செய்திகள் - 30.10.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - ஆன்மீக வாழ்வில் முன்னேறுவது ஒரு போர்
2. பழையக் கத்தோலிக்கர்கள் ஆயர்கள் பேரவையுடன் திருத்தந்தை சந்திப்பு
3. திருப்பீடமும், இத்தாலிய அரசும் இணைந்து விளையாட்டுப் போட்டிகளில் நன்னெறியை வலியுறுத்தும் முயற்சிகள்
4. கருவிலிருந்து கல்லறை வரை மனித வாழ்வு மதிப்புள்ளது - பேராயர் Bernadito Auza
5. உணவின்றி தவிக்கும் பல கோடி மக்களின் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் - பேராயர் Bernadito Auza
6. சிஸ்டின் சிற்றாலயத்தில் ஒளி வசதிகளும், காற்றோட்ட வசதிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன
7. பாரசீக நாட்டின் Farsi என்ற மொழியில், விவிலியத்தின் மொழி பெயர்ப்பு
8.
இந்து அடிப்படைவாதக் குழுவினர் இணையதளத்தில் தங்கள் பணியை விரிவாக்குவது
இந்திய சமுதாயத்திற்கு ஆபத்து - அருள்பணி செட்ரிக் பிரகாஷ் சே.ச.
9. ஹையான் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் தீவிரம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - ஆன்மீக வாழ்வில் முன்னேறுவது ஒரு போர்
அக்.30,2014. ஆன்மீக வாழ்வில் முன்னேறுவதும், ஆண்டவரைப் பறைசாற்றுவதும் எளிதானவை அல்ல, அவற்றை ஒரு போராக மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
புனித பவுல் அடியார் எபேசியருக்கு எழுதியத் திருமுகத்தில், கிறிஸ்தவ வாழ்வு ஒரு போர் என்று கூறியுள்ளதை மையப்படுத்தி, இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை தன் கருத்துக்களைப் பகிர்ந்தார்.
நாம் மேற்கொள்ளும் போர், உலகில் நிலவும் பெரும் சக்திகளுக்கு எதிரானது என்று கூறியத் திருத்தந்தை, தீய சக்தியான சாத்தானைக் குறித்து இன்றைய உலகம் கேலியாக நினைப்பதும், சாத்தான் இல்லையென்று மறுப்பதும் ஆபத்தான போக்கு என்று கூறினார்.
இந்தப் போரில் நம்மைக் காத்துக்கொள்ள அணியும் கவசங்களில், இடைவிடாத செபம் ஒரு முக்கியக் கவசமாக விளங்குகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு போர் என்றாலும், இறைவன் நம்மோடு இணைந்து போரிடுவதால், நாம் எதனையும் எதிகொள்ளும் துணிவையும், வெற்றியின் மகிழ்வையும் அடைகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. பழையக் கத்தோலிக்கர்கள் ஆயர்கள் பேரவையுடன் திருத்தந்தை சந்திப்பு
அக்.30,2014. கிறிஸ்துவின் திருஅவையில் எப்போதும் விளங்கவேண்டிய மனமாற்றத்தை, கத்தோலிக்கர்களும், பழையக்
கத்தோலிக்கர்களும் தொடர்ந்து பின்பற்றவேண்டிய சவால் நமக்கு முன்
வைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிஸ்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து 1889ம் ஆண்டு பழையக் கத்தோலிக்கர்கள் ஆயர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.
இவ்வமைப்பைச் சார்ந்த ஆயர்களை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோவான்
நற்செய்தியில் "அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (யோவான் 17: 21) என்று
கூறப்பட்டுள்ள வார்த்தைகளை மையப்படுத்தி தன் வாழ்த்துச் செய்தியை
வழங்கினார்.
ஐரோப்பாவில் வாழும் மக்கள் தங்கள் சுய அடையாளம், தங்கள் வாழ்வின் குறிக்கோள் இவற்றைக் குறித்து குழப்பமான நிலையில் வாழ்ந்துவரும்போது, கத்தோலிக்கர்களும், பழையக் கத்தோலிக்கர்களும் இணைந்து இவர்களுக்கு உதவமுடியும் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலை வளர்க்கும் வகையில் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் வெளியிட்ட Unitatis Redintegratio என்ற
கொள்கைத் திரட்டின் ஐம்பதாவது ஆண்டைச் சிறப்பிக்கிறோம் என்பதையும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டினார்.
தன் சீடர்களின் ஒருமைப்பாட்டிற்கென இறுதி இரவுணவின்போது இயேசு மன்றாடிய செபத்தில் நம்மையே இணைத்து, இறை
அருளுடன் ஒருமைப்பாட்டை நோக்கி முன்னேறுவோம் என்ற வார்த்தைகளுடன்
திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருப்பீடமும், இத்தாலிய அரசும் இணைந்து விளையாட்டுப் போட்டிகளில் நன்னெறியை வலியுறுத்தும் முயற்சிகள்
அக்.30,2014. "நற்செய்தியை ஒவ்வொருவருக்கும் கொணரும் பணியே, திருஅவையின் தலையாயப் பணியாகும்" என்ற வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட Twitter செய்தியாக அமைந்தது.
மேலும், விளையாட்டுப் போட்டிகளில் நன்னெறி விழுமியங்களை வலியுறுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதற்கு, திருப்பீடக் கலாச்சார அவையும், இத்தாலிய அரசும் இணைந்து, இப்புதன் மாலை ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர், கர்தினால் Gianfranco Ravasi அவர்களும், இத்தாலிய பாதுகாப்புத் துறை அமைச்சர், Roberta Pinotti அவர்களும் இந்த ஒப்பந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, டிசம்பர் 12ம் தேதி கொண்டாடப்படும் குவாதலுப்பே அன்னை மரியா திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் திருநாள் திருப்பலி நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கருவிலிருந்து கல்லறை வரை மனித வாழ்வு மதிப்புள்ளது - பேராயர் Bernadito Auza
அக்.30,2014. வாழ்வு என்ற அடிப்படை உரிமை, கருவிலிருந்து
கல்லறை வரை பாதுகாக்கப்படவேண்டும் என்பது கத்தோலிக்கத் திருஅவையின்
அசைக்கமுடியாத கொள்கை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.அவை அமர்வுகளில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்கும் பேராயர் Bernadito Auza அவர்கள், நியூ யார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் 69வது அமர்வில் இப்புதனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகளை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்தப் பொது அமர்வில், மரண தண்டனைக்கு எதிராக திருஅவை என்றும் குரல் கொடுத்து வருகிறது என்று பேராயர் Auza அவர்கள் குறிப்பிட்டார்.
மரண தண்டனைக்கும், வாழ்நாளெல்லாம் சிறைக் காவல் என்ற மறைமுகமான மரண தண்டனைக்கும் எதிராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல்வேறு தருணங்களில் கூறிவந்துள்ள கருத்துக்களை பேராயர் Auza அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
வாழ்வு என்ற அடிப்படை உரிமையோடு, கருத்துரிமை, மனச்சான்றின்படி வாழும் உரிமை, மத உரிமை ஆகிய அனைத்து உரிமைகளும் இன்றையக் காலத்தில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன என்பதையும் பேராயர் Auza அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. உணவின்றி தவிக்கும் பல கோடி மக்களின் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் - பேராயர் Bernadito Auza
அக்.30,2014. வேளாண்மை, உணவு ஆகியவற்றைக் குறித்து நாம் மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்கள் வெறும் சடங்காக இல்லாமல், உணவின்றி
தவிக்கும் பல கோடி மக்களின் குரல்களுக்குச் செவிமடுக்கும் ஒரு முயற்சியாக
இருக்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.அவை அமர்வுகளில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Bernadito Auza அவர்கள், 'வேளாண்மை முன்னேற்றம், உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களில் இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
வேளாண்மை முன்னேற்றம் குறித்து ஐ.நா. உயர் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின்படி, உலகில் 17 விழுக்காடு மக்கள் பசிக்கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து மகிழும் அதேவேளை, இவ்வுலகில்
இன்னும் 85 கோடி மக்கள் கடுமையான பசிக்கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர்
என்பது நமக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று பேராயர் Auza அவர்கள் குறிப்பிட்டார்.
நலவாழ்வு, கல்வி, என்ற பல்வேறு தனிமனித உரிமைகள் அனைத்தும் பசிக்கொடுமை என்ற பிரச்சனையைத் தீர்ப்பதால் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையை பேராயர் Auza அவர்கள் வெளியிட்டார்.
"குடும்ப வேளாண்மை: உலகை ஊட்டி வளர்த்தல்" என்று இவ்வாண்டு உலக உணவு நாளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையக் கருத்து, உலகப் பசியை நீக்க, குடும்பங்கள் முக்கியமான பங்காற்றவேண்டும் என்பதை நமக்கு நினைவுறுத்துகிறது என்று பேராயர் Auza அவர்கள் எடுத்துரைத்தார்.
உணவளிப்பதை மையப்படுத்தி நவம்பர் மாதம் உரோம் நகரில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கைக் குறித்தும், இக்கருத்தரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றுவார் என்றும் பேராயர் Auza அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. சிஸ்டின் சிற்றாலயத்தில் ஒளி வசதிகளும், காற்றோட்ட வசதிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன
அக்.30,2014. உலகப் புகழ்பெற்ற கலைக் கருவூலமான சிஸ்டின் சிற்றாலயத்தில் அண்மைய மாதங்களில் ஒளி வசதிகளும், காற்றோட்ட வசதிகளும் சீரமைக்கப்பட்டு, செய்தியாளர்களுக்கு இப்புதனன்று காட்டப்பட்டது.
சிஸ்டின் சிற்றாலயத்தில் காணப்படும் அனைத்து ஓவியங்களையும் தெளிவாகக் காணும் வகையில், 7000 LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், பார்வையாளர்களின்
மூச்சுக் காற்றினால் உருவாகும் ஈரப்பதத்தை நீக்கும்வண்ணம் புதுவகையான
காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வத்திக்கான் அருங்காட்சியக
பொறுப்பாளர்கள் கூறினர்.
சிஸ்டின்
சிற்றாலயக் கூரையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை எளிதில் காணும் வகையில்
பார்வையாளர்கள் அணிந்துகொள்ளக்கூடிய சிறப்புக் கண்ணாடிகளை விரைவில்
வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, அருங்காட்சியகப் பொறுப்பாளர் அந்தோனியோ பவுலுச்சி அவர்கள் கூறினார்.
ஒரு நாளின் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் 2000 பேர் அந்தச் சிற்றாலயத்தைப் பார்வையிடுகின்றனர் என்றும், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 60 இலட்சம் பயணிகள் சிஸ்டின் சிற்றாலயத்தைப் பார்வையிடுகின்றனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : UCAN
7. பாரசீக நாட்டின் Farsi என்ற மொழியில், விவிலியத்தின் மொழி பெயர்ப்பு
அக்.30,2014. பாரசீக நாட்டில் இன்றையக் காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் Farsi என்ற மொழியில், விவிலியம் மொழி பெயர்க்கப்பட்டு, அண்மையில் இலண்டன் மாநகரில் வெளியிடப்பட்டது.
Wycliffe விவிலிய மொழிபெயர்ப்பாளர்கள் என்ற அமைப்பும், Elam பணியாளர்கள் என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள இந்த விவிலிய மொழிபெயர்ப்பின் 3 இலட்சம் பிரதிகள், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஈரான் நாட்டிற்கும் உலகின் வேறு பல நாடுகளுக்கும் அனுப்பப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக, 30 அறிஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த மொழிபெயர்ப்பு, இன்றைய காலக்கட்டத்தில் ஈரான் நாட்டில் பயன்படுத்தப்படும் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த மொழிபெயர்ப்பு முயற்சியை ஒருங்கிணைத்த போதகர் Mehrdad Fatehi அவர்கள் உரையாற்றுகையில், தூய ஆவியாரையும், இறை வார்த்தையையும் யாரும் சங்கிலியால் பிணைக்க முடியாது என்று கூறினார்.
இதற்கு முந்தைய விவிலியப் பதிப்பானது 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது என்றும், அந்த பதிப்பில் பயன்படுத்தப்பட்ட பாரசீக மொழி, தற்போதைய மக்களுக்குப் புரியாத மொழி என்றும் ஒருங்கிணைப்பாளர் Fatehi மேலும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8.
இந்து அடிப்படைவாதக் குழுவினர் இணையதளத்தில் தங்கள் பணியை விரிவாக்குவது
இந்திய சமுதாயத்திற்கு ஆபத்து - அருள்பணி செட்ரிக் பிரகாஷ் சே.ச.
அக்.30,2014. இந்து அடிப்படைவாதக் குழுவான RSS பிரிவினர் தங்கள் இணையதளத்தில் மேலும் மூன்று மொழிகளை இணைத்து, தங்கள் கருத்துக்களைப் பரப்புவது, மத
சார்பற்ற இந்திய சமுதாயத்திற்கு ஆபத்து என்று இந்தியாவில் பணியாற்றும்
இயேசு சபை அருள் பணியாளரான செட்ரிக் பிரகாஷ் அவர்கள் கூறினார்.
இந்து மதப் பிரச்சாரத்தை வன்மையான வழியில் புகுத்த விழையும் RSS பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பணிகளை பத்து மொழிகளில் ஆற்றிவந்தனர். தற்போது, தங்கள் பணியை விரிவாக்கும் நோக்கத்துடன் வங்காளம், அஸ்ஸாம், மலையாளம் ஆகிய மொழிகளை இணைத்துள்ளனர்.
இதுகுறித்து ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த மனித உரிமை ஆர்வலரான அருள்பணி செட்ரிக் பிரகாஷ் அவர்கள், RSS பிரிவினரின் கொள்கைகள் இந்திய மக்களின் ஒற்றுமைக்குப் பெரும் ஆபத்தானது என்று கவலை வெளியிட்டார்.
RSS பிரிவைச் சார்ந்த ஒருவரே காந்தியடிகளைக் கொன்றார் என்றும், அந்த பிரிவினரோடு இணைந்துள்ள பாரதீய ஜனதா கட்சி தற்போது ஆட்சி நடத்துவது, அடிப்படைவாதக்
கொள்கைகள் இந்திய மண்ணில் வேரூன்றுவதற்கு எளிதாக வழிவகுக்கும் என்றும்
அருள்பணி செட்ரிக் பிரகாஷ் அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : AsiaNews
9. ஹையான் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் தீவிரம்
அக்.30,2014.
பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய ஹையான் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட
மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன
என்று தலத்திருஅவை கூறியுள்ளது.
கடந்த
ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய ஹையான் சூறாவளியால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டித் தரப்படவேண்டிய 3000த்துக்கும் அதிகமான
வீடுகளில் இதுவரை 1600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றும், பிலிப்பின்ஸ் அரசு தங்கள் பணிகளை இன்னும் அவசரப்படுத்துவது அவசியம் என்றும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் செயலர் அருள்பணி Edu Gariguez அவர்கள் கூறினார்.
தலத்திருஅவை மேற்கொண்டுவரும் பணிகளுக்கு அரசின் முழு ஆதரவும் தேவை என்றும், அரசு அளிக்கும் உதவிகளை வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதும் அவசியம் என்றும் அருள்பணி Gariguez ஆசிய செய்தியிடம் கூறினார்.
No comments:
Post a Comment