செய்திகள் - 03.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இறை-மனித உரையாடல்களின் கனியே இறைவெளிப்பாடுகள்
2. திருத்தந்தை : பகை உணர்வுகளும் வீண் தற்பெருமைகளும் திருஅவையை பலவீனமாக்குகின்றன
3. திருத்தந்தை : எல்லைகளற்ற ஒரு வாழ்வை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர் மனிதர்
4. ஐ.நா.வில் திருப்பீடம் : அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கும் பயன்தர வேண்டும்
5. ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டோருக்கு, அரசுகள் முக்கியத்துவம் கொடுக்க கர்தினால் கிரேசியஸ் அழைப்பு
6. இரஷ்யப் பேராயர் : புனிதத்துவத்திற்கான பாதை குடும்பம்
7. பருவநிலை மாற்றம் : ஐ.நா. நிபுணர் குழு புதிய எச்சரிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இறை-மனித உரையாடல்களின் கனியே இறைவெளிப்பாடுகள்
நவ.03,2014. இறைவனுக்கும் அவர் மக்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளின் கனியே இறைவெளிப்பாடுகள் என, இத்திங்களன்று
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.
கடந்த 12 மாதங்களில் திருஅவையில் உயிரிழந்த கர்தினால்கள், பேராயர்கள்,
ஆயர்கள் ஆகியோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இத்திங்கள் காலை உரோம் நேரம்
11.30 மணிக்கு தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி
மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவெளிப்பாடு அனைத்திற்கும் காரணமான இறைவனுக்கும் மனிதருக்கும் இடையேயான உரையாடலுடன் உயிர்ப்பும் தொடர்பு கொண்டுள்ளது என்றார்.
இறைவனுக்கும்
அவர் மக்களுக்கும் இடையேயான உரையாடல் மனிதகுல வரலாற்றில் எப்போதும்
தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் ஒன்று எனவும் எடுத்துரைத்தார்
திருத்தந்தை.
இறைவனுடனான இறைமக்களின் பயணம் இயேசுவின் உயிர்ப்பில் தன் நிறைவையும் உண்மை வெளிப்பாட்டையும் கண்டது, அதனால்தான் இயேசுவும், 'நானே வாழ்வும் உயிர்ப்பும்' என்றுரைத்தார் என தன் மறையுரையில் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : பகை உணர்வுகளும் வீண் தற்பெருமைகளும் திருஅவையை பலவீனமாக்குகின்றன
நவ.03,2014. பகை உணர்வுகளும் வீண் தற்பெருமைகளும் திருஅவையை பலவீனமாக்குகின்றன என்பதை மனதில்கொண்டு, தாழ்ச்சியுடன்கூடிய உடன்பாட்டை நாம் ஏற்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ சமூகங்களுக்குள் பகை உணர்வுகள் இருப்பது இப்போது மட்டுமல்ல, கடந்த
காலங்களிலும் ஒரு தீய எடுத்துக்காட்டாக இருந்துள்ளது என்பதற்கு புனித
பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து
அறிகிறோம் என்றார்.
விரோத மனப்பான்மையிலும் வீண் தற்பெருமைகளிலும் நாம் வீழ்ந்துவிடாமல் இருக்கவேண்டுமானால், பிறரை, நம்மைவிட
உயர்ந்தவர்களாக மதித்து நடத்துவதே சிறந்த வழி என்ற புனித பவுலின்
எடுத்துக்காட்டையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னலத்தைத் தேடாமல், பிறர் நலத்திற்காக உழைப்பதுடன், அவர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாழ்ச்சி, பிறரன்பு, பிறர்மீது கடுஞ்சொல் கூறாமை போன்ற சூழலில், முரண்பாடுகளை வெற்றிகொள்ள முடியும் என்றார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : எல்லைகளற்ற ஒரு வாழ்வை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர் மனிதர்
நவ.03,2014. மரணம் என்பது மனித வாழ்வின் கடைசி வார்த்தையல்ல, ஏனெனில் இறைவனில் தன் மூலத்தையும் அதன் நிறைவையும் கொண்டுள்ள, எல்லைகளற்ற வாழ்வை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர் மனிதர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்து
ஆன்மாக்களின் நினைவைச் சிறப்பித்த இஞ்ஞாயிறன்று வத்திக்கான் வளாகத்தில்
கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவராலும் நினைவுகூரப்படாத ஆன்மாக்கள், போரில் பலியானோர், பசியாலும் சித்ரவதைகளாலும் இறந்தோர் ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் செபிப்போம் என அழைப்புவிடுத்தார்.
இம்மாதம் முதல் தேதி சிறப்பிக்கப்பட்ட அனைத்து புனிதர்கள் விழாவும், இரண்டாம் தேதியின் அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்களின் பரிந்துரை குறித்து திருஅவை மகிழும் அதேவேளை, தங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இழந்துள்ள விசுவாசிகளின் துன்பங்களிலும் பங்கெடுக்கிறது என்றார்.
இறுதி
நாளில் உயிர்த்தெழுவதற்காக இறந்தோர் அனைவரும் காத்திருக்கும்
இளைப்பாறுதலின் இடமாக கல்லறைத் தோட்டத்தை நாம் நோக்குகிறோம் எனவும் உரைத்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறந்து காத்திருப்போர்களுக்காக நாம் செபிப்பதே நாம் அவர்களுக்கு வழங்கும் ஆன்மீக உதவியாகும் என்றார்.
இறந்தோரை நினைவுகூர்வதும், அவர்களின் கல்லறைகளைப் பராமரிப்பதும், அவர்களுக்காகச் செபிப்பதும், இறப்பு என்பது முடிவல்ல, அதையும் தாண்டிய எல்லைகளற்ற ஒரு வாழ்வு உள்ளது என்ற நம் நம்பிக்கையின் வெளிப்பாடாகும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. ஐ.நா.வில் திருப்பீடம் : அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கும் பயன்தர வேண்டும்
நவ.03,2014. உலக அறிவியல் முன்னேற்றப் பலன்கள், ஏழைகளுக்கும்
பலன் தருபவைகளாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புவதாக ஐ.நா. பொது
அவைக்கூட்டத்தில் உரைத்தார் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்
பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவ்சா.
விண்வெளியை
அமைதி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதில் அனைத்துலக ஒத்துழைப்பு என்ற
தலைப்பில் நடத்தப்பட்ட ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அவ்சா அவர்கள், அதிகப்
பொருளாதாரச் செலவுகளை உள்ளடக்கிய விண்வெளி ஆய்வுகளிலிருந்து கிட்டும்
புதிய தகவல்கள் மக்களிடையே சரிநிகரற்ற தன்மைகளை வளர்ப்பதற்கு காரணமாகாமல், அனைவரும் பயனடைவதற்கு உதவும் ஒன்றாக பொதுவில் வைக்கப்படவேண்டும் என்றார்.
அனைவருக்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் பயன்படவேண்டுமெனில், அடிப்படையில் அவை அமைதிக்கென பயன்படுத்தப்படுபவைகளாக இருக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் பேராயர் அவ்சா.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டோருக்கு, அரசுகள் முக்கியத்துவம் கொடுக்க கர்தினால் கிரேசியஸ் அழைப்பு
நவ.03,2014. மகராஷ்டிராவில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பா.ஜ.க. ஆட்சி, அம்மாநிலத்தில் வாழும் பல்வேறு இன மக்களிடையே அமைதி நிறைந்த இணக்கவாழ்வை ஊக்குவிப்பதோடு, விவசாயிகளின்
தற்கொலைகளையும் தடுக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என
அழைப்புவிடுத்துள்ளார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
புதிய மாநில அரசிற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ள செய்தியில், ஏழைகள், சிறுபான்மையினோர், வறுமையில்
வாடுவோர் மற்றும் முதியோருக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து
திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைத்துள்ளார் கர்தினால்
கிரேசியஸ்.
பல்வேறு மதநம்பிக்கையாளர்களைக்கொண்ட நாட்டில், ஒன்றிப்பு, அன்பு, உண்மை,
நீதி மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய அரசின் நிர்வாகிகள்
மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளின் கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும் எனவும்
விண்ணப்பித்துள்ளார் மும்பை கர்தினால்.
விவசாயிகளின்
தற்கொலைகள் மகராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்துவருவது குறித்து இந்தியத்
தலத்திருஅவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உரைத்த கர்தினால் கிரேசியஸ், இதில் அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், தலத்திருஅவையும் கல்வி மற்றும் நல ஆதரவுப்பணிகள் மூலம் தன் சமூகப் பங்களிப்பை ஆற்றிவருவதாகவும் கூறினார்.
ஆதாரம் : AsiaNews
6. இரஷ்யப் பேராயர் : புனிதத்துவத்திற்கான பாதை குடும்பம்
நவ.03,2014. திருமண
வாழ்வும் குருத்துவத்தைப்போல் ஓர் அழைப்பு என்பதை உணர்ந்து
செயலாற்றும்போது அது புனிதத்துவத்திற்கான ஒரு பாதையாக மாறுகின்றது என
எடுத்துரைத்தார் இரஷ்யாவின் பேராயர் பவ்லோ பெட்ஸி.
அக்டோபர்
மாதத்தில் திருப்பீடத்தில் இடம்பெற்ற குடும்பம் குறித்த ஆயர்கள்
மாமன்றத்தில் கலந்துகொண்டபின் அது குறித்து இரஷ்ய மக்களுக்கு உரை வழங்கிய
பேராயர், குடும்ப வாழ்வும் ஓர் அழைப்பே என்பதை உணராமல் நாம் செயலாற்றுவதாலேயே மணமுறிவுகளும், திருமணமின்றி சேர்ந்து வாழ்தலும், அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது என்றார்.
நாம் வாழும் காலத்திலேயே இரஷ்யாவின் செர்னோபில் அணுஆலை விபத்தைக் கண்டுள்ள நாம், தற்போது வேறு வகையான அதாவது, ஆன்மீகச் செர்னோபில் விபத்தை சந்தித்து வருகிறோம் என்றார்.
குடும்பங்கள் உடைவதும், திருமணத்தைப் பற்றி புரிந்துகொள்ளாமல், அதன் முக்கியத்துவத்தை உணராமல் இளையோர் வாழ்ந்து வருவதும் ஆன்மீகச் செர்னோபிலின் விளைவே எனவும் கூறினார் பேராயர் பவ்லோ பெட்ஸி.
குடும்பம் என்பது ஒரு பிரச்சனைக்குரிய பொருளல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக்கொண்ட உயரிய ஒன்று என்பதையும், அதன் அழகையும் இளையோருக்கு காண்பிக்க வேண்டியது சமூகத்தின் கடமை எனவும் கூறினார் இரஷ்யப் பேராயர் பெட்ஸி.
ஆதாரம் : AsiaNews
7. பருவநிலை மாற்றம் : ஐ.நா. நிபுணர் குழு புதிய எச்சரிக்கை
நவ.03,2014. வெப்பவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நிவர்த்திசெய்ய
முடியாத பாதிப்புகளை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கும்
ஆய்வறிக்கை ஒன்றை பருவநிலை மாற்றம் சம்பந்தமான ஐ.நா. நிபுணர் குழு
வெளியிட்டுள்ளது.
புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயலே முக்கிய காரணம் எனக் கூறும் இந்த நாற்பது பக்க அறிக்கை, புவியின் வெப்பம் ஆபத்தை உண்டாக்கும் அளவுகளில் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமாயின், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியோடு, உலகத்துக்கு தேவையான மின்சாரம், முழுமையாகவே கரிம வெளியேற்றம் இல்லாத உற்பத்தி முறைகளிலிருந்து வரவேண்டும் என எச்சரிக்கிறது.
கோபன்ஹாகனில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டபோது பேசிய ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், பருவநிலை
மாற்றங்களுக்கு அதிகம் பங்களிக்காதவர்களான ஏழை மக்களும் பலவீனமான
சூழ்நிலையில் உள்ளவர்களுமே பருவநிலை மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு
வருகிறார்கள் என்று கூறினார்.
No comments:
Post a Comment