Wednesday, 29 October 2014

செய்திகள் - 29.10.14

செய்திகள் - 29.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. பொலிவியா நாட்டின் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

2. மரண தண்டனையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிகள் தவறானவை - பிலிப்பின்ஸ் ஆயர்கள் எதிர்ப்பு

3. குழப்பம் சூழ்ந்துள்ள துருக்கி நாட்டின் கிறிஸ்தவ சமூகத்திற்கு, திருத்தந்தையின் வருகை ஒளியைக் கொணரும்

4. "மோசுல் நகரின் ஒரு கிறிஸ்தவருக்கு ஆதரவு தாருங்கள்" என்ற முயற்சி பலனளித்துள்ளது - பேராயர் Amel Nona

5. 'செனெகலின் நம்பிக்கை வானொலி' - கத்தோலிக்கத் திருஅவை முயற்சி

6. பாகிஸ்தான் சிறுமி, மலாலா யூசுப்சாய் அவர்களுக்கு உலகக் குழந்தைகள் விருது

7. புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது இதுவே இறுதி முறை என்பது வதந்தி

8. சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

------------------------------------------------------------------------------------------------------

1. பொலிவியா நாட்டின் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

அக்.29,2014. தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் அரசுத் தலைவர், Evo Morales அவர்கள், இச்செவ்வாய் மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தார்.
இத்திங்கள் முதல் புத்தம் முடிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையினால் நடத்தப்பட்ட உலக பொதுமக்கள் இயக்கங்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் 200 பிரதிநிதிகளில் ஒருவராக வந்திருந்த பொலிவியா அரசுத் தலைவர், திருத்தந்தையைச் சந்தித்தது, தனிப்பட்ட ஒரு சந்திப்பே அன்றி, அதிகாரப் பூர்வமான சந்திப்பு அல்ல என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி Federico Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
பொலிவியா நாட்டின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான Evo Morales அவர்கள், அன்னை பூமியைக் காப்பது பற்றி இக்கூட்டத்தில் உரையாற்ற வத்திக்கான் வந்திருந்தார்.
இம்மாதம் 12ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இரண்டாம் முறையாக பொலிவியா அரசுத் தலைவரெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் Evo Morales அவர்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அதிகாரப் பூர்வமாகச் சந்தித்துள்ளார் என்பதும், பொலிவியா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் நல்லுறவுகள் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. மரண தண்டனையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிகள் தவறானவை - பிலிப்பின்ஸ் ஆயர்கள் எதிர்ப்பு

அக்.29,2014. பிலிப்பின்ஸ் நாட்டில் மரண தண்டனையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிகள் தவறானவை என்று அந்நாட்டு ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிறை கைதிகளின் மேய்ப்புப்பணி பராமரிப்பு வாரத்தை, பிலிப்பின்ஸ் தலத்திருஅவை அண்மையில் கொண்டாடியதையொட்டி ஆயர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், எக்காரணம் கொண்டும் மனித உயிர்களைப் பறிப்பது ஏற்புடையதன்று என்று கூறியுள்ளனர்.
மனிதர்களை சிறையில் அடைத்து, கொடுமைப்படுத்தி அவர்கள் உயிரைப் பறிப்பதன் வழியாக, மனித உயிர்கள் மலிவானவை என்ற கருத்தை குழந்தைகள், மற்றும் இளையோர் மனதில் ஆழப் பதிக்கிறோம் என்று ஆயர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறை கைதிகளின் மேய்ப்புப்பணி பராமரிப்பு வாரத்தை கொண்டாடும் வேளையில், கைதிகளும் நமது அயலவர்கள் என்ற அக்கறையுடன், அவர்களது வாழ்வை சீரமைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று பிலிப்பின்ஸ் ஆயர்  பேரவையின் சார்பில் பேசிய, ஆயர் Leopoldo Tumulak அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. குழப்பம் சூழ்ந்துள்ள துருக்கி நாட்டின் கிறிஸ்தவ சமூகத்திற்கு, திருத்தந்தையின் வருகை ஒளியைக் கொணரும்

அக்.29,2014. துருக்கியின் வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு நெருக்கடியான நிலை உருவாகியிருந்தாலும், இவ்வேளையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் நாட்டுக்கு வருகை தர இசைந்தது, நம்பிக்கையைத் தந்துள்ளது என்று அந்நாட்டின் அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
'காலத்தின் குரல்' என்று பொருள்படும் "La Voce del Tempo" என்ற இத்தாலிய இணையதள வார இதழின் முதல் பதிப்பிற்கென பேட்டியளித்த அருள்பணி Martin Kmetec அவர்கள், இருளும், குழப்பமும் சூழ்ந்துள்ள துருக்கி நாட்டின் கிறிஸ்தவ சமூகத்திற்கு, திருத்தந்தையின் வருகை ஒளியைக் கொணரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவர்கள், Constantinopleஐத் தலமைப்பீடமாகக் கொண்டு பணியாற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பது, இப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்றாலும், துருக்கியில் வாழும் கத்தோலிக்கர்கள், ஆர்த்தடாக்ஸ் சபையினர், ஏனைய கிறிஸ்தவ சபையினர் அனைவருக்கும் மகிழ்வையும் நம்பிக்கையையும் உருவாக்கும் பயணமாக இது அமையும் என்று அருள்பணி Kmetec அவர்கள் எடுத்துரைத்தார்.
துருக்கியிலும், பொதுவாக மத்தியக் கிழக்குப் பகுதியிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவரும் வேளையில், திருத்தந்தையின் பயணம், துருக்கியில் வாழும் பெரும்பான்மையினரான இஸ்லாமியரோடு நல்லுறவை வளர்க்கும் என்ற நம்பிக்கையையும் அருள்பணி Kmetec அவர்கள் வெளியிட்டார்.
1967ம் ஆண்டு முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பால் அவர்களும், 1979ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும், 2006ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் துருக்கி நாட்டிற்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. "மோசுல் நகரின் ஒரு கிறிஸ்தவருக்கு ஆதரவு தாருங்கள்" என்ற முயற்சி பலனளித்துள்ளது - பேராயர் Amel Nona

அக்.29,2014. "மோசுல் நகரின் ஒரு கிறிஸ்தவருக்கு ஆதரவு தாருங்கள்" என்ற மையக்கருத்துடன் ஈராக் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி தக்க பலனை அளித்துள்ளது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆசிய செய்தி நிறுவனமும், வேறு சில பிறரன்புப் பணி அமைப்புக்களும் இணைந்து நடத்திய இந்த முயற்சியால், விரைந்துவரும் குளிர் காலத்தின் தாக்கங்களிலிருந்து பல்லாயிரம் புலம்பெயர்ந்தோர் பாதுக்காக்கப்பட்டுள்ளனர் என்று, மோசுல் நகர் கல்தேய வழிபாட்டு முறை பேராயர் Amel Nona அவர்கள் கூறியுள்ளார்.
புலம் பெயர்ந்துள்ள பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் நடுவில் தானும் ஒரு புலம்பெயர்ந்தோராய் வாழ்ந்து வரும் பேராயர் Nona அவர்கள், ஆசிய செய்திக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில், இந்த ஆதரவு முயற்சியின் வழியாக இதுவரை கிடைத்துள்ள 7 இலட்சம் யூரோக்கள் நிதி உதவிக்கு நன்றி கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் தொடர் இடர்பாடுகள் மத்தியிலும், அவர்களில் இருவர் இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் அடையும்படி வற்புறுத்தப்பட்டாலும் அவர்கள் மதம் மாறாமல் இருந்ததை, ஆயர் Nona அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews

5. 'செனெகலின் நம்பிக்கை வானொலி' - கத்தோலிக்கத் திருஅவை முயற்சி

அக்.29,2014. ஆப்ரிக்காவின் Senegal நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை அண்மையில் வானொலியைத் துவக்கியுள்ளது.
Dakar உயர்மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் Theodore Adrien Sarr அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்ட இந்த வானொலி, 'செனெகலின் நம்பிக்கை வானொலி' என்ற பெயருடன் இயங்குகிறது.
உண்மை, தாராள மனம், அழகு ஆகிய உயர்ந்த பண்புகளைப் பயில்வதென்பது, இந்நாட்டின் இளையோரிடையே உள்ள பல தேவைகளில் மிக முக்கியமான தேவை, என்று கர்தினால் Sarr அவர்கள் இந்த அர்ச்சிப்பு விழாவின்போது கூறினார்.
உண்மையான, ஒளிவுமறைவற்ற செய்திகளை வெளியிடும் துணிவை ஊடகங்கள் கொண்டிருக்கவேண்டும் என்ற கருத்தை, 'செனெகலின் நம்பிக்கை வானொலி' செயல்படுத்தும் என்ற நம்பிக்கையை, கர்தினால் Sarr அவர்கள் வெளிப்படுத்தினார்.
Dakar உயர்மறை மாவட்டமும், கிறிஸ்தவத் தலைவர்கள், வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் 'செனெகலின் நம்பிக்கை வானொலி', 2013ம் ஆண்டு மேமாதம் முதல் தன் ஒலிபரப்பைத் துவங்கியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. பாகிஸ்தான் சிறுமி, மலாலா யூசுப்சாய் அவர்களுக்கு உலகக் குழந்தைகள் விருது

அக்.29,2014. அமைதிக்கான நொபெல் விருதைப் பெற்றுள்ள பாகிஸ்தான் சிறுமி, மலாலா யூசுப்சாய் அவர்கள், உலகக் குழந்தைகள் விருது (World’s Children’s Prize for the Rights of the Child) என்ற மற்றொரு உயர்ந்த விருதையும் பெற்றுள்ளார்.
குழந்தைகள் உரிமைகளைப் போற்றும் மனிதர்களை, ஊடகக் கருத்துக் கணிப்பு வழியே குழந்தைகளே தேர்ந்தெடுக்கும் இம்முறையில், சிறுமி மலாலா அவர்களுடன், குழந்தைகளின் படிப்பறிவை வளர்க்கும் வகையில், Room to Read என்ற கணணி மென்பொருள் நூலகத்தை உருவாக்கிய Microsoft உயர் அதிகாரி John Wood அவர்களும், நேபாளத்தில் குழந்தைகள் கல்விக்கென கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடிவரும் Indira Ranamagar அவர்களும் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.
இம்மூவரில்சிறுமி மலாலா அவர்கள், அதிக வாக்குகளைப் பெற்று இந்த விருதைப் பெறுகிறார்.
சுவீடன் நாட்டு அரசி சில்வியா, அந்நாட்டு பிரதமர் Stefan Löfvén ஆகியோர் முன்னிலையில், அக்டோபர் 29, இப்புதனன்று, இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.
உலகின் பல நாடுகளின் குழந்தைகள் பங்கேற்கும் இந்த வாக்களிப்பு முயற்சியின் வழியாக, மலாலா யூசுப்சாய் அவர்களே, அமைதிக்கான நொபெல் விருதையும்உலகக் குழந்தைகள் விருதையும் ஒரே ஆண்டில் பெற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
இதற்கு முன்னர், தென் ஆப்ரிக்கத் தலைவர், நெல்சன் மண்டேலா அவர்கள், இவ்விரு விருதுகளையும் 12 ஆண்டுகள் இடைவெளியில் பெற்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது இதுவே இறுதி முறை என்பது வதந்தி

அக்.29,2014. புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது இதுவே இறுதி முறை என்று ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகும் செய்திகள் ஆதாரமற்றவை என்று கோவா பேராயரின் செயலர் அருள்பணி Joaquim Loiola Pereira அவர்கள் கூறினார்.
இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு சனவரி முடிய, கோவாவில் பாதுக்காக்கப்பட்டு வரும் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல், பத்தாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட உள்ளது.
இவ்வேளையில், இத்தகைய முயற்சி இதுவே இறுதி முறை என்று ஒரு சில ஊடகங்கள் வதந்திகளைக் கிளப்பி வருவது இது முதல் முறையல்ல, கடந்த நான்கு முறை இந்த முயற்சி மேற்கொண்ட போதும் இதுபோன்ற வதந்திகள் நிலவின என்றும் அருள்பணி Pereira சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது, பக்தர்களின் கூட்டத்தை அதிகரிப்பதற்கு, போக்குவரத்து மற்றும் உல்லாசப்  பயணங்களை ஏற்பாடு செய்யும் ஒரு சில நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சி என்று அம்மறைமாவட்டத்தின் மற்றொரு அருள் பணியாளர் கூறியுள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : TOI/UCAN

8. சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

அக்.29,2014. தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிமக் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உபகாரம்பிள்ளை சகாயம் தலைமையிலான குழுவை நியமித்து பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிமக் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 11ம் தேதி பிறப்பித்தது.
இந்நிலையில், சுரங்க முறைகேடு குறித்த சகாயம் விசாரணைக் குழு நியமனத்திற்கு எதிராக, சகாயம் குழு நியமனத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் தொழிற்துறை செயலாளர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மறு சீராய்வு மனு இச்செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியார் அடங்கியக் குழு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
சகாயம் குழு அமைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குப் பின்னர் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய காரணம் என்ன என உயர் நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...