Thursday, 4 September 2014

செய்திகள் - 03.09.14
------------------------------------------------------------------------------------------------------

1. இரண்டாம் உலகப் போரின் 75வது ஆண்டு நினைவையொட்டி திருத்தந்தையின் விண்ணப்பம்

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளின் விவரங்கள்

3. ஆர்த்தடாக்ஸ் திருஅவையினர் துவங்கியுள்ள கருத்தரங்கிற்கு, திருத்தந்தை வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி

4. வட அமெரிக்காவில், முதன்முதலாக நிறுவப்பட்ட கத்தோலிக்கக் கோவிலின் 350ம் ஆண்டு நிறைவில் திருத்தந்தையின் பிரதிநிதி

5. அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகள், மத்தியக் கிழக்குப் பகுதியை, கற்காலத்திற்கு இட்டுச்செல்கின்றன

6. காசாப் பகுதி, இரண்டாம் உலகப் போரில் அழிந்து தரைமட்டமான நகர்களைப் போல் விளங்குகிறது - ஆயர் ஷொமாலி

7. புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடலை பார்க்கவரும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவா அரசு செய்துவரும் ஏற்பாடுகள்

8. 'படைப்பின் காலம்' என்ற நிகழ்வு - கிறிஸ்தவ சபைகளின் இணைந்த முயற்சி

------------------------------------------------------------------------------------------------------

1. இரண்டாம் உலகப் போரின் 75வது ஆண்டு நினைவையொட்டி திருத்தந்தையின் விண்ணப்பம்

செப்.03,2014. இரண்டாம்  உலகப் போரின்போது, போலந்து நாட்டில் தங்கள் உயிரை இழந்த அனைவருக்கும் இறைவனின் கருணை கிடைக்கவேண்டுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் பொது மறையுரையின் இறுதியில் விண்ணப்பித்தார்.
1939ம் ஆண்டு, செப்டம்பர் முதல் தேதியன்று துவங்கிய இரண்டாம் உலகப் போரின் 75வது ஆண்டு நினைவை, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள், குறிப்பாக, போலந்து நாட்டினர் இந்நாட்களில் கடைபிடிக்கின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுக்கும், உலக நாடுகள் அனைத்திற்கும் அமைதியின் அரசியாம் அன்னைமரியின் பரிந்துரை வழியே அமைதி கிடைக்க வேண்டுவோம் என்று கூறினார்.
பொய்யான, செயற்கையான ஒரு காரணத்தை ஹிட்லர் கூறியதால், 1939ம் ஆண்டு, செப்டம்பர் முதல் தேதி, போலந்து நாட்டின்மீது ஜெர்மனி மேற்கொண்ட தாக்குதல்கள், இரண்டாம் உலகப் போர் துவங்கக் காரணமானது என்பது வரலாற்றுக் குறிப்பு.
இந்த நினைவையொட்டி, ஜெர்மன் ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Reinhard Marx அவர்கள், செப்டம்பர் 1,2 ஆகிய இரு நாட்கள், போலந்து நாட்டின் Warsaw நகரில் ஒரு சில இடங்களுக்குச் சென்று, மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.
1965ம் ஆண்டு முதல், ஜெர்மன், போலந்து ஆயர் பேரவைகள் ஒன்றிணைந்து செயல்படத் துவங்கியதன் 50ம் ஆண்டு நிறைவை, வரும் ஆண்டு கொண்டாடுவதென இரு ஆயர் பேரவைகளும் தீர்மானித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளின் விவரங்கள்

செப்.03,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளின் விவரங்களை திருப்பீட வழிபாட்டுத் துறை இப்புதனன்று வெளியிட்டது.
முதல் உலகப் போரில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள Redipuglia கல்லறைக்கு, செப்டம்பர் 13, சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று மரியாதை செலுத்துவதோடு, அங்குள்ள இராணுவ ஆலயத்தில் திருப்பலியாற்றுகிறார்.
அதற்கடுத்த நாள், செப்டம்பர் 14, ஞாயிறு கொண்டாடப்படும் திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாளன்று, காலை 9 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், 20 தம்பதியரை திருமண உறவில் இணைக்கும் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
செப்டம்பர் 21, அடுத்த ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அல்பேனியா நாட்டிற்கு ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார் என்பது முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதி ஞாயிறான செப்டம்பர் 28ம் தேதியன்று, காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதில் முதிர்ந்தவர்களுக்கென ஒரு சிறப்புத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நிறைவேற்றுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / RNS

3. ஆர்த்தடாக்ஸ் திருஅவையினர் துவங்கியுள்ள கருத்தரங்கிற்கு, திருத்தந்தை வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி

செப்.03,2014. "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற கருத்துடன் ஆர்த்தடாக்ஸ் திருஅவையினர் துவங்கியுள்ள கருத்தரங்கு இன்றைய மிக அவசியமான ஒரு தேவையை உணர்ந்த கருத்தரங்காக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலியில் அமைத்துள்ள Bose என்ற துறவு மடத்தில் செப்டம்பர் 3, இப்புதன் முதல் 6ம் தேதி, சனிக்கிழமை முடிய நடைபெறும் 22வது பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு திருத்தந்தை வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
நாம் ஒவ்வொருவரும் எவ்விதம் அமைதியின் தூதர்களாக வாழமுடியும் என்பதை இக்கருத்தரங்கின்போது நடைபெறும் ஆய்வுகளும், கலந்துரையாடல்களும் உலகிற்கு எடுத்துரைப்பதாக என்று திருத்தந்தை தன் செய்தியில் வாழ்த்தியுள்ளார்.
பல்வேறு பிரிவினர்களிடையே நிலவிவரும் வேறுபாடுகளால் வளர்ந்துவரும் சந்தேக மனப்பான்மை குறைந்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வழிமுறைகள் வளர்வதற்கு இக்கருத்தரங்கு வழிவகுக்கட்டும் என்ற ஆசீர் மொழிகளையும் திருத்தந்தையின் செய்தி தாங்கிச் சென்றுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வட அமெரிக்காவில், முதன்முதலாக நிறுவப்பட்ட கத்தோலிக்கக் கோவிலின் 350ம் ஆண்டு நிறைவில் திருத்தந்தையின் பிரதிநிதி

செப்.03,2014. கனடா நாட்டு ஆயர்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டம், செப்டம்பர் 15 முதல் 19 முடிய Quebec நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில், Quebec நகரில், முதன்முதலாக நிறுவப்பட்ட கத்தோலிக்கக் கோவிலான Notre Dame ஆலயத்தின் 350ம் ஆண்டு நிறைவு விழா, இந்த ஆண்டுக் கூட்டத்திற்கு முந்திய நாள், செப்டம்பர் 14, ஞாயிறன்று, கொண்டாடப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில், கியூபா நாட்டின் ஹவானா பேராயர் கர்தினால் Jaime Lucas Ortega y Alamino அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பத் திருப்பலியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் மாதத்தில், குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, கனடா ஆயர்கள் பேரவையின் ஆண்டு கூட்டம் நடைபெறும் என்று பேரவைச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகள், மத்தியக் கிழக்குப் பகுதியை, கற்காலத்திற்கு இட்டுச்செல்கின்றன

செப்.03,2014. இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்தும் ஆர்வத்துடன் அடிப்படைவாதக் குழுக்கள், மத்தியக் கிழக்குப் பகுதிகளில் மேற்கொண்டுவரும் வன்முறைகள், கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத கற்காலத்திற்கு நம்மை இட்டுச்செல்கின்றன என்று அந்தியோக்கு முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros al-Rahi அவர்கள் கூறினார்.
கட்டுக்கடங்காமல் வளர்ந்துவரும் இந்த வன்முறைகளைக் கண்டும், உலக நாடுகள் காத்துவரும் மௌனம், ஒரு பெரும் இடறலாகவும், உலகைப் பீடித்துள்ள நோயாகவும் மாறியுள்ளது என்று கர்தினால் al-Rahi அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று அழைப்பதற்கு மறுப்புத் தெரிவித்த கர்தினால் al-Rahi அவர்கள், 1400 முதல், 2000 ஆண்டுகளாக அப்பகுதிகளில் வாழ்ந்துவரும் ஓர் இனத்தவரை சிறுபான்மையினர் என்று அழைப்பது தவறு என்று கூறினார்.
சிரியா, எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீனா, ஈராக் ஆகிய பல்வேறு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் அண்மையக் காலமாக அனுபவித்து வரும் துன்பங்களை எடுத்துரைத்த கர்தினால் al-Rahi அவர்கள், அப்பகுதியில் கிறிஸ்தவர்கள் தாங்கிவரும் சிலுவையை, தாங்கள் விட்டுவிடப் போவதில்லை என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit

6. காசாப் பகுதி, இரண்டாம் உலகப் போரில் அழிந்து தரைமட்டமான நகர்களைப் போல் விளங்குகிறது - ஆயர் ஷொமாலி

செப்.03,2014. காசாப் பகுதியை பார்க்கும்போது, இரண்டாம் உலகப் போரில் அழிந்து தரைமட்டமான நகர்களைப் போல் அப்பகுதி விளங்குகிறது என்று எருசலேம் லத்தீன் வழிபாட்டு முறை ஆயர் வில்லியம் ஷொமாலி அவர்கள் கூறினார்.
காசாப் பகுதியில் உள்ள Sajaya என்ற மாவட்டத்தில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான வீடுகளும் ஏனையக் கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதைக் கண்டபோது, இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் இருந்த நிலையை உணர முடிந்தது என்று ஆயர் ஷொமாலி அவர்கள் எடுத்துரைத்தார்.
காசாப் பகுதியில் உதவிகள் மேற்கொண்டு வரும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின் பெயரால் அப்பகுதியைப் பார்வையிடச் சென்ற எருசலேம் கத்தோலிக்க ஆயரும் அருள் பணியாளர்களும் அப்பகுதி மக்கள் இஸ்ரேல் நாட்டின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த வெறுப்புணர்வைக் களைய அதிக நாட்களாகும் என்று கூறினர்.
இஸ்ரேல் இராணுவத்தால் தாக்குதல்கள் நடைபெற்றுவந்தபோதும், காசாப் பகுதியில் மக்களுக்குத் தொடர்ந்து நற்பணிகள் ஆற்றிவந்த பல்வேறு அருள் சகோதரிகளுக்கும், அருள் பணியாளர்களுக்கும் ஆயர் ஷொமாலி அவர்கள் தன் நன்றியைத் தெரிவித்தார்.

ஆதாரம் : Fides

7. புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடலை பார்க்கவரும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவா அரசு செய்துவரும் ஏற்பாடுகள்

செப்.03,2014. கோவாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதையொட்டி கோவா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருவதாக அறிவித்துள்ளது.
இவ்வாண்டு நவம்பர் 22ம் தேதிமுதல், வரும் ஆண்டு சனவரி முடிய 44 நாட்களுக்கு நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்வில் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என்று கூறப்படுகிறது.
புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அழிவுறாத உடல் வைக்கப்பட்டுள்ள Bom Jesus பசிலிக்காவையொட்டி, திருப்பயணிகளின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் வசதிகள் செய்து தரப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், வளாகத்தைச் சுற்றி, பல இடங்களில் கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தி, எவ்வித அசம்பாவிதமும் நிகழாதவண்ணம் கண்காணிப்பர் என்றும் அறிவித்துள்ளது.
2004ம் ஆண்டு புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டபோது, 25 இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தனர் என்றும், தற்போது நிகழவிருக்கும் இந்த சிறப்பு நாட்களில் 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை எதிப்ர்பார்ப்பதாகவும் கோவா அரசு கணித்துள்ளது.

ஆதாரம் : UCAN/TOI

8. 'படைப்பின் காலம்' என்ற நிகழ்வு - கிறிஸ்தவ சபைகளின் இணைந்த முயற்சி

செப்.03,2014. பிரித்தானியாவிலும், அயர்லாந்திலும் உள்ள கத்தோலிக்கத் திருஅவை, ஏனையக் கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து, செப்டம்பர் 1, இத்திங்கள் முதல் 'படைப்பின் காலம்' என்ற மாத நிகழ்வொன்றைத் துவக்கியுள்ளது.
படைப்பை, குறிப்பாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்க, 1989ம் ஆண்டு முதல் துவக்கப்பட்ட இந்த முயற்சி, இவ்வாண்டு தன் வெள்ளிவிழாவைச் சிறப்பிக்கிறது.
ஆர்த்தடாக்ஸ் சபையினரின் புத்தாண்டு நாளெனக் கருதப்படும் செப்டம்பர் 1ம் தேதி முதல், படைப்பின் காவலர் என்று கருதப்படும் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளான அக்டோபர் 4ம் தேதி முடிய 'படைப்பின் காலம்' என்ற இந்த மாதம் கடைபிடிக்கப்படுகிறது.
படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தவும் ஊர்வலங்கள், கண்காட்சிகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN

No comments:

Post a Comment