்துள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களே, பொருளாதாரத்தின் அடிப்படையில் அல்ல, மனிதர் என்ற புனிதத்தை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவைக் கட்டியெழுப்ப உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பிய நாடுகள், தனித்தனியாக தங்களைக் காத்துக் கொள்வதற்காக அச்சத்துடன் தன் எல்லைகளை மூடிக்கொள்ளாமல், திறந்த மனதோடு அனைவரும் இணைந்து, புத்துணர்வு தரும் தலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள். அறிவியல், கலை, இசை, மனித மதிப்பீடுகள், மத நம்பிக்கை என்ற அனைத்து அம்சங்களையும் வளர்க்கும் ஒரு கண்டமாக ஐரோப்பாவை உருவாக்குங்கள்.
விண்ணகத்தைக் கருத்தில் கொண்டுள்ள ஐரோப்பா, மண்ணகத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுவதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஐரோப்பிய ஒன்றிய அவையில் திருத்தந்தை

நவ. 25, 2014. பிரான்சின் Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய அவையை சந்திப்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாவது நிகழ்ச்சியாகும். இந்த அவை ஐரோப்பிய பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவிலுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளை மேற்பார்வையிட்டுவரும் இந்த ஐரோப்பிய அவை47 ஐரோப்பிய நாடுகளை தன் அங்கத்தினர்களாகக் கொண்டுள்ளது. இதன் பொதுச்செயலராக Thorbjorn Jagland செயல்படுகிறார். இவர் நார்வே நாட்டின் முன்னாள் பிரதமராவார்.
உள்ளூர் நேரம் செவ்வாய் பிற்பகல் 12 மணி 30 நிமிடங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய அவையை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் பொதுச்செயலர் Thorbjorn Jagland அவர்களுடன் சிறிதுநேரம் தனியாக உரையாடியபின், நினைவுப் பரிசுகளைப் பரிமாறி, தங்கப்புத்தகத்தில் கையெழுத்திடவும் செய்தார். பின்னர் ஐரோப்பிய ஒன்றிய அவையில் கூடியிருந்த அங்கத்தினர்களுக்கு உரையும் நிகழ்த்தினார்.

5. திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பிய ஒன்றிய அவையினருக்கு வழங்கிய உரையின் சுருக்கம்

நவ.25,2014. ஏறத்தாழ, ஐரோப்பாவின் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் அரங்கத்தில் கூடியுள்ளீர்கள். ஐரோப்பிய ஒன்றிய அவை தன் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிவருகிறது. இவ்வேளையில், இந்த அவையை உருவாக்கியவர்கள் கொண்டிருந்த குறிக்கோளை எண்ணிப் பார்க்க விழைகிறேன்.
எந்த ஒரு நாடும், எந்த ஓர் இயக்கமும் தனது கருத்தியலை மற்றவர் மீது திணிக்காமல், அனைவரும் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என்பதே, ஐரோப்பிய ஒன்றிய அவையை உருவாக்கியவர்களின் குறிக்கோளாக இருந்தது.
இக்குறிக்கோள், ஓர் ஒப்பந்தமாக, இலண்டனில் கையெழுத்திடப்படுவதற்கு (1949) பத்தாண்டுகளுக்கு முன், ஐரோப்பா, மிகப்பெரிய அழிவை உருவாக்கிய போரில் ஈடுபட்டது. ஐரோப்பாவை மீண்டும் கட்டியெழுப்ப, அமைதி, சுதந்திரம், மனித மாண்பு ஆகிய மூன்று மூலைக்கற்கள் தேவை.
அமைதி வழியில் செல்வதற்கு, அடுத்தவரை, நம் எதிரியாக அல்ல; உடன்பிறப்பாகக் காணும் பக்குவம் பெறவேண்டும். இந்த அமைதி, ஒரு நாளில் உருவாகப் போவதில்லை. தொடர் முயற்சிகளால், நீண்டகாலம் உருவாகவேண்டிய அமைதி இது.
போர்களையும், மோதல்களையும் சட்டங்களால் நிறுத்துவது அமைதியைக் கொணராது. மனங்களில் ஒப்புரவை வளர்த்து, சுதந்திரமாக ஒருவரை ஒருவர் அன்பு கூர்வதால் இந்த அமைதி உருவாகும்.
உறுதியான அமைதியை வளர்க்க, அமைதி குறித்த கல்வி தேவை. கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் மனித வரலாற்றில் எழுவது, இயற்கையே. ஆனால், அந்நேரங்களில், வேறுபாடுகளை மட்டும் பெரிதுபடுத்துவதால், அமைதியும், முன்னேற்றமும் தொலைந்துபோகின்றன. ஐரோப்பாவில் உருவாகியுள்ள மோதல்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய அவை, அரசியல் தீர்வுகளைக் காணும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பது, போற்றுதற்குரியது!
அமைதி, இன்னும் பல்வேறு வழிகளில் சோதிக்கப்படுகிறது. மத அடிப்படைவாதம், பன்னாட்டுத் தீவிரவாதம் ஆகிய போக்குகள், மனித உயிரைத் துச்சமாக மதிக்கின்றன. அப்பாவி உயிர்கள், ஆயிரக்கணக்கில் பலியாகின்றன.
இந்த உயிர் கொலைகளை அதிகரிப்பதற்கு, மனசாட்சி ஏதுமற்ற, பன்னாட்டு ஆயுத விற்பனை துணை செல்கிறது. "ஆயுதக் குவிப்பு போட்டி, மனிதகுலம் சந்தித்துள்ள மிகப்பெரும் சாபம்" என்று கத்தோலிக்கத் திருஅவை கூறியுள்ளது.
அமைதியைக் குலைக்கும் மற்றொரு போக்கு, மனித வர்த்தகம். இன்றைய உலகில் நிலவும் மனித வர்த்தகம், பழங்கால அடிமைத் தனத்தின் மறுபிறப்பு. ஆயுத வர்த்தகமும், மனித வர்த்தகமும், உலகம் தேடும் அமைதியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பது உண்மை.
போர்களும், மோதல்களும் அற்றநிலை மட்டும் அமைதியை உறுதி செய்யாது. அமைதி என்பது, இறைவன் வழங்கும் கோடை என்பது, கிறிஸ்தவக் கண்ணோட்டம்.
மனித உரிமைகளை நிலைநாட்டுவதன் வழியாகவும், குடியரசை உறுதி செய்வதன் வழியாகவும், அமைதியை நிலைநாட்ட, ஐரோப்பிய ஒன்றிய அவை முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.
மனித சமுதாயத்தின் வளர்ச்சியில், ஐரோப்பாவிற்கு உள்ள பொறுப்பை இன்று நான் வலியுறுத்த விழைகிறேன். இத்தாலியக் கவிஞர், Clemente Rebora என்பவர் பயன்படுத்தியுள்ள ஓர் உருவகத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன். ஒரு மரத்தின் மிக உயரத்திலுள்ள கிளைகள், காற்றில் பலமாக அசைக்கப்பட்டாலும், அதன் வேர்களும், அடிமரமும் மண்ணில் ஆழமாக வேரூன்றியிருபதால், மரம் உறுதியாக நிற்கும் என்று கவிஞர் Rebora கூறியுள்ளார்.
ஐரோப்பிய சமுதாயம் எப்போதும் உயர்வைத் தேடிச் சென்றுள்ளது. கலை, அறிவியல், தத்துவம் என்ற பலத் துறைகளில், அது பெரும் உயரங்களைத் தொட்டாலும், அதன் வேர்களும், அடிமரமும் மண்ணில் உறுதியாகப் புதைந்திருந்ததால், அந்த மரம் உறுதியாக நின்றது. அண்மையக் காலங்களில், அறிவியலை மட்டுமே பெருமளவு நம்பியிருக்கும் ஐரோப்பா, தன் ஆழ்ந்த வேர்களை, அறிவு செறிந்த தன் வரலாற்றை மறந்து வருகிறதோ என்ற கவலை எழுகிறது. ஐரோப்பியச் சமுதாயம் வளர, வரலாற்று நினைவு, துணிவு, மேன்மையான எதிர்கால நோக்கு அனைத்தும் தேவை.

ஐரோப்பாவே, உன் சக்தி எங்கே? உன் வரலாற்றை வடிவமைத்து, உன்னைத் தூண்டிவந்த கருத்தியல் எங்கே? உண்மையைக் கண்டுபிடிக்கும் உன் தாகம் எங்கே? என்ற கேள்விகளை, ஐரோப்பிய நாடுகளுக்கு எழுப்பவேண்டும்.
ஐரோப்பாவின் வேர்களைத் தேடிச் செல்லும்போது, இரு அம்சங்கள் புலப்படுகின்றன. பன்முகம் கொண்ட தன்மை, மற்றும் தலைமுறைகளைப் பிணைக்கும் தன்மை.
நாட்டுக்கு நாடு வேறுபடும் கலாச்சாரம் மட்டுமல்லாமல், நாட்டுக்குள்ளும் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களின்  ஒட்டுமொத்த உருவமே, பன்முகம் கொண்ட ஐரோப்பா. அதேபோல், பல தலைமுறைகளின் கருத்தியல்களைக் கொண்டிருப்பதால், தலைமுறைகளைப் பிணைக்கும் தன்மை கொண்டது, ஐரோப்பா.
இவ்விரு தன்மைகளையும் வளர்க்க, கலாச்சாரங்களிடையே உரையாடலை வளர்ப்பது அவசியம். கலாச்சார உரையாடலின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவது, மத உரையாடல். இவ்வுரையாடலைப் பெருமளவில் வளர்ப்பது, ஐரோப்பிய ஒன்றிய அவையின் கடமை.
புலம் பெயர்ந்த மக்கள், தொழில் உலகின் பிரச்சனைகள் ஆகியவை, இன்றைய ஐரோப்பா சந்திக்கும் ஏனையச் சவால்கள். இறுதியாக, இவ்வுலகின் மீது, இயற்கையின் மீது நாம் காட்டும் அக்கறை. மதிப்பு ஆகியவை, நம்முன் உள்ள பெரும் சவால்கள்.
உரையாடல் என்ற உயர்ந்த வழியில், மனிதர்களை மதிக்கும் மனநிலையில்ஐரோப்பா, தன் வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த உரைக்குப்பின் 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விமான நிலையத்தை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிக்கு வெளியே தன் 5வது திருப்பயணத்தை நிறைவுசெய்து ஆலித்தாலியா விமானத்தில் உரோம் நோக்கி பயணம் மேற்கொண்டபோது உள்ளூர் நேரம் ஏறத்தாழ பகல் 2 மணி, இந்திய நேரம் மாலை 6 மணி 30 நிமிடங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...