செய்திகள் - 22.10.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் உர்பானியா பல்கலைக் கழகத்தின் ஓர் அரங்கம்
2. நலிந்தவர்களைப் பேணுவதில் காட்டப்படும் அக்கறையே, கலாச்சாரத்தின் அளவுகோல் - கர்தினால் பரோலின்
3. மத்தியக் கிழக்குப் பகுதியில் உரையாடல்கள் வழி தீர்வுகள் காணப்படவேண்டும் - பேராயர் Auza
4. வேற்றுமைகளைப் புரிந்து, ஏற்றுக்கொள்வதன் வழியே உரையாடலை வளர்க்க முடியும் - ஆயர் Felix Machado
5. "புலம்பெயர்தலின் கலாச்சார சவால்: ஆபத்துக்களும், வாய்ப்புக்களும்" கிரகோரியன் பல்கலைக் கழக பன்னாட்டுக் கருத்தரங்கு
6. தன் வாழ்நாளில் குழந்தைத் தொழில் ஒழிப்பைக் காணும் வாய்ப்பு உள்ளது - அமைதிக்கான நொபெல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி
7. 'ஆபத்தில்லாத தீபாவளி' - வங்காள பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு முயற்சிகள்
8. இபோலா தடுப்பு நடவடிக்கைகள்: ஜெனீவாவில் அவசரக் கூட்டம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் உர்பானியா பல்கலைக் கழகத்தின் ஓர் அரங்கம்
அக்.22,2014. உர்பானியா பல்கலைக் கழகம் எந்த ஒரு நாட்டுக்கும், கலாச்சாரத்திற்கும் சொந்தமானதல்ல, மாறாக, உலகெங்கிலுமிருந்து
கிறிஸ்துவைப் பற்றி அறிய விழையும் அனைத்து மாணவருக்கும் சொந்தமான ஓர்
கல்விக் கூடம் என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள்
கூறினார்.
அக்டோபர் 21, இச்செவ்வாயன்று
உர்பானியா பல்கலைக் கழகத்தின் ஓர் அரங்கம் முன்னாள் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்களின் பெயருக்கு அர்ப்பணமாக்கப்பட்ட நிகழ்வுக்கு, முன்னாள் திருத்தந்தை அவர்கள் அனுப்பியிருந்த செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.
பன்முகக் கலாச்சாரங்களிலிருந்து வந்து பயிலும் மாணவர்கள், உண்மையின் அடிப்படையில், அமைதியை வளர்க்கும் உரையாடலில் ஈடுபடவேண்டும் என்றும் முன்னாள் திருத்தந்தையின் செய்தி அமைந்திருந்தது.
இந்த அர்ப்பண விழாவில் கலந்து கொண்ட பேராயர் Georg Gänswein அவர்கள், திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியை வாசித்தார்.
நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரான கர்தினால் Fernando Filoni அவர்கள், இவ்விழாவில் தலைமை உரையாற்றியபோது, அறிவு
சார்ந்த ஆன்மீகத்தின் தலைசிறந்த அறிஞராகத் திகழ்ந்த முன்னாள் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்கள் திருஅவைக்கு ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றி கூறும்
வகையில் அமைந்துள்ள இந்த அரங்க அர்ப்பணம் தனக்கு மகிழ்வளிப்பதாக
தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. நலிந்தவர்களைப் பேணுவதில் காட்டப்படும் அக்கறையே, கலாச்சாரத்தின் அளவுகோல் - கர்தினால் பரோலின்
அக்.22,2014. சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களைப் பேணுவதில் காட்டப்படும் அக்கறையே, ஒரு நாட்டின் கலாச்சாரம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதன் அளவுகோலாக அமைகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரில் புகழ்பெற்ற குழந்தை இயேசு குழந்தைகள் மருத்துவமனையின் ஆய்வுப் பிரிவொன்றை அக்டோபர் 21, இச்செவ்வாயன்று அசீர்வதித்து, திறந்து வைத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அந்த மருத்துவமனையுடன் திருத்தந்தையர் கொண்டிருக்கும் உறவு குறித்துப் பேசினார்.
திருத்தந்தையரின் நேரடி ஆதரவில் இயங்கும் குழந்தை இயேசு மருத்துவமனை, பிறரன்பு பணிகளில் மட்டுமல்லாமல், சீரிய, மேன்மையான
நன்னெறியுடன் கூடிய மருத்துவ முன்னேற்றங்களில் முதன்மை இடம் பெறவேண்டும்
என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை 11ம் பயஸ் துவங்கி, திருத்தந்தை
பிரான்சிஸ் முடிய அனைத்துத் திருத்தந்தையரும் குழந்தைகள் மட்டில்
காட்டிவரும் அக்கறையின் ஒரு அடையாளமாக குழந்தை இயேசு மருத்துவமனை
அமைந்துள்ளது என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மத்தியக் கிழக்குப் பகுதியில் உரையாடல்கள் வழி தீர்வுகள் காணப்படவேண்டும் - பேராயர் Auza
அக்.22,2014. மத்தியக் கிழக்குப் பகுதியில் உரையாடல்கள் வழி தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதிலும், அப்பகுதியில்
துன்புறும் அனைவருக்கும் உதவுவதிலும் திருப்பீடம் எப்போதும் கருத்தாக
இருந்து வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Bernardito Auza அவர்கள், "மத்தியக் கிழக்கின் தற்போதைய நிலவரம், பாலஸ்தீனம் குறித்த கேள்வி" என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
நடைபெறும் அக்டோபர் மாதத்தில் மத்தியக் கிழக்குப் பகுதியில் பணியாற்றும் திருப்பீடத் தூதர்களுடனும், இத்திங்களன்று
கர்தினால்கள் அவையோடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட
சந்திப்புகளில் மத்தியக் கிழக்குப் பகுதியின் நிலை குறித்து பேசப்பட்டதை
பேராயர் Auza அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம்
என்ற இரு நாடுகளும் தங்களுடைய தனித்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு
துணிவுடன் சில முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் தன் புனித பூமித் திருப்பயணத்தில் கூறிய வார்த்தைகளை பேராயர் Auza அவர்கள் வலியுறுத்தினார்.
மத்தியக் கிழக்குப் பகுதியிலும் மற்றும் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள மதத் தலைவர்கள், மதத்தின் பெயரால் வன்முறையை வளர்க்காமல், அமைதியை வளர்க்கும் உரையாடல் முயற்சிகளில் ஈடுபட திருப்பீடம் வேண்டுகோள் விடுப்பதாக பேராயர் Auza அவர்கள் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. வேற்றுமைகளைப் புரிந்து, ஏற்றுக்கொள்வதன் வழியே உரையாடலை வளர்க்க முடியும் - ஆயர் Felix Machado
அக்.22,2014. நம்மைப் பிரித்துவைக்கும் வேற்றுமைகளைப் புரிந்து, ஏற்றுக்கொள்வதன் வழியே உரையாடலை வளர்க்க முடியும் என்று இந்திய ஆயர் பேரவையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பெருவிழாவையொட்டி, பல்சமயப் பணிகள் திருப்பீட அவை வழங்கியுள்ள செய்தியைக் குறித்து, இந்திய ஆயர் பேரவையின் பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக் குழுவின் தலைவர் ஆயர் Felix Machado அவர்கள் தன் கருத்துக்களை வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் பணியாற்றிவரும் கத்தோலிக்கத் திருஅவை, தன் கருத்துக்களை யார் மீதும் திணிக்காமல் பணியாற்றி வருகிறது என்றும், சமுதாயத்தில் நலிவுற்றோர் சார்பில் இந்தியத் திருஅவை பணியாற்றி வருகிறது என்றும் ஆயர் Machado அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
ஏழைகளை ஒதுக்கிவைக்கும் அக்கறையற்ற மனநிலை உலகமயமாகி வருவதைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்து வரும் கவலை, பல்சமயப் பணிகள் திருப்பீட அவை வழங்கியுள்ள செய்தியில் வெளிப்படுகிறது என்று ஆயர் Machado அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மதம் என்ற எல்லையைக் கடந்து, துன்புறும் அனைத்து வறியோருக்கும், நோயுற்றோருக்கும் இந்தியத் திருஅவை ஆற்றிவரும் பணிகள், மதங்களுக்கிடையே நிலவவேண்டிய புரிதலுக்கு நல்லதொரு தீர்வு என்று ஆயர் Machado அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : AsiaNews
5. "புலம்பெயர்தலின் கலாச்சார சவால்: ஆபத்துக்களும், வாய்ப்புக்களும்" கிரகோரியன் பல்கலைக் கழக பன்னாட்டுக் கருத்தரங்கு
அக்.22,2014. "புலம்பெயர்தலின் கலாச்சார சவால்: ஆபத்துக்களும், வாய்ப்புக்களும்" என்ற தலைப்பில், அக்டோபர் 27, 28 ஆகிய நாட்களில் உரோம் நகரில் உள்ள கிரகோரியன் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
"மனித இயல்பின் வலுவிழந்த நிலை, கிறிஸ்துவின் காயங்களிலிருந்து நம்மைத் தூரப்படுத்துகின்றது. நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய கிறிஸ்தவப் பண்புகள் இந்தத் தூரத்தைக் குறைக்கும்" என்று, 2014ம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழங்கியுள்ள செய்தியை மையப்படுத்தி இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, ஐ.நா.
அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர்
சில்வானோ தொமாசி ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றுகின்றனர் என்று
கிரகோரியன் பல்கலைக் கழக அறிவிப்பு கூறுகின்றது.
