Saturday, 29 November 2014

செய்திகள் - 29.11.14

செய்திகள் -  29.11.14
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துருக்கி நாட்டில் மேற்கொண்டுள்ள திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாள் - நவம்பர் 29, சனிக்கிழமை - நிகழ்ச்சிகள்



திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணம்
இரண்டாவது நாள் நிகழ்வுகள்

நவ.29,2014. மதத்தின் பெயரால் இடம்பெறும் அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும், மனித மாண்பு மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான எல்லாவிதமான வன்முறைகளையும் எதிர்ப்பதற்கு சமயத் தலைவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள், இவற்றுக்கு எதிராக, சமயத் தலைவர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்கும்போது, மதத்தவர் மத்தியில் வேறுபாடுகள் இருந்தாலும், மதத்தவர்க்கிடையே நட்புறவும், ஒருவர் ஒருவரையொருவர் மதிப்பதும் இயலக்கூடியதே என்ற தெளிவான செய்தியை தங்களின் சமூகங்களுக்கு அனுப்ப வேண்டும், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும், துருக்கியில் தஞ்சம் அடைந்திருக்கும் ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் புலம்பெயர்ந்த மக்களுக்கு, அனைத்துலக அளவில் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற முக்கிய அறைகூவலுடன் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 28, இவ்வெள்ளி இந்திய நேரம் மாலை 4.30 மணிக்குத் துருக்கி தலைநகர் அங்காரா சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருக்கி அரசுத்தலைவர் எர்டோகான், பிரதமர் அகமது ஆகியோரைச் சந்தித்த பின்னர், அந்நாட்டின் தேசத்தந்தை அத்தாத்துர்க் கல்லறை நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டு, வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரோஜா மலர் வளையம் ஒன்றை அக்கல்லறையில் வைத்து அந்நாட்டுக்காகச் செபித்தார். அன்று உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு,  துருக்கியின் சமய விவகாரத் துறையான Diyanet İşleri Başkanlığı சென்று அதன் தலைவர் பேராசிரியர் Mehmet Gormez அவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. அவ்விடத்தின் இரண்டாவது மாடியிலுள்ள நூலக அறையில், துருக்கியின் முஸ்லிம் சமூகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், திருத்தந்தையுடன் சென்ற முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் இருப்பில் இச்சந்திப்பு நடந்தது. இந்நிகழ்வில் முதலில் வரவேற்புரை வழங்கினார் Gormez.

உலகில் நிலவும் ஏழ்மை, பசி, சண்டை, சுற்றுச்சூழல் சீர்கேடு, அனைத்துவிதமான தீவிரவாதச் செயல்கள் ஆகிய எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர். அல்லாவின் பெயரால் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்கள், இஸ்லாம் மதத்தின் அமைதியான பாதையை முழுமையாக மீறுகின்றனர் என்று Gormez அவர்கள் உரையாற்றினார். இவ்வுரைக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்சமய உரையாடல், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மற்றும் நட்புறவில் சமயத் தலைவர்களின் பொறுப்புணர்வு பற்றி உரையாற்றினார்.

துருக்கியின் முஸ்லிம் சமூக உயர்மட்ட அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

இஸ்லாம் மதத்தையும் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்த அரசியல் மற்றும் மதத்தலைவர்களை இந்த இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். ஒரு நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்குள்ள பல்வேறு மதத்தலைவர்களைச் சந்திப்பது திருத்தந்தையர்களின் பயணத்திட்டத்தில் இடம்பெறும் ஒன்றாக எப்போதும் இருந்து வருகிறது. உரையாடல்களுக்கும் சந்திப்புக்கும் இணக்கமான மனநிலை இல்லையெனில், அந்தத் திருத்தூதுப்பயணம் தன் நோக்கத்தோடு இணங்கிச் செல்வதாக இருக்காது. இதே எண்ணத்தோடு எனக்கு முந்தைய திருத்தந்தையர்களின் பாதையில் நடைபோடும் நானும்,  திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே இடத்தில் உங்களைச் சந்தித்ததை நினைவு கூருகிறேன்.
மதத்தலைவர்களிடையேயான கலந்துரையாடல்களும் நல்லுறவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மதங்களிடையே வேறுபாடுகள் இருப்பினும், ஒருவரை ஒருவர் மதித்து நட்புணர்வுடன் வாழமுடியும் என்பதை அவை காட்டுகின்றன. இன்றைய உலகின் சில இடங்களில் காணப்படும் நெருக்கடி நிலைகளைக் காணும்போது, இந்த நட்புணர்வின் அர்த்தமும் அத்தியாவசியமும் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. போர்கள், அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதுடன், பேரழிவுகளையும், இனங்களிடையே, மதங்களிடையே பதட்டநிலைகளையும், மோதல்களையும், பல ஆயிரம் மக்களைப் பாதிக்கும் ஏழ்மை, பசி போன்றவைகளையும், காற்று, நீர், நிலம் ஆகியவைகளின் இயற்கை அழிவுகளையும் கொணர்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவில் மோதல்களால் விளைந்துள்ள துன்பங்கள் தாங்கமுடியா நிலையில் உள்ளன. வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற குழந்தைகள், முதியோர், தாய்மார்கள் மற்றும் அகதிகளை இந்த நேரத்தில் நான் நினைவுகூர்கின்றேன்.
தீவிரவாத மற்றும் அடிப்படைவாதக் குழுக்களின் போக்குகளால் சில சமூகங்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்களும் Yazidis மக்களும் தங்களின் இன மற்றும் மதக் காரணங்களுக்காக வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு துன்பங்களை அனுபவிக்கின்றனர். தங்கள் வாழ்வையும் விசுவாசத்தையும் காப்பதற்காக இவர்கள் பலவேளைகளில் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த வன்முறைகளால் பலவேளைகளில் மத வழிபாட்டுத் தலங்களும் கலாச்சார இடங்களும் அழிவுக்குள்ளாகின்றன. மதத்தலைவர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இத்தகைய மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பிற்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும். இறைவனின் கொடையான மனித வாழ்வு தன்னிலையிலேயே புனிதத்தன்மையுடையது என்பதால், மதத்தின்வழி நியாயப்படுத்த முயலும் எந்த வன்முறையும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். ஏனெனில், இறைவனே வாழ்வு மற்றும் அமைதியின் தலைவர். இறைவனை வழிபடுவதாகக் கூறிக்கொள்ளும் மக்கள் தங்கள் அயலார்களுடன், இனம், மதம், கலாச்சாரம் மற்றும் கொள்கை வேறுபாடுகளையும் தாண்டி, சகோதர சகோதரிகளாக வாழவல்லவர்களாக இருக்கவேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது. வன்முறைகளுக்கு எதிராக நாம் உழைக்கும் அதேவேளை, இதற்கான தீர்வுகளைக் காணவும் முயல வேண்டும். அரசு மற்றும் மதத்தலைவர்கள்சமூகப் பிரதிநிதிகள், நல்மனதுடைய ஆண்கள், பெண்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் இதற்குத் தேவைப்படுகின்றது.  ஒவ்வொரு மதத்தவரும் தங்களின் பாரம்பரிய மதிப்பீடுகளை வலியுறுத்துவதன் மூலம் இதற்கு உயிர்த்துடிப்புடைய சிறப்புப் பங்காற்ற முடியும்.  கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்களிடம் விலைமதிப்படமுடியாத ஆன்மீகச் செல்வங்களைக் கொண்டுள்ளனர். இதில் நம் பொதுக்கூறுகளான, கருணைக்கடலாம் இறைவனை வழிபடுவது, முதுபெரும் தந்தையாக‌ ஆபிரகாமைக் கொண்டிருப்பது, செபம், ஏழைகளுக்கு ஈதல், உண்ணா நோன்பிருத்தல் போன்றவைகள் உண்மையாகவே வாழப்பட்டால், அது நம் வாழ்வை மாற்றுவதுடன், மாண்பும் சகோதரத்துவமும் நிரம்பிய அடித்தளத்தை நிச்சயமாக வழங்கும். நம் மதங்களிடையேயான கலந்துரையாடல்களின் துணைகொண்டு நம் பொது ஆன்மீகப் பாரம்பரியத்தை ஏற்று வளர்ப்பதன்வழி,  ஒழுக்க மதிப்பீடுகள், அமைதி, மற்றும் சமூக விடுதலையை ஊக்குவிக்கவும் நிலைநாட்டவும் உதவ முடியும்’ (அங்காராவில் திருத்தந்தை புனித 2ம் ஜான் பால், 1979 நவம்பர் 29ல் கூறிய வார்த்தைகள்). ஒவ்வொருவரின் மனித வாழ்வின் புனிதத்தன்மையை ஏற்பதே ஒருமைப்பாடு, கருணை, உதவி ஆகியவைகளுக்கு அடித்தளமாக உள்ளது. மோதல்களால் அகதிகளாகியுள்ள மக்களுக்கு இந்நாட்டின் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் செய்துவரும் உதவிகளை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். இந்த எடுத்துக்காட்டுத் தொடரவேண்டும். அதேவேளை, இங்குள்ள இஸ்லாமிய அவைக்கும், மதங்களிடையேயான திருப்பீட கலந்துரையாடல் அவைக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுக்கு ஊக்கமளிப்பதோடு, இது மேலும் தொடர்ந்து, அமைதி, பாதுகாப்பு மற்றும் வளம் நோக்கி ஏங்கிக்கொண்டிருக்கும் உலகிற்கு நல்லதொரு நம்பிக்கையின் அடையாளமாக இருப்பதாக. உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவிப்பதோடு, என் செபங்களுக்கான உறுதியையும் வழங்குகிறேன்.

துருக்கியிலுள்ள 98 விழுக்காட்டு முஸ்லிம்களில் 68 விழுக்காட்டினர் சுன்னி இஸ்லாம் பிரிவையும், 30 விழுக்காட்டினர் ஷியையட் இஸ்லாம் பிரிவையும் சார்ந்தவர்கள். இருந்தபோதிலும் துருக்கி நாடு சமயச் சார்பற்ற ஒரு நாடு. இஸ்லாமிய அரசியல்-சமய தலைமைத்துவத்தைக் குறிக்கும் caliphate அமைப்புமுறையை 1924ம் ஆண்டில் இரத்து செய்து சமயச் சார்பற்ற துருக்கியை அறிவித்தார் அந்நாட்டுத் தேசத்தந்தை அத்தாத்துர்க். caliphate அமைப்புமுறை நீக்கப்பட்ட பின்னர், 1924ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது Diyanet. இஸ்லாம் மதத்தின் நம்பிக்கைகள், வழிபாடு, அறநெறிகள், அம்மதம் பற்றி பொது மக்களுக்கு அறிவித்தல் போன்றவைகளுக்காக, Diyanet நிறுவனம் அமைக்கப்பட்டது. இங்கு நடந்த சந்திப்புடன், துருக்கி நாட்டுக்கான தனது முதல் நாள் பயண நிகழ்வுகளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துருக்கி சமுதாயத்துக்கு அமைதியின் திருப்பயணியாகவும், கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கிய சாட்சியாகவும் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாவது நாள் நிகழ்வுகளைத் தொடங்கினார். அங்காரா திருப்பீடத் தூதரகத்திலிருந்து 48 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று எசம்போவா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல் நகருக்குப் புறப்பட்டார். ஒரு மணி நேரம் விமானப் பயணம் செய்து இஸ்தான்புல் அத்தாதுதுர்க் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்த திருத்தந்தையை, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ மற்றும் இஸ்தான்புல் ஆளுனர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில், இஸ்தான்புல் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுல்தான் அகமது மசூதிக்குச் சென்றார் திருத்தந்தை. இவ்விடத்தின் முகப்பிலே அம்மசூதியின் பெரிய Mufti மற்றும் இமாம் தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அதிகாரிகளுடன் துணையுடன் இவ்விடத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை. இஸ்தான்புலிலுள்ள மசூதிகளில் மிக முக்கியமானதாகிய நீல மசூதி, சுல்தான் முதலாம் அகமது ஆட்சி காலத்தில் எட்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு 1617ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உட்புறச் சுவர், மேல் கூரை என அனைத்தும் நீலநிறப் பளிங்குக் கற்களால் ஆனது. இதனால் இது நீல மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.

இஸ்தான்புல் நகரின் நீல மசூதியைப் பார்வையிட்ட பின்னர், அந்நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க Hagia Sophia அல்லது புனித சோஃபியா அருங்காட்சியகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இது, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய வளங்களில் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்குச் சென்ற மூன்றாவது திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருக்கிறார். இறைஞானத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பசிலிக்காவை, கி.பி. 360ம் ஆண்டில் கான்ஸ்ட்டைன் பேரரசர் கட்டினார். 404 மற்றும் 532ம் ஆண்டுகளில் தீயினால் சேதமடைந்த இந்த பசிலிக்காவை, பேரரசர் ஜூஸ்தீனியன் மீண்டும் அழகுற அமைத்தார். உரோமைப் பேரரசரின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கொண்டுவரப்பட்ட விலைமதிப்பில்லா பொருட்களையும், மிக அழகான பளிங்கு கற்களையும், பத்தாயிரம் பணியாளர்களையும், நூறு மேற்பார்வையாளர்களையும் கொண்டு ஆறு ஆண்டுகளில் இந்த புனித சோஃபியா பசிலிக்கா புதுப்பிக்கப்பட்டது. இறைவனின் படைப்பின் மேன்மையைச் சித்தரிக்கும் விதமாக இது அமைக்கப்பட்டது. இது 537ம் ஆண்டில் திருப்பொழிவு செய்யப்பட்டபோது இதன் அழகை வியந்த பேரரசர் ஜூஸ்தீனியன், ஓ சாலமோனே, உன்னையும் இது மிஞ்சிவிட்டது எனப் பரவசமடைந்தார். 1453ம் ஆண்டில் 2ம் முகமதுவிடம் இந்நகரம் வீழ்ந்தபோது, இக்கிறிஸ்தவ பசிலிக்கா மசூதியாக மாற்றப்பட்டது. சுல்தான்களிடமிருந்து பெற்ற விலைமதிப்பற்ற நன்கொடைகளால் இவ்விடம் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகவும் மாறியது.

புனித சோஃபியா அருங்காட்சியகத்தின் அழகைப் பார்த்து வியந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில், முதலில் கிரேக்கத்தில் இறைவனின் புனித சோஃபியா(Αγία Σοφία του Θεού) என்று எழுதினார். பின்னர், இலத்தீனில் "ஆண்டவரே, உமது உறைவிடம் எத்துணை அருமையானது" தி.பா.84 (Quam dilecta tabernacula tua Domine, (Psalmus 83), Franciscus). என்று எழுதி கையெழுத்திட்டார். இந்தப் புனித இடத்தின் அழகையும், அமைதியையும் தியானிக்கும்போது, அனைத்து அழகுக்கும் ஊற்றும் முதலுமான எல்லாம் வல்ல இறைவனை நோக்கி எனது ஆன்மா எழும்புகிறது. உண்மை, நன்மைத்தனம் மற்றும் அமைதியின் பாதையில் மனித சமுதாயத்தின் இதயங்களை எப்போதும் வழிநடத்தும் என இறைவனிடம் செபிக்கின்றேன் எனவும் எழுதினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித சோஃபியா அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின்னர் இஸ்தான்புல் நகரின் கத்தோலிக்கச் சமுதாயத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவையும் அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இஸ்தான்புல் நகரிலுள்ள தூய ஆவி இலத்தீன் வழிபாட்டுமுறைப் பேராலயம் சென்றார் திருத்தந்தை. 1846ம் ஆண்டில் திறக்கப்பட்ட இப்பேராலயத்தில் கி.பி.67 முதல் 69 வரை திருத்தந்தையாக இருந்தவரும் மறைசாட்சியுமான புனித லீனுஸ் திருப்பண்டம் உட்பட பல புனிதர்களின் திருப்பண்டங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு திருப்பலி நிறைவேற்றினார்  திருத்தந்தை. இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையின் சுருக்கத்துக்குச் செவிமடுப்போம்.

இஸ்தான்புல் நகரில், தூய ஆவியார் பேராலயத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

நவ.29,2014. மீட்பின் தாகம் கொண்டுள்ள அனைவருக்கும், தாகம் தீர்க்கும் ஊற்றாக, இயேசு தன்னையே வெளிப்படுத்துகிறார் (யோவான் நற்செய்தி 7,38). எருசலேமில் இத்தகைய இறைவாக்குரைத்த இயேசு, தன் சீடர்கள் பெறவிருக்கும் தூய ஆவியாரின் கொடைகளை இவ்விதம் முன்னறிவிக்கிறார்.
தூய ஆவியார், திரு அவையின் ஆன்மாவாக விளங்குகிறார். வாழ்வு வழங்கும் அவர், ஒவ்வொருவருக்கும் தனி வரங்களைத் தந்து, அவர்களை ஒருங்கிணைக்கும் ஊற்றாகவும் விளங்குகிறார். திருஅவையின் வாழ்வும், பணியும் தூய ஆவியாரைச் சார்ந்தே உள்ளன.
புனித பவுல் அடியார் கூறுவதுபோல், தூய ஆவியாரின் தூண்டுதலால்தான், நமது நம்பிக்கையை அறிக்கையிட முடியும் (1 கொரிந்தியர் 12,3). நாம் செபிக்கும்போது நமக்குள்ளிருந்து வழிநடத்துவது, தூய ஆவியாரே! தன்னலத்தைக் கடந்து, அடுத்தவருக்குப் பணியாற்ற நம்மைத் தூண்டுவதும் தூய ஆவியாரே!
தூய ஆவியார், திருஅவைக்கு வழங்கியுள்ள பல்வேறு கொடைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவை குழப்பத்தை உருவாக்குவதுபோல் தெரியலாம். ஆனால், இத்தகைய வேற்றுமைகளின் வழியே, ஒற்றுமையை உருவாக்குவது, தூய ஆவியாரின் பணி. திருஅவையும், ஏனையச் சபைகளும், தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்குக் கீழ்படிந்து நடக்க அழைக்கப்பட்டுள்ளன.
தூய ஆவியாரின் வழிநடத்துதல், சுகமான நிலைகளிலிருந்து நம்மை வெளியேற்றுவதால், அவருக்குக் கீழ்படிவது எளிதானதல்ல. நமது சுக நிலைகளிலேயே தங்கி, அவற்றைக் காப்பதிலேயே குறியாய் இருப்பது எளிது. ஆனால், இவற்றைவிட்டு வெளியேறி, தூய ஆவியாரால் வழிநடத்தப் படும்போதுதான் நாம் மறைபரப்புப் பணியாளர்களாக மாறுகிறோம்.
சுகமான, பாதுகாப்பான நிலைகளில் தங்கிவிடும்போது, அடுத்தவரின் கண்ணோட்டங்களையும், கருத்துக்களையும் ஏற்க மறுக்கிறோம். தூய ஆவியாரின் வருகையால் வாழ்வு பெற்றுள்ளத் திருஅவை, எண்ணங்களாலும், வலிமையாலும் நிரப்பப்படுவதில்லை; மாறாக, அடுத்தவருக்குப் பணியாற்றும் அன்பினால் நிரப்பப்படுகிறது.
தூய ஆவியார் வழங்கும் இந்த மகிழ்வான உறுதியுடன், இங்கு கூடியிருக்கும் சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, இப்பகுதியின் திருத்தூதுப் பிரதிநிதி, ஏனைய ஆயர்கள், அருள் பணியாளர், தியாக்கோன்கள், துறவியர், பொதுநிலையினர், ஏனைய மத நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரையும் நான் அரவணைக்கிறேன்.
தூய ஆவியாரின் வருகைக்குக் காத்திருந்த சீடர்களுடன் மேலறையில் செபத்தில் இணைந்த அன்னை மரியாவை அணுகிவருவோம். இயேசுவின் நற்செய்திக்குச் சான்றுகளாக நாம் வாழ, இறைவன், தன் தூய ஆவியாரை நம்மிடையே அனுப்புமாறு மன்றாடுவோம்.

இந்திய நேரம் இச்சனிக்கிழமை மாலை 7.30 மணிக்குத் தொடங்கிய இத்திருப்பலியில் பிற வழிபாட்டுமுறைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இத்திருப்பலியின் இறுதியில் இஸ்தான்புல் ஆயர் லூயிஸ் பெல்லாத்ரே அவர்கள் திருத்தந்தைக்கு நன்றியும் தெரிவித்தார். அவரது நன்றியுரையின் சுருக்கம்...

பல நிகழ்வுகளைக் கொண்ட இந்தக் குறுகியப் பயணத்தில் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்காக நன்றி கூறுகிறோம். இத்திருப்பலியில் கலந்துகொள்ள விரும்பினாலும், இயலாமல் தவிக்கும் பலரது சார்பில் நன்றி கூறுகிறோம்.
இஸ்தான்புல் நகரம் ஏற்கனவே உங்கள் முன்னவர்களான முத்திப்பேறு பெற்ற 6ம் பால், புனித 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரை வரவேற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக, எங்கள் வாழ்வைப் பகிர்ந்து, இந்நகரில் பணியாற்றி, தற்போது புனிதராக உயர்ந்துள்ள 23ம் ஜான் அவர்களை எங்களால் மறக்க முடியாது. அவரது புனிதர் பட்ட விழா ஆண்டில், அவருக்காக நாங்கள் பல விழாக்களைக் கொண்டாடினோம். இந்தக் கொண்டாட்டங்களில் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களும் கலந்துகொண்டது, நமது கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாகத் திகழ்கிறது.
புனித 23ம் ஜான் அவர்களின் பரிந்துரையால், கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும் பல்சமய உரையாடல் ஆகிய பணிகளை திறம்பட ஆற்ற இறைவன் எங்களுக்கு வழங்கும் வரங்களுக்கு நன்றி கூறுகிறோம்.

