Friday, 31 October 2014

புனிதர் அனைவரின் பெருவிழா

புனிதர் அனைவரின் பெருவிழா

புனிதர் அனைவரின் பெருவிழாவை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1ம் தேதி சிறப்பிக்கின்றது திருஅவை.
பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள், எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரகரியின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது.  திருஅவையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும், இவ்வகை அங்கீகாரம் பெறாமல், ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இறை விருப்பத்தின்படி இவ்வுலகில் வாழ்ந்து விண்ணுலகில் இறையின்பத்தை அனுபவிப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் உற்றுநோக்கினால், இலட்சக்கணக்கானவர்களை புனிதர்கள் என்று திடமாக கூறலாம் என்று பலரும் கருத இடமுண்டு.
புனிதர்கள் இவ்வுலகில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்திருப்பினும் அவர்கள் முன்னுதாரண வாழ்வு வாழ்ந்ததால் சிறப்பான முறையில் போற்றப்படுகின்றார்கள். புனிதர்கள் அனைவரும், இறைவனால் தமக்கு வழங்கப்பட்ட தனிப்பட்டக் கொடைகளுக்கு மதிப்பளித்து, இறை அழைத்தலுக்கு செவிமடுத்து, தன்னலமற்ற தியாக வாழ்வு வாழ்ந்தவர்கள். புனிதர்கள் ஒவ்வொருவரும் இறைமகன் கிறிஸ்துவை தமது மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள்.  புனிதர்களில் பலர், எண்ணற்ற தியாகங்கள் செய்தது மட்டுமல்ல இரத்தம் சிந்தி தமது உயிரையே தியாகப்பலியாக்கி மறைசாட்சியாக இறந்தவர்கள்.  
திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் மறை சாட்சிகள் ஆகிய புனிதர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்டதே நமது அன்னையாம் திருஅவை. புனிதர்கள் கிறிஸ்துவின் உறவில் கட்டடமாய் எழுப்பப்பெற்று, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெற்றிருக்கின்றார்கள் என புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலில் (எபேசியர் 2:20-22) தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
புனிதர்கள் எனப்படுவோர் சாதாரண மனிதர்களாக, நிறைகளும் குறைகளும் கொண்டிருந்தபோதிலும், தமது வாழ்வை இறை விருப்பத்திற்கேற்ப, இறை வார்த்தையின்படி வாழ்ந்ததால், புனிதர்கள் என அழைக்கப்படுகின்றனர். புனிதர்களை எந்நாளும் நாம் நினைவு கூர்ந்தால், நாமும் புனிதர்களாக வாழ முயற்சி செய்யலாம் என்பதே இவ்விழா தரும் நம்பிக்கை.
புனிதர்கள் வாழ்ந்து சென்ற பாதையில் நாமும் பின்தொடர்ந்து இறைமகன் இயேசுவுக்கு உகந்த வகையில் நமது வாழ்வை மாற்றியமைக்க இந்நாள் அழைப்புவிடுக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment