நாடாளுமன்றுக்கு அருகில் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை ஒடுக்கிய அரசுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்
“அரசுக்கு எதிராகத் தமது அதிருப்தியை வெளியிடுபவர்கள் மீது இலங்கையில் அடக்குமுறை தொடர்கிறது. கடந்த வாரம் நாடாளுமன்றுக்கு அருகில் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை ஒடுக்கிய செயலும் இதன் ஒரு அணுகுமுறையே.” இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை.
இதுகுறித்து மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர். மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதையே அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. எனவே மாணவர்களை ஒடுக்கிய செயல் கண்டிக்கத்தக்கது.
தனிப்பட்ட குழுக்களுக்கு உள்ள கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை இலங்கை அரசு மதிக்க வேண்டும் என்பதே மன்னிப்புச் சபையின் கோரிக்கையாகவுள்ளது. கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றுக்கு அருகில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தடுக்க கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதுடன், தண்ணீர் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் பெண்கள் எனவும் மன்னிப்பு சபை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment