Thursday, 30 October 2014

போலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய மாமனிதரின் நூற்றாண்டு விழா (1914-2014) - ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க்

போலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய மாமனிதரின் நூற்றாண்டு விழா (1914-2014) - ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க்
போலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய மாமனிதரின் நூற்றாண்டு விழா (1914-2014)

‘போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ நோயில் இருந்து சிறு பிள்ளைகளை காப்பாற்றி, வெற்றி பெற்ற நாடுகளின் முதல்தரப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

உலக நாடுகளில் எல்லாம் போலியோ மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு பிரசாரத்திலும், நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் பிரபல ‘மைக்ரோ ஸாஃப்ட்’ மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளரன பில்கேட்ஸ்-சின் தாரளமான நிதியுதவியை போற்றிப் புகழ்ந்து, பாராட்டும் சர்வதேச ஊடகங்கள், போலியோவை அழித்தொழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, மனித சமுதாயம் நோயின்றி வாழ அந்த மருந்துக்கான காப்புரிமையையும் பொதுவுடமையாக்கிய ‘மாமனிதரை’ தெரிந்தோ.. தெரியாமலோ.. புறக்கணித்து விட்டது.

இந்த சொட்டு மருந்தை கண்டுபிடித்த அந்த ‘அற்புத மனிதரை’ வாசகர்களுக்கு அறிமுகம் செய்விப்பதில் ‘மாலை மலர் டாட்.காம்’ பெருமகிழ்ச்சி அடைகின்றது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 28-10-1914 அன்று பிறந்த ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க், நியூ யார்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று, சிலவகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டமான 1950-களில் உலகம் முழுவதும் ’போலியோ’ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயின் தாக்கமும், அதனால் விளைந்த பாதிப்புகளும் உச்சகட்டத்தை எட்டியது.

குறிப்பாக, 1952-ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 58 ஆயிரம் மக்கள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3 ஆயிரத்து 145 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 ஆயிரத்து 269 பேர் கை, கால்கள் செயலிழந்த நிலையில் முடக்குவாத தாக்கத்திற்கு ஆளாகி, மாற்றுத் திறனாளிகளாக மாறிப் போயினர்.

இந்த அவலநிலையை கண்டு கொதித்துப் போன டாக்டர் ஜோனாஸ் ஸல்க், போலியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இரவும், பகலும் மூழ்கிப் போனார். 10 ஆண்டுகால கடும் உழைப்பின் பலனாக, 1955-ம் ஆண்டு புதிய மாற்று மருந்து ஒன்றினை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்.

அதே ஆண்டில், சோதனை முயற்சியாக 20 ஆயிரம் டாக்டர்கள், 64 ஆயிரம் பள்ளி ஊழியர்கள், சுமார் 2 லட்சம் தன்னார்வ தொண்டர்கள் கொண்ட போலியோவிற்கு எதிரான தற்காப்பு படையினர், அமெரிக்காவில் உள்ள 18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஜோனாஸ் ஸல்க்-கின் புதிய கண்டுபிடிப்பான ‘போலியோ சொட்டு மருந்து’ போட்டு தீவிர பிரசார முகாமினை தொடங்கினர்.

இந்த மருந்தின் செயலாற்றலின் விளைவாகதான். இன்றைய உலகில் போலியோ இல்லாத இளய சமுதாயத்தை பார்க்க முடிகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை (பேட்டண்ட் ரைட்ஸ்) தனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்ட டாக்டர் ஜோனாஸ் ஸல்க், அதனை மனித சமுதாயத்துக்கு பரிசாக வழங்குவதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

அவர் மட்டும் இந்த சொட்டு மருந்துக்கான காப்புரிமையை பெற முயற்சித்திருந்தால் 1960-களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்திருக்க முடியும். ஆனால், மிகப்பரந்த பெருந்தன்மையுடன் தனது 10 ஆண்டு ஆராய்ச்சியின் பலனை மனித குலத்துக்கு தானமாக வழங்கி, நோயற்ற சமுதாயத்துக்கான வரலாற்றில் நீங்கா தனிச் சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார்.

அவரது இந்த முடிவை அறிந்து வியந்துப் போன ஒரு பத்திரிகை நிருபர், ‘இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெற ஏன் மறுத்து விட்டீர்கள்’ என்று வினவினார். இந்த கேள்விக்கு டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் சற்றும் சிந்திக்காமல் கூறிய பதில் என்ன தெரியுமா...?

‘அடப்போங்க... சார்! சூரியனுக்கு யாராவது காப்புரிமை கோர முடியுமா..? அதேபோன்றது தான் இந்த சொட்டு மருந்தும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று மிகவும் தன்னடக்கத்துடன் அவர் பதில் அளித்தார்.

அவர் மட்டும் இந்த மருந்தினை பொதுவுடமை ஆக்கியிராதிருந்தால்... கடந்த 50 ஆண்டுகளில் போலியோவால் பாதிக்கப்பட்ட பல கோடி உயிர்கள் மரணத்தை தழுவி மடிந்திருக்கும். அந்த துர்மரணத்தில் இருந்து மனித குலத்தை காத்து, வாழ்விக்கப் பிறந்த டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க், 23-06-1995 அன்று தனது 80-வது வயதில் காலமானார்.

பிரபல கோடீஸ்வர தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிடும் உலக ஊடகங்கள், டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் என்ற இந்த ‘மாமனிதர்’ மனித குலத்துக்கு ஆற்றிய மகத்தான சேவையை இருட்டடிப்பு செய்துவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.

தனது இறுதி மூச்சு வரை உயிர்க் கொல்லி நோயான எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் அரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஜோனாஸ் ஸல்க். தனது இலக்கினை எட்டாமலேயே இறந்துப் போனது மனித குலத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே கருத வேண்டும்.
Source: http://www.maalaimalar.com/2014/10/28120345/The-genius-who-saved-crores-of.html

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...