Friday, 28 November 2014

செய்திகள் - 27.11.14

செய்திகள் - 27.11.14

1. திருத்தந்தை : ஊழலிலும் கேளிக்கைகளிலும் மூழ்கிப்போன வாழ்வை மறுபரிசீலனை செய்யும் நேரம் இது

2. திருத்தந்தை : இறைவனின் அரசை முன்னெடுத்துச் செல்ல, பழைய தோல்பைகளை விட்டு விலக நாம் அஞ்சக்கூடாது

3. திருத்தந்தை : அடிபட்டிருக்கும் மனிதர்களைத் தேடிச் செல்வதற்கு மேய்ப்புப்பணியில் முன்னுரிமை தரவேண்டும்

4. திருத்தந்தை : நற்செய்தியின் மகிழ்வை உணர்ந்தவர்களாலேயே அச்செய்தியை மகிழ்வுடன் அறிக்கையிட முடியும்

5. கர்தினால் பரோலின் : கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒற்றுமையை வளர்க்க திருத்தந்தை துருக்கி செல்கிறார்

6. திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணத்தை அனைத்து வழிபாட்டு முறை கிறிஸ்தவர்களும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்

7. உலக மக்களில் ஏழுபேரில் ஒருவர் ஏதோ ஒருவகையில் குடிபெயரும் நிலையில் வாழ்கின்றனர்

8. மரண தண்டனைக்கு எதிராக, "வாழ்வை ஆதரிக்கும் நகரங்கள்"

------------------------------------------------------------------------------------------------------


1. திருத்தந்தை : ஊழலிலும் கேளிக்கைகளிலும் மூழ்கிப்போன வாழ்வை மறுபரிசீலனை செய்யும் நேரம் இது

நவ.27,2014. இன்றைய உலகில் நாம் காணும் துன்பம், ஊழல், அக்கறையற்ற நிலை போன்ற அவலம் நிறைந்த எதார்த்தங்களின் மத்தியிலும், நம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
பாபிலோனிய, எருசலேம் நகரங்களின் அழிவு பற்றி நவம்பர் 27, இவ்வியாழன் திருப்பலி வாசகங்களில் கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திருத்தந்தை அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.
ஊழல் என்ற அவலத்தில் ஊறிப்போன பாபிலோன், அந்தத் தீமையிலிருந்து தன்னை விடுவிக்க இயலாமல் அழிந்தது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊழல் என்ற வார்த்தையை பொருளாதாரத்தோடு மட்டும் இணைக்காமல், வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் ஊழல் புரையோடி போயிருப்பதை நாம் உணரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாபிலோனின் வீழ்ச்சிக்கு ஊழல் காரணமானதுபோல், எருசலேமின் வீழ்ச்சிக்கு, கேளிக்கைகள் காரணமானது என்று திருத்தந்தை தன் மறையுரையில் இரு நகரங்களையும் ஒப்புமைப்படுத்தினார்.
ஊழலில் ஊறிப்போய், கேளிக்கைகளில் மூழ்கிப்போய் கிடக்கும் நம் வாழ்வை மறுபரிசீலனைச் செய்யும் நேரம் இது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நம்மைச் சுற்றி நிகழும் அவலங்களால் மனம் சோர்ந்து நம்பிக்கையிழக்காமல், இந்த அவலங்கள் எல்லாம் ஒரு நாள் தீரும், நம் இறைவன் தரும் விருந்தில் பங்கேற்போம் என்ற நம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழ்வோம் என்ற கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் வலியுறுத்தினார்.
மேலும், 'நம்பிக்கையின் அளவுகோல் அன்பே' என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : இறைவனின் அரசை முன்னெடுத்துச் செல்ல, பழைய தோல்பைகளை விட்டு விலக நாம் அஞ்சக்கூடாது