பல நாடுகளிலிருந்து வருகை தரும் பேச்சாளர்கள், பல நாடுகளின் தூதர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. தன் வாழ்நாளில் குழந்தைத் தொழில் ஒழிப்பைக் காணும் வாய்ப்பு உள்ளது - அமைதிக்கான நொபெல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி
அக்.22,2014.
தன் வாழ்நாளில் குழந்தைத் தொழில் ஒழிப்பைக் காணும் வாய்ப்பு உள்ளது என்று
இவ்வாண்டு அமைதிக்கான நொபெல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்தி அவர்கள்
கூறினார்.
மிக வறுமையில் வாடும் குடும்பங்களும், கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் நிலை வளர்ந்து வருவதால், தொழிலுக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று IANS என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் சத்யார்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
1990களில் 26 கோடி என்ற அளவில் இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, தற்போது 16 கோடியே, 80 இலட்சமாகக் குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய சத்யார்த்தி அவர்கள், இது நம்பிக்கை தரும் போக்கு என்று கூறினார்.
தங்கள்
குறைகளைக் கூறமுடியாமல் மெளனமாக வாழும் குழந்தைகளின் குரல்களை உலகெங்கும்
எடுத்துச் செல்லும் தார்மீகப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது, குறிப்பாக ஊடகங்களுக்கு உள்ளது என்று அமைதிக்கான நொபெல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
Oslo நகரில் டிசம்பர் 10ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் அவர்களுக்கும், கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கும் அமைதிக்கான நொபெல் பரிசு வழங்கப்படும் விழாவிற்கு, இந்தியப் பிரதமரையும், பாகிஸ்தான் பிரதமரையும் மலாலா யூசுப்சாய் அவர்கள் அழைத்துள்ளார் என்று IANS செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆதாரம் : UCAN
7. 'ஆபத்தில்லாத தீபாவளி' - வங்காள பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு முயற்சிகள்
அக்.22,2014. சட்டப்படி அனுமதிக்கப்படாத, ஆபத்தான
வெடிகளை தீபாவளி நேரத்தில் வெடிப்பதால் உருவாகும் ஆபத்துக்களை மக்கள்
உணரும் வகையில் வங்காள பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு முயற்சிகளை
மேற்கொண்டனர்.
இப்புதன், விழாயன் ஆகிய நாட்கள் இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளையொட்டி, 'ஆபத்தில்லாத தீபாவளி' என்ற மையக்கருத்துடன், வங்காள அரசின் ஆதரவுடன், கொல்கத்தா மாநகரில் அரசுப் பள்ளி மாணவர்கள், இச்செவ்வாயன்று விழிப்புணர்வை உருவாக்கும் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.
சட்டத்தால்
அனுமதிக்கப்படும் சப்த அளவைத் தாண்டும் வகையில் உருவாக்கப்படும் வெடிகளைத்
தடை செய்வதற்கு வங்காள அரசின் காவல் துறையினர் எடுத்துவரும்
முயற்சிகளுக்கு அரசு பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது
என்று IANS செய்தி நிறுவனம் கூறுகிறது.
கடந்த ஆண்டு, சட்டத்திற்குப் புறம்பான 89 வகை வெடிகள் தடை செய்யப்பட்டன என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
ஆதாரம் : UCAN
8. இபோலா தடுப்பு நடவடிக்கைகள்: ஜெனீவாவில் அவசரக் கூட்டம்
அக்.22,2014. பரவிவரும் இபோலா நோயைக் கட்டுப்படுத்த நடந்துவரும் முயற்சிகளை மதிப்பிடும் நோக்கில், உலக நலவாழ்வு நிறுவனம் ஜெனீவாவில் அவசர கூட்டம் ஒன்றை நடத்துகிறது.
இபோலாவினால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளான கினீ, சியர்ரா லியோன் மற்றும் லைபீரியாவில் இந்நோய் தொடர்ந்து பரவி வரும் வேளையில், நோய் பரவ ஆரம்பித்த நேரத்தில் உலக நலவாழ்வு நிறுவனம் மிகவும் அக்கறையின்றி செயல்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.
விமான நிலையங்கள் போன்ற பன்னாட்டு பயண முனையங்களில் நோய்த்தொற்று உள்ளவர்களை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகள் பற்றியும், கடுமையான பயணக் கட்டுப்பாட்டு விதிகள் தேவையா என்பது பற்றியும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
ஆய்வு
ரீதியில் புதிதாக உற்பத்திசெய்யப்பட்டுள்ள இபோலா தடுப்பு மருந்து ஒன்றின்
முதல் தொகுதிகள் புதனன்று சுவிட்சர்லாந்தை வந்து அடையவுள்ளன.
ஆனால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, அனுமதி உரிமம் வழங்கப்பட்ட இபோலா தடுப்பு மருந்து புழக்கத்துக்கு வர மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ ஆகும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment