Tuesday, 28 October 2014

செய்திகள் - 27.10.14

செய்திகள் - 27.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையுடன் உகாண்டா அரசுத் தலைவர் சந்திப்பு

2. திருத்தந்தை: இன்றையக் கலாச்சாரத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

3. திருத்தந்தை: நாம் ஒளியின் மக்களா? இருளின் மக்களா? சிந்திப்போம்

4. திருத்தந்தை : இறை அன்பும் சகோதரத்துவ அன்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

5. மத்திய கிழக்குப் பகுதியில் பன்னாட்டுச் சமுதாயத்தின் உறுதியான தலையீடு அவசியம், கீழை வழிபாட்டுமுறை ஆயர்கள்

6. இந்தோனேசிய திருஅவையின் ஏற்பாட்டில் பல்சமய கருத்தரங்கு

7. எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையுடன் உகாண்டா அரசுத் தலைவர் சந்திப்பு

அக்.27,10,2014. இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடினார் உகாண்டா நாட்டு அரசுத் தலைவர் யொவெரி ககுதா முசேவேனி.
திருத்தந்தையுடனான சந்திப்புக்குப்பின் திருப்பீடச்செயலர்  கர்தினால் பியேத்ரோ பரோலின், நாடுகளுடனான திருப்பீடச் செயலகத்தின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார் அரசுத்தலைவர் முசேவேனி.
திருப்பீடத்திற்கும் உகாண்டா நாட்டிற்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு, கல்வி மற்றும் நலத்துறைகளில் உகாண்டா திருஅவை ஆற்றிவரும் பணிகள், பல்வேறு மதங்களிடையே, இனங்களிடையே இருக்கவேண்டிய இணக்க வாழ்வு போன்றவை குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகம் கூறியது.
சர்வதேச விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக ஆப்ரிக்காவின் மோதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை: இன்றையக் கலாச்சாரத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

அக்.27,10,2014. தன் படிப்பினைகள், எடுத்துக்காட்டுகள், பணிகள் வழியாகவும், திருஅவை மீது கொண்டிருக்கும் பற்றுதல் வழியாகவும், தற்போது மேற்கொண்டுள்ள துறவு வாழ்வு வழியாகவும் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்தின் அறிவியல் கல்விக்கழகத்தினர் கொணர்ந்த, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மார்பளவு உருவச்சிலையை திறந்துவைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை இறையியலில் மட்டுமல்ல, மக்களுக்கும் திருஅவைக்குமான அன்பிலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார் என்றார்.
அவரின் ஆர்வம் மெய்யியலோடும் இறையியலோடும் நிற்கவில்லை, அறிவியலிலும் அது வெளிப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றையக் கலாச்சாரத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்திருந்ததாலேயே புதிய நற்செய்தி அறிவிப்புக்குறித்த ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கு திருப்பீட அறிவியல் கழகத்தின் தலைவரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைத்திருந்தார் என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தையின் கல்வியும் அறிவியல் ஆர்வமும், கடவுள் மற்றும் அயலார் மீதான அன்பும் அவரின் இதயத்தை விரிவாக்க உதவியுள்ளது என மேலும் உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை: நாம் ஒளியின் மக்களா? இருளின் மக்களா? சிந்திப்போம்

அக்.27,10,2014. நாம் ஒவ்வொருவரும் ஒளியின் மக்களாகச் செயல்படுகிறோமா? அல்லது இருளின் மக்களாக உள்ளோமா என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்களன்று காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிவேடக்காரராய் இருப்பது, அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவது, தீயவைகளைப் பேசுவது, நன்னெறி விழுமியங்களுக்குப் புறம்பானவைகளைப் பேசுவது என்பவை நற்செய்தியின் வார்த்தைகள் அல்ல, அவை வெறுமையானவை மற்றும் வெளிவேடத்தோடு இணைந்தவை என்றார்.
கடவுளைப் பின்பற்றுவது, அன்பிலும் நன்மைத்தனத்திலும், தாழ்ச்சியிலும் நடப்பது ஒளியின் மக்களுக்குரிய அடையாளம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, கருணையுடையவர்களாக, பிறரை மன்னிப்பவர்களாக, அன்பில் நடைபோடுபவர்களாக செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஒளியின் மக்கள், இருளின் மக்கள் என்ற இரு நிலைகளுக்கு இடையில், சாம்பல் நிறத்தின் மக்கள் என ஒரு குழு உள்ளதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் கடவுளின் மக்களாகவும் தீயோனின் மக்களாகவும் இல்லாமல், குழப்பத்தையும் எதிர்மறை சாட்சியங்களையும் விதைப்பவர்களாக உள்ளனர் என உரைத்தார்.
நாம் இந்த மூன்று குழுக்களுள் எதனைச் சார்ந்திருக்கிறோம் என்பது குறித்து சிந்திக்கவேண்டியது அவசியம் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : இறை அன்பும் சகோதரத்துவ அன்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

அக்.27,10,2014. இறைவனை அன்புகூர்வது குறித்தும் அயலாரை அன்புகூர்வது குறித்தும், இறைவன் உரைத்த கட்டளைகள் இரண்டாகத் தெரிந்தாலும், ஒரே சட்டத்தின் இருமுகங்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்தின் அளவுகோல் அன்பு, அந்த அன்பின் ஆன்மாவே விசுவாசம் எனவும் தெரிவித்தார்.
இறைவன் மீதான அன்பு மற்றும் நம் சகோதரர் மீதான அன்பின் மையத்திற்கே அனைத்தும் திரும்பி வருகின்றன எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் முகமே நம் நலிவடைந்த சகோதர சகோதரிகளில் பிரதிபலிப்பதால், நாம் அவர்களை அன்புகூரும்போது இறைவனையே அன்புகூருகிறோம்  என்றார்.
ஒருவரின் ஆன்மீக வாழ்வை, நலிவடைந்த சகோதரர்களுக்கான சேவையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏழைகளாயிருக்கும் நம் சகோதர, சகோதரிகளுக்கு செவிமடுப்பது, அவர்கள் வாழ்வுக்கும் காயங்களுக்கும் நெருக்கமாக இருப்பது என்பது, இயேசுவை செபத்தில் சந்திப்பதோடு இணைந்தவை என்ற திருத்தந்தைஇறையன்பும் பிறரன்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றார்.
இறைவன் மீதான அன்பின்றி நம் அயலாரை நாம் அன்பு கூர இயலாது எனவும், அயலாரை அன்புகூராமல் இறைவனை அன்புகூர இயலாது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் மீதான நம் அன்பை வெளிப்படையாகக் காட்டுவதற்கான சிறந்த வழி நம் அயலவர் மீது அன்புகூர்வதேயாகும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மத்திய கிழக்குப் பகுதியில் பன்னாட்டுச் சமுதாயத்தின் உறுதியான தலையீடு அவசியம், கீழை வழிபாட்டுமுறை ஆயர்கள்

அக்.27,2014. மத்திய கிழக்குப் பகுதியில் போரில் ஈடுபட்டுள்ள அனைத்துக் குழுவினரையும் சார்ந்துள்ள பன்னாட்டுச் சமுதாயத்தின் தெளிவான மற்றும் உறுதியான தலையீடு இல்லாமல் அப்பகுதியில் அமைதியும் ஒப்புரவும் ஏற்படாது என்று கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
உக்ரேய்ன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவை சட்டமுறையில் அங்கீகரிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவாக, உக்ரேய்னின் Lviv நகரில் கூட்டம் நடத்தி இஞ்ஞாயிறன்று அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியையும் ஒப்புரவையும் ஊக்குவிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், சமய சுதந்திரத்தையும் மனச்சான்றின் சுதந்திரத்தையும் ஊக்குவிப்பதாய், உரையாடலில் ஆர்வம்கொண்ட புதிய தலைமுறைகளை கல்வியின் மூலம் உருவாக்குவதாய் அமைய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறையால் துன்புறும் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவருடனும், இன்னும், உக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் இராணுவத் தாக்குதல்களால் தொடர்ந்து துன்புறும் மக்களுடனும் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும், அவர்களுக்கானத் தங்களின் செபத்தையும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.
மேலும், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு மிகுந்த ஈடுபாட்டுடன் உழைக்கும் என்ற உறுதியையும்  ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, உக்ரேய்னில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மேற்கத்திய கொள்கைகளின் ஆதரவாளர்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இந்தோனேசிய திருஅவையின் ஏற்பாட்டில் பல்சமய கருத்தரங்கு

அக்.27,10,2014. இந்தோனேசியாவின் முன்டிலான் நகரில் அந்நாட்டு ஆறு மதங்களின் பிரதிநிதிகள் பங்குபெற்ற மூன்று நாள் கூட்டம், கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் இடம்பெற்றது.
செமராங்க் உயர்மறைமாவட்டத்தின் மதங்களிடையே உறவுகளை வளர்க்கும் பணிக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கரருத்தரங்கில் இஸ்லாமியர், கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், புத்த மதத்தினர், இந்துக்கள் மற்றும் கன்ஃபூசியன் மதத்தினர் என 812 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து வாழ்வதை வளர்க்கும் நோக்கில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், கலாச்சார, கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மறைந்த கர்தினால் ஜஸ்டினுஸ் தர்மொஜுவோனோ பிறந்ததன் 100ம் ஆண்டைக் கொண்டாடிவரும் இவ்வேளையில், அவர் வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படம் ஒன்றும் இக்கருத்தரங்கில் திரையிடப்பட்டது.

ஆதாரம் : AsiaNews

7. எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

அக்.27,10,2014. எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும், எபோலாவால் இதுவரையில் மொத்தம் 4922 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக நலவாழ்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இந்த எண்ணிக்கை இதற்கு மேலும் அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளில் பத்தைத் தவிர மற்றவை அனைத்தும் எபோலாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளான சியரா லியோன், லைபீரியா மற்றும் கினீயில் நிகழ்ந்துள்ளன.
இந்த மூன்று நாடுகளுக்கு வெளியில் எபோலா வந்ததாக உறுதிசெய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 27தான் ஆகும். எபோலாவாவல் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்துள்ள நாடுகளின் வரிசையில் தற்போது மாலியும் சேர்ந்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏழு பேருக்கு எபோலா வந்திருந்தாலும், அவர்கள் அனைவருமே நோயிலிருந்து மீண்டுவிட்டார்கள் என்பதால், முறையான மருத்துவ மற்றும்  நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக எபோலாவை வெல்ல முடியும் என அரசுத் தலைவர் பாரக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : பிபிசி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...