'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை'
1845ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டில் பிறந்த Juana Cipitria Barriola அவர்கள், வறுமையில் வாடிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற, சிறுவயதிலேயே பிற இல்லங்களில் பணி செய்தார். Salamanca என்ற நகரில் வேலை தேடிச் சென்ற இவர், அந்நகரில் நிலவிய வறுமையை ஒழிக்க உறுதி பூண்டார்.
"நான் கடவுளுக்கு மட்டுமே உரியவள்." என்று அடிக்கடி கூறி வந்த Juana அவர்கள், 23ம் வயதில் இறை அழைப்பை ஏற்றார். 1871ம் ஆண்டு, 'இயேசுவின் புதல்வியர்' என்று அழைக்கப்படும் துறவு சபையை ஆரம்பித்தார். இயேசுவின் கேன்டிடா மரியா (Candida Maria de Jesus) என்ற பெயருடன் தன் அருள் பணிகளைச் செய்தார்.
Juana அவர்கள் ஆரம்பித்தத் துறவுச் சபை, புனித இலயோலா இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. இத்துறவு சபை, 1902ம்
ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களின் அங்கீகாரம் பெற்றது.
வறுமைப்பட்ட பெண் குழந்தைகளின் கல்வியில் இத்துறவுச் சபை அதிகம் ஈடுபட்டது.
'ஏழைகளுக்கு எங்கு இடமில்லையோ, அங்கு எனக்கும் இடமில்லை' என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் பணிபுரிந்த Juana அவர்கள், 1912ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அவரது 67வது வயதில் இறையடி சேர்ந்தார்.
1996ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், இவரை முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார். 2010ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் கேன்டிடா மரியா அவர்களைப் புனிதரென அறிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment