Tuesday 2 September 2014

செய்திகள் - 02.09.14

செய்திகள் - 02.09.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தூய ஆவியின் நன்மைத்தனங்களைப் புரியும்போதே நம் தனித்தன்மைப் பிறக்கிறது

2. திருத்தந்தை: மரியன்னை இல்லையெனில் நாம் அநாதை

3. திருத்தந்தை : அனைத்து மதங்களும் தங்கள் தனித்தன்மையுடன் இணக்க வாழ்வை மேற்கொள்ள முடியும்

4. யாழ் ஆயர் : இலங்கை அரசும், மாநில அவையும் இணைந்து செயல்பட முன்வரவேண்டும்

5. ஈராக்கில் துன்புறும் மக்களுக்காக பாகிஸ்தானில் செபவழிபாடு

6. Boko Haram அச்சுறுத்தலுக்குப் பயந்து, பாதுகாப்பு வீரர்களுடன் நடைபோடுவது, மக்களை தன்னிடமிருந்து பிரித்துவிடும் - பேராயர் Ignatius Kaigama

7. ஒடிஸ்ஸா வெள்ள துயர்துடைப்புப் பணிகளுக்கு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் விண்ணப்பம்

8. உத்திரப்பிரதேசத்தில் கிறிஸ்தவக் கோவிலை ஆக்ரமித்தோர் கைது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : தூய ஆவியின் நன்மைத்தனங்களைப் புரியும்போதே நம் தனித்தன்மைப் பிறக்கிறது

செப்.02,2014. தூய ஆவியாரின் நன்மைத்தனங்களை நாம் புரிந்துகொள்ள இயலாதவேளையில், நமக்கென்று தனித்தன்மையும் கிடையாது, நம்மால் சான்று பகரவும் இயலாது என்று இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உள்ளத்தைக்கொண்டிருப்பதே கிறிஸ்துவின் உணர்வு, அதுவே கிறிஸ்தவத் தனித்தன்மை என்றார்.
ஆவியாரால் வழிநடத்தப்படுபவர்கள் மற்றவர்களால் தீர்ப்பிடப்படும் நிலைக்கு உள்ளாகமாட்டர்கள் என்ற திருத்தந்தை, உலகிற்குரிய உள்ளுணர்வுகளால் வழிநடத்தப்படாதிருப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இறையியலில் எத்தனைப் பட்டங்கள் பெற்றிருந்தாலும், பெரிய‌
இறைவல்லுனராக இருந்தாலும், இறைஆவியார் நம்முள் இல்லை என்றால், நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட முடியாதவர்கள் எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதயங்களைத் தொடும் போதனைகளையே சாதாரண மக்கள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் இயேசுவின் ஆவியைக் கொண்டவர்களாக நாம் செயல்படுவதே இங்கு முதலிடம் வகிக்கிறது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை: மரியன்னை இல்லையெனில் நாம் அநாதை

செப்.02,2014. 'அன்னை மரியை தன் தாயாக ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவர் ஓர் அநாதைக்கு ஒப்பாவார்' என தன் செவ்வாய்க்கிழமை டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் தன் எண்ணத்தை குறுஞ்செய்தியாக டுவிட்டர் பக்கம் மூலம் வெளிப்படுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்விலும் மரியன்னை பெறவேண்டிய இடத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : அனைத்து மதங்களும் தங்கள் தனித்தன்மையுடன் இணக்க வாழ்வை மேற்கொள்ள முடியும்

செப்.02,2014. மதங்களுக்கிடையே அமைதியை உருவாக்கவும், மற்றும், ஒருமைப்பாட்டு உணர்வுடன் கூடிய உதவித் திட்டங்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்துடனும் உரோம் நகரில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் போட்டி, ஒருவர் ஒருவரில் நம்பிக்கையையும், திறந்த மனப்பான்மையையும், உரையாடல், பகிர்வு ஆகியவற்றையும் ஊக்குவிக்கும் என்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மதங்களுக்கிடையே அமைதி என்ற மையக்கருத்துடன், உலகின் பல்வேறு நாடுகளையும், மதங்களையும் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் இத்திங்கள் மாலை கலந்துகொண்ட விளையாட்டுப் போட்டிக்கு முன், அவர்களையும், பல நாடுகளிலிருந்து வந்திருந்த விருந்தினர்களையும் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மதங்களும் தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளும் அதேவேளையில், ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் மதிப்புடன் இணக்க வாழ்வை மேற்கொள்ள முடியும் என்பதற்கு இத்தகைய நிகழ்வுகள் உதவுவதாக உள்ளன என்று கூறினார்.
இன, மத, மொழி அடிப்படையில் மனிதர்கள், பாகுப்பாட்டுடன் நடத்தப்படும் நிலைகளைக் களைவதற்கு, ஒவ்வொரு விளையாட்டு வீரரும் முயலவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திங்கள் இரவு உரோம் நகரின் ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் உலகக் கால்பந்து வீரர்களின் விளையாட்டு நடந்துகொண்டிருந்த வேளையிலும், ஒலி ஒளிச் செய்தி ஒன்றை அனுப்பியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியை வளர்க்கும் பேராவலுடன் நடத்தப்படும் இந்தப் போட்டிக்கு தன் மனமார்ந்த வாழ்த்துக்களை அனுப்புவதாக இச்செய்தியில் தெரிவித்தார்.
இவ்விளையாட்டுப் போட்டியில், முன்னாள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட வீரர்களான Diego Maradona மற்றும் Roberto Baggio உட்பட, 50 விளையாட்டு வீர்கள் கலந்துகொண்டு, அர்ஜென்டீனா நாட்டின் Buenos Aires நகரில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கென பணியாற்றும் Scholas Occurrentes என்ற ஓர் அமைப்பிற்கு நிதி திரட்டினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. யாழ் ஆயர் : இலங்கை அரசும், மாநில அவையும் இணைந்து செயல்பட முன்வரவேண்டும்

செப்.02,2014. தமிழர்களின் எதிர்கால நலனையும் ஏக்கங்களையும் கருத்தில் கொண்டு அரசும் மாநில அவையினரும் ஒருவர் ஒருவர் மீது பிழைகளைக் காண்பதைத் தவிர்த்து, இணைந்து செயற்பட வேண்டிய அவசர தேவை உள்ளது என்றார் யாழ் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்கள்.
இதற்கு இரு தரப்பினரும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரம் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் வடமாநில முதலமைச்சர் திரு. P. விக்னேஸ்வரன் அவர்களையும் தனித்தனியாக சந்தித்து உரையாடிய பின்னர், ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள், கத்தோலிக்க வார இதழான 'பாதுகாவலன்' பத்திரிகைக்கு வழங்கிய நேர்முகத்தில் இவ்வாறு கூறினார்.
கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இலங்கை ஆயர் பேரவையின் கூட்டத்தொடரின் இறுதியில், இலங்கை ஆயர்கள் இணைந்து அரசுத்தலைவர் ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தபோது, தற்போதைய நாட்டின் நெருக்கடிகள் குறித்து ஆயர்கள் அவருடன் கலந்துரையாடியதாகவும், குறிப்பாக பொதுபல சேனாவுடைய அத்துமீறிய செயற்பாடுