Sunday, 12 October 2014

செய்திகள் - 10.10.14

செய்திகள் - 10.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஆன்மப் பரிசோதனை நம்மைச் சாத்தானிடமிருந்து பாதுகாக்கும்

2. சண்டைகளினால் துன்புறும் குடும்பங்களுடன் மாமன்றத்தந்தையர் ஒருமைப்பாடு

3. ஆயர்கள் மாமன்றத்தின் ஐந்தாம் நாள் காலை கருத்துப்பரிமாற்றங்கள்

4. பாப்புவா நியு கினி ஆயர்: நற்செய்தி அறிவிப்பின் முதல் தளம் குடும்பம்

5. நீதியும் கருணையும் பிரிக்கப்பட முடியாதவை, மாமன்றத் தந்தையர்

6. சிறுபான்மை மதத்தவர்க்கெதிரான வன்முறைகள் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்

7. நொபெல் அமைதி விருது 2014 : மலாலா, கைலாய்ஷ் சத்யார்த்தி

8. அக்.11, அனைத்துலக சிறுமிகள் தினம்

9. 2 கோடியே 20 இலட்சம் பேர் மனச்சிதைவு நோய்ப் பாதிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஆன்மப் பரிசோதனை நம்மைச் சாத்தானிடமிருந்து பாதுகாக்கும் 

அக்.10,2014. தீமை நம் இதயங்களில் நுழைந்துவிடாமல் தடுப்பதற்கு ஒரு தொன்மையான, ஆனால் மிகவும் நல்ல பழக்கம் ஒன்று உள்ளது, அதுவே  மனச்சாட்சியைப் பரிசோதனை செய்வதாகும் என்று இவ்வெள்ளிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சாத்தான் எப்போதும் நம்மிடம் திரும்பி வரும், மனிதரைச் சோதிப்பதை அது ஒருபோதும் நிறுத்தாது, சாத்தான் பொறுமையுள்ளது என்பதை, இந்நாளைய நற்செய்தி வாசகம் (லூக்.11,15-26) நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் விட்டுவந்த வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும் சாத்தான், மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அங்கே குடியிருப்பது பற்றிக் கூறும் இவ்வெள்ளி தின நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, சாத்தான் தனக்கென விரும்பும் நம் ஆன்மாக்களைவிட்டு அது ஒருபோதும் விலகுவதில்லை என்று கூறினார்.
இயேசுவை பாலைநிலத்தில் சோதித்த சாத்தான், அவரை சிறிதுகாலமே விட்டுச் சென்றது, ஆனால் இயேசுவின் வாழ்வில் அது மீண்டும் மீண்டும், ஏன், அவரது வாழ்வின் இறுதிவரை சோதித்தது என, நற்செய்தியாளர் லூக்கா கூறுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தூய ஆவியானவர் குடியிருக்கும் நம் இதயங்களில் மற்ற ஆவிகள் நுழையாதபடிக்கு எப்போதும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், பொல்லாத சிந்தனைகள், பொல்லாத எண்ணங்கள், பொறாமை, அழுக்காறு என பல காரியங்கள் எவ்வளவு அடிக்கடி நம்மில் நுழைகின்றன? என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.
எல்லாக் காரியங்களும் வந்துபோகும் வளாகமாக நம் இதயங்கள் மாறுவதை நாம் உணராவிட்டால், அவ்விதயத்தில் ஆண்டவரால் பேச முடியாது, அவர் பேசுவதைக் கேட்கவும் முடியாது என்றும் உரைத்த திருத்தந்தை, இன்று எனது ஆன்மாவுக்கு என்ன நடந்தது, எனது இதயத்தில் எவையெல்லாம் நுழைந்தன என்பதை நாளின் முடிவிலும், இரவிலும் நாம் பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். 
நம் முன்னிலையிலும், கடவுளின் முன்பாகவும் ஒவ்வொரு நாளின் முடிவிலும் நம் இதயத்தைப் பரிசோதனை செய்து தீயவனிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள  வேண்டுமென, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சண்டைகளினால் துன்புறும் குடும்பங்களுடன் மாமன்றத்தந்தையர் ஒருமைப்பாடு

அக்.10,2014. உலகில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டைகளினால் கடும் துன்பங்களை அனுபவித்துவரும் குடும்பங்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து தங்களின் ஆழ்ந்த ஒருமைப்பட்டுணர்வைத் தெரிவிப்பதாக, மாமன்றத் தந்தையர் கூறியுள்ளனர்.
வத்திக்கானில் இம்மாதம் 5ம் தேதி தொடங்கியுள்ள 3வது உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தந்தையர், போர்களால் துன்புறும் குடும்பங்களுக்கென இவ்வெள்ளியன்று வெளியிட்ட செய்தியில், சிரியா மற்றும் ஈராக்கிய குடும்பங்களைச் சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளனர்.
தங்களின் மத நம்பிக்கைக்காக, எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு எதிர்காலம் பற்றிய எவ்வித உறுதியும் இல்லாமல் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ள சிரியா மற்றும் ஈராக்கிய கிறிஸ்தவ மற்றும் பிற சமய-இன சமூகங்களை நினைத்து இறைவனிடம் செபிப்பதாக மாமன்றத் தந்தையரின் செய்தி கூறுகிறது.
குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் ஐந்தாவது நாளை இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள மாமன்றத் தந்தையர், வன்முறையில் ஈடுபட எவரும் கடவுளின் பெயரைப் பயன்படுத்த முடியாது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சண்டைகளினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, சிரியாவிலும், ஈராக்கிலும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும், இன்னும், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் பிற பகுதிகளிலும் அமைதியான நல்லிணக்க வாழ்வை மீண்டும் உருவாக்குவதற்கு அனைத்துலக சமுதாயம் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர் மாமன்றத் தந்தையர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஆயர்கள் மாமன்றத்தின் ஐந்தாம் நாள் காலை கருத்துப்பரிமாற்றங்கள்

அக்.10,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் ஐந்தாவது நாளாகிய இவ்வெள்ளிக்கிழமை காலை பொது அமர்வு, 9 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் தொடங்கியது.
185 மாமன்றத் தந்தையர் பங்குபெற்ற இந்தப் பொது அமர்வில், குடும்பத்திற்கான மேய்ப்புப்பணி, உயிரிய அறநெறிகள், மனிதச்சுற்றுச்சூழல் போன்ற தலைப்புகளில் 15 பேர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மத்திய கிழக்குப் பகுதியில், குறிப்பாக, ஈராக்கின் குடும்பங்களில் எண்ணற்ற போர்கள் இளையோர் மற்றும் முதியோரின் வாழ்வைப் பாதித்துள்ளன, மத்திய கிழக்கில் கிறிஸ்தவக் குடும்பங்களின் ஒன்றிப்பு நலிவடைந்துள்ளன, இவர்களுக்குக் திருஅவை பாதுகாப்பாக உள்ளது என்பது இப்பொது அமர்வில் கூறப்பட்டது.
குடும்பங்களில் அமைதியையும் ஒப்புரவையும் ஏற்படுத்துவதில் திருமணமான தம்பதியரைத் திருஅவை அதிகம் சார்ந்துள்ளது என்றும், திருஅவைக்கும் நாட்டுக்கும் இடையேயான உரையாடலில் பொதுநிலை விசுவாசிகள் பெரும்பங்கு வகிக்கின்றனர்  என்றும் இப்பொது அமர்வில் கூறப்பட்டது.
இளையோருக்கு அதிகமான உரைகள் தேவையில்லை, ஆனால் குடும்பங்களே அவர்களுக்கு வழிகாட்ட முடியும், நம்பத்தகுந்த சாட்சிய வாழ்வு வாழ்வோர் இளையோருக்கு அவசியம் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
குடும்ப வன்முறை, குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறையால் இளையோர் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும் இவ்வெள்ளி காலை பொது அமர்வில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பாப்புவா நியு கினி ஆயர்: நற்செய்தி அறிவிப்பின் முதல் தளம் குடும்பம்

அக்.10,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இவ்வெள்ளிக்கிழமை பொது அமர்வில் காலை 9 மணிக்கு ஆரம்ப செபம் செய்து மாமன்றத் தந்தையருடன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட பாப்புவா நியு கினியின் Wabag ஆயர் Arnold Orowae அவர்கள், நற்செய்தி அறிவிப்பின் முதல் தளம் குடும்பம் என்று கூறினார்.
பலர் கிறிஸ்துவை அறிவதற்கும், அவரின் திருஅவையின் உறுப்பினர்களாக இருப்பதைக் கற்றுக்கொள்வதற்கும் குடும்பம் ஒரு தளமாக உள்ளது எனவும், குடும்பங்களில் பெற்றோர் இறைவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை மிகக் கவனமுடன் செய்கின்றனர் எனவும் ஆயர் Orowae கூறினார்
தங்கள் குழந்தைகளைப் பேணி, அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வழிநடத்தி பாதுகாத்து வளர்க்கவும், பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் அவ்வாறே செய்யவுமான தங்கள் கடமையைப் பெற்றோர் குடும்பத்தில் உணருகின்றனர் என்றும் ஆயர் Orowae கூறினார்.
கத்தோலிக்கப் பொதுநிலையினர் என்ற முறையில் குடும்பம் வழியாகவும், குடும்பத்திற்குள்ளும் நற்செய்தி அறிவிப்பதற்கான தங்கள் கடமையைத் தெளிவாகப் புரிந்து அதை அவர்கள் செய்கின்றனர் என்றும் பாப்புவா நியு கினி ஆயர் Orowae கூறினார்
     
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. நீதியும் கருணையும் பிரிக்கப்பட முடியாதவை, மாமன்றத் தந்தையர்

அக்.10,2014. திருமண விலக்கு குறித்த நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்யும் விவகாரத்தில், நீதியை ஒருபுறமும், கருணையை மறுபுறமும் வைத்துப் பேசுவது நல்ல பாதையல்ல என்று குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் ஒரு கருத்துச் சொல்லப்பட்டதாகத் தெரிவித்தார் கானடாவின் Gatineau பேராயர் Paul-André Durocher. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இவ்வியாழன் நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கிய பேராயர் Durocher, திருமண முறிவுபெற்ற மற்றும் மறுதிருமணம் செய்துகொண்டவர்களுக்குத் திருநற்கருணை வழங்காதது பற்றிக் கருத்துக் கூறியவர்கள் இவ்வாறு கூறியதாகத் தெரிவித்தார்.
181 மாமன்றத் தந்தையர் கலந்துகொண்ட இவ்வியாழன் மாலை பொது அமர்வில், குடியேற்றம் மற்றும் குடும்பங்களுக்கிடையேயுள்ள உறவுகள் பற்றியும் பேசப்பட்டது.
இப்புதன் மாலை மற்றும் இவ்வியாழன் காலை பொது அமர்வுகளில் ஏறக்குறைய 50 பேர் பேசியுள்ளனர் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. சிறுபான்மை மதத்தவர்க்கெதிரான வன்முறைகள் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்

அக்.10,2014. இந்தியாவில் சிறுபான்மை மதத்தவர்க்கெதிராய்த் தூண்டிவிடப்படும்  வெறுப்பும் வன்முறையும் நிறுத்தப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு மத்திய அரசையும், பல மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளனர் இயேசு சபையினர்.
சிறுபான்மை மதத்தவர்க்கெதிரான வெறுப்பு மற்றும் வன்முறைச் செயல்கள் பல நகரங்களிலும் கிராமங்களிலும் சமூக நல்லிணக்கத்துக்கு எதிர்மறை தாக்கங்களை முன்வைக்கின்றன என்றும் இந்திய இயேசு சபையினர் கூறியுள்ளனர்.
"Jesa" என்ற இயேசு சபை சமூகப்பணி அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு  வலியுறுத்தப்பட்டது.
2014ம் ஆண்டு மே மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கிடையே 600க்கு அதிகமான சிறுபான்மையினர்க்கெதிரான வன்முறைகள் நடந்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் இக்கூட்டத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides                          

7. நொபெல் அமைதி விருது 2014 : மலாலா, கைலாய்ஷ் சத்யார்த்தி

அக்.10,2014. சிறார் உரிமைகள் ஆர்வலர்களான இந்தியாவின் கைலாய்ஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகிய இருவருக்கும் 2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறாரும் இளையோரும் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும், அனைத்துச் சிறாரும் கல்வி பெறுவதற்கான உரிமைக்கு ஆதரவாகவும் மலாலாவும், கைலாய்ஷும் உழைத்துவருவதைப் பாராட்டி இவ்விருவருக்கும் இவ்விருது வழங்கப்படுவதாக, நார்வே நொபெல் அமைதி விருதுக்குழு அறிவித்துள்ளது. 
17 வயதான மலாலா, பள்ளிக்குச் செல்லும் சிறுமி. இவர், சிறுமிகளின் கல்விக்காகப் போராடி வந்ததை விரும்பாத தலிபான்கள், மலாலாவை 2012ம் ஆண்டில் தலையில் சுட்டனர். அதையும் விடுத்து சிறுமிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார் மலாலா.  நொபெல் வரலாற்றில் மிக இளவயதில் இவ்விருதைப் பெறுகிறார் மலாலா யூசுப்சாய் என்று நொபெல் விருதுக்குழு கூறியுள்ளது.
இந்தியரான அறுபது வயதாகும் சத்யார்த்தி, மகாத்மா காந்தியின் மரபுகளைக் காத்து வருபவர் மற்றும் நிதி ஆதாயத்துக்காக சிறார் கடுமையாய்ப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு வகைகளில் அமைதியான போராட்டங்களைத் தலைமைதாங்கி நடத்தி வருபவர் என்று அக்குழு கூறியுள்ளது.
ஓர் இந்துவும், ஒரு முஸ்லிமும், ஓர் இந்தியரும் ஒரு பாகிஸ்தானியரும் கல்விக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்தும் போராடுவதில் இணைகின்றனர் என்றும் நொபெல் குழு கூறியுள்ளது.
 
8. அக்.11, அனைத்துலக சிறுமிகள் தினம்

அக்.10,2014. வன்முறைகள் இல்லாத, தங்களின் முழு ஆற்றலையும் அடையக்கூடிய ஓர் உலகை சிறுமிகளுக்கு அமைத்துக் கொடுப்பதற்கு உலகினர் எல்லாரும் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஐ.நா. பெண்கள் அமைப்பின் இயக்குனர் Phumzile Mlambo-Ngcuka.
அக்டோபர் 11, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக சிறுமிகள் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள Mlambo-Ngcuka, சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் எல்லாவிதமான வன்முறைகளும், பாலியல் சமத்துவமின்மையில் ஆழமாக வேரூன்றப்பட்ட கடும் மனித உரிமைகள் மீறல்களாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் 39 ஆயிரம் சிறுமிகள், தங்களின் 18 வயதை எட்டும் முன்னர் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்றும், இந்நிலை தொடர்ந்தால் 2020ம் ஆண்டுக்குள் 14 கோடிச் சிறார் மணப்பெண்கள் இருப்பார்கள் என்றும் அச்செய்தி கூறுகிறது.
இளமையில் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகள், மற்ற பெண்களைவிட, தங்களின் கணவர்களிடமிருந்து அதிகமான பாலியல் கொடுமையையும், வன்முறையையும் எதிர்நோக்குகின்றனர் என்றும் Mlambo-Ngcuka கூறியுள்ளார்.
குறைந்தது 13 கோடியே 30 இலட்சம் சிறுமிகளும் பெண்களும் தங்களின் பெண் உறுப்புகள் சேதமாக்கப்பட்டதை அனுபவித்துள்ளனர்.
ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட அனைத்துலக சிறுமிகள் தினம் 2012ம் ஆண்டு அக்.11ம் தேதி முதன் முதலில் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN

9. 2 கோடியே 20 இலட்சம் பேர் மனச்சிதைவு நோய்ப் பாதிப்பு
அக்.10,2014. கடும் மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அவர்களின் வாழ்வை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்தும் சிந்தித்துப் பார்ப்பதற்கு உலக மனநல நாள் நம் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
அக்டோபர் 10, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனநல நாளுக்கென  வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்கிசோபிரினியா(Schizophrenia) என்றழைக்கப்படும் மனச்சிதைவு நோய் மற்றும் பிற நோய்களால் தாக்கப்பட்டுள்ளவர்கள் குறித்துச்   சிந்திப்பதற்கு இந்நாள் அழைப்பு விடுக்கின்றது என்று கூறியுள்ளார் பான் கி மூன்.
உலகளவில் ஏறக்குறைய 2 கோடியே 20 இலட்சம் பேர், எண்ணம், உணர்வு செயல் ஆகியவற்றில் தொடர்பில்லாத மூளைக்கோளாறு நோயாகிய ஸ்கிசோபிரினியாவால் தாக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மக்கள், மற்றவர்களைவிட 10 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறந்து விடுகின்றனர்.  
மனச்சிதைவு நோய்க்கு பல காலக்கட்டங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நவீனகால அறிவியல் முன்னேற்றங்கள் மரபணுக்களில் எற்படும் மாற்றங்களே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. சாதகமற்ற வாழ்க்கைச்சூழல், மனஅழுத்தம், குழந்தைப் பருவத்தில் மனம் மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள், போதைப் பழக்கங்கள், கலாச்சார மாற்றங்கள் போன்றவை இந்த மரபணு மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
மனச்சிதைவு நோய் மருந்துகளால் குணப்படுத்தக்கூடியதே.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment