கனவினால் வருங்கால வாழ்வைத் தீர்மானித்தவர்
(St. Catherine Labouré)
தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்த அந்தச் சிறுமி, தாயை அடக்கம் செய்துவிட்டு வந்தவுடன் முதல் வேலையாக, தனது அறையிலிருந்த அன்னை மரியாவின் திருவுருவத்தை எடுத்து, "அம்மா, இனி நீங்கள்தான் எனது தாய்"
என்று வணங்கிச் செபித்தார். இந்த உணர்வில் வாழ்ந்துகொண்டிருந்த அந்தச்
சிறுமிக்கு ஒரு நாள் கனவில் ஒரு காட்சி. வயதான அருள்பணியாளர் ஒருவர்
திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பீடத்திலிருந்து திரும்பிய அவர், தனது
கையை நீட்டி இச்சிறுமியை அழைத்தார். ஆனால் அச்சிறுமி பின்னோக்கி நடந்தார்.
அப்படியே அக்காட்சி அச்சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. தான்
காட்சியில் கண்ட அந்த அருள்பணியாளர் அங்கு படுத்திருந்தார். அவர்
இச்சிறுமியை அழைத்து, குழந்தாய், நோயாளிகளைப்
பராமரித்து நற்பணிகள் செய். அதில் உனக்கு மகிழ்வு கிடைக்கும். இறைவன்
உன்னை அதற்கெனத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று சொன்னார். கனவிலிருந்து
விழித்தெழுந்த சிறுமி பொருள் புரியாது திகைத்தார். சிலநாள்கள் கழித்து
பிறரன்பு சகோதரிகள் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றார் அச்சிறுமி. தான்
கனவில் கண்ட அந்த அருள்பணியாளரின் உருவப்படம் அங்கு மாட்டியிருந்ததைக்
கண்டு, அவர்தான்
அச்சகோதரிகள் சபையை நிறுவிய புனித வின்சென்ட் தெ பால் என
அறிந்துகொண்டார். பின்னர் அச்சபையில் சேர்ந்த சிறுமிதான் கேத்ரீன்
லாபுரே. பிரான்ஸின் Burgundy மாநிலத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில், 1806ம் ஆண்டு மே 2ம் தேதி பிறந்த கேத்ரீன் லாபுரே, துறவு
வாழ்வுக்கென பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அன்னைமரியாவை பல
தடவைகள் காட்சியில் கண்டவர். அன்னைமரியாவின் வேண்டுகோளின்பேரில் அற்புத
பதக்கப் பக்தியைப் பரப்பியவர். "அஞ்சாதே, இந்தப்
பணியைச் செய்வதற்குத் தேவையான அருளை இறைவன் கொடுப்பார். உனது ஆன்மீக
வழிகாட்டியிடம் சொல். இப்பதக்கத்தை கழுத்தில் அணிபவர்கள் அளவற்ற
அருள்வரங்களைப் பெறுவார்கள். பிரான்சிலும் உலகிலும் தீமை நிறைந்துள்ள காலம்
இது" என்று காட்சியில் சொன்னார் அன்னைமரியா. அன்னைமரியா கூறியபடியே செயல்பட்டார் கேத்ரீன். இன்று உலகெங்கும் இலட்சக்கணக்கான மக்கள், முட்டை வடிவிலான இந்த அற்புத பதக்கப் பக்தியைக் கொண்டுள்ளனர். “பாவமின்றி பிறந்த ஓ மரியே, உம்மிடம் மன்றாடும் எங்களுக்காகப் பரிந்துரை செய்யும்”
என்ற வார்த்தைகள் அப்பதக்கத்தைச் சுற்றி எழுதியுள்ளன. 1876ம் ஆண்டு
டிசம்பர் 31ம் தேதி இறந்தார் கேத்ரீன் லாபுரே. 1830ம் ஆண்டு நவம்பர் 27ம்
தேதி அன்னைமரியா கேத்ரீனுக்குக் கொடுத்த காட்சியில்தான் இந்த அற்புத
பதக்கம் பற்றி அன்னைமரியா சொன்னார். புனித கேத்ரீன் லாபுரே அவர்கள் விழா
நவம்பர் 28.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment