Saturday 22 November 2014

செய்திகள் - 21.11.14

செய்திகள் - 21.11.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : அருள்பணியாளர்களிடம் வர்த்தக மனப்பான்மை வெளிப்படுவது, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது

2. திருத்தந்தை பிரான்சிஸ் : பசுமையான மேய்ச்சலைத் தேடிச்செல்லும் மக்கள், குடிபுகும் நாடுகளிலும் தொடர்ந்து சவால்களைச் சந்திக்கின்றனர்

3. 'கிறிஸ்தவ ஒன்றிப்பு' சங்க ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி

4. "அளவற்ற இறைவனின் அழகிற்கு ஓர் அடையாளம், மரியா" என்ற கருத்தரங்கு உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வழங்கிய செய்தி

5. திருத்தந்தை பிரான்சிஸ் : மனித சமுதாயத்தின் காயங்களை குணமாக்க முடியாது என்று மனம் தளர்ந்து போவது பெரும் ஆபத்து

6. உரோம் நகரில், திருஅவை இயக்கங்களும், புதியக் குழுமங்களும் இணைந்து நடத்தும் உலக மாநாடு

7. வத்திக்கான் புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள, இந்திய அரசின் சார்பில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு

8. புதிய வழிபாட்டு ஆண்டை, "வறியோரின் ஆண்டு" என சிறப்பிக்க, மணிலா உயர் மறைமாவட்டம் முடிவு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : அருள்பணியாளர்களிடம் வர்த்தக மனப்பான்மை வெளிப்படுவது, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது

நவ.21,2014. வலுவற்ற நிலையில் தவறு செய்யும் ஓர் அருள்பணியாளரையோ, கோவில் பணியாளரையோ மக்கள் மன்னித்துவிடுவர்; ஆனால், பேராசை கொண்டு மக்களைச் சரிவர மதிக்காத பணியாளர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தூய கன்னிமரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தத் திருநாளான இவ்வெள்ளியன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்த நிகழ்வை மையப்படுத்தி, திருத்தந்தை மறையுரை வழங்கினார்.
கடவுளைத் தேடி கோவிலுக்குச் சென்ற எளிய மக்கள், அங்கு நிலவிய ஊழல், பேராசை ஆகியவற்றைக் கண்டு அதிர்ச்சி கொண்டனர் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களிடம் வர்த்தக மனப்பான்மை வெளிப்படுவது, இன்றும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது என்று கூறினார்.
தான் அருள்பணியாளராகப் பணியைத் துவக்கிய வேளையில், ஒரு பங்குகோவிலில் திருமணத் திருப்பலி நேரத்தை சிறு கூறுகளாகப் பிரித்து விற்பனை செய்த ஓர் அருள்பணியாளரை தான் சந்தித்த நிகழ்வை திருத்தந்தை தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.
திருமண அருள்சாதனத்தைத் திருப்பலியுடன் கொண்டாட கோவிலை நாடி வரும் மக்கள், அத்திருப்பலியை ஒரு வர்த்தக நிலைக்குத் தாழ்த்திவிடும் அருள்பணியாளர்களை மன்னிக்கமாட்டார்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
மீட்பு என்பது இறைவன் வழங்கும் இலவசக் கொடை. அந்த மீட்பை விலை கொடுத்து வாங்கும்படி மக்களைக் கட்டாயப்படுத்தும் அருள்பணியாளர்களை விரட்ட, இயேசு சாட்டையை எடுப்பார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
தன்னை முழுவதும் அர்ப்பணித்த அன்னை மரியா, கோவிலில் தன் வாழ்வைச் செலவிட்ட அன்னா போன்ற பெண்கள் வழியே நம் உடலை தூயதோர் ஆலயமாக இறைவனுக்கு ஒப்படைக்கக் கற்றுக்கொள்வோம் என்ற கருத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : பசுமையான மேய்ச்சலைத் தேடிச்செல்லும் மக்கள், குடிபுகும் நாடுகளிலும் தொடர்ந்து சவால்களைச் சந்திக்கின்றனர்

நவ.21,2014. ஒவ்வொரு மனித முகத்திலும் இயேசுவைக் காணும் விசுவாசிகளின் கூட்டமும், திருஅவையும், எல்லைகள், தடுப்புச்சுவர்கள் அற்ற ஒரு குடும்பத்தின் தாயாக விளங்குகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நவம்பர் 17 இத்திங்கள் முதல், 21, இவ்வெள்ளி முடிய உரோம் நகர் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில், குடிபெயர்வோரின் மேய்ப்புப்பணியை மையப்படுத்தி நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு வந்திருந்த உறுப்பினர்களை, இவ்வெள்ளி காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, குடிபெயர்தல் என்ற உலகளாவிய ஒரு போக்கின் பல்வேறு சவால்களைக் குறித்துப் பேசினார்.
உலகமனைத்தையும் பாதித்துள்ள பொருளாதாரச் சரிவு, மூன்றாம் உலக நாடுகளை மிக அதிகமாகப் பாதித்துள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையச் சூழலிலிருந்து வெளியேறி, பசுமையான மேய்ச்சலைத் தேடிச்செல்லும் மக்கள், குடிபுகும் நாடுகளிலும் தொடர்ந்து சவால்களைச் சந்திக்கின்றனர் என்று கூறினார்.
போதுமான ஊதியங்களைத் தேடி, வேற்று நாடுகளுக்குச் செல்லும் குடும்பத் தலைவர் அல்லது தலைவி, தங்கள் குடும்பங்களை விட்டு விலகுவதால், வளரும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
வேற்று நாடுகளிலிருந்து குடியேறும் தொழிலாளிகளின் உழைப்பால் செல்வச் செழிப்பான நாடுகள், இன்னும் அதிக இலாபம் ஈட்டும் அதே வேளையில், உழைக்கும் தொழிலாளிகளின் மாண்பும், உரிமைகளும் வெகுவாகக் குறைந்து வருவது வேதனை தருகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
குடிபெயர்வோரின் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் தலைமையில், 93 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான உறுப்பினர்கள், தங்கள் ஒருவார கருத்தரங்கின் உச்சக் கட்டமாக, திருத்தந்தையைச் சந்தித்து, அவரது ஆசீரைப் பெற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. 'கிறிஸ்தவ ஒன்றிப்பு' சங்க ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி

நவ.21,2014. இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு (Unitatis Redintegratio) என்ற ஏடு, கிறிஸ்தவர்கள் மத்தியில் உருவாகியிருந்த ஆழமான காயங்களைக் குணப்படுத்தியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
1964ம் ஆண்டு, நவம்பர் 21ம் தேதி, வெளியான 'கிறிஸ்தவ ஒன்றிப்பு' சங்க ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க உரோம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கிற்கு வருகை தந்த உறுப்பினர்களை, இவ்வியாழன் மாலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்காக எழுதியிருந்த செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற ஏடு வெளியான அதே வேளையில், மக்களின் ஒளி என்ற (Lumen Gentium) திருஅவை ஏடு, கீழை வழிபாட்டு முறை திருஅவைகள் என்ற ஏனைய இரு ஏடுகளும் வெளியானதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவை அனைத்துமே திருமுழுக்கு என்ற அடிப்படையில் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளாக இருந்தன என்று குறிப்பிட்டார்.
உரோமையின் ஆயராகவும், என்ற முறையில், பல்வேறு கத்தோலிக்கத் திருஅவைகளை ஒருங்கிணைக்கும் தலைவராகவும் பணியாற்றும் திருத்தந்தை என்ற முறையில், கடந்த 50 ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவையும் ஏனைய திருஅவைகளும் மேற்கொண்டுள்ள ஒற்றுமை முயற்சிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி கூறினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கென ஒவ்வோர் ஆண்டும் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டு வரும் ஒன்றிப்பு வார செப முயற்சிகள், நம்மிடையே இன்னும் அதிகப் பலனை அளிக்கவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்தினார்.
'கிறிஸ்தவ ஒன்றிப்பு' சங்க ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, நவம்பர் 18, இச்செவ்வாய் முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆயர்களும், அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள் மற்றும் பலரும், இவ்வெள்ளியன்று கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்துடன் இந்தப் பொன்விழாவை நிறைவு செய்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. "அளவற்ற இறைவனின் அழகிற்கு ஓர் அடையாளம், மரியா" என்ற கருத்தரங்கு உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வழங்கிய செய்தி

நவ.21,2014. உலகமும், திருஅவையும் கடினமான பிரச்சனைகளைச் சந்தித்த வேளையில், திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள், மரியன்னையின் துணையை, தான் மட்டும் தேடியதோடு, மக்களையும் அன்னை மரியாவிடம் வேண்டச் சொல்லித் தந்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
"அளவற்ற இறைவனின் அழகிற்கு ஓர் அடையாளம், மரியா" என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த ஒரு செய்தியை, இவ்வியாழன் மாலை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வாசித்தார்.
திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் மரியன்னைக்கு திருஅவை வழங்கும் வணக்கத்தைக் குறித்து வெளியிட்ட 'Marialis Cultus' என்ற ஏடு குறித்தும், இன்னும் ஏனையச் சூழல்களில் திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள் மரியன்னையைக் குறித்து வெளியிட்ட பல்வேறு உரைகளைக் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பீடக் கல்விக் கழகமும், திருப்பீட மரியன்னைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில், திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi அவர்கள் மரியன்னை மீது திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த உறவைக் குறித்து விளக்கவுரை அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் : மனித சமுதாயத்தின் காயங்களை குணமாக்க முடியாது என்று மனம் தளர்ந்து போவது பெரும் ஆபத்து

நவ.21,2014. துன்பங்கள் பெருகிவரும் இக்காலத்தில், மனித சமுதாயத்தின் காயங்களை குணமாக்க முடியாது என்று மனம் தளர்ந்து போவது பெரும் ஆபத்து என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நவம்பர் 20, இவ்வியாழன் முதல், 23 வருகிற ஞாயிறு முடிய இத்தாலியின் வெரோனா என்ற நகரில் நடைபெறும் ஒரு சமுதாய விழாவுக்கு, ஒலி-ஒளி வடிவத்தில் திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தி, விழா அரங்கில் இவ்வியாழன் மாலை ஒளிபரப்பானது.
கத்தோலிக்கத் திருஅவையில் சமுதாயப் படிப்பினைகள் என்ற கருத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவிற்கு, "நாம் வாழும் காலத்தில், இன்னும் பல வழிகள்" என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை மகிழ்வுடன் குறிப்பிட்டத் திருத்தந்தை, புதிய வழிகளைத் தேட நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.
சமுதாயம் இன்று சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பொருளாதார அடிப்படையில் மட்டுமே தீர்வுகள் காண நினைப்பது நமது கண்ணோட்டத்தை அதிகமாக குறுக்கிவிடும் என்றும், மனித மாண்பு, உறவு, என்ற ஏனைய கண்ணோட்டங்களும் தேவை என்றும் திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தினார்.
இளையோரை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த நான்கு நாள் விழாவிற்கு, இத்தாலிய அரசுத் தலைவர், Georgio Napolitano அவர்களும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. உரோம் நகரில், திருஅவை இயக்கங்களும், புதியக் குழுமங்களும் இணைந்து நடத்தும் உலக மாநாடு

நவ.21,2014. திருஅவையில் உருவாகும் மறுமலர்ச்சி, எண்ணற்ற விசுவாசிகளின் நம்பிக்கையைப் புதுப்பிக்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 20, இவ்வியாழன் முதல், 22, இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில், திருஅவை இயக்கங்களும், புதியக் குழுமங்களும் இணைந்து நடத்தும் உலக மாநாட்டில், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்கள்  வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்த 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற அறிவுரை மடல் திருஅவையில், குறிப்பாக, இயக்கங்கள், குழுமங்கள் மத்தியில் உருவாக்கிவரும் நலமானத் தாக்கங்கள் குறித்து, கர்தினால் Ouellet அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
'நற்செய்தியின் மகிழ்வு' என்ற அறிவுரை மடலில் காணப்படும் "நற்செய்தியின் மகிழ்வு, மறைபரப்புப் பணியின் மகிழ்வு" என்ற வார்த்தைகள் இந்த உலக மாநாட்டின் மையக் கருத்தாக எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது குறித்து, பொதுநிலையினர் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Stanislaw Rylko அவர்கள் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
திருஅவையில் உருவாகும் இயக்கங்களும், குழுமங்களும் திருஅவையின் ஓர் அடிப்படை பண்பை இவ்வுலகிற்குப் பறைசாற்றுகின்றன என்று திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதையும், இயக்கங்கள், மற்றும் குழுமங்களின் வளர்ச்சி திருஅவையின் வளர்ச்சி என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதையும், கர்தினால் Rylko அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
உலகின் 40 நாடுகளிலிருந்து வந்திருக்கும் 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, இச்சனிக்கிழமையன்று நிறைவுபெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. வத்திக்கான் புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள, இந்திய அரசின் சார்பில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு

நவ.21,2014. நவம்பர் 23, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறவிருக்கும் புனிதர் பட்டமளிப்பு விழாவிற்கு, இந்திய அரசின் சார்பில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழுவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுப்பிவைக்க இசைந்துள்ளதற்கு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Baselios Cleemis அவர்கள் அனுப்பியிருந்த வேண்டுகோளை ஏற்று, பிரதமர் மோடி அவர்கள், இந்திய மேலவையின் துணைத் தலைவர், முனைவர் பி.ஜே. குரியன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அனுப்ப இசைந்துள்ளார்.
இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் ஆறு பேரில், முத்திப்பேறு பெற்ற Kuriakose Elias Chavara அவர்களும், அவர்களும் Euphrasia Eluvanthingal இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இவ்விருவரையும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றும் இஞ்ஞாயிறன்று, இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்கள் தங்கள் பங்குக் கோவில்களில் சிறப்பு செபங்களை மேற்கொள்ள, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை சிறப்பு அழைப்பொன்றை விடுத்துள்ளது.

ஆதாரம் : CBCI

8. புதிய வழிபாட்டு ஆண்டை, "வறியோரின் ஆண்டு" என சிறப்பிக்க, மணிலா உயர் மறைமாவட்டம் முடிவு

நவ.21,2014. நவம்பர் 30, வருகிற ஞாயிறன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுடன் துவங்கும் புதிய வழிபாட்டு ஆண்டை, "வறியோரின் ஆண்டு" என சிறப்பிக்க பிலிப்பின்ஸ் நாட்டு, மணிலா உயர் மறைமாவட்டம் முடிவெடுத்துள்ளது.
2021ம் ஆண்டு, பிலிப்பின்ஸ் நாட்டின் தலத்திருஅவை தன் 500வது ஆண்டுவிழாவைச் சிறப்பிக்கவிருப்பதால், அதற்கு ஓர் முன்னேற்பாடாக, "வறியோரின் ஆண்டு" சிறப்பிக்கப்படும் என்று, இவ்வாண்டின் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் அருள் பணியாளர் Luke Moortgat அவர்கள் தெரிவித்தார்.
தலைசாய்க்க ஓரிடமின்றி, இறைமகன் இயேசு வறுமையில் வாழ்ந்தாலும், தன் பணியை அயராமல் செய்ததை ஒரு முன்னோடியாகக் கொண்டு, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரை மையப்படுத்தி, வரும் வழிபாட்டு ஆண்டைச் சிறப்பிக்க மணிலா உயர் மறைமாவட்டம் முடிவெடுத்துள்ளது என்று அருள் பணியாளர் Moortgat அவர்கள் கூறினார்.
"வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை: என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" (திருத்தூதர் பணிகள் 3: 6) என்று திருத்தூதர் பேதுரு, ஊனமுற்ற ஒருவருக்குச் சொன்ன வார்த்தைகள் "வறியோரின் ஆண்டி"ன் மையக்கருத்தாக அமையும் என்று அருள் பணியாளர் Moortgat அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...