நவ.27,2014. இறைவனின் அரசை முன்னெடுத்துச் செல்ல, பழைய தோல்பைகளை விட்டு விலக நாம் அஞ்சக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, நவம்பர் 30ம் தேதி, வருகிற ஞாயிறன்று துவங்கவிருக்கும் வேளையில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள், மற்றும் திருத்தூது வாழ்வு அவைகள் ஆகிய அமைப்பினருக்கெனப் பணியாற்றும் துறவியர் திருப்பேராயம், நவம்பர் 25 இச்செவ்வாய் முதல், 29, இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்றுவரும் உறுப்பினர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை, "புதிய மது, புதுத் தோல்பைகள்" என்ற விவிலியச் சொற்றொடரை இக்கூட்டத்தின் மையக் கருத்தாக அவர்கள் எடுத்துக்கொண்டதைப் பாராட்டினார்.
கிறிஸ்துவின் திராட்சைத் தோட்டத்தில் பணியாற்ற தங்களையே அர்ப்பணித்துள்ள துறவியரும், திருத்தூது பணியாளரும், புதியத் திராட்சைக் கனிகளாக பழுத்து, புது மதுவாக மாறியுள்ளனர் என்று தன் உரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை.
மாற்றங்களுக்கு இடம்தர மறுக்கும் பழமைப் போக்கு, எண்ணிக்கையில் குறைந்து வரும் இருபால் துறவியர் ஆகிய சவால்களை, அர்பணிக்கப்பட்ட வாழ்வில் ஈடுபடுவோர் சந்தித்தாலும், தொடர்ந்து இறையரசை புதுவழிகளில் விரிவாக்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
புது மது, புது தோல்பை இரண்டும், நற்செய்தியில் தங்கள் வேர்களை பதித்துள்ளனவா என்பதை ஆய்வு செய்து, தெரிவு செய்யும் கடமை உள்ளது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
தன் திராட்சைத் தோட்டத்தில் பணியாற்ற உங்களை அழைத்துள்ள இறைவனின் கருணைக்கு என்றும் நன்றி கூறுங்கள் என்று கூறியத் திருத்தந்தை, உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் துவக்கத்தில் இக்கூட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், அன்னைமரியாவின் பரிந்துரையால் இறையாசீர் பெறவேண்டுமென்ற வாழ்த்துடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : அடிபட்டிருக்கும் மனிதர்களைத் தேடிச் செல்வதற்கு மேய்ப்புப்பணியில் முன்னுரிமை தரவேண்டும்

நவ.27,2014. நகரங்களில் மேற்கொள்ளப்படும் மேய்ப்புப்பணி, வெறும் செயல்பாடுகளாக மட்டும் அமையாமல், நமது மனநிலை, நமது இருப்பு, நமது செய்கைகள் என்று பல அம்சங்கள் வழியே வெளியாகவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
'பெரு நகரங்களில் மேய்ப்புப்பணி' என்ற மையக்கருத்துடன், நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில், இஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற 25 கர்தினால்கள், மற்றும் ஏனையப் பேராயர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, Buenos Aires பெருநகரில் பணியாற்றிய வேளையில் தான் பெற்ற அனுபவங்களையும், தன் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டார்.
மேய்ப்புப்பணியில் நாம் கொள்ளவேண்டிய மனநிலை, பன்முகக் கலாச்சாரச் சூழலில் நாம் ஆற்றவேண்டிய உரையாடல், மக்களின் இறை உணர்வு, நகரங்களில் வாழும் வறியோர் என்ற நான்கு கருத்துக்களில் திருத்தந்தை தன் உரையை வழங்கினார்.
அடிப்பட்டிருப்போரைச் சந்திக்கச் செல்லும் சமாரியரைப் போல, நாம், நகரங்களில் பல்வேறு வகையில் அடிபட்டிருக்கும் மனிதர்களைத் தேடிச் செல்வதில்தான் நமது மேய்ப்புப்பணி முதலுரிமை தரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பான வேண்டுகோள் விடுத்தார்.
திருஅவையின் பிறரன்பு நிறுவனங்களுடனும், வறியோருக்கென பணிகள் ஆற்றிவரும் பல்வேறு அமைப்பினரோடும் கரம் கோர்த்து நாம் உழைக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : நற்செய்தியின் மகிழ்வை உணர்ந்தவர்களாலேயே அச்செய்தியை மகிழ்வுடன் அறிக்கையிட முடியும்

நவ.27,2014. "கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்" (மத். 10,8) என்று இயேசு கூறியது, நமது நற்செய்திப் பரப்புப் பணியின் அடித்தளமாக அமைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நற்செய்தி பரப்புதல், ஊடகத் துறையில் பணியாற்றுதல் ஆகிய சிறப்புக் கொடைகளை தங்கள் துறவற வாழ்வின் நோக்கங்களாகக் கொண்டு உலகெங்கும் பணியாற்றும் புனித பவுல் துறவுச் சபையின் 7000த்திற்கும் அதிகமான உறுப்பினர்களை, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பால் அரங்கத்தில் இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
நற்செய்தியின் மகிழ்வை உணர்ந்தவர்களாலேயே அச்செய்தியை மகிழ்வுடன் அறிக்கையிட முடியும்; உண்மையில் பார்த்தோமெனில், நமது நன்மைத்தனம் தானாகவே வெளிப்படும், அதனை நாம் அறிக்கையிடத் தேவையில்லை என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
முத்திப்பேறு பெற்ற James Alberione அவர்கள், "நற்செய்தியை நான் அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு" (1கொரிந்தியர் 9,16) என்று வாழ்ந்த திருத்தூதர் பவுலைப் பின்பற்றி, தான் வாழ்ந்த காலத்திற்கேற்ற வழியில் நற்செய்தியைப் பரப்பத் துணிந்து, புனித பவுல் துறவுச் சபையை உருவாக்கினார் என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
முத்திப்பேறு பெற்ற James Alberione அவர்களால் 1914ம் ஆண்டு நிறுவப்பட்ட இச்சபை, 2014ம் ஆண்டு தன் முதல் நூற்றாண்டைச் சிறப்பித்து வந்தது. இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வாக, இத்துறவுச் சபையைச் சார்ந்தவர்கள் திருத்தந்தையைச் சந்தித்து, அவரது ஆசீரைப் பெற்றுச் சென்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கர்தினால் பரோலின் : கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒற்றுமையை வளர்க்க திருத்தந்தை துருக்கி செல்கிறார்

நவ.27,2014. கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்தவும், கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒற்றுமையையும், உரையாடலையும் வளர்க்கவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துருக்கி நாட்டுக்கு திருப்பயணம் மேற்கொள்கிறார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
நவம்பர் 28, இவ்வெள்ளி முதல் 30 இஞ்ஞாயிறு முடிய துருக்கி நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்து, வத்திக்கான் தொலைக்காட்சி நிலையத்திற்கு கர்தினால் பரோலின் அவர்கள் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, இப்பயணத்தின் முக்கியக் குறிக்கோளாக இருப்பினும், அந்நாட்டில், துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் தருவதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்பயணத்தை மேற்கொள்ள ஒரு முக்கிய காரணம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.
இஸ்லாமியரோடு மேற்கொள்ளக்கூடிய உரையாடலுக்கு, துருக்கி நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களே ஒரு பாலமாக அமைவர் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் 6வது திருப்பயணம், நவம்பர் 30, புனித அந்திரேயா அவர்களின் திருநாளன்று நிறைவுபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணத்தை அனைத்து வழிபாட்டு முறை கிறிஸ்தவர்களும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்

நவ.27,2014. கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவர்கள், ஆர்த்தடாக்ஸ் சபையினர், கல்தேய, ஆர்மீனிய வழிபாட்டு முறை கிறிஸ்தவர்கள் என்று அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், துருக்கி நாட்டு வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்று, இஸ்தான்புல் திருத்தூது நிர்வாகியான ஆயர் Louis Pelâtre அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளி முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துருக்கி நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூது பயணம் குறித்து, ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த ஆயர் Pelâtre அவர்கள், துருக்கி நாட்டு கிறிஸ்தவ சமுதாயம் கடந்த 20 ஆண்டுகளில் அடைந்துவரும் மாற்றங்கள் குறித்துப் பேசினார்.
7 கோடியே, 60 இலட்சம் மக்கள் தொகை கொண்ட துருக்கி நாட்டில், 1,20,000 என்ற அளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்று கூறிய ஆயர் Pelâtre அவர்கள், அண்மையக் காலங்களில் பிலிப்பின்ஸ், ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளிலிருந்து வந்து குடியேறியுள்ள கத்தோலிக்கர்களால் திருஅவை புத்துணர்வு பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.
துருக்கி நாட்டில் திருத்தூது பிரதிநிதியாகப் பணியாற்றி, பின்னர் திருஅவையின் தலைவரான திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள் எழுதியுள்ள 'ஓர் ஆன்மாவின் நினைவுகள்' (Journal of a Soul) என்ற சுயவரலாற்றில் குறிப்பிடும் பொறுமை என்ற பண்பு துருக்கி நாட்டின் திருஅவை வளர்ச்சியில் கடைப்பிடிக்கப்படவேண்டிய முக்கியப் பண்பு என்று ஆயர் Pelâtre அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : AsiaNews

