எதிர்ப்புகளுக்கு அஞ்சாதவர்
(St. Francis de Laval)
நியு பிரான்ஸ் என்பது, 16ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் பிரான்ஸ் நாட்டவரின் காலனிப் பகுதியாகும். இக்காலனி ஆதிக்கம், 1534ம் ஆண்டில் Jacques Cartier என்ற ப்ரெஞ்ச்க்காரர், வட அமெரிக்காவில் செயின்ட் லாரன்ஸ் நதியை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியதிலிருந்து 1763ம் ஆண்டில் பிரான்ஸ் நாடு, இப்பகுதியை
இஸ்பெயினுக்கும் பிரித்தானியாவுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும்வரை
இருந்தது. தற்போதைய கானடாவிலுள்ள இந்த நியு பிரான்ஸ் மறைமாவட்டத்தின் முதல்
ஆயராக, அருள்பணி Francis de Montmorency Laval அவர்களை, அரசர் 14ம் லூயிஸ் தேர்வுசெய்தார். 38 வயதேயான அருள்பணி de Laval, 1658ம்
ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நியு பிரான்சின் ஆயராக அருள்பொழிவு
செய்யப்பட்டார். இதற்கு ஆறு மாதங்கள் கழித்து அம்மறைமாவட்டம் முழுவதும்
மேய்ப்புப்பணி பயணங்களை மேற்கொண்டார் ஆயர். அச்சமயங்களில் இவரிடம் விளங்கிய
பிறரன்பு, பக்தி, தேர்ந்துதெளிதல், பாகுபாடின்மை
போன்ற பண்புகளால் மக்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் சம்பாதித்தார்.
முதல் வேலையாக கானடாவில் திருஅவையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். கானடா
முழுவதும் பொதுமக்கள் மற்றும் துறவிகளையும் உருவாக்குவதில் அக்கறை
காட்டினார். அந்நேரங்களில் பல இடையூறுகளைச் சந்தித்தாலும், தனது ஞானம், உறுதியான செயல்பாடு போன்றவற்றால் வட அமெரிக்கா முழுவதும் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதில் வெற்றியும் கண்டார். ஆயர் de Laval, கியுபெக்
நகரில் முதல் குருத்துவ கல்லூரியைத் தொடங்கினார். நியு பிரான்ஸில் காலனி
ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் நுழைந்த அனைத்துவிதச் சீர்கேடுகளை, குறிப்பாக, நச்சுகலந்த
மதுபான வியாபாரத்தை ஒழிப்பதற்கு இவர் கடுமையாய் உழைக்க வேண்டியிருந்தது.
கானடாவின் பூர்வீக மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த மதுபானங்கள், கானடாவின்
புதிய திருஅவையையே ஏறக்குறைய உருக்குலைத்தது. நியு பிரான்சில்
கிறிஸ்தவத்துக்கு எதிராக யார் கிளம்பினாலும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி
உறுதியுடன் இவர் எதிர்த்து நின்றார். மயிராடையையே இவர் அணிந்திருந்தார்.
ஏறக்குறைய இருபது ஆண்டுகள் இரண்டு அங்கிகளையே பயன்படுத்தினார். இந்தப்
புனித ஆயர் தெ லவால், 1708ம் ஆண்டு மே 6ம் தேதி காலமானார். பிரான்சின் நார்மண்டி மாநிலத்தில் பிறந்த புனித ஆயர் de Laval, கடந்த ஏப்ரல் 3ம் தேதி புனிதராக அறிவிக்கப்பட்டார். இதற்கு நன்றித் திருப்பலியை அக்.12, வருகிற ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment