Saturday, 22 November 2014

எருசலேம் மசூதியில் மறைசாட்சியானவர் (St. Nicholas Tavelic)

எருசலேம் மசூதியில் மறைசாட்சியானவர்
(St. Nicholas Tavelic)

Croatia நாட்டில் ஓர் உயர்குடியைச் சார்ந்த குடும்பத்தில் 1340ம் ஆண்டுப் பிறந்தார் நிக்கொலஸ் தவாலிச். பிரான்சிஸ்கன் துறவுச் சபையில் சேர்ந்த இவர், ஏனைய துறவிகளுடன் இணைந்து போஸ்னியாவில் நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்பட்டார். இந்தக் குழுவே 1384ல் புனித பூமியில் மறைப்பணியாற்ற விருப்பத்தை வெளியிட்டு அனுமதியும் பெற்றது. அங்குள்ள புனித இடங்களைப் பாதுகாத்து, திருப்பயணிகளுக்கு பணிபுரிந்ததுடன், அரபு மொழியையும் இவர்கள் கற்கத் தொடங்கினர். 1391ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, எருசலேமின் மிகப்பெரிய மசூதிக்குள் அனுமதி பெற்று நுழைந்த நிக்கொலஸ் தலைமையில் நான்குபேர் அடங்கிய குழு, அங்கிருந்த தலைமை அதிகாரியை சந்தித்ததுடன், அனவரும் இயேசுவின் நற்செய்தியை ஏற்கவேண்டும் என போதிக்கவும் துவங்கினர். அவ்வேளையில், அவர்கள் அங்கிருந்த மக்களால் தாக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எவரும் பாதுகாப்பு கொடுப்பதற்கு முன்வராததால் எதிரிகளால் வதைக்கப்பட்டனர். இதையறிந்த அவர்களின் துறவுச்சபை சகோதரர்கள், அவர்களைக் காப்பாற்ற சென்றனர். இருப்பினும் அவர்களால் மறைசாட்சிகளைக் காப்பாற்ற இயலவில்லை. எதிரிகள் நிக்கொலசையும் அவரின் தோழர்களையும் கைது செய்தனர். அவர்களின் கைகளில் விலங்குகளை மாட்டி தெருத்தெருவாக இழுத்துச் சென்று அடித்தனர். இவர்கள் 4 பேரையும் எதிரிகள் உணவின்றி பட்டினிப் போட்டனர். இருப்பினும் நான்கு பேரும், எதற்கும் அஞ்சாமல் கடவுளை போற்றிப் புகழ்ந்தனர். இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இதனைக் கண்ட எதிரிகள் 4 பேரையும் கொல்ல திட்டமிட்டனர். மூன்று நாட்கள் இவர்களைக் கொடுமைப்படுத்திய எதிரிகள், நவம்பர் மாதம் 14ம் தேதி மக்கள் முன்னிலையில் இவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி, தலையை துண்டித்துக் கொன்றனர். இவர்களை 1970ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி புனிதர்களாக அறிவித்தார் திருத்தந்தை 6ம் பவுல். நிக்கொலஸ் தவாலிச் அவர்களே, குரோவேசியாவின் முதல் புனிதராவார். 1335ம் ஆண்டு முதல், எருசலேமின் புனிதப் பகுதிகளை நிர்வகித்துவரும் பிரான்சிஸ்கன் சபை துறவிகளுள் 158பேர் இதுவரை மறைசாட்சிகளாக கொல்லப்பட்டுள்ளனர். இதில் நிக்கொலஸ் தவாலிச் அவர்களும், அவரின் 3 தோழர்களுமே புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...