Saturday 22 November 2014

கிறிஸ்து அரசர் பெயருடன் வீர மரணம் (Bl. Miguel Agustín Pro)

கிறிஸ்து அரசர் பெயருடன் வீர மரணம்
(Bl. Miguel Agustín Pro)

1927ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி. மெக்சிகோ நாட்டில் ஓர் இளம் இயேசு சபை அருள் பணியாளருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதுவும், ஒரு பொதுவான இடத்தில், காவல் துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்படவேண்டும் என்று மெக்சிகோ அரசுத் தலைவர் Plutarco Calles ஆணையிட்டார். காவல் துறையினர் அவரைச் சுடுவதற்கு துப்பாக்கிகளை உயர்த்தியதும்அந்த இளம் குரு அச்சமுற்று, தன் கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டு, மன்னிப்பு கேட்பார் என்று அரசுத் தலைவர் எதிர்பார்த்தார். இளம் குரு மன்னிப்பு வேண்டுவதை செய்தித்தாள் நிருபர்கள் காணவேண்டும் என்று எண்ணி, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அவர்களை அரசுத்தலைவர் அழைத்திருந்தார்.
இளம் குருவை ஒரு சுவருக்கருகே நிறுத்தினர் காவல் துறையினர். அவருடைய இறுதி ஆவல் என்ன என்று கேட்ட காவல் துறை அதிகாரியிடம், தான் சிறிது நேரம் செபிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, செபித்தார். தான் கொண்டுவந்திருந்த சிலுவையை எடுத்து, ஆழ்ந்த அன்புடன் அதை முத்தமிட்டார். பின்னர், அந்தச் சிலுவையைத் தன் வலது கரத்திலும், செபமாலையை இடது கரத்திலும் ஏந்தியபடி, இரு கரங்களையும் விரித்து நின்று, "கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!" என்று உரத்த குரலில் முழங்கினார். அந்நேரம், காவல் துறையினரின் குண்டுகள் அவர் மீது பாய அந்த இளம் இயேசு சபை அருள் பணியாளர் தன் உயிரை கிறிஸ்து அரசர் பாதங்களில் அர்ப்பணம் செய்தார். 36 வயது நிறைந்த அந்த இளம் இயேசு சபை அருள் பணியாளரின் பெயர், மிகுவேல் அகஸ்டின் ப்ரோ (José Ramón Miguel Agustín Pro Juárez).
1891ம் ஆண்டு, மெக்சிகோவின் குவாதலுபே எனுமிடத்தில் பிறந்தவர் மிகுவேல். 1911ம் ஆண்டு, தன் 20வது வயதில் இவர் இயேசு சபையில் இணைந்தார். 1920களில் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக மெக்சிகோ நாட்டில் உருவான அடக்குமுறை அரசை எதிர்த்துப் போராடியவர்கள், "கிறிஸ்து அரசர் பல்லாண்டு வாழ்க!" என்ற விருது வாக்குடன் போராடிவந்தனர். இந்தப் போராட்டக் குழுவினர், 'Cristeros' என்று அழைக்கப்பட்டனர். 1925ம் ஆண்டு, தன் 34வது வயதில் அருள் பணியாளராகத் திருநிலைபடுத்தப்பட்ட மிகுவேல் ப்ரோ அவர்கள், 'Cristeros' குழுவில் இணைந்து, மிகுந்த துணிவுடனும், நுண்மதியுடனும் மக்களுக்குத் தேவையான அருள் பணிகள் பலவற்றை ஆற்றிவந்தார். 
1927ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி, கிறிஸ்து அரசரின் பெயரைச் சொல்லியபடி, தன் 36வது வயதில் இளம் இயேசு சபை அருள் பணியாளர் மிகுவேல், ஒரு மறைசாட்சியாக உயிர் துறந்தார். மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் பல கோணங்களில் புகைப்படங்களாய் எடுக்கப்பட்டன. அவற்றை, அரசுத்தலைவர் Calles, அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் அச்சிட கட்டளையிட்டார். மிகுவேல் அவர்களின் கோரமான மரணத்தைக் காணும் Cristeros குழுவினர், தங்கள் போராட்டத்தைக் கைவிடுவர் என்று அரசுத் தலைவர் எண்ணினார். ஆனால், மிகுவேல் அவர்களின் வீர மரணத்திற்குப் பிறகு, போராட்டம் இன்னும் வலுவடைந்தது. அவர்களில் பலர் தங்கள் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது, மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் அச்சிடப்பட்ட செய்தித்தாள் படங்களைத் தாங்கியபடி உயிர் துறந்தனர். 1988ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், மறைசாட்சியாக உயிர் துறந்த மிகுவேல் ப்ரோ அவர்களை, முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...