Friday, 24 October 2014

செய்திகள் - 24.10.14

செய்திகள்  - 24.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு உள்ளார்ந்த புதுப்பித்தல் அவசியம்

2. திருத்தந்தை : திருஅவையின் ஒன்றிப்புக்காக உழைப்பதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைப்புப் பெற்றுள்ளனர்

3. திருத்தந்தையின் நவம்பர் திருவழிபாட்டு நிகழ்வுகள்

4. Grenadaவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு திருத்தந்தைக்கு அழைப்பு

5. கடும் ஏழ்மையை ஒழிக்கவேண்டுமெனில் சமத்துவமின்மை அகற்றப்படவேண்டும்

6. மிக ஏழை நாடுகளில் ஏழ்மையை ஒழிப்பதற்கு இன்னும் அதிகளவு முயற்சிகள் தேவை, ஐ.நா.

7. நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அசாம் முதல்வருக்கு வேண்டுகோள்

8. உலக போலியோ நோய் ஒழிப்பு தினம் அக்டோபர் 24

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு உள்ளார்ந்த புதுப்பித்தல் அவசியம்

அக்.24,2014. அகவாழ்வில் புதுப்பித்தலுக்குத் தயாராக இல்லாமலும், கிறிஸ்துவுக்கும் அவரின் விருப்பங்களுக்கும் மிகுந்த பற்றுறுதியுடன் வாழ்வதற்கு ஆவல் கொள்ளாமலும் இருக்குமிடத்தில் உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு இடமில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஆர்த்தடாக்ஸ் சபையின் Kallistos அவர்களின் தலைமையில், கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பயணம் மேற்கொண்டுள்ள Orientale Lumen என்ற அமெரிக்க நிறுவனத்தின் 45 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் மத்தியில் முழு ஒன்றிப்புக்கும், ஒப்புரவுக்கும் இட்டுச்செல்லும் பாதையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு, அகவாழ்வில் புதுப்பித்தலை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்றும் கூறினார் திருத்தந்தை.
புனித திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரின் நினைவாக இக்கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பயணம் இடம்பெறுவது குறித்து தனது மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே நெருங்கிய உறவுகளை வளர்ப்பதற்கு இவ்விரு திருத்தந்தையரும் பெருமளவில் பங்காற்றியுள்ளனர் என்றும் பாராட்டினார்.
தனது நவம்பர் மாத துருக்கிப் பயணம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, உரோம் திருப்பீடத்துக்கும், கான்ஸ்டான்டிநோபிள் திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் ஆழமான பிணைப்பின் அடையாளமாக உள்ளது இது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Orientale Lumen நிறுவனம், கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே உரையாடலை ஊக்குவித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : திருஅவையின் ஒன்றிப்புக்காக உழைப்பதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைப்புப் பெற்றுள்ளனர்

அக்.24,2014. பன்மைத்தன்மையில் ஒருமைப்பாட்டை உருவாக்கும் தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதற்குத் தன்னை அனுமதித்து திருஅவையின் ஒன்றிப்புக்காக உழைப்பதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழ்ந்து, தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ளுங்கள் என்று, புனித பவுலடிகளார் எபேசியருக்கு எழுதிய திருமடலில் கூறியதை மையமாக வைத்து மறையுரையாற்றினார்.
திருஅவையின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதே, வரலாற்றில் திருஅவையின் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவரின் பணியாகும் என்றுரைத்த திருத்தந்தை, திருத்தூதர், திருஅவை பற்றிப் பேசும்போது, உயிருள்ள கற்களாலான ஆலயம் பற்றிப் பேசுகிறார், அவ்வாலயம் நாமே என்றும், இதற்கு எதிரான தற்பெருமை ஆலயம், பாபேல் கோபுரம்  என்றும் எச்சரித்தார்.
உயிருள்ள ஆலயம் ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும், தற்பெருமை ஆலயம், ஒற்றுமையின்மை, புரிந்துகொள்ளாமை போன்றவற்றின் அடையாளமாகவும் உள்ளன என்றும் கூறிய திருத்தந்தை, திருஅவையின் ஒருமைப்பாட்டை, திருஅவையைக் கட்டியெழுப்புவது, நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறினார்.
ஓர் ஆலயத்தை அல்லது ஒரு கட்டிடத்தைக் கட்டும்பொழுது, முதலில் அதற்குத் தகுதியான இடத்தைக் கண்டுபிடித்து, பின்னர் மூலைக்கல்லை நடுவார்கள் என விவிலியம் சொல்கிறது, திருஅவை ஒருமைப்பாட்டின் மற்றும் அதன் மூலைக்கல் இயேசுவே, திருஅவை ஒருமைப்பாட்டிற்காகவே இயேசு இறுதி இராவுணவில் செபித்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு என்ற பாறையின்மீது திருஅவையின் ஒருமைப்பாட்டை நாம் கட்டியெழுப்புகிறோம், இயேசு கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டிராத ஒன்றிப்பு கிடையாது, இந்த ஒன்றிப்பைக் கட்டுவது தூய ஆவியாரின் பணியாகும், பல்வேறு நாடுகள், கலாச்சாரங்கள் மற்றும் மக்கள் மத்தியில் தூய ஆவியாரே திருஅவையின் ஒருமைப்பாட்டைக் கட்டுகிறார் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் நவம்பர் திருவழிபாட்டு நிகழ்வுகள்

அக்.24,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், நவம்பர் மாத நிகழ்வுகளை இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான பேரருள்திரு குய்தோ மரினி.
அனைத்துப் புனிதர்கள் விழாவான நவம்பர் முதல் நாள் உரோம் Verano கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி, இறந்த எல்லாத் திருத்தந்தையரின் நிறைசாந்திக்காக, அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளான நவம்பர் இரண்டாம் தேதி வத்திக்கான் கெபியில் திருப்பலி, கடந்த ஆண்டில் இறந்த அனைத்துக் கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, வத்திக்கான் பசிலிக்காவில் மூன்றாம் தேதி திருப்பலி ஆகியவை திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளாகும்.
மேலும், நவம்பர் 23, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், கேரளாவின் Kuriakose Elias Chavara, Eufrasia Eluvathingal உட்பட ஆறு அருளாளர்களுக்குப் (Giovanni Antonio Farina, Ludovico da Casoria, Nicola da Longobardi, Amato Ronconi) புனிதர் பட்டமளிப்புத் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை.
நவம்பர் 28 முதல் 30 வரை துருக்கியில் திருப்பயணம் மேற்கொள்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. Grenadaவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு திருத்தந்தைக்கு அழைப்பு

அக்.24,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை Grenada குடியரசுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார் Grenada பிரதமர் Keith Mitchell.
இவ்வியாழனன்று வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துப் பேசியபோது, திருத்தந்தையை Grenadaவுக்கு வருகை தருமாறு அழைப்புவிடுத்ததோடு, அந்நாடு ஓய்வெடுப்பதற்கு அழகான இடம் என்றும் கூறினார் பிரதமர் Mitchell.
தனது தாய், மனைவி, மகன் ஆகியோரையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார் Grenada பிரதமர் Keith Mitchell.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட, சிறிய கரீபியன் தீவு நாடாகிய Grenadaவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இந்நாடு, 1976ல் ஐரோப்பியர்களிடமிருந்து சுதந்திரமடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கடும் ஏழ்மையை ஒழிக்கவேண்டுமெனில் சமத்துவமின்மை அகற்றப்படவேண்டும்

அக்.24,2014. உலகில் நிலவும் கடும் ஏழ்மையை ஒழிப்பதில் அனைத்துலக சமுதாயம் உண்மையாகவே ஆர்வம் கொண்டிருந்தால், சமத்துவமின்மையை அகற்றுவதில் அது கவனம் செலுத்த வேண்டுமென வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்
ஏழ்மையை ஒழிப்பது குறித்து, ஐ.நா. தலைமையகத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
வறுமையை அகற்றுவது என்பது, ஒரு மனிதரின் அன்றாடச் செலவுக்குத் தேவையான நிதியை அதிகரிப்பது என்பதல்ல, மாறாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே, சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இடையே நிலவும் ஏற்றுக்கொள்ள முடியாத இடைவெளியை நீக்குவதாகும் என்றும் பேராயர் Auza அவர்கள் கூறினார்.
உலகின் பல பகுதிகளில் பெருமளவான ஏழைகள், வறுமையின் சுமையை பல வழிகளில் அனுபவிக்கின்றனர் என்று தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் Auza அவர்கள், ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கைகள், முழுமனிதரின் உண்மையான வளர்ச்சியை ஊக்குவிப்பதாய் அமைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மிக ஏழை நாடுகளில் ஏழ்மையை ஒழிப்பதற்கு இன்னும் அதிகளவு முயற்சிகள் தேவை, ஐ.நா. 

அக்.24,2014. உலகின் 48 வளர்ச்சி குன்றிய நாடுகள் குறித்து இவ்வியாழனன்று ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஏழ்மையை ஒழிப்பதில் தொடர்ந்து முன்னேறி வருகின்ற இந்நாடுகள் 2020ம் ஆண்டுக்குள் கடும் ஏழ்மையை ஒழிக்க வேண்டுமெனில் அவை இன்னும் அதிகளவில் முயற்சிகள் எடுக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. 
இந்நாடுகள் உள்கட்டமைப்புகளில் முன்னேறி வருகின்றபோதிலும், வெளிநாடுகளின் பொருளாதார நெருக்கடி, வெப்பநிலை மாற்றம் தொடர்புடைய விவகாரங்கள், இயற்கைப் பேரிடர்கள், நலவாழ்வு சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய வளர்ச்சி குன்றிய நாடுகள் எதிர்நோக்கும் எபோலா நோய்ப் பாதிப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை, ஐ.நா.வின் மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகளில் வளர்ச்சி குன்றிய நாடுகள்மீது அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

ஆதாரம் : UN

7. நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அசாம் முதல்வருக்கு வேண்டுகோள்

அக்.24,2014. இந்தியாவின் அசாம் மற்றும் நாகாலாந்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியையும், இயல்புநிலை வாழ்க்கையையும் அமைத்துக் கொடுப்பதற்கு  முயற்சிகளை எடுக்குமாறு அசாம் முதல்வரை வலியுறுத்தியுள்ளனர் அமைதி ஆர்வலர்கள்.
அசாம் மற்றும் நாகாலாந்தில் அமைதிக்காக உழைக்கும் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் அசாம் மாநில முதல்வர் Tarun Gogoi அவர்களை, இவ்வாரத்தில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கேட்டுக்கொண்டனர்.
அசாம் மற்றும் நாகாலாந்தில், இனப்பிரச்சனை மனிதாபிமான கண்ணோட்டத்தில் நோக்கப்பட வேண்டுமென்றும், அப்பகுதியில் முன்பிருந்த நிலையை அமைப்பதில் கடும் முயற்சிகளை எடுக்குமாறும் அத்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமைதிக்கான நடவடிக்கைகள் கிராமத் தலைவர்களை உள்ளடக்கியதாய், சாதாரண மக்களிலிருந்து தொடங்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.

ஆதாரம் : Assam tribune

8. உலக போலியோ நோய் ஒழிப்பு தினம் அக்டோபர் 24

அக்.24,2014. உலக அளவில் கடந்த 26 வருடங்களாக எடுக்கப்பட்டுவரும் போலியோ நோய் ஒழிப்பு நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிறார் அதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர் என்று ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் கூறியது.
அக்டோபர் 24, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக போலியோ நோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளரிடம் அறிக்கை சமர்ப்பித்த யூனிசெப் அமைப்பு, போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகளினால் பதினைந்து இலட்சம் சிறாரின் வாழ்வு காப்பாற்றப்பட்டிருந்தாலும், ஏறக்குறைய ஒரு கோடிப் பேர் இந்நோயின் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர் என்று கூறியது.
1988ல் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரமாக இருந்த இந்நோயாளரின் எண்ணிக்கை, 2013ல் 416 ஆகவும், இவ்வாண்டில் 243 ஆகவும் குறைந்துள்ளது எனவும் யூனிசெப் கூறியது.
ஒவ்வோர் ஆண்டும் ஐம்பது கோடிச் சிறாருக்கு, போலியோ நோய்த் தடுப்பு மருந்துகளை அளித்து வருகிறது யூனிசெப் அமைப்பு.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...