இந்த திருத்தூதப் பயணத்தின் முக்கிய அம்சமாகிய கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களைச் சந்திப்பது இந்த 2வது நாள் பயணத் திட்டத்தில் உள்ளது.

உலகில் இரு கண்டங்களை இணைக்கும் ஒரே நகரமான இஸ்தான்புலிலுள்ள பாஸ்பொரஸ் நீர்க்கால்வாய், ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கின்றது. இந்த நீர்க்கால்வாய், கருங்கடலும், மார்மராக் கடலும் இணையும் இடத்தில் உள்ளது. கிரேக்க காலனியாளர்களால் கி.மு. 667ம் ஆண்டில் இஸ்தான்புல் நகரம் உருவாக்கப்பட்டது. கிரேக்கர்களின் அரசர் Byzantas  என்பவரைக் கவுரவிக்கும் விதமாக, இஸ்தான்புல் நகரம் Byzantium என அழைக்கப்பட்டது. பின்னர், கி.பி.196ம் ஆண்டில் உரோமைப் பேரரசின்கீழ்   இந்நகரம் வந்தது. கி.பி.330ம் ஆண்டு மே 11ம் தேதியன்று உரோமைப் பேரரசர் பெரிய கான்ஸ்ட்டைன், இந்நகரை பைசான்டைன் பேரரசின் அல்லது கீழை உரோமன் பேரரசரின் தலைநகராக அறிவித்தபோது, இந்நகர் கான்ஸ்டான்டிநோபிள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கான்ஸ்டான்டிநோபிள் என்றால், கான்ஸ்ட்டைன் நகர் என்று அர்த்தமாகும். இதனை புதிய உரோம் என்றுகூட அழைத்தனர். மத்திய காலத்தில் இந்நகரம், ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும் பணக்கார நகரமாக விளங்கியது. உரோமைப் பேரரசு, உலகின் கிழக்கில் பரவுவதற்கும், கிரேக்க கலாச்சாரமும், கிறிஸ்தவமும் பரவுவதற்கும் இந்நகர் முக்கிய மையமாக இருந்தது. அக்காலத்தில் Hagia Sophia புகழ்பெற்ற ஆலயம் உட்பட எண்ணற்ற கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டப்பட்டன. உரோமைப் பேரரசர் பெரிய ஜூஸ்தீனியன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட Hagia Sophia ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகின் மிகப் பெரிய பேராலயமாக விளங்கியது. 

ஆயினும், 1453ம் ஆண்டு மே 29ம் தேதி நான்காவது சிலுவைப்போரின்போது, ஒட்டமான்களால் கான்ஸ்டான்டிநோபிள் நகரம் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. முஸ்லிம் பேரரசர் 2வது Mehmed தலைமையில் இத்தாக்குதல் நடைபெற்றது. பின்னர் இந்நகரம், ஒட்டமான் பேரரசின் தலைநகராக மாறியது. ஒட்டமான் சுல்தான்கள் தொடர்ந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு இந்நகரை ஆட்சி செய்தனர். நகரின் பெயரும் இஸ்தான்புல் என மாறியது. இஸ்தான்புல் என்றால், நகருக்கு என்று அர்த்தமாகும். கான்ஸ்டான்டிநோபிள் நகரில் கிறிஸ்தவ அடையாளங்கள் அனைத்தும் இஸ்லாம் கலாச்சாரமாக மாற்றப்பட்டன. பின்னர் முதல் உலகப் போரின்போது 1922ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று ஒட்டமான் பேரரசு கவிழ்ந்தது. காலிஃபா ஆட்சிமுறை வீழ்ந்தது. 1923ம் ஆண்டில் துருக்கி குடியரசு உருவானது. அப்போது தலைநகர் அங்காராவுக்கு மாற்றப்பட்டது. துருக்கியின் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்றின் மையமாக விளங்கும் இஸ்தான்புல் நகரின் வர்த்தக மற்றும் வரலாற்று மையங்கள், இதன் ஐரோப்பியப் பகுதியில் உள்ளன. ஒரு கோடியே 41 இலட்சம் மக்கள் வாழும் இந்நகரம், ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் மிகப் பெரியதும், உலகின் ஆறாவது பெரிய நகரமாகவும், உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஐந்தாவது பெரிய நகரமாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கலாச்சாரத் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்தான்புல் நகருக்கு, 2012ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 16 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.   

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...