Sunday, 12 October 2014

செய்திகள் - 11.10.14

செய்திகள் - 11.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : அருளடையாளங்களின் ஆன்மீகச் சக்திக்கு எல்லையில்லை

2. உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் முதல் வார நிகழ்வுகள் நிறைவு

3.  உலகில் கடும் வறுமையை ஒழிப்பதில் திருப்பீடம் அக்கறை

4. ஜிகாத் மனநிலையை வேரோடு அறுத்தெறியும் புதுவிதமான கல்வியே அவசியம்

5. பிலிப்பீன்ஸ் தலத்திருஅவையில் ஏழைகள் ஆண்டு

6. தென் கொரியத் திருப்பயண அருங்காட்சியகம்

7. மலாலாவுக்கு நொபெல் அமைதி விருது, பாகிஸ்தான் ஆயர்கள் பெருமிதம்

8. மனநலம் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நாடுகள் மரணதண்டனை, ஆம்னஸ்டி 

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : அருளடையாளங்களின் ஆன்மீகச் சக்திக்கு எல்லையில்லை

அக்.11,2014. அருளடையாளங்களின் ஆன்மீகச் சக்திக்கு எல்லையில்லை, திருவருளால் ஒவ்வொரு தடையையும் நம்மால் மேற்கொள்ள இயலும் என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டரில் இச்ச்னிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கானடா நாட்டுப் புனிதர்கள் ஆயர் Francis de Montmorency Laval, அருள்சகோதரி மனிதஉருவின் மரி ஆகிய இருவருக்கும் நன்றித் திருப்பலியை இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வட அமெரிக்காவில் பிரான்ஸ் நாட்டவரின் காலனியாக இருந்த நியு பிரான்சில் கத்தோலிக்கத் திருஅவையை உருவாக்கிய ஆயர் de Laval, நியு பிரான்சில் பெண்களுக்கென முதல் பள்ளியைத் தொடங்கிய அருள்சகோதரி மனிதஉருவின் மரி ஆகிய இருவரையும் கடந்த ஏப்ரல் 3ம் தேதி புனிதர்களாக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனிதர்களாக உயர்த்தப்படுவதற்கு குறைந்தது ஒரு புதுமை அவசியம் என்று இருந்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்விருவரையும் புனிதர்களாக அறிவித்தார்.
இவ்விரு புனிதர்களும் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர்கள்.
நியு பிரான்ஸ் என்பது, 16ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் பிரான்ஸ் நாட்டவரின் காலனிப் பகுதியாகும். இக்காலனி ஆதிக்கம், 1534ம் ஆண்டில் Jacques Cartier என்ற ப்ரெஞ்ச்க்காரர், வட அமெரிக்காவில் செயின்ட் லாரன்ஸ் நதியை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியதிலிருந்து 1763ம் ஆண்டில் பிரான்ஸ் நாடு, இப்பகுதியை இஸ்பெயினுக்கும் பிரித்தானியாவுக்கும் வழங்கும்வரை நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் முதல் வார நிகழ்வுகள் நிறைவு

அக்.11,2014. வத்திக்கானில் இம்மாதம் 5ம் தேதி தொடங்கியுள்ள குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் முதல் வார நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்ற இம்மாமன்றத்தின் ஏறக்குறைய எல்லா அமர்வுகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொண்டவேளை, குடும்பம் குறித்த பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டன.  
திருமணம் முறிவடைந்து, தாய் தந்தையர் பிரிந்து வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஆதரவு, கைம்பெண்கள் மற்றும் தனிமையில் வாழ்வோருக்கு உதவுதல், தங்கள் திருமண வாழ்க்கையில் ஒப்புரவையும் குணப்படுத்தலையும் தேடும் தம்பதியர் என, பல்வேறு விவகாரங்கள் இம்மாமன்றத்தில் இடம்பெற்றன.
லெபனோன் உள்நாட்டுச் சண்டையில் கிறிஸ்தவப் பெண்கள் புரட்சிக்குழுவின் முன்னாள் தலைவரும், அந்நாட்டின் பெண்கள் நிறுவனத்தை ஆரம்பித்தவருமான  Jocelyne Khoueiry போன்று, இம்மாமன்றத்தில் பார்வையாளர்கள் மற்றும் வல்லுனர்களாகப் பங்கெடுக்கும் ஆண்கள், பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
லெபனோனின் இறையாண்மையையும், நாட்டையும் பாதுகாப்பதற்காக, கடந்த காலத்தில் நாங்கள் போரிட்டோம், ஆனால், நாங்கள் எப்போதும் கனவுகண்ட விழுமியங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் எம் கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் கட்டியெழுப்ப தற்போது போராடி வருகின்றோம் எனக் கூறினார் Jocelyne.
குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் பிரதிநிதிகள், வருகிற திங்களன்று குழுக்களாகப் பிரிந்து விவாதிக்கவுள்ளனர். இக்குழுக்களின் தலைவர்களை திருத்தந்தை அறிவித்துள்ளார்.  
மேலும், இவ்வெள்ளி பிற்பகலில் நடந்த இம்மான்றப் பொது அமர்வில் 168 மாமன்றத் தந்தையர் பங்கெடுத்தனர். இதில் மாஸ்கோ முதுபெரும் தந்தையின் பிரதிநிதி Hilarion அவர்கள் உட்பட பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
253 மாமன்றத் தந்தையர் பங்குபெறும் இந்த 3வது உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் இம்மாதம் 19ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3.  உலகில் கடும் வறுமையை ஒழிப்பதில் திருப்பீடம் அக்கறை

அக்.11,2014. ஐ.நா.வின் மில்லென்ய இலக்குகளை எட்டும் திட்டங்களின்கீழ், உலகளாவிய ஏழ்மை, குழந்தை இறப்பு, பிரசவகால இறப்பு ஆகியவை குறைந்திருந்தாலும், இந்த இலக்குகளை எட்டுவதற்கு மேலும் நிறைய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால் மட்டுமே, 2015ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டுமென்ற ஐ.நா.வின் மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகளை அடைய முடியும் என்று கூறினார், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza.
நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், பொருளாதாரமும் நிதியும் பற்றி நடந்த ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Auza அவர்கள், ஏழ்மை ஒழிப்பில் உலக அளவில் முன்னேற்றம் காணப்பட்டாலும், நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் இன்னும் ஒரு நாளைக்கு 1.25 டாலருக்குக் குறைவான நிலையிலே வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.
ஐ.நா.வின் மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகளில், உலகில் கடும் வறுமையை ஒழிப்பதிலே திருப்பீடம் அதிக அக்கறை கொண்டுள்ளது என்பதையும் எடுத்துச் சொன்னார் பேராயர் Auza.
பசி ஒழிப்பு, கல்வி வாய்ப்பு, சமத்துவமின்மையை ஒழித்தல், தாய்-சேய் இறப்பைத் தடுத்தல் போன்ற விவகாரங்கள், 2000மாம் ஆண்டின் ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகளில் உள்ளன. இதில் 189 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 2007ல் 45 நாடுகள் மீண்டும் அதை உறுதிப்படுத்தின.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஜிகாத் மனநிலையை வேரோடு அறுத்தெறியும் புதுவிதமான கல்வியே அவசியம்

அக்.11,2014. ஈராக்கின் மோசுல் மற்றும் நினிவே பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ள ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் புலம்பெயர்ந்தோர் குறித்து அந்நாட்டு முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள் கவலையை வெளியிட்டுள்ளார்.
ஐஎஸ் இஸ்லாம் நாட்டின் தீவிரவாதிகள் கடவுளின் பெயரால் நடத்தும் வன்முறைகளை, எதனாலும் நியாயப்படுத்த முடியாது, இவ்வன்முறைகள் உண்மையில் பொருளாதார ஆதாயங்களுக்காக நடத்தப்படுகின்றன என்றுரைத்துள்ள முதுபெரும் தந்தை, இத்தகைய வன்முறைகளுக்கு 1,20,000 மக்கள் தங்களின் வாழ்வை விலைகொடுத்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
சனநாயகம், சீர்திருத்தங்கள், மாற்றங்கள் போன்றவை பற்றி ஒவ்வொருவரும் பேசுகின்றனர், ஆனால், ஜிகாத் மனநிலையை வேரோடு அறுத்தெறியும் புதுவிதமான கல்வியே முக்கியமாகத் தேவைப்படுகின்றது என்றும் கூறினார் முதுபெரும் தந்தை சாக்கோ.
தற்போது நடந்துவரும் மோதல்கள் பற்றி ஒயாசிஸ் என்ற இத்தாலிய இதழுக்குப் பேட்டியளித்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், குளிர்காலம் நெருங்கி வருகிறது, சிறார் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்ற கவலையை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய மோதல்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்கள் மத்தியில் உரையாடல் இடம்பெற்றால் மட்டுமே, வன்முறைகளின் யுக்திகளிலிருந்து வெளியேற இயலும் என்றும் பேட்டியில் கூறியுள்ளார் ஈராக்கிய முதுபெரும் தந்தை சாக்கோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பிலிப்பீன்ஸ் தலத்திருஅவையில் ஏழைகள் ஆண்டு

அக்.11,2014. வருகிற சனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும்வேளை, வருகிற நவம்பரில் ஏழைகள் ஆண்டை ஆரம்பிக்கவுள்ளது பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை.
பொதுநிலையினர் ஆண்டைச் சிறப்பித்துவரும் பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை, வருகிற நவம்பர் 23ம் தேதியன்று ஏழைகள் ஆண்டை ஆரம்பிக்கவுள்ளது.
சமுதாயத்தில் நலிந்தோர் மற்றும் வாய்ப்பிழந்தோருக்கு ஆதரவாகத் தொடங்கப்படும் ஏழைகள் ஆண்டில், அடுத்தவருக்குக் கொடுங்கள் என்ற வேண்டுகோளுடன் நிதி திரட்டும் திட்டமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏழைகள் ஆண்டில் 4 கோடி பேசோஸ் பணம் திரட்டி ஏழைகளுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிலிப்பீன்ஸ் நாட்டுக்கானத் திருப்பயணம் 2015ம் ஆண்டு சனவரி 15 முதல் 19 வரை நடைபெறும்.  

ஆதாரம் : CBCP                       

6. தென் கொரியத் திருப்பயண அருங்காட்சியகம்

அக்.11,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதைக் கொண்டாடும் நோக்கத்தில் அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்துள்ளது தென் கொரியத் தலத்திருஅவை
திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயண நிகழ்வுகளைக் கொண்டுள்ள புகைப்பட அருங்காட்சியகம், கொரியக் கத்தோலிக்கருக்கு, திருத்தந்தை போதிக்க விரும்பும் முக்கிய பாடங்களை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கும் என்று செயோல் உயர்மறைமாவட்டம் தெரிவித்தது.
124 கொரிய மறைசாட்சிகளுக்கு முத்திப்பேறு பட்டமளிப்பு விழாவின்போது திருத்தந்தை பயன்படுத்திய உடைகளும் இதில் வைக்கப்பட்டிருக்கும்.
இம்மாதம் 15ம் தேதியிலிருந்து இந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்படும்.

ஆதாரம் : AsiaNews                               

7. மலாலாவுக்கு நொபெல் அமைதி விருது, பாகிஸ்தான் ஆயர்கள் பெருமிதம்

அக்.11,2014. இவ்வாண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றுள்ள 17 வயது மலாலா யூசுப்சாய், பாகிஸ்தானுக்கு நன்மதிப்பைத் தேடித் தந்துள்ளார் என, பாகிஸ்தானிய பேராயர் ஒருவர் கூறினார்.
இத்தனை மதிப்புமிக்க உலகளாவிய விருதை வளர்இளம் பருவ சிறுமி மலாலா பெற்றிருப்பது நாட்டினர் அனைவருக்கும் பெருமையாக உள்ளது எனத் தெரிவித்த கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், இவ்விருதுச் செய்தி வியப்புடன்கூடிய மகிழ்வைத் தந்தது என்று கூறினார்.
அனைத்துலக சமுதாயம் பாகிஸ்தானைப் பயங்கரவாதத்தோடு இணைத்துப் பேசுகின்றது, அந்நாட்டுக்கு மற்றொரு பக்கமும் உள்ளது என்பதை இவ்விருது காட்டியுள்ளது என்றும்  பேராயர் கூட்ஸ் கூறினார். 
மேலும், நொபெல் அமைதி விருது பற்றிப் பேசிய மலாலா, சிறுமிகள் தங்கள் உரிமைகளுக்காகத் துணிந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும், பேச்சுரிமை இழந்த, குரலற்ற அனைத்துச் சிறாரின் விருதாக இது உள்ளது என்றும் கூறினார்.
1901ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நொபெல் அமைதி விருதின் வரலாற்றில் மிக இள வயதில் இதனைப் பெற்றுள்ளவர் என்ற பெருமைக்குரியவர் மலாலா.
மேலும், இந்தியாவின் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறார் உரிமை ஆர்வலர் அறுபது வயது கைலாய்ஷ் சத்யார்த்தி அவர்களும் இவ்விருதை மலாலாவோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஆதாரம் : CNA                           

8. மனநலம் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நாடுகள் மரணதண்டனை, ஆம்னஸ்டி 

அக்.11,2014. ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தொடர்ந்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வருவது, பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் குறித்த விதிமுறைகள் மீறப்படுவதைத் தெளிவாகக் காட்டுகின்றது என, பன்னாட்டு ஆம்னஸ்டி மனித உரிமைகள் கழகம் கூறியது.
அக்.10, இவ்வெள்ளியன்று இடம்பெற்ற உலக மரணதண்டனை எதிர்ப்பு நாளில் இவ்வாறு கூறிய ஆம்னஸ்டி கழகம், குற்ற விசாரணகளின்போது, பல நேரங்களில்  மனநலம் பாதிப்பு கண்டுபிடிக்கப்படுவதில்லை எனவும் கூறியது.
ஜப்பானில் மரணதண்டனைக் கைதியாக இருக்கும் 78 வயது Hakamada Iwao அவர்கள் 1968ம் ஆண்டில் நியாயமற்ற விசாரணையை எதிர்கொண்டார். முன்னாள் குத்துச்சண்டை வீரரான Hakamada Iwao, உலகில் நீண்ட காலமாக மரணதண்டனை கைதியாக இருப்பவர் எனவும் ஆம்னஸ்டி கழகம் கூறியது.
மேலும், உலக மரணதண்டனை எதிர்ப்பு நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், உலகில் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் மரணதண்டனை ஒரு கொடுமையான பழக்கம், இது மனித மாண்பைச் சீர்குலைக்கின்றது என்று கூறியுள்ளார்.
2012ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2013ம் ஆண்டில் உலகில் மரணதண்டனைகள் 12 விழுக்காடு அதிகரித்துள்ளது என ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment