Friday, 31 October 2014

செய்திகள் - 31.10.14

செய்திகள் - 31.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தூய ஆவியாரின் பணியாகிய ஒன்றிப்பைத் தேடுங்கள்

2. திருத்தந்தை : சட்டங்களோடு பற்றுதல் கொண்டிருப்பதைவிட அன்பும் நீதியும் மிகவும் முக்கியமானவை

3. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற இறுதித் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு

4. வெப்பநிலை மாற்றம் பற்றிய விவகாரம், நீதியைச் சார்ந்ததுமாகும், பேராயர் Auza

5. சாம்பியாவில் புதிய அரசு அமைதியான முறையில் அமைக்கப்பட கிறிஸ்தவத் தலைவர்கள் செபம்

6. சிரியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு நாடுகளுக்கு ஆயர்கள் வேண்டுகோள்

7. பழங்குடி மக்களின் தோழர்களாகப் பணியாற்ற மியான்மார் இயேசு சபையினர் தீர்மானம்

8. அரபுக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு கிறிஸ்தவர்கள் உதவியுள்ளனர், ஜோர்டன் அரசர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தூய ஆவியாரின் பணியாகிய ஒன்றிப்பைத் தேடுங்கள்

அக்.31,2014. இக்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல கிறிஸ்தவ மறைசாட்சிகளால் சிந்தப்படும் இயேசுவின் இரத்தம், ஒன்றிப்பு நோக்கிச் செயல்பட நம்மை அழைக்கிறது மற்றும் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கத்தோலிக்க அருங்கொடை இயக்கத் தோழமைக் குழுக்களைச் சேர்ந்த ஏறக்குறைய ஆயிரம் உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்மைத்தன்மையில் ஒன்றிப்பு பற்றியும், போற்றுதல் செபம் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
கத்தோலிக்கத் திருஅவையிலுள்ள அருங்கொடை இயக்கம் போற்றுதல் செபத்தின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் நினைவுபடுத்துகின்றது என்றும்,  திருஅவையில் போற்றுதல் செபம், அருங்கொடை இயக்கத்தினருக்கு மட்டுமல்லாமல், திருஅவை முழுவதற்கும் தேவையானது என்றும் கூறினார் திருத்தந்தை.
போற்றுதல் செபத்துடன், மன்றாட்டுச் செபம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்நாள்களில் நசுக்கப்பட்டு கொல்லப்படும் நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்காகவும், அமைதியற்ற இந்த உலகில் அமைதி ஏற்படவும் வானகத்தந்தையிடம் நாம் வேண்டுதல்களை எழுப்ப வேண்டுமெனவும் கூறினார்.
இறைவனின் அன்னையாம் மரியிடம் செபிப்பது ஒருபோதும் தவிர்க்கப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறுத்துவோருக்கு, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றே என்றுரைத்து, ஆன்மீகக் கிறிஸ்தவ ஒன்றிப்புப்   பற்றியும் கூறினார்.
கத்தோலிக்க அருங்கொடை இயக்கத் தோழமைக் குழுக்கள் இவ்வெள்ளி பிற்பகலில் புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பதற்கான போற்றுதலும் வழிபாடும் என்ற தலைப்பில் 16வது அனைத்துலக கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கியுள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : சட்டங்களில் பற்றுதல் கொண்டிருப்பதைவிட அன்பும் நீதியும் மிகவும் முக்கியமானவை

அக்.31,2014. அன்பு, நீதி, இவை சுட்டிக்காட்டும் கருத்துக்களைப் புறக்கணித்து சட்டங்கள் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் குறித்து தனது கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஓய்வுநாளில் நோயாளியைக் குணப்படுத்துவது முறையா? இல்லையா? என்று இயேசு பரிசேயர்களிடம் கேள்வி கேட்டது பற்றிக் கூறும் நற்செய்தி வாசகத்தை (லூக்.14,1-6) மையமாக வைத்து, இவ்வெள்ளி காலை, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
சட்டங்கள் மீது அதிகப்படியான பற்றுதல் கொண்டிருப்பதைவிட, அன்பு மற்றும் நீதியின் பாதை எவ்வாறு கிறிஸ்துவிடம் இட்டுச்செல்லும் என்பதை விளக்கிய திருத்தந்தை, இயேசு ஓய்வுநாளில் நோயாளியைக் குணமாக்கிய பின்னர், தனது முதுகிற்குப் பின்னால் தம்மை விமர்சித்த பரிசேயர்களை வெளிவேடக்காரர்கள் என்று இயேசு கூறியதையும் நினைவுபடுத்தினார்.
சட்டங்கள் மீது பற்றுதல் கொண்டிருக்கும் வாழ்வுமுறை, அன்பிலிருந்தும் நீதியிலிருந்தும் நம்மைத் தூரத்தில் வைக்கின்றது என்றும், இத்தகைய வாழ்வு வாழ்வோர் சட்டங்களைக் கடைப்பிடித்து அன்பையும், நீதியையும் புறக்கணிக்கின்றனர், இத்தகையோர்க்கு வெளிவேடக்காரர் என்ற ஒரேயொரு சொல்லையே இயேசு கொண்டிருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.
சட்டங்கள் மீது பற்றுதல் கொண்டிருக்கும் வாழ்வுமுறை தன்னலத்துக்கு இட்டுச்செல்லும் என்றும், இயேசு நமக்கு நெருக்கமாக இருக்கிறார், இதுவே நாம் உண்மையான பாதையில் செல்கிறோம் என்பதன் உண்மையான சான்று என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற இறுதித் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு

அக்.31,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற இறுதி அறிக்கையின் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
குடும்பங்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் சூழலில் எதிர்கொள்ளப்படும் மேய்ப்புப்பணி சவால்கள் என்ற தலைப்பில் இந்த அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் நடந்த குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற இறுதித் தொகுப்பு இத்தாலியத்தில் முதலில் வெளியிடப்பட்டது.
அதன் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  முன்னுரை, முடிவுரை உட்பட ஐந்து பிரிவுகளாக உள்ள இந்தத் தொகுப்பு,  குடும்பத்தின் சூழலுக்கும் சவால்களுக்கும் செவிமடுப்பது, குடும்பத்தின் நற்செய்தியில் கிறிஸ்துவை நோக்குதல், மேய்ப்புப்பணியில் உண்மையான குடும்பச் சூழல்களை எதிர்கொள்ளுதல் ஆகிய தலைப்புகளில் அலசியுள்ளது.       
குடும்பத்தின் சமூக-கலாச்சார சூழல், வாழ்வில் அதன் முக்கியத்துவம், கடவுளின் மீட்புத்திட்டத்தில் குடும்பம், பல்வேறு சூழல்களில் குடும்பத்தின் நற்செய்தியை அறிவித்தல், பிரிந்து வாழும் தம்பதியர், திருமணமுறிவு பெற்ற, மீண்டும் திருமணம் புரிந்துள்ளவர்கள், தனித்துவாழும் பெற்றோர்... இவ்வாறு பல கிளை தலைப்புக்களையும் இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வெப்பநிலை மாற்றம் பற்றிய விவகாரம், நீதியைச் சார்ந்ததுமாகும், பேராயர் Auza

அக்.31,2014. வெப்பநிலை மாற்றம் பற்றிய விவகாரம், சுற்றுச்சூழலை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக, நீதி மற்றும் நன்னெறி சார்ந்த விவகாரமாகவும் உள்ளது என்று, ஐ.நா.வில் கூறினார் பேராயர் Bernadito Auza.
உறுதியான வளர்ச்சி : இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளுக்காக வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில், நியுயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த 69வது பொது அமர்வில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
வெப்பநிலை மாற்றம் சிறிய தீவு நாடுகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலை முன்வைத்துள்ளவேளை, தங்களின் கட்டுப்பாடுகளையும் மீறி இந்த ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் களையவேண்டியது அனைத்துலக சமுதாயத்தின் தார்மீகக் கடமையாகும் என்றும் உரையாற்றினார் பேராயர் Auza.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருவதையும் ஐ.நா.வில் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Auza அவர்கள், வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உலக அளவில் அரசியலிலும், பொருளாதாரத்துறைகளிலும் மிகுந்த அர்ப்பணம் தேவை என்பதையும்  கோடிட்டுக் காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. சாம்பியாவில் புதிய அரசு அமைதியான முறையில் அமைக்கப்பட கிறிஸ்தவத் தலைவர்கள் செபம்

அக்.31,2014. சாம்பியா நாட்டு அரசுத்தலைவர் Michael Chilufya Sata அவர்களின் இறப்புக்குத் தங்களின் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள அதேவேளை, குடிமக்கள் அனைவரும் தங்களோடு செபத்தில் ஒன்றிணைந்து இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
அரசுத்தலைவரின் இறப்பையொட்டி துக்கம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்நாள்களில், அரசுத்தலைவருக்கு, தகுதியும் மதிப்புமிக்க அடக்கச்சடங்கு இடம்பெறுவதற்கு உதவும் வகையில், மக்கள் ஒற்றுமையாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.
சாம்பிய கத்தோலிக்க ஆயர்கள் உட்பட அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான முறையில் புதிய அரசு உருவாகவும், நாடெங்கும் அமைதி நிலவவும் தங்களோடு சேர்ந்து செபிக்குமாறு நாட்டினர் அனைவரையும் கேட்டுள்ளனர்.
சாம்பியாவின் அரசுத்தலைவர் Michael Sata அவர்கள் (77 வயது), அக்டோபர் 28, இச்செவ்வாயன்று இலண்டனில், அரசர் 7ம் ஹென்ரி மருத்துவமனையில் காலமானார்.

ஆதாரம் : Fides

6. சிரியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு நாடுகளுக்கு ஆயர்கள் வேண்டுகோள்

அக்.31,2014. உலகம் சிரியா நாட்டுக்கு உதவிசெய்ய விரும்பினால், அந்நாட்டுடன் நடத்தும் ஆயுத வணிகத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் சிரியா கத்தோலிக்க ஆயர்கள்.
தமாஸ்கு நகரில் இவ்வாரத்தில் கூட்டம் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள்,  உலக நாடுகள் சிரியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துவது, சிரியாவில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தங்குவதற்கு உதவியாக இருக்குமென்றும் கூறியுள்ளனர்.
சிரியாவில் மறைப்பணியாற்றும் ஆறு கத்தோலிக்க வழிபாட்டு முறையின் ஆயர்கள் அனைவரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அந்நாட்டின் தற்போதைய பிரச்சனைகள் குறித்து அதிகம் பேசப்பட்டதாக, அலெப்போ அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Georges Abou Khazen அவர்கள் கூறினார்.
தாங்கள் இருளில் வாழ்வதாகவும், இச்சூழலை விட்டுச் செல்லும்வழி தெரியவில்லை எனவும், கிறிஸ்து ஒருவரே தங்கள் இதயங்களுக்கு நம்பிக்கையை அளிக்க முடியும்  எனவும் பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் ஆயர் Khazen.

ஆதாரம் : Fides

7. பழங்குடி மக்களின் தோழர்களாகப் பணியாற்ற மியான்மார் இயேசு சபையினர் தீர்மானம்

அக்.31,2014. மியான்மாரில் பணியாற்றும் இயேசு சபையினர், பழங்குடியின மக்களின் தோழர்களாக இருந்து அவர்களுக்கு மேய்ப்புப்பணிகளைச் செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
மியான்மாரின் Phekon மறைமாவட்டத்தில் அண்மையில் நடந்த ஆசிய-பசிபிக் பகுதி இயேசு சபையினரின் கூட்டத்தில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மியான்மாரில் பணியாற்றும் இயேசு சபையினர் இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.
மியான்மாரில் தற்போது நகர்ப்புறமயமாக்கல் வேகமாக வளர்ந்து வந்தாலும், பழங்குடியின மக்கள் இயற்கையோடும், படைப்புக்களோடும், மனித வாழ்வோடும், பிற மனிதர்களோடும் கொண்டிருக்கும் நல்லிணக்கம், அம்மக்களின் வாழ்வே வாழ்வதற்குச் சிறந்ததாக உள்ளது என இக்கூட்டத்தில் கூறப்பட்டது.
இந்த மக்களின் மரபுவழிக் கலாச்சாரங்களின் வளங்களைப் போற்றி அவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பி அதற்குச் சாட்சிகளாக வாழவேண்டுமென்பதே இயேசு சபையினரின் மேய்ப்புப்பணியின் நோக்கம் எனவும் கூறப்பட்டது.
மியான்மாரில் 135 பழங்குடியினச் சமூகங்கள் உள்ளன. இச்சமூகத்தினர், தேசிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாக உள்ளனர்.

ஆதாரம் : Fides

8. அரபுக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு கிறிஸ்தவர்கள் உதவியுள்ளனர், ஜோர்டன் அரசர்

அக்.31,2014. அரபுக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு கிறிஸ்தவர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர் என்பதால், இக்கிறிஸ்தவச் சமூகங்கள் மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கட்டாயமாகப் புலம்பெயர்வது கடுமையான பிரச்சனையாக உள்ளது என்று ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள் கூறியுள்ளார்.
இவ்வாரத்தில் ஜோர்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அர்மேனிய அரசுத்தலைவர் Serzh Sargsyan அவர்களைச் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறிய ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள், மத்தியக் கிழக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் புலம்பெயர்வது எந்த வழியிலாவது தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அர்மேனியர்களுக்கும், அரபு மக்களுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு இருக்கவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய அர்மேனிய அரசுத்தலைவர், அர்மேனியாவில் இடம்பெற்ற படுகொலைகளுக்குப் பின்னர் அந்நாட்டு அகதிகளை வரவேற்ற அரபுத் தலைவர்களுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார் என பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
மேலும், எருசலேமின் அர்மேனிய முதுபெரும் தந்தை Nourhan Manougian அவர்கள், இயேசு திருமுழுக்குப் பெற்ற இடத்துக்கருகில் கட்டப்பட்டுள்ள புதிய அர்மேனிய ஆலயத்தை  இவ்வெள்ளியன்று ஆசீர்வதித்து திருவழிபாடும் நிறைவேற்றினார். இதில் அர்மேனிய அரசுத்தலைவர் Sargsyan அவர்களும் கலந்துகொண்டார்.
அர்மேனிய அரசுத்தலைவர் ஒருவர் ஜோர்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. 

ஆதாரம் : Fides

No comments:

Post a Comment