Tuesday, 28 October 2014

செய்திகள் - 28.10.14

செய்திகள் - 28.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தவணைமுறையில் இடம்பெறும் மூன்றாம் உலகப் போர்க் காலத்தில் வாழ்ந்துவருகிறோம்

2. திருத்தந்தை : திருஅவையின் முகப்பிலேயே நின்றுவிடாமல் அதற்குள் இணைந்திருங்கள்

3. டுவிட்டரில் திருத்தந்தை : கிறிஸ்தவச் செய்தி - அன்பு மற்றும் கருணை

4. உலகத் தாராளமயமாக்கலின் மிகப் பெரிய சவால்களில் ஒன்று குடியேற்றம்

5. இஸ்லாமின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து கானடா ஆயர்கள் கவலை

6. சிரியாவில் கிறிஸ்தவர்கள் பள்ளிகளுக்குப் பதிலாக கல்லறைகளைக் கட்டி வருகின்றனர்

7. கொலையுண்டவரின் குடும்பம் தனக்கு வழங்கிய மன்னிப்பு புதுவாழ்வை அளித்துள்ளது

8. உலக அளவில் பாலின இடைவெளி குறைந்து வருகிறது, WEF

9. வளர்ந்த நாடுகளில் சிறார் வறுமை அதிகரிப்பு, யூனிசெப்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தவணைமுறையில் இடம்பெறும் மூன்றாம் உலகப் போர்க் காலத்தில் வாழ்ந்துவருகிறோம்

அக்.28,2014. நாம் மூன்றாம் உலகப் போர்க் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இப்போர் தவணைமுறை அடிப்படையில் இடம்பெறுகின்றது, இந்தப் போர்கள் தொடர்ந்து நடைபெற பொருளாதார அமைப்புகளும் உதவுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக பொதுமக்கள் இயக்கங்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட 200 பிரதிநிதிகளை இச்செவ்வாயன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, சில பொருளாதார அமைப்புகள் ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்கின்றன, இதைக் கொண்டு பணம் என்ற தெய்வத்தின் காலடியில் மனிதர் கொல்லப்படுகின்றனர் என்றும் கூறினார்.
இனிமேல் குடும்பங்கள் வீடற்று இருக்க வேண்டாம், நிலமற்ற விவசாயிகள் இருக்க வேண்டாம், உரிமைகளற்ற தொழிலாளர்கள் இருக்க வேண்டாம், மாண்புடன்கூடிய வேலை செய்யும் மனிதர் இருக்க வேண்டும் என, இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்வோம் என்று கூறிய திருத்தந்தை, உரிமைகள் மற்றும் மனித மாண்புக்கானப் போராட்டங்களைத் தொடருங்கள் என்று ஊக்கப்படுத்தினார்.
சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக, திருப்பீட சமூக அறிவியல் துறை மற்றும் பொதுமக்கள் இயக்கங்களின் தலைவர்களின் ஒத்துழைப்புடன் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை இக்கூட்டத்தை நடத்துகிறது.
தொழிலாளர் உரிமைகள் அல்லது தொழிற்சங்கங்களால் பாதுகாக்கப்படாத குடியேற்றதாரர், சுயமாக வேலைசெய்வோர், வேலையில் பாதுகாப்பை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்குவோர், நிலமற்ற விவசாயிகள், பழங்குடியினத்தவர், வன்முறையாலும் நிலஅபகரிப்பாலும் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்படுவோர், சேரிகளில் வாழ்வோர், போதுமான உள்கட்டமைப்பு வசதிகளின்றி வாழ்வோர் போன்றோருக்கான பொது அமைப்புகளின் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை நடத்திய இம்மூன்று நாள் கூட்டம் இப்புதனன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : திருஅவையின் முகப்பிலேயே நின்றுவிடாமல் அதற்குள் இணைந்திருங்கள்

அக்.28,2014. மனிதரின் பாவத்தைப் பார்க்காமல், மனிதரின் இதயத்தை நோக்கி அதைக் குணப்படுத்த முயற்சிக்கும் இயேசுவை திருஅவை அறிவிக்கின்றது, எனவே கிறிஸ்தவர்கள் திருஅவையின் ஒருங்கிணைந்த ஓர் அங்கமாக உணர்ந்து, அதன் கதவருகிலேயே நின்றுவிடாமல் அதற்குள் இணைந்திருக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தூதர்கள் சீமோன், யூதா விழாவான இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இயேசு திருத்தூதர்களை அழைத்ததோடு திருஅவை பிறந்தது பற்றிக் கூறும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து திருஅவையை அமைத்து அதற்கு அடித்தளமாகவும், மூலைக்கல்லாகவும் தம்மையே வைத்த பணியை திருஅவை செய்து வருகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து மனிதரின் பாவங்களைக் கணக்கிடாமல் மனிதரை அன்புகூருவதிலும், அவர்களைக் குணப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டிருந்ததால், திருஅவையும், எவ்விதப் பாகுபாடுகளுமின்றி ஒவ்வொருவருக்கும் தனது கதவுகளைத் திறந்து வைத்துள்ளது என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
நாம் அனைவரும் திருஅவையின் குடிமக்கள், இந்த ஆலயத்துக்குள் நாம் நுழையாவிட்டால், நம்மில் குடிகொண்டிருக்கும் தூய ஆவியாரால் கட்டப்பட்ட திருஅவையின் அங்கமாக நாமே உணராவிட்டால் நாம் திருஅவையில் இல்லை, மாறாக, அதன் கதவருகிலே நிற்கிறோம் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. டுவிட்டரில் திருத்தந்தை : கிறிஸ்தவச் செய்தி - அன்பு மற்றும் கருணை

அக்.28,2014. அன்பு மற்றும் கருணை என்ற கிறிஸ்தவச் செய்தியின் மகிழ்ச்சியை மக்கள் கண்டுகொள்வதற்கு நாம் உதவுவோம்என்ற வார்த்தைகளை இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அனைத்துப் புனிதர்கள் விழாவான நவம்பர் முதல் நாள் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு உரோம் Verano கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றி, கல்லறைகளை ஆசீர்வதிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளான நவம்பர் இரண்டாம் தேதி, இறந்த எல்லாத் திருத்தந்தையரின் நிறைசாந்திக்காக, வத்திக்கான் கெபியில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை.
கடந்த ஆண்டில் இறந்த அனைத்துக் கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, வத்திக்கான் பசிலிக்காவில் நவம்பர் மூன்றாம் தேதி திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. உலகத் தாராளமயமாக்கலின் மிகப் பெரிய சவால்களில் ஒன்று குடியேற்றம்

அக்.28,2014. உலகத் தாராளமயமாக்கலின் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக குடியேற்றம் இருக்கின்றவேளை, குடியேற்றதாரர்மீது ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டினால் மட்டும் போதாது, மாறாக, போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைதியைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்
உலகத் தாராளமயமாக்கலும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும் என்ற தலைப்பில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற பொது அமர்வில் இத்திங்களன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
உலகில் பொருளாதாரம் சமமாகப் பங்கிடப்படும் ஓர் ஒழுங்குமுறையை அமைப்பதும் முக்கியம் என்பதை வலியுறுத்திய பேராயர் Auza அவர்கள், உலகத் தாராளமயமாக்கல், உலகை ஒரு கிராமமாகச் சுருக்கினால் நாம் எல்லாரும் ஒருவர் ஒருவருக்கு உதவும் ஆட்களாக மாறவும் வேண்டும் என்றும் கூறினார்.
இன்று உலகில் 2 கோடியே 70 இலட்சம் பேர் அடிமைத்தன நிலைகளில் வாழ்கின்றனர், ஒவ்வோர் ஆண்டும் 20 இலட்சம் பெண்கள் பாலியல் தொழிலுக்காக வியாபாரம் செய்யப்படுகின்றனர், மனிதஉறுப்பு வணிகத்திற்காக சிறார் உட்பட பலர் பயன்படுத்தப்படுகின்றனர், இத்தகைய நவீன அடிமைத்தனங்கள் உலகத் தாராளமயமாக்கலுக்கு எதிரானவை என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் Auza.
உலகத் தாராளமயமாக்கலின் பயனாக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலாக்கள் பற்றியும் குறிப்பிட்ட பேராயர், இவற்றில் கலாச்சாரச் சுற்றுலா 40 விழுக்காடாக உள்ளது என்றும், இவை நாணயமாற்றுச் சந்தைமுறையாக மாறிவிடக் கூடாது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இஸ்லாமின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து கானடா ஆயர்கள் கவலை

அக்.28,2014. கானடாவின் போர் நினைவுச்சின்னம் மற்றும் பாராளுமன்றம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, அனைத்துவிதமானப் பயங்கரவாதச் செயல்களும், கொலைகளும், மரணங்களும் கடவுளின் கொடையாகிய இயேசுவில் ஒருநாள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளது அந்நாட்டுத் தலத்திருஅவை.
இத்தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கானடா ஆயர் பேரவைத் தலைவர்  பேராயர் Paul-André Durocher அவர்கள், கானடா ஆயர்கள் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தோடு உரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும், இஸ்லாமின் வன்முறைப் புரட்சிகள், உலகில் துன்பங்களையும் புரிந்துகொள்ளாத் தன்மையையும் கொணர்கின்றன
எனவும் கூறியுள்ளார்.
சவால் நிறைந்த சூழல்களில் புரிந்துகொள்ளுதலைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து மதத்தவரிடையே திறந்த மனமும், நம்பிக்கையும் பகிர்வும் தேவை என்றும் பேராயர் Durocher அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை காலையில் Michael Zehaf-Bibeau என்பவர் கானடாவின் தேசிய நினைவுச்சின்னத்தின்மீது மூன்று தடவைகள் சுட்ட பின்னர், அங்கு நின்ற காவலரையும் கொலை செய்தார். பின்னர் பாராளுமன்றக் கட்டிடத்தின்மீதும் தாக்குதல் நடத்தினார். அதன்பின்னர் தன்னையும் சுட்டுக்கொன்றார். அண்மையில் முஸ்லிமாக மாறிய இவர், சிரியாவுக்குச் செல்வதற்குத் தயாரித்துக் கொண்டிருந்தார் எனச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : Zenit

6. சிரியாவில் கிறிஸ்தவர்கள் பள்ளிகளுக்குப் பதிலாக கல்லறைகளைக் கட்டி வருகின்றனர்

அக்.28,2014. சிரியாவில் நான்காவது ஆண்டாக சண்டை தொடர்ந்துவரும்வேளை, அந்நாட்டின் தலைநகரில் தங்கியிருக்கும் கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்று தமாஸ்கஸ் மாரனைட் வழிபாட்டுமுறை பேராயர் சமீர் நாசர் அவர்கள் கூறினார்.
2013ம் ஆண்டைவிட, 2012ம் ஆண்டில் அதிக அளவில் திருமுழுக்கு மற்றும் திருமண அருளடையாளங்கள் நிறைவேற்றப்பட்டன, அதேசமயம் அடக்கச் சடங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று, Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்திடம் கூறினார் பேராயர் நாசர்.
பாலர் பள்ளிகளையும் பிற பள்ளிகளையும் கட்டுவதற்கு, முன்பு திட்டங்கள் இருந்தன, ஆனால் தற்போது கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தை விரிவுபடுத்துவதற்குத் திட்டங்களை அமைத்து வருவதாக மேலும் கூறினார் பேராயர் நாசர்.
வாகனக் குண்டு வெடிப்பு அல்லது மறைந்திருந்து குறிபார்த்துச் சுட்டு வீழ்த்தப்படல் என, தமாஸ்கஸ் நகரில் ஒருவர் இறப்பதற்கு பல வழிகள் உள்ளன என்றும் விளக்கிய பேராயர், சிரியாவின் உள்நாட்டுப் போரிலிருந்து ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின்மீது அனைத்துலக கவனம் திரும்பியிருப்பதால் மக்கள் கடினமான சூழல்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் கூறினார்.
இக்கிறிஸ்தவர்களுக்கு மாரனைட் தலத்திருஅவை உதவி வருகின்றபோதிலும், இம்மக்களின் வாழ்வு மிகவும் துன்பநிலையில் உள்ளது என்றும் பேராயர் கூறினார்.

ஆதாரம் : CNA                            

7. கொலையுண்டவரின் குடும்பம் தனக்கு வழங்கிய மன்னிப்பு புதுவாழ்வை அளித்துள்ளது

அக்.28,2014. இந்தியாவில் 1995ம் ஆண்டில் அருள்சகோதரி ராணி மேரியைக் கொலை செய்த சமந்தர் சிங் மீது அச்சகோதரியின் குடும்பத்தினர் காட்டிய கருணை அவருக்குப் புதிய வாழ்வை அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருள்சகோதரி ராணி மேரியின் சகோதரி செல்மி அவர்கள் 2002ம் ஆண்டில் சிறையில் சென்று சமந்தர் சிங்கைச் சந்தித்து, அவரைத் தனது குடும்பத்தினர் மன்னித்துவிட்டதாகத் தெரிவித்தபோது அவருக்கு மறுவாழ்வு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஒரு கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் சமந்தர் சிங்.
சகோதர சகோதரிகளுக்கு இடையே நிலவும் அன்பையும் கடமையையும் கொண்டாடும் ராகிப் பண்டிகை நாளன்று சிறையில் தன்னைச் சந்தித்து, தனது கரத்தில் ராகி கயிற்றையும் அச்சகோதரி கட்டினார் என்று கூறியுள்ளார் சமந்தர் சிங்.
உதய்நகருக்கு அருகில் காட்டுப் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்து பயணிகளின் முன்பாக, அருள்சகோதரி ராணி மேரியை 54 தடவைகள் கத்தியால் குத்திக் கொலை செய்தார் சமந்தர் சிங்.
அருள்சகோதரி ராணி மேரியை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிகள் திருஅவையில் இடம்பெற்று வருகின்றன.

ஆதாரம் : CNS

8. உலக அளவில் பாலின இடைவெளி குறைந்து வருகிறது, WEF

அக்.28,2014. கடந்த பத்து ஆண்டுகளில் உலக அளவில் ஆண்-பெண் பாலின வேறுபாட்டில் இடைவெளி குறைந்துள்ளதால், அரசியலிலும், பணியிடங்களிலும்  பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது என்று உலக பொருளாதார நிறுவனமான WEF அறிவித்துள்ளது.
உலகில் பாலினச் சமத்துவம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ள WEF நிறுவனம், 2005ம் ஆண்டிலிருந்து 105 நாடுகளில் ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பொருளாதாரக் கூறுகள், நலவாழ்வு, கல்வி, அரசியலில் பங்கேற்பு ஆகிய தலைப்புக்களில் 142 நாடுகளில் ஆய்வு நடத்தி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது  WEF நிறுவனம்.
இந்த ஆய்வின்படி, ஐஸ்லாந்து நாடு, ஆறாவது ஆண்டாக முதலிடத்திலும், ஏமன் நாடு கடைசி இடத்திலும் இருந்து வருவதாகத் தெரிகிறது.
இலங்கை, மாலி, குரோவேஷியா, மாசிடோனியா, ஜோர்டன், டுனிசியா ஆகிய ஆறு நாடுகளில், 2005ம் ஆண்டிலிருந்து பாலின இடைவெளி அதிகரித்திருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
பெண்களின் அரசியல் பங்கேற்பில் இந்தியா 15வது இடத்திலும், அதேநேரம், அமெரிக்க ஐக்கிய நாடு 54வது இடத்திலும், பிரிட்டன் 33வது இடத்திலும் உள்ளன எனவும் உலக பொருளாதார நிறுவன ஆய்வு கூறுகின்றது. 

ஆதாரம் : BBC

9. வளர்ந்த நாடுகளில் சிறார் வறுமை அதிகரிப்பு, யூனிசெப்

அக்.28,2014. 2008ம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உலகின் பணக்கார நாடுகளில் இலட்சக்கணக்கான சிறார் வறுமைக்கு உட்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப்  இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. 
பின்னடைவுச் சிறார்என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனத்தின் 41 நாடுகளில் 23ல் சிறார் வறுமை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வளர்ந்த நாடுகளில் வறுமையில் வாழும் சிறாரின் எண்ணிக்கை 7 கோடியே 65 இலட்சமாக உயர்ந்துள்ளதென்று அவ்வறிக்கை மேலும் கூறுகின்றது.
2008ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரையிலான காலத்தில் அயர்லாந்து, குரோவேஷியா, லாத்வியா, கிரீஸ், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் சிறார் வறுமை ஐம்பது விழுக்காடாக உயர்ந்துள்ளது எனவும் யூனிசெப் அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment