எண்பது வயதில் ஆயர் பணியேற்று அசத்தியவர்
(St.Narcissus)
கி.பி.180ம் ஆண்டில், தனது
எண்பதாவது வயதில் எருசலேமின் முப்பதாவது ஆயராகப் பொறுப்பேற்றவர் புனித
நார்சிசுஸ். பணிக்கு வயது ஒரு தடையல்ல என்பதுபோல் இளமைத் துடிப்புடன்
இறைப்பணியைத் தொடர்ந்த இவர், கி.பி.195ம் ஆண்டில், பாலஸ்தீனாவின் செசாரியா ஆயர் தியோஃபிலெஸ் அவர்களுடன் சேர்ந்து, செசாரியாவில் நடந்த ஆயர்கள் அவையில், கிறிஸ்து
உயிர்ப்புப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமையில் எப்போதும் கொண்டாடப்பட
வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆயர் நார்சிசுஸ் அவர்கள் வாழும்போதே
பல புதுமைகள் செய்தவர். மின்விளக்குகள் இல்லாத அக்காலத்தில், ஒரு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருவழிபாடு தொடங்கவிருந்த நேரத்தில், ஆலய
விளக்குகளுக்குப் போதுமான எண்ணெய் இல்லாமல் அணைந்துபோகும் நிலையில்
இருந்தன. உடனே இவர் தியாக்கோன்களை அழைத்து அருகிலிருந்த கிணற்றிலிருந்து
தண்ணீர் எடுத்துவந்து விளக்குகளில் ஊற்றச் சொன்னார். பின்னர் அந்தத்
தண்ணீர்மீது உருக்கமாகச் செபித்தார். உடனே அந்தத் தண்ணீர் எண்ணெய்யாக மாறி
விளக்குகள் சுடர்விட்டு எரிந்தன. “புனித குரு” என எல்லாராலும் இவர் போற்றப்பட்டதைக் கண்டு பொறாமையடைந்த மூவர், இவர்மீது அபாண்டமாகப் பழி சுமத்தினர். முதலாமவன் அனைவர் முன்னிலையிலும் வந்து, நான் சொல்வதில் உண்மை இல்லையென்றால், கடவுள் என்னை நெருப்பில் சுட்டெரிப்பாராக என்றான். இரண்டாவது ஆள் வந்து, எனது குற்றச்சாட்டுப் பொய்யானால், நான்
தொழுநோயால் தாக்கப்படுவேன் என்று சபதமிட்டான். மூன்றாவது ஆள் வந்து நான்
பார்வையிழப்பேன் என்று உறுதியாகச் சொன்னான். இது நடந்து ஒரு சில நாள்களிலே
ஓர் இரவில் முதல் ஆளின் வீடு தானாகத் தீப்பிடித்து முழுக்குடும்பமும் சாம்பலானது. அடுத்த ஆளும் அவர் கூறியதுபோலவே தொழுநோயால் தாக்கப்பட்டார். இவற்றைக் கண்டு பயந்த மூன்றாவது ஆள், ஆயர்
மீது தாங்கள் மூவரும் சுமத்திய குற்றங்கள் அனைத்தும் பொய் என அனைவர்
முன்னிலையில் அறிவித்து ஆயரிடம் மன்னிப்பு இறைஞ்சினான். ஆயரும் அவருக்கு
மன்னிப்பளித்தார். பின்னர் பாலைநிலம் சென்று தனிமையில் செபத்தில் நாள்களைச் செலவழித்தார். சில காலம் கழித்து ஆயர் நார்சிசுஸ் அவர்கள், எருசலேம் திரும்பி வந்தபோது மக்கள் அவரை மீண்டும் ஆயராக்கினார்கள். ஆனால் முதிர்வயது காரணமாக, புனித அலெக்சாந்தரை துணை ஆயராக நியமித்தார் அவர். புனித வாழ்வு வாழ்ந்த ஆயர் நார்சிசுஸ் அவர்கள், தனது 116வது வயதில் கி.பி.216ம் ஆண்டில் காலமானார். இவரின் விழா அக்டோபர் 29.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment