Saturday, 25 October 2014

செய்திகள் -25.10.14

செய்திகள் -25.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, Schoenstatt அன்னை மரியா இயக்கத்தினர் சந்திப்பு

2. வயதானவர்களிடம் மிகுந்த அக்கறை காட்டுமாறு திருத்தந்தை அழைப்பு

3. மனிதர் இயல்பிலே ஒரு சமூக உயிர் என்ற புரிதலே இக்காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது

4. ஹாங்காங் சனநாயக ஆதரவு கர்தினால் Zen அவர்களுக்கு திருத்தந்தை ஊக்கம்

5. நைஜீரியாவில் மனித வாழ்வு மிக மலிவான விற்பனைப் பொருளாக உள்ளது

6. Autism நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய வத்திக்கான் கருத்தரங்கு

7. SIGNIS அமைப்புக்குத் திருஅவையின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம்

8. ஐக்கிய நாடுகள் நிறுவன தினம் அக்.24

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, Schoenstatt அன்னை மரியா இயக்கத்தினர் சந்திப்பு

அக்.25,2014. கிறிஸ்தவக் குடும்பங்களும், திருமணங்களும் இக்காலத்தைப் போல் எக்காலத்திலும் இந்த அளவுக்கு நேரடியாகத் தாக்கப்பட்டதில்லை என்று இச்சனிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Schoenstatt அப்போஸ்தலிக்க அன்னை மரியா இயக்கத்தின் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட அங்கத்தினர்களை வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் இச்சனிக்கிழமையன்று சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதில்சொல்லி உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமண அருளடையாளத்தைச் சமூகச் சடங்குமுறையாகக் குறைக்க முடியாது என்றுரைத்த திருத்தந்தை, இளையோரைத் திருமணத்துக்குத் தயாரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு, திருமணம் என்றால் என்ன என்பதன் உண்மையான பொருள் தெரியாமல் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர் என்றும் கூறினார்.
Schoenstatt அப்போஸ்தலிக்க அன்னை மரியா இயக்கம், கத்தோலிக்கத் திருஅவையில் புதுப்பித்தலை ஏற்படுத்துவதற்காக 1941ம் ஆண்டில் ஜெர்மனியின் Schoenstatt என்ற ஊரில் அருள்பணியாளர் Joseph Kentenich அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. Schoenstatt என்றால் அழகான இடம் என்று பொருள். இதன் நூறாம் ஆண்டின் நிறைவாக உரோமையில் திருப்பயணம் மேற்கொண்டு திருத்தந்தையையும் இச்சனிக்கிழமையன்று சந்தித்தனர். 
அருள்பணியாளர் Joseph Kentenich அவர்கள், 1941ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு Dachau வதைப்போர் முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு இருந்த இத்தாலிய, போலந்து, செக் இன்னும் பிற நாட்டினரிடம் Schoenstatt பக்தியை இவர் பரப்பினார். இவ்வியக்கம், அன்னை மரியாவின் அன்பு மற்றும் தூய்மையை வலியுறுத்தி அன்னைமரியா பக்தியைப் பரப்பி வருபகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வயதானவர்களிடம் மிகுந்த அக்கறை காட்டுமாறு திருத்தந்தை அழைப்பு

அக்.25,2014. இயேசுவின் சிலுவை தீமையின் முழு சக்தியைக் காண்பிக்கிறது, ஆனால், அது கடவுளின் கருணையின் முழு வல்லமையையும் காட்டுகிறது என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், நம் தாத்தா பாட்டிகளை நம் குடும்பங்களோடு ஒன்றிணைத்து, அவர்கள் குடும்பங்களின் ஓர் அங்கம் என்பதைத் தொடர்ந்து உணரச்செய்ய வேண்டுமென்று திருத்தந்தை கூறியதாக, இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் ஃபாபியன் ரொமானோ தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்த பின்னர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ரொமானோ அவர்கள், தாத்தா பாட்டிகள்மீது அக்கறை காட்டாத, அவர்களை நன்கு நடத்தாத மக்களுக்கு எதிர்காலம் இல்லை என்று  திருத்தந்தை கூறியதாக மேலும் தெரிவித்தார்.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, 2050ம் ஆண்டுக்குள் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் உலகின் மக்கள் தொகையில் 22 விழுக்காடாக இருப்பார்கள் என்று தெரிகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மனிதர் இயல்பிலே ஒரு சமூக உயிர் என்ற புரிதலே இக்காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது

அக்.25,2014. மனிதர் இயல்பிலே ஒரு சமூக உயிர் என்ற புரிதலையே, தற்போதைய பொருளாதார மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அச்சுறுத்தி வருகின்றன என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார்.
உரோம் Notre Dame Global Gateway பல்கலைக்கழகத்தில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த, மனித மாண்பும், மனித வளர்ச்சியும் என்ற தலைப்பிலான மூன்று நாள் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.
நமது இக்காலத்திய சிந்தனைகளில், பொருளாதாரங்களை ஓர் அறிவியலாக நோக்கும் போக்குத் தெரிகின்றது, அதாவது, பொருள்களும் நிகழ்வுகளும் மனித உணர்வில் புரிந்துகொள்ளப்படுவதை அடிப்படையாகக் கொண்ட மெய்யியலாகத் தெரிகின்றது என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.
மாறாக, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்குத் பெரும் தடைகளாய் இருப்பவை மனித மாண்புக்கு அச்சுறுத்தலை முன்வைக்கும் மனித மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளில் காணப்படுகின்றன என்று திருஅவையின் போதனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்றும் கூறினார் கர்தினால் பரோலின். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஹாங்காங் சனநாயக ஆதரவு கர்தினால் Zen அவர்களுக்கு திருத்தந்தை ஊக்கம்

அக்.25,2014. ஹாங்காங்கில் சனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்களுக்கு ஆதரவளித்துவரும் அந்நாட்டு கர்தினால் Joseph Zen Ze-kiun அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊக்கமளித்துள்ளார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குப் பின்னர் தன்னைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைப் பார்த்தவுடனேயே, இதோ கவுணுடன் போராடும் ஒருவர் என்று சொல்லி வாழ்த்தியதாக,  கர்தினால் Zen அவர்கள், தனது சீன மொழி blogல் எழுதியுள்ளார்.
ஹாங்காங் போர்க்களத்திலிருந்து தான் வந்துள்ளேன் என்று, தன்னை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே திருத்தந்தை சிரித்துக்கொண்டே இவ்வாறு கூறியதாகவும், மாவீரன் கோலியாத்தை, சிறுவன் தாவீது கவுணால் வீழ்த்தியதை திருத்தந்தை நினைவுபடுத்தினார் எனவும் கர்தினால் எழுதியுள்ளார்.
ஹாங்காங்கில் ஏறக்குறைய ஒரு மாதமாக நடந்துவரும் சனநாயக ஆதரவுப் போராட்டங்களில் கர்தினால் Zen அவர்களும் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு அவற்றுக்கு ஆதரவளித்து வருகிறார். கர்தினால் Zen அவர்களின் வயது 83.

ஆதாரம் : AsiaNews

5. நைஜீரியாவில் மனித வாழ்வு மிக மலிவான விற்பனைப் பொருளாக உள்ளது

அக்.25,2014. நைஜீரியாவில் போக்கோ ஹாராம் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பால் கடுமையாய்த் தாக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதற்கு அரசு திறனற்று உள்ளது எனக் குறை கூறியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
போக்கோ ஹாராம் அமைப்பால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மாய்துகுரி மறைமாவட்ட மக்களின் நிலைமை குறித்து விளக்கிய ஆயர் ஆலிவர் தோமே அவர்கள், அந்நாட்டில் மனித வாழ்வு மிக மலிவான விற்பனைப் பொருளாக நோக்கப்படுகிறது என்று கூறினார்.
நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியின் நகரங்களையும், கிராமங்களையும்  போக்கோ ஹாராம் தீவிரவாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து, பலர் காடுகளில் அல்லது மலைக்குகைகளிலும், இன்னும் சிலர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார் ஆயர் தோமே.
மக்கள் தினமும் இறக்கின்றனர், பல நேரங்களில் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு ஆள்கள் இல்லாமல் உடல்கள் அழுக விடப்படுகின்றன, வீடுகளும் சொத்துக்களும் சூறையாடப்பட்டுள்ளன, தங்களின் தந்தை நாட்டிலே அடிமைகளாகவும், கைதிகளாகவும் மக்கள் வாழ்கின்றனர் எனவும் மாய்துகுரி மறைமாவட்ட ஆயர் விவரித்துள்ளார்.

ஆதாரம் : Zenit

6. Autism நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய வத்திக்கான் கருத்தரங்கு

அக்.25,2014. Autism என்ற நரம்பு தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்பவர்களுக்கென வருகிற நவம்பர் 20 முதல் 22 வரை, திருப்பீட நலவாழ்வுப் பணியாளர் அவை அனைத்துலக கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.
இக்கருத்தரங்கில் இந்நோய் குறித்த முக்கிய வல்லுனர்கள் ஐந்து கண்டங்களிலிருந்து கலந்துகொள்வார்கள்.
Autism நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எவ்வாறு உதவுவது என்பது இந்த மூன்று நாள் கருத்தரங்கில் ஆராயப்படும் என, திருப்பீட நலவாழ்வு அவை அறிவித்துள்ளது.
Autism நோய் என்பது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்று கூறப்படுகின்றது. ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாயத்தில் அவரின் செயல்பாடுகள், அவர் ஆர்வம் கொள்ளும் துறைகள், அவரின் நடத்தைப்பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி குறையை இந்நோய் குறிக்கும்.
பொதுவாக, குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்குமுன் இக்குறைபாடு ஏற்படும் எனவும் சொல்லப்படுகின்றது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. SIGNIS அமைப்புக்குத் திருஅவையின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம்

அக்.25,2014. SIGNIS என்ற உலக கத்தோலிக்க ஊடக அமைப்பு, திருஅவையின் அனைத்துலக கத்தோலிக்க ஊடக நிறுவனம் என்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை இவ்வெள்ளியன்று பெற்றுள்ளது.
உரோமையில் இவ்வெள்ளியன்று இடம்பெற்ற சிறிய திருவழிபாட்டு நிகழ்வில் இந்த அங்கீகாரத்தை அறிவித்தார் திருப்பீட பொதுநிலையினர் அவையின் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் ரில்கோ.
இந்த அங்கீகாரம், SIGNIS அமைப்பின் கத்தோலிக்கத் தனித்துவத்தை உறுதிசெய்வதோடு, உண்மை, நீதி, ஒவ்வொரு மனிதரின் மாண்பு ஆகிய உன்னதக் குறிக்கோள்களை ஊக்கப்படுத்துவதற்கு இவ்வமைப்புக்கு இருக்கும் கடமையை இது உணர்த்துகிறது என்றும் கர்தினால் ரில்கோ அவர்கள் கோடிட்டுக்காட்டினார்.
பெல்ஜியத்தின் Brussels நகரை மையமாகக் கொண்டு இயங்கும் SIGNIS உலக அமைப்பு, இந்தியா, இலங்கை உட்பட 140 நாடுகளில் இயங்கி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. ஐக்கிய நாடுகள் நிறுவன தினம் அக்.24

அக்.25,2014. வறுமை, நோய்கள், பயங்கரவாதம், வெப்பநிலை மாற்றம் என உலகு  தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுவரும் இவ்வேளையில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இருப்பு இக்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகின்றது என இவ்வெள்ளியன்று கூறினார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
அக்.24, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 69வது ஆண்டு நிறைவுக்கென செய்தி வழங்கிய பான் கி மூன் அவர்கள், சமுதாயத்தில் நலிந்த மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான நம் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிசெய்வோம் எனக் கேட்டுள்ளார்.
கொத்தடிமை, மனித வணிகம், பாலியல் அடிமைத்துவம், தொழிற்சாலைகளிலும், வயல்களிலும் சுரங்கங்களிலும் பாதுகாப்பற்ற சூழல்கள் போன்றவைகளில் இன்னும் இலட்சக்கணக்கான மக்கள் துன்புற்று வருவதையும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
மனித மாண்புக்கு ஊறுவிளைவிக்கும் இத்தகைய துன்பங்களை அகற்றும் நோக்கத்திலேயே ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. பொதுச்செயலர், அனைவரும் பொதுநலனுக்காக உழைக்க முன்வருவோம் எனக் கேட்டுள்ளார்.
1945ம் ஆண்டின் ஐ.நா. அறிக்கை அமலுக்கு வந்த அக்டோபர் 24ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவன தினமாக, 1948ம் ஆண்டிலிருந்து  சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
ஆதாரம் : UN                           

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...