செய்திகள் - 04.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் மறையுரை : நாம் பாவிகள் என்பதை மறந்துவிடும் திருஅவை, கிறிஸ்துவைச் சந்திக்கவும் மறந்து, மக்கிப் போகும்
2. திருத்தந்தையுடன் இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திப்பு
3. மனிதர்களுக்குத் தகுந்த மதிப்பு வழங்காமல் இருப்பதே பொருளாதார நெருக்கடி நிலைக்கு அடிப்படைக் காரணம் - கர்தினால் பரோலின்
4. மனித வரலாற்றை இறைவன் கரங்களில் ஒப்படைக்கும்போதுதான் நமது துன்பங்களுக்கு பொருள் காணமுடியும் - பேராயர் Marciano
5. அமெரிக்காவின் தலைநகராகிய வாஷிங்க்டனில் முதுபெரும் தந்தையர் கூடிவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கூட்டம்
6. மாபியா கும்பல்களுக்கு எதிராகப் பணியாற்றிவரும் அருள் பணியாளருக்கு, முழுமையான ஆதரவு வழங்கும் இத்தாலிய ஆயர் பேரவை
7. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்தில் உள்ளனர் - முதுபெரும் தந்தை சாக்கோ
8. புனித பூமியில் உள்ள இந்தியக் கிறிஸ்தவர்கள், மரியன்னையின் பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடுகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் மறையுரை : நாம் பாவிகள் என்பதை மறந்துவிடும் திருஅவை, கிறிஸ்துவைச் சந்திக்கவும் மறந்து, மக்கிப் போகும்
செப்.04,2014. நம்மை மீட்கவரும் இயேசுவை, நமது பாவங்களுடன் சந்திக்கச் செல்வதே, கிறிஸ்தவ வாழ்வின் வலிமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களிலும், அவற்றை மீட்க அறையப்பட்ட கிறிஸ்துவிலும் பெருமை பாராட்டமுடியும் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
இறைவார்த்தை என்பது, இவ்வுலக வார்த்தைகளைப் போல அறிவு செறிந்த, ஆற்றல் மிக்க வார்த்தைகள் அல்ல; அவை உண்மையில் இவ்வுலகக் கண்ணோட்டத்தில் மடைமையாகத் தெரியும் என்று புனித பவுல் அடியார் கூறியதை, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்துவைச்
சந்தித்த புனித பவுல் அடியார் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றி
மட்டுமே தன்னால் பெருமைகொள்ள முடியும் என்று சொன்னதையும் திருத்தந்தை
நினைவுகூர்ந்தார்.
தன் படகில், முதல்முறை இயேசுவைச் சந்தித்த புனித பேதுருவும், "ஆண்டவரே, நான் பாவி; என்னைவிட்டுப் போய்விடும்" என்று கூறுவது நமக்குப் பாடமாக அமைகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
நமது பாவங்களையும், அவற்றிற்காக அறையப்பட்டக் கிறிஸ்துவையும் உணரும்போதுதான் கிறிஸ்தவ வாழ்வின் முழு வலிமையும் வெளிப்படும் என்பதை, திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
நாம் பாவிகள் என்பதை மறந்துவிடும் திருஅவை, கிறிஸ்துவைச் சந்திக்கவும் மறந்து, தன்னிலேயே நிறைவுகண்டு, மக்கிப் போகும் நிறுவனமாகிவிடும் என்ற எச்சரிக்கையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
மேலும், "நம்பகத் தன்மையுடன், நிபந்தனைகள்
ஏதுமின்றி விளங்கும் கிறிஸ்தவ சாட்சியமே உண்மையானது" என்ற வார்த்தைகளை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தையுடன் இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திப்பு
செப்.04,2014. இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர், Shimon Peres அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பைக் குறித்த வேண்டுகோள், முன்னாள் அரசுத்தலைவர் Peres அவர்களிடமிருந்து எழுந்தது என்றும், இச்சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது என்றும், திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர், Federico Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
உலக நாடுகளை இணைக்க, ஐ.நா.அவை இருப்பதுபோல, உலக மதங்களை இணைக்க ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற ஆவலை, முன்னாள் அரசுத்தலைவரும், நொபெல் அமைதி விருது பெற்றவருமான Peres அவர்கள், இச்சந்திப்பின்போது, திருத்தந்தையிடம் வெளிப்படுத்தியதாக அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.
Shimon Peres அவர்களின் யோசனைக்கு ஆவலுடன் செவிமடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் செயலாற்றும் பல்சமய உரையாடல் அவை, மற்றும் நீதி, அமைதி அவை ஆகியவற்றுடன் இதுகுறித்து தான் கலந்தாலோசிப்பதாகக் கூறினார் என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.
மேலும், இவ்வியாழன் காலை, ஜோர்டான் நாட்டு இளவரசர், El Hassan bin Talal அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மனிதர்களுக்குத் தகுந்த மதிப்பு வழங்காமல் இருப்பதே பொருளாதார நெருக்கடி நிலைக்கு அடிப்படைக் காரணம் - கர்தினால் பரோலின்
செப்.04,2014.
இத்தாலி நாட்டின் தொழில்துறையில் கிறிஸ்தவ விழுமியங்களைப் பதிக்க
உழைத்துவரும் கத்தோலிக்கத் திருஅவை பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை தன்
ஆதரவைத் தெரிவிக்கிறார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ
பரோலின் அவர்கள் கூறினார்.
தொழிலாளர்களின் முழுமையான நலனுக்கென உழைத்துவரும் அருள் பணியாளர்கள் அடங்கிய ஒரு அமைப்பின் 38வது தேசியக் கருத்தரங்கு, உரோம் நகரில், செப்டம்பர் 3, இப்புதன் மாலையில் துவங்கிய வேளையில், அவர்களை திருத்தந்தையின் சார்பில் வாழ்த்திப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.
நாம் இன்று அனுபவித்துவரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு, அடிப்படைக் காரணமாக அமைவது, மனிதர்களுக்குத் தகுந்த மதிப்பு வழங்காமல் இருப்பதே என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம் என்ற உண்மையை மீண்டும் நிலைநாட்டுவதே இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் என்று கூறினார்.
கடவுள், மனிதர்கள், இயற்கை, மனித உழைப்பு ஆகிய உண்மைகளை தகுந்த கண்ணோட்டத்துடன் காண்பதற்கு, திருஅவையின் சுற்றுமடல்கள் உதவியாக உள்ளன என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
"உடன்பிறந்த உணர்வு: மனித முகம் கொண்ட பொருளாதாரமே தகுந்த வழி" என்ற மையக்கருத்துடன் இப்புதனன்று துவங்கிய கருத்தரங்கு, இவ்வெள்ளியன்று நிறைவுக்கு வருகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. மனித வரலாற்றை இறைவன் கரங்களில் ஒப்படைக்கும்போதுதான் நமது துன்பங்களுக்கு பொருள் காணமுடியும் - பேராயர் Marciano
செப்.04,2014. உலகப் போரில் இறந்தோரின் கல்லறையில் நாம் மகிழ்வை எளிதில் உணர முடியாது எனினும், கடவுளின் பிரசன்னம் நமது கண்ணீரைத் துடைக்கும் என்று நம்புகிறோம் என்று இத்தாலிய ஆயர் ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 13, சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Redipuglia எனுமிடத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லறைக்குச் செல்வதையொட்டி, அக்கல்லறையில் அமைந்துள்ள ஆலயத்தின் பீடத்தை, இத்தாலிய இராணுவத்தின் வழிகாட்டியாகப் பணியாற்றும் பேராயர் Santo Marciano அவர்கள் அர்ச்சித்து, திருப்பலியாற்றியபோது இவ்வாறு கூறினார்.
இன்பம்
துன்பம் இரண்டும் கலந்த மனித வரலாற்றை இறைவன் கரங்களில்
ஒப்படைக்கும்போதுதான் நமது துன்பங்களுக்கு பொருள் காணமுடியும் என்று
பேராயர் Marciano அவர்கள் சுட்டிக்காட்டினார்.
முதல் உலகப் போரின் காயங்களை நினைவுகூரும் அதே நேரம், அப்போது நடந்த தவறுகளையும் நினைவுகூர்வதால், அதுபோன்ற தவறுகளை மனிதர்கள் மீண்டும் செய்யாமல் இருக்க அது வாய்ப்பாகும் என்று பேராயர் Marciano அவர்கள் வலியுறுத்தினார்.
Redipuglia எனுமிடத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லறையே இத்தாலியின் மிகப் பெரிய இராணுவக் கல்லறையாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. அமெரிக்காவின் தலைநகராகிய வாஷிங்க்டனில் முதுபெரும் தந்தையர் கூடிவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கூட்டம்
செப்.04,2014. கத்தோலிக்க, மற்றும் கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபைகளின் முதுபெரும் தந்தையர் கூடிவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கூட்டம், செப்டம்பர் 9 முதல், 11ம் தேதி முடிய அமெரிக்காவின் தலைநகராகிய வாஷிங்க்டனில் நடைபெறவுள்ளது.
சிரிய கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தந்தை மூன்றாம் Ignatius Youssef Younan, அந்தியோக்கு மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Raï, மெல்கித்திய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, மூன்றாம் Gregorius Laham ஆகியோர் பங்கேற்கும் இக்கூட்டத்தில், கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களும் பங்கேற்கிறார்.
முதுபெரும் தந்தையர் இவ்வாறு கூடிவருவது, அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக நடைபெறுவதாக கத்தோலிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.
கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டுள்ள In Defense of Christians (IDC) என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிநிலை கூட்டம், கர்தினால் சாந்த்ரி அவர்கள் நடத்தும் ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டுடன் துவங்குகிறது.
மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் வன்முறைகள், பிரச்சனைகள் ஆகியவை இந்தக் கூட்டத்தின் மையக் கருத்தாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, இப்பகுதியில் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவந்த வன்முறைகள், தற்போது
இஸ்லாமிய அரசை நிறுவும் ஆர்வத்தில் செயல்படும் அடிப்படைவாதக் குழுக்களால்
உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நேரத்திலும் நாம் அமைதி காக்காமல், உடனடி செயல்பாடுகளில் இறங்கவேண்டும் என்று இக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள IDC அமைப்பின் தலைவர் Toufic Baaklini அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆதாரம் : Zenit
6. மாபியா கும்பல்களுக்கு எதிராகப் பணியாற்றிவரும் அருள் பணியாளருக்கு, முழுமையான ஆதரவு வழங்கும் இத்தாலிய ஆயர் பேரவை
செப்.04,2014. இத்தாலியில் இயங்கிவரும் மாபியா கும்பல்களுக்கு எதிராகப் பணியாற்றிவரும் அருள் பணியாளர் Luigi Ciotti அவர்களுக்கு, தங்கள் முழுமையான ஆதரவு உண்டு என்று, இத்தாலிய ஆயர் பேரவை, கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாபியா கும்பல்களின் அநீதிகளைத் தட்டிகேட்கும் நோக்கத்துடன், இத்தாலியில், Abele மற்றும் Libera என்ற இரு அமைப்புக்களை உருவாக்கி, பணியாற்றி வருபவர், அருள்பணி Luigi Ciotti அவர்கள்.
அண்மையில், அருள்பணி Luigi Ciotti அவர்கலுக்கு, Totò Riina என்ற மாபியா தலைவர் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, இத்தாலிய ஆயர் பேரவையின் சார்பில், அதன் தலைவர், கர்தினால் அஞ்சேலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள், இந்த ஆதரவு மடலை வெளியிட்டுள்ளார்.
மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள், விவிலிய விழுமியங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு மார்ச் மாதம் கூறிய வார்த்தைகளை, கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
மாபியா கும்பல்களுக்கு எதிராக திருத்தந்தை அவர்கள் கூறிவரும் கருத்துக்கள், திருஅவைக்குள் மட்டுமல்லாமல், மாபியா கும்பல்களுக்கு எதிராக, துணிவுமிக்க செயல்களை மேற்கொள்ள, இத்தாலியில் இயங்கும் Carabinieri என்ற காவல்துறையினர் மத்தியிலும் தாக்கங்களை உருவாக்கி வருகின்றன என்று ANSA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆதாரம் : CNA
7. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்தில் உள்ளனர் - முதுபெரும் தந்தை சாக்கோ
செப்.04,2014. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள், Yezidi இனத்தவர், மற்றும் ஏனைய சிறுபான்மையினர் முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்தில் உள்ளனர் என்று பாபிலோனிய முதுபெரும் தந்தை, இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.
ISIS தீவிரவாதிகளால் ஒரு மாதத்திற்கு முன்பு துவக்கப்பட்ட வன்முறைகளைக் குறித்து, இப்புதனன்று கவலை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், உலக அரசுகள் இந்த வன்முறையை மௌனமாகப் பார்த்து வருவது, விளங்காத வேதனையாக உள்ளதென்று கூறினார்.
எவ்விதக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாமல் செயலற்றிருக்கும் ஈராக் அரசைப் போலவே, உலக நாடுகளும் இருப்பது, இந்த வன்முறைகளுக்கு மறைமுகமாக ஆதரவு தருவதுபோல் உள்ளது என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுகள் மௌனம் காக்கும் வேளையில், உலகெங்கும் பரவியுள்ள கிறிஸ்தவக் குழுக்கள், தங்கள்
அரசுகளைச் செயலாற்றத் தூண்டும் சக்தி நிறைந்த குழுக்களாகச் செயல்பட
வேண்டும் என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் செய்தியில்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. புனித பூமியில் உள்ள இந்தியக் கிறிஸ்தவர்கள், மரியன்னையின் பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடுகள்
செப்.04,2014. புனித பூமியில் உள்ள இந்தியக் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து, செப்டம்பர் 8ம் தேதி, மரியன்னையின்
பிறந்த நாளைக் கொண்டாடும் ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன என்று
புனித பூமியில் பணியாற்றும் அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
இந்தியாவில் கோவாவில் வாழும் 'கொங்கனி' மொழி பேசுவோர் செப்டம்பர் 8ம் தேதியை ஒரு சிறப்பானத் திருநாளாகவும், அறுவடை நாளாகவும் கொண்டாடி வருகின்றனர்.
பல நாடுகளிலும் பணியாற்றச் சென்றுள்ள 'கொங்கனி' மொழி பேசும் குழுவினர், இந்தச் சிறப்பான விழாவை அந்தந்த நாடுகளில் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்று அருள் பணியாளர் Tojy Jose அவர்கள், CNA செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
புனித பூமியில், Jaffa, Tel Aviv, எருசலேம் ஆகிய நகரங்களில் பணியாற்றிவரும் 'கொங்கனி' நாழி பேசுவோர், செப்டம்பர் 8ம் தேதி விடுமுறை நாள் இல்லையென்பதால், அடுத்துவரும் சனிக்கிழமையன்று இவ்விழாவைச் சிறப்பிக்க உள்ளனர் என்றும், அதற்கு ஒரு தயாரிப்பாக நவநாள் முயற்சிகள் துவங்கியுள்ளன என்றும் அருள் பணியாளர் Jose அவர்கள்கூறினார்.
செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படும் மரியன்னையின் பிறந்தநாள் விழா, தமிழகத்தில், வேளாங்கண்ணி அன்னையின் திருநாளாகச் சிறப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment