Thursday, 23 October 2014

செய்திகள் - 23.10.14

செய்திகள் - 23.10.14
------------------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தை - தூய ஆவியாரின் அருளின்றி நம்மால் கிறிஸ்தவர்களாக வாழமுடியாது

2.  திருத்தந்தை - சமுதாயத்தில் நலிவுற்றோருக்கு சட்டங்கள் காட்ட வேண்டிய தனிப்பட்ட அக்கறை

3.  திருத்தந்தையுடன் Bayern Munich கால்பந்தாட்டக் குழுவினர் சந்திப்பு

4.  வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குறித்து அருள்பணி லொம்பார்தி பேட்டி

5.  பிலிப்பின்ஸ் சிறைக் கைதிகள் திருத்தந்தையைக் காண விண்ணப்பம்

6.  'இஸ்லாமிய அரசை' முறியடிக்க கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்து வரவேண்டும் - முதுபெரும் தந்தை சாக்கோ

7.  எபோலா நோயிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியுள்ளது - எல்லைகளற்ற மருத்துவர்கள் பணிக்குழு

8.  அமெரிக்காவில் இந்திய மாணவனின் சாதனை

------------------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தை - தூய ஆவியாரின் அருளின்றி நம்மால் கிறிஸ்தவர்களாக வாழமுடியாது

அக்.23,2014. தூய ஆவியாரின் அருளின்றி நம்மால் கிறிஸ்தவர்களாக வாழமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை ஆற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார்.
இயேசுவைக் குறித்து தான் பெற்ற அனுபவத்தை எபேசியருக்கு எழுதியத் திருமுகத்தில் புனித பவுல் அடியார் குறிப்பிட்டுள்ளதை மையப்படுத்தி, திருத்தந்தை இம்மறையுரையை வழங்கினார்.
கரையற்ற, எல்லையற்ற கடலாக விரிந்திருக்கும் கடவுளின் அன்பைக் குறிப்பிடும் பவுல் அடியார், அந்த அன்பில் தன்னை உறுதியாக்கும்படி இறைவனிடம் வேண்டியதை, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
சிறுமையிலும், சுயநலத்திலும் முடங்கிக் கிடக்கும் நமக்குமுன் பவுல் அடியார் தன் புகழுரையை வழங்குகிறார் என்று கூறியத் திருத்தந்தை, இறைவனின் அன்பில் இணைவதற்கு, தூய ஆவியாரின் துணை அவசியமாகிறது என்பதை வலியுறுத்தினார்.
மேலும், "ஒவ்வொரு குடும்பமும் சமுதாயம் என்ற கட்டிடத்தின் செங்கலாக விளங்குகிறது. குடும்பத்தில்தான் நாம் மனிதர்களாக உருவாக்கப்படுகிறோம்" என்ற வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் வெளியிட்ட Twitter செய்தியாக அமைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2.  திருத்தந்தை - சமுதாயத்தில் நலிவுற்றோருக்கு சட்டங்கள் காட்ட வேண்டிய தனிப்பட்ட அக்கறை

அக்.23,2014. பாகுபாடுகள் ஏதுமின்றி, ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், உரிமையையும் நிலைநிறுத்துவதும், நீதி, அமைதி ஆகிய விழுமியங்களை வளர்ப்பதும் திருஅவை மேற்கொண்டு வரும் நற்செய்தி அறிவிப்புப் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
குற்றவியல் சட்டங்களை நிலைநிறுத்தும் பன்னாட்டு அறிஞர்கள் அடங்கிய ஒரு குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நீதி வழியில் அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தார்.
பழிக்குப் பழி வாங்குதல், பொதுவான தவறுகளை ஒரு சிலர் மீது சுமத்துதல் ஆகிய எண்ணங்கள் குற்றங்களுக்கான சட்டங்களை உருவாக்குவதில் ஆற்றும் பங்கைக் குறித்து திருத்தந்தை தன் உரையின் துவக்கத்தில் பேசினார்.
மனித வாழ்வு, மாண்பு ஆகியவற்றின் முதன்மை இடம், மரண தண்டனை, சித்திரவதைகள், ஆகியவற்றைக் குறித்து திருத்தந்தை தன் கருத்துக்களை முன்வைத்தார்.
சட்டத்தின் முன் சிறுவர், சிறுமியருக்கும், வயது முதிர்ந்தோருக்கும், சமுதாயத்தில் நலிவுற்றோருக்கும் காட்டப்பட வேண்டிய தனிப்பட்ட அக்கறை குறித்து திருத்தந்தை தன் எண்ணங்களை வெளியிட்டார்.
மனித மாண்பைக் குலைக்கும் வண்ணம் உலகின் பல நாடுகளில் பரவியிருக்கும் மனித வர்த்தகம், அரசுகளில் நிலவி வரும் ஊழல் ஆகிய குறைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
சிறு குற்றங்களில் சிக்கிக் கொள்ளும் வறியோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் வேளையில், பெரும் சுறாமீன்களைப் போல் பலரை விழுங்கிவரும் குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிவதைக் குறித்தும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
அனைத்து நீதிக்கும் ஊற்றான இறைவன் குற்றவியல் துறையில் பணியாற்றும் அனைவரையும் ஆசீர்வதிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3.  திருத்தந்தையுடன் Bayern Munich கால்பந்தாட்டக் குழுவினர் சந்திப்பு

அக்.23,2014. ஜெர்மன் நாட்டில் புகழ்பெற்று விளங்கும் Bayern Munich என்ற கால்பந்தாட்டக் குழுவினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வத்திக்கானில் சந்தித்தார்.
பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஓர் அனுபவம் என்று இக்குழுவின் தலைவர் Philip Lahm செய்தியாளர்களிடம் கூறினார்.
திருத்தந்தை ஆற்றிவரும் பல்வேறு பிறரன்புப் பணிகளுக்கென்று இக்குழுவின் சார்பில் 10 இலட்சம் யூரோக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது என்றும், இக்குழுவினரின் கையொப்பங்கள் அடங்கிய ஒரு கால்பந்தும், 1 என்ற எண்ணும் 'பிரான்சிஸ்' என்ற பெயரும் பதித்த குழுவின் சீருடை ஒன்றும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது என்றும் குழவின் தலைவர் Lahm கூறினார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனாவில் பேராயராகப் பணியாற்றியபோது அங்கு நிகழ்ந்த ஒரு இரயில் விபத்தில் பலியானோரின் குடும்பங்களிலிருந்து 9 பேர் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்ற திருப்பலியில் கலந்து கொண்டனர் என்றும், திருப்பலிக்குப் பின்னர் அவர்கள் திருத்தந்தையை ஒரு மணி நேரம் தனியாகச் சந்தித்தனர் என்றும் Zenit செய்தி நிறுவனம் கூறியது.
இந்த விபத்தைக் குறித்து நடைபெறும் வழக்குகளில் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க தான் தொடர்ந்து செபித்து வருவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்குழுவினர் வழியே ஒலி, ஒளி செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் என்றும் Zenit செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit

4.  வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குறித்து அருள்பணி லொம்பார்தி பேட்டி

அக்.23,2014. கத்தோலிக்கத் திருஅவை இவ்வுலகில் பயணம் செய்யும் ஒரு திருப்பயணி என்ற எண்ணத்தை அண்மையில் நடந்து முடிந்த ஆயர்கள் சிறப்பு மாமன்றம் உணர்த்தியது என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி Federico Lombardi அவர்கள் கூறினார்.
குடும்பங்களை மையக்கருத்தாகக் கொண்டு, இம்மாதம் 5ம் தேதி முதல் 19ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், இம்மாமன்றத்தின் தனித்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாமன்றத்தின் துவக்கத்திலும், முடிவிலும் மட்டுமே தன் கருத்துக்களை எடுத்துரைத்தார் என்பதும், ஏனைய நாட்களில் அவர் அனைவருக்கும் செவிமடுத்தார் என்பதும் மாமன்றத்தில் கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெறுவதற்கு வழிவகுத்தது என்று அருள்பணி லொம்பார்தி கூறினார்.
குடும்பம், மணமுறிவு, மறுமணம், ஒரு பாலின ஈர்ப்பு ஆகியவை குறித்து வெளிப்படையான, சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தது வரவேற்கத்தக்க மாற்றம் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன்  பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5.  பிலிப்பின்ஸ் சிறைக் கைதிகள் திருத்தந்தையைக் காண விண்ணப்பம்

அக்.23,2014. வரும் ஆண்டு சனவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் வேளையில், தங்களைச் சந்திக்க அவர் வரவேண்டும் என்ற விண்ணப்பத்தை, அந்நாட்டின் சிறைக் கைதிகள் விடுத்துள்ளனர்.
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகே Mutinlupa என்ற இடத்தில் அமைந்துள்ள சிறையில் 20,000த்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
இக்கைதிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைக் காண விழையும் விண்ணப்பத்தை, பிலிப்பின்ஸ் திருப்பீடத் தூதர் பேராயர், Giuseppe Pinto அவர்கள் வழியாக அனுப்பியுள்ளனர் என்று Zenit செய்திக்குறிப்பு கூறுகின்றது.
இறைவனின் குழைந்தைகள் அனைவரையும் தன் சொல்லாலும், செயலாலும் தூண்டிவரும் திருத்தந்தை அவர்கள், தங்களைக் காண்பதற்கு ஒரு சில நிமிடங்கள் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையை, சிறைக் கைதிகளின் விண்ணப்பம் வெளிப்படுத்துகிறது.
சிறைக் கைதிகள் உட்பட சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டுள்ள மக்கள் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனிப்பட்ட அக்கறை கொண்டவர் என்பதும், Isernia என்ற இடத்தில் உள்ள சிறைக் கைதிகளை இவ்வாண்டு ஜூலை மாதம் அவர் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit

6.  'இஸ்லாமிய அரசை' முறியடிக்க கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்து வரவேண்டும் - முதுபெரும் தந்தை சாக்கோ

அக்.23,2014. 'இஸ்லாமிய அரசு' என்ற அடிப்படைவாதப் போக்கை முறியடிக்க கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்து வரவேண்டும் என்ற அழைப்பை கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Raphael Louis Sako அவர்கள் விடுத்துள்ளார்.
வத்திக்கானில் அண்மையில் நடைபெற்ற உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் பங்கேற்ற முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், மிலான் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றுகையில் இந்த அழைப்பை விடுத்தார்.
நெருங்கிவரும் திருவருகைக் காலம், கிறிஸ்மஸ் விழாக்காலம் ஆகிய நாட்களில், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்கள் மகிழ்வையும் ஒற்றுமை உணர்வையும் பகிர்ந்து கொள்வதால் அடிப்படைவாதக் குழுக்களுக்கு மாற்று செய்திகளை வழங்க முடியும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் தெருக்களுக்கு வந்து, தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சிகளைப் பகிரங்கமாக்கினால், தாங்கள் அடிப்படைவாதக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் பறைசாற்ற முடியும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் வலியுறுத்தினார்.
உண்மையான இஸ்லாமிய விழுமியங்களை ஆதரிக்கும் மக்கள் இந்த துணிவான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளை தான் அடிக்கடி வெளிப்படுத்தி வருவதாகவும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews

7.  எபோலா நோயிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியுள்ளது - எல்லைகளற்ற மருத்துவர்கள் பணிக்குழு

அக்.23,2014. எல்லைகளற்ற மருத்துவர்கள் (Médecins Sans Frontières - MSF) என்ற பெயரில் Guinea, Sierra Leone, Liberia ஆகிய நாடுகளில் பணியாற்றிவரும் ஒரு பணிக்குழுவைச் சேர்ந்தவர்களின் அறிக்கையில், எபோலா நோயிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எபோலா நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை மட்டுமே ஊடகங்களில் பேசப்பட்டு வரும் வேளையில், இந்நோயினால் பாதிக்கப்பட்ட 4,500 பேரைக் கண்காணித்துவரும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பணிக்குழுவின் முயற்சியால் 1000 பேருக்கு மேல் குணமாகியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவில் பணியாற்றிவரும் ஒருவர், தன் மனைவி, இரு மகள்கள் மற்றும் தன் சகோதரர் ஆகியோரை இந்த நோயில் இழந்ததாகவும், அவரது 18 வயது மகன் இந்நோயில் பாதிக்கப்பட்டாலும், தற்போது காப்பாற்றப்பட்டதாகவும் Fides செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவில் 3000த்திற்கும் அதிகமான பணியாளர்கள், எபோலா நோய் கண்டவர்களைக் கண்காணித்து வருகின்றனர்.

ஆதாரம் : Fides

8.  அமெரிக்காவில் இந்திய மாணவனின் சாதனை

அக்.23,2014. அமெரிக்காவின் Pittsburgh பகுதியில் வாழ்ந்து வரும் Sahil Doshi என்ற 14 வயது நிறைந்த இந்திய இளைஞருக்கு அமெரிக்காவின் இளம் அறிவியலாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் வடிவமைத்துள்ள PolluCell என்ற கருவி, காற்றிலுள்ள கார்பன்டை ஆக்சைடை மின் சக்தியாக மாற்றும் திறன் கொண்டது. இதனால், நம் சுற்றுச் சூழலில் ஆபத்தான அளவு பெருகிவரும் கார்பன்டை ஆக்சைடை குறைப்பதுடன், நமக்குத் தேவையான மின்சக்தியையும் உருவாக்க முடியும் என்பதை Sahil Doshi தன் கண்டுபிடிப்பால் உலகறியச் செய்துள்ளார்.
இதற்காக அமெரிக்காவின் 3M Innovation Centre என்ற அமைப்பு, இவருக்கு அமெரிக்காவின் Discovery Education 3M இளம் விஞ்ஞானி விருதையும், 25 ஆயிரம் அமெரிக்க டாலரையும் வழங்கியுள்ளது.
இந்த விருதுக்கான இறுதிச்சுற்றில் மொத்தம் 9 பேர் போட்டியிட்ட நிலையில், Sahil Doshiக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மேலும் காற்று தூய்மைக்கேட்டை தடுப்பதற்காக ஜன்னலில் பொருத்தப்படும் சிறப்பு கருவியை கண்டுபிடித்த ஜெயக்குமார் என்பவர், இப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : India Today

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...