Tuesday, 28 October 2014

காந்திக்குப் பதில் நேருவை கொலை செய்திருக்கலாம்: ஆர்.எஸ்.எஸ். இதழ் கட்டுரையால் சர்ச்சை

காந்திக்குப் பதில் நேருவை கொலை செய்திருக்கலாம்: ஆர்.எஸ்.எஸ். இதழ் கட்டுரையால் சர்ச்சை

Untitled 13(91)Source: Tamil CNN. மகாத்மா காந்திக்குப் பதிலாக நேருவை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். வார இதழில் வெளியான கட்டுரையால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ மலையாள வார இதழான ‘கேசரி’யில் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி சர்ச்சைக்குரிய ஒரு கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையை, நாடாளுமன்றத் தேர்தலில் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பா.ஜ.க. வேட்பாளர் கோபால கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
கட்டுரையில், வரலாற்றை நியாயமான கண்ணோட்டத்துடன் பார்த்தால் மக்களுக்கு உண்மைகள் புரியும் என குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கோபால் கிருஷ்ணன், இந்தியா-பாகிஸ்தான் பிரிவு, காந்தியின் படுகொலைக்கு ஜவஹர்லால் நேருவின் சுய நலம்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
ஜவஹர்லால் நேருவைவிட, காந்தியை துப்பாக்கியால் சுட்ட கோட்சேவே சிறந்த நபர் என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கோபால் கிருஷ்ணன், கோட்சே தவறான நபரை கொலை செய்து விட்டார் என்றே தோன்றுகிறது. காந்திக்குப் பதிலாக நேருவை அவர் கொலை செய்திருக்கலாம்.
மகாத்மா காந்தியை கொலை செய்யும் முன்னதாக கோட்சே தனது சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தினார். அதேநேரம் காந்திக்கு முன்பாக மரியாதை செலுத்துவதுபோல் நடித்த நேரு அவரின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். காந்தியின் படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால் பழியை ஆர்.எஸ்.எஸ். மீது நேரு சுமத்திவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோட்சேவின் குறிக்கோள் தவறான இலக்கில் இருந்தது என்று வரலாறு மாணவர்கள் நினைத்தால், அவர்களை குறை கூற முடியாது. நாடு பிரிவினைக்கு ஜவஹர்லால் நேருவே பொறுப்பு என்று கோபால் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து வந்துள்ள புகார்கள் குறித்து விசாரித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு கேரளா மாநில காவல் துறைக்கு, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. மேலும், அந்த கட்டுரை “காட்டுமிராண்டித்தனமானது மற்றும் சட்ட விரோதமானது” என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான், உடனடியாக பா.ஜ.க அதன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். காந்திக்கு பதிலாக நேருவை கோட்சே கொலை செய்து இருக்க வேண்டும் என்ற அவர்களுடைய வாதம், அவர்களின் வெறுப்பு, வன்முறை கொள்கையின் அடிப்படை சித்தாந்தத்தை உறுதி செய்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கேசரியில் வெளியான கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து அல்ல. அது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து என்று ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார். கேசரி இதழின் ஆசிரியர் என்.ஆர்.மது, நேருவின் அரசியல் கொள்கைகள் குறித்தும், நாடுபிரிவு என பல முக்கிய பிரச்னைகளின் அணுகுமுறைகள் குறித்தும் நாங்கள் விமர்சிப்பது இதுமுதல் முறையில்லை. சகித்துக்கொள்ள முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...