7. உலக மக்களில் ஏழுபேரில் ஒருவர் ஏதோ ஒருவகையில் குடிபெயரும் நிலையில் வாழ்கின்றனர்

நவ.27,2014. உலக மக்களில் ஏழுபேரில் ஒருவர் ஏதோ ஒருவகையில் குடிபெயரும் நிலையில் வாழ்கின்றனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவா நகரில் இயங்கிவரும் ஐ.நா. அலுவலகங்களில், திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், பன்னாட்டுக் குடிபெயர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் ஒரு கருத்தரங்கில் இப்புதனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
குடிபெயர்தல் என்ற பிரச்சனையில்பெரியவர்களின் துணையின்றி குடிபெயரும் குழந்தைகளின் எண்ணிக்கை, வேறு எந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவு, அண்மைய ஆண்டுகளில் வளர்ந்துள்ளது என்ற கவலையை பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் வெளியிட்டார்.
நாடுகளிடையிலும், நாடுகளுக்குள்ளும் உருவாகியுள்ள போர்ச் சூழல், இயற்கைப் பேரிடர்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற பல காரணங்கள் இந்த உலகளாவிய குடிபெயர்தலை உருவாக்கியுள்ளன என்று பேராயர் தொமாசி அவர்கள் எடுத்துரைத்தார். 
குடிபெயர்தல் என்ற போக்கு உலகமயமாகிவிட்ட இன்றைய உலகில், நாடுகள் ஒருங்கிணைந்து தகுந்த முயற்சிகள் மேற்கொள்வது தவிர்க்கமுடியாத கட்டாயமாக மாறியுள்ளது என்று, பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
சமத்துவம், நீதி, அமைதி ஆகிய உயர்ந்த மனித உரிமைகளை நிலைநாட்டாத வரை, குடிபெயர்தல் என்ற பிரச்னையை நம்மால் தீர்க்க முடியாது என்றும் பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. மரண தண்டனைக்கு எதிராக, "வாழ்வை ஆதரிக்கும் நகரங்கள்"

நவ.27,2014. நவம்பர் 30, இஞ்ஞாயிறன்று, மரண தண்டனைக்கு எதிராக, "வாழ்வை ஆதரிக்கும் நகரங்கள்" என்று மேற்கொள்ளப்படும் உலகளாவிய முயற்சியின் ஓர் அங்கமாக, Sant'Egidio அமைப்பைச் சேர்ந்தவர்கள், உரோம் நகரில் அமைந்துள்ள Colosseum திடலில் சிறப்பு விளக்குகளை ஒளியேற்றுகின்றனர்.
1786ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி, Tuscany என்ற நகரில் முதன்முறையாக மரண தண்டனையை சட்டப்பூர்வமாக நீக்கிய நிகழ்வைக் கொண்டாடுவதற்கு, இன்று உலகின் 1900 நகரங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
உரோம் நகரில், நவம்பர் 27, இவ்வியாழன், வத்திக்கானின் பழமைவாய்ந்த சிறையான Regina Coeli என்ற நினைவிடத்தில், குற்றம் ஏதுமின்றி, மரண தண்டனை பெற்று, 20 ஆண்டுகள் சிறையில் இருந்து 2007ம் ஆண்டு விடுதலையான, அமெரிக்க நாட்டவரான Curtis McCarty என்பவர் உரையாற்றுகிறார்.
உரோமையர்கள் கிறிஸ்தவர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்திய Colosseum என்ற திறந்த வெளியரங்கில், நவம்பர் 30, ஞாயிறன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஒரு கூட்டத்தில், மரண தண்டனைக்கு எதிரான சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று Sant'Egidio அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...