செய்திகள் - 21.10.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இயேசுவுக்காக எப்படிக் காத்திருப்பது என்பதை அறிந்தவரே கிறிஸ்தவர்
2. நம் விசுவாசம் உறுதியானதாக இருப்பதற்கு அது தொடர்ந்து இறைவார்த்தையால் பேணப்பட வேண்டும்
3. நவம்பர் 28-30,2014 துருக்கியில் திருத்தந்தை
4. இனம், மதம் இவற்றின் அடிப்படையில் இடம்பெறும் எவ்விதப் பாகுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை
5. உலகில் சிறார்க்கெதிரான வன்முறை அதிகரிப்பு, திருப்பீடம்
6. ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு குழந்தை வீதம் கொல்லப்படுகின்றது, யூனிசெப்
7. திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் பொதுமக்கள் இயக்கங்கள் கூட்டம்
8. நேபாளத்தில் ஒலிவடிவில் விவிலியம்
9. ஆறு வயது இந்தியச் சிறுவன் உலக சாதனை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இயேசுவுக்காக எப்படிக் காத்திருப்பது என்பதை அறிந்தவரே கிறிஸ்தவர்
அக்.21,2014. இயேசுவுக்காகக் காத்திருப்பது எப்படி என்பதை அறிந்த மனிதரே கிறிஸ்தவர், இவர் நம்பிக்கையின் மனிதர் என்று, இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர், எபேசு
திருமுகம் ஆகிய இத்திருப்பலியின் இரு வாசகங்கள் குறித்த சிந்தனைகளை தனது
மறையுரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருமண விருந்துக்குச் சென்று, இரவில் வெகுநேரம் கழித்துத் திரும்பி வரும் தலைவரோடு தன்னை ஒப்புமைப்படுத்தி, அத்தலைவருக்காக
விளக்குகளை ஏற்றி அவருக்காக விழித்திருந்து காத்திருக்கும் பணியாளர்கள்
பேறுபெற்றவர்கள் என்று நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடர்களிடம்
கூறுகிறார். இத்தகைய பணியாளருக்குத் தலைவரே உணவு பரிமாறுகிறார் என
நற்செய்தி கூறுகிறது என்றுரைத்தார் திருத்தந்தை.
தலைவரான கிறிஸ்து, கிறிஸ்தவர்களுக்காகச் செய்யும் இத்தொண்டு, கிறிஸ்தவர்களுக்குத் தனித்துவத்தை அளிக்கின்றது, கிறிஸ்து இன்றி நமக்குத் தனித்துவத்துவம் இல்லை என்றுரைத்த திருத்தந்தை, ஒரு காலத்தில் நீங்கள் கிறிஸ்து இன்றி இருந்தீர்கள் என்று புனித பவுல் கூறும் முதல் வாசகத்தோடு இணைத்து விளக்கினார்.
மக்களோடு சமாதானமாக நாம் இல்லாவிடில் அங்கே நம்மைப் பிரிக்கும் சுவர் எழுப்பப்படுவதை நாம் அறிவோம், எனினும் இந்தச் சுவரை உடைத்தெறிவதற்கு இயேசு பணி செய்கிறார் என்றும் உரைத்த திருத்தந்தை, நாம் இயேசுவுக்காகக் காத்திருக்க வேண்டும், இப்படிச் செய்யாதவர்கள் இயேசுவுக்குக் கதவை மூடி விடுகின்றனர், அமைதி, குடியுரிமை, குழுமம் போன்றவற்றுக்கான அவரின் பணியை அவர்கள் செய்யவிடுவதில்லை என்றும் கூறினார்.
நாம் எப்படிக் காத்திருக்க வேண்டுமென்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நியத் தெய்வங்களை வழிபடுகிறவர்கள்போல கிறிஸ்தவர்களாகிய நாம் அடிக்கடி இயேசுவை மறந்துவிடுகின்றோம், என்னால் எல்லாம் முடியும் என்ற உணர்வில் தன்னலச் செயல்களைச் செய்கிறோம், இது இறுதியில் நம்மைப் பெயரின்றி, குடியுரிமையின்றி, மோசமான நிலையில் கொண்டுசேர்க்கும் எனவும் எச்சரித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. நம் விசுவாசம் உறுதியானதாக இருப்பதற்கு அது தொடர்ந்து இறைவார்த்தையால் பேணப்பட வேண்டும்
அக்.21,2014. “நம் விசுவாசம் உறுதியானதாகவும், வாழ்வுக்கு நலம்தருவதாகவும் இருக்கவேண்டுமெனில் அது தொடர்ந்து இறைவார்த்தையால் பேணப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறரன்புப் பணிகளுக்கு நிதி திரட்டும்
நோக்கத்துடன் வத்திக்கான் அருங்காட்சியகத்தில் இசைக் கச்சேரிகள் உட்பட
பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வத்திக்கான் அருங்காட்சியக நிர்வாகிகளின் முயற்சியினால் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வுகளில், மிக்கேல் ஆஞ்சலோவின் சிஸ்டீன் சிற்றாலயத்தில் இசைக் கச்சேரிகள், வழிகாட்டிகளின் உதவியுடன் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தல், அருங்காட்சியகத்திற்குள் விருந்துகள் போன்றவை உள்ளடங்கும்.
“பிறரன்புக் கலை” என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்நிகழ்வுகளின் முதல் கட்டமாக, கடந்த சனிக்கிழமையன்று புனித செசிலியா இசைப் பள்ளியின் குழு, இசை நிகழ்ச்சியை நடத்தியது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. நவம்பர் 28-30,2014 துருக்கியில் திருத்தந்தை
அக்.21,2014. வருகிற நவம்பர் 28 முதல் 30 வரை துருக்கி நாட்டில் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணத் திட்டங்கள் இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.
திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணம் குறித்து விளக்கிய திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இத்திருப்பயண நிகழ்வுகள், அங்காரா, இஸ்தான்புல் ஆகிய இரு நகரங்களில் நடைபெறும் எனக் கூறினார்.
துருக்கி அரசுத்தலைவர், துருக்கி கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைத் தலைவர் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ, துருக்கி ஆயர் பேரவைத் தலைவர் ஆகியோரின் அழைப்பின்பேரில் இத்திருப்பயணம் நடைபெறவுள்ளதாகவும் அருள்பணி லொம்பார்தி தெரிவித்தார்.
நவம்பர் 28ம்தேதி காலை 9 மணிக்கு உரோமையிலிருந்து புறப்படும் திருத்தந்தை, Ankara Esemboğa விமானநிலையத்தை மதியம் 1 மணிக்குச் சென்றடைவார். அன்று விமானநிலைய வரவேற்பு, அரசுத்தலைவர் சந்திப்பு, அரசு அதிகாரிகள், பிரதமர் சந்திப்பு போன்றவை இடம்பெறும்.
29ம் தேதி இஸ்தான்புல் சென்று புனித சோஃபியா அருங்காட்சியகம், சுல்தான் AHMET மசூதி, பேராலயத்தில் திருப்பலி, புனித ஜார்ஜ் பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.
30ம் தேதி ஞாயிறன்று புனித ஜார்ஜ் பேராலயத்தில் வழிபாடு, முதுபெரும்
தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுடன் மதிய உணவு ஆகியவற்றை முடித்து மாலை
6.40 மணிக்கு உரோம் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. இனம், மதம் இவற்றின் அடிப்படையில் இடம்பெறும் எவ்விதப் பாகுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை
அக்.21,2014. உலகில் பழங்குடியினத்தவரின் வாழ்வை முன்னேற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், இம்மக்களின்
மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேலும்
அதிகரிக்கப்பட வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.
கூட்டமொன்றில் கூறினார்.
பழங்குடியினத்தவரின் உரிமைகள் குறித்து நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
இனம், பாலினம், மற்றும்
மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் எவ்விதப் பாகுபாடுகளும்
ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்ற திருப்பீடத்தின் உறுதிப்பாட்டையும்
எடுத்துச் சொன்னார் பேராயர் Auza.
உலகத் தாராளமயமாக்கல், தொழில்மயமாக்கல், நகர்ப்புறமயமாக்கல் ஆகிய நடவடிக்கைகள் பழங்குடியின மக்களின் விழுமியங்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், உலகின் ஒவ்வொரு மனிதரும், நாடும் தங்களின் வளர்ச்சிக்கென கொண்டிருக்கும் அடிப்படை மனித உரிமைகளை இம்மக்களும் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார் பேராயர் Auza.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. உலகில் சிறார்க்கெதிரான வன்முறை அதிகரிப்பு, திருப்பீடம்
அக்.21,2014. சிறாரின் உரிமைகள் குறித்து விவாதித்துவரும், ஐ.நா.வின் சமூக, மனிதாபிமான மற்றும் கலாச்சாரக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்த பேராயர் Bernardito Auza அவர்கள், இன்றைய உலகில் இலட்சக்கணக்கான சிறார், ஆயுதம் தாங்கிய மோதல்கள், பாலியல் வியாபராம், இழிபொருள் இலக்கியம், ஓவியம் போன்றவற்றுக்குப் பலியாகி வருகின்றனர் என்று கூறினார்.
அண்மை ஆண்டுகளில் ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஏறக்குறைய முப்பது இலட்சம் சிறார் கொல்லப்பட்டுள்ளனர், அறுபது இலட்சம் சிறார் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர், நிலக்கண்ணி வெடிகளால் பல்லாயிரக்கணக்கான சிறார் உறுப்புக்களை இழந்துள்ளனர் என்றும் கூறினார் பேராயர் Auza.
கருவில் வளரும் குழந்தை மாற்றுத்திறனாளி எனவும், பெண் குழந்தை எனவும் சந்தேகிக்கப்பட்டால் அவை அழிக்கப்படுகின்றன என்றும் பேராயர் கூறினார்.
அனைத்துலக
சிறார் உரிமைகள் ஒப்பந்தம் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை வருகிற
நவம்பரில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் சிறப்பிக்கவிருப்பதைக் குறிப்பிட்டுப்
பேசிய பேராயர் Auza அவர்கள், இன்னும் அதிக அளவிலான சிறார்க்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அனைத்துலக குடும்ப ஆண்டு அறிவிக்கப்பட்டதன் 20ம் ஆண்டு அண்மித்துவரும் இவ்வேளையில், குடும்பங்களின் வளர்ச்சி முக்கியத்துவம் பெறவேண்டும் என்று கூறிய ஐ.நா.தூதர் பேராயர் Auza அவர்கள், மூன்று
இலட்சத்துக்கு மேற்பட்ட சமூக மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம்
கத்தோலிக்கத் திருஅவை சிறாருக்கு ஆற்றிவரும் பணிகளையும் கோடிட்டுக்
காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு குழந்தை வீதம் கொல்லப்படுகின்றது, யூனிசெப்
அக்.21,2014. உலகில், ஒவ்வொரு
ஐந்து நிமிடத்துக்கும் ஒரு குழந்தை வீதம் வன்முறையால் கொல்லப்படுகின்றது
என்று. ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் கூறியது.
யூனிசெப் அமைப்பின் பிரித்தானியக் கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டில் வன்முறையால் இருபது வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 345 பேர் தினமும் இறப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
இருபது வயதுக்குட்பட்ட இலட்சக்கணக்கான இளம் வயதினர் தங்களின் வீடுகள், பள்ளிகள் மற்றும் சமூகங்களில் பாதுகாப்பின்றி உள்ளனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, அனைத்துவிதமான உரிமை மீறல்களும் 2030ம் ஆண்டுக்குள் நிறுத்தப்படுவதற்கு புதிய யுக்திகள் கையாளப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
41 நாடுகளில் மட்டுமே சிறார்க்கெதிரான வன்முறை தெளிவான முறையில் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவ்வறிக்கை, வளர்இளம்
பருவச் சிறுவன் ஒருவன் பிரித்தானியாவில் ஒருமுறை எதிர்கொள்ளும் கொலை
நடவடிக்கையைவிட இலத்தீன் அமெரிக்காவில் அவன் எழுபது தடவைகள் அதனை
எதிர்கொள்கிறான் என்று கூறியுள்ளது.
ஆதாரம் : UN
7. திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் பொதுமக்கள் இயக்கங்கள் கூட்டம்
அக்.21,2014. திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, இம்மாதம் 27 முதல் 29 வரை உலக பொதுமக்கள் இயக்கங்களின் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
திருப்பீட
சமூக அறிவியல் துறை மற்றும் பொதுமக்கள் இயக்கங்களின் தலைவர்களின்
ஒத்துழைப்புடன் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை நடத்தும் இக்கூட்டம், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக இடம்பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் உரிமைகள் அல்லது தொழிற்சங்கங்களால் பாதுகாக்கப்படாத குடியேற்றதாரர், சுயமாக வேலைசெய்வோர், வேலையில் பாதுகாப்பை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்குவோர், நிலமற்ற விவசாயிகள், பழங்குடியினத்தவர், வன்முறையாலும் நிலஅபகரிப்பாலும் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்படுவோர், சேரிகளில் வாழ்வோர், போதுமான
உள்கட்டமைப்பு வசதிகளின்றி வாழ்வோர் போன்றோருக்கான பொது அமைப்புகளின்
நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. நேபாளத்தில் ஒலிவடிவில் விவிலியம்
அக்.21,2014. தவறான சமயப் பழக்கவழக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், நிறைய
மக்கள் கிறிஸ்தவச் செய்தியைப் பெறவும் உதவும் நோக்கத்தில் நேபாளத்தில்
ஒலிவடிவத்தில் விவிலியம் பதிவுசெய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
World Mission என்ற பிரிந்த கிறிஸ்தவ சபை நிறுவனம் ஒன்று, நேபாள மொழியில் விவிலியத்தைப் பதிவுசெய்து அதை விரும்பும் மக்களுக்கு வழங்கி வருகின்றது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
நேபாளத்தில் நிறைய மக்கள் இயேசு பற்றிக் கேள்விப்படாமலே உள்ளனர் என்றும், கடந்த பல நாள்களாக அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஒலிவடிவ விவிலியத்தை விரும்பும் மக்களுக்கு வழங்கி வருவதாக, அந்நிறுவனத் தலைவர் கிரேக் கெல்லி அவர்கள் கூறினார்.
இந்துமத அரசகுலம் நூற்றாண்டுகளாக ஆட்சி செய்துவந்த நேபாளத்தில் தற்போது சமய சகிப்புத்தன்மை பரவலாக உள்ளது.
ஆதாரம் : AsiaNews
9. ஆறு வயது இந்தியச் சிறுவன் உலக சாதனை
அக்.21,2014. நேபாளத்திலுள்ள 5,554 மீட்டர் உயரமான கல்பதரு மலைச்சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்துள்ளான் ஆறு வயது இந்தியச் சிறுவன் ஒருவன்.
ஹர்ஷித் சவுமித்ரா என்ற 6 வயது சிறுவன், இம்மாதம் 7ம் தேதி எவரெஸ்ட் மலை முகாம்வரை ஹெலிகாப்டரில் சென்று, பின்னர்
அங்கிருந்து 10 நாட்களில் கல்பதரு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளான்.
இதற்கு முன்னர் பாலாஜி என்ற 7 வயது இந்தியச் சிறுவன் கல்பதரு சிகரத்தில்
ஏறியதுதான் சாதனையாக இருந்தது. அதனை ஹர்ஷித் முறியடித்துள்ளான்.
மலை ஏறும் வீரரான ராஜீவ் சவுமித்ரா என்பவரின் மகனான ஹர்ஷித் சவுமித்ரா, இந்தச் சாதனையைப் புரிந்துள்ளான். இதில் ஏறுவதற்காக அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் சென்றான்.
இந்தச்
சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது. கின்னஸ் சாதனைக்காகவும்
இந்த ஆதாரங்களை அனுப்ப உள்ளதாக அவனது தந்தை தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : தமிழ்வின்
No comments:
Post a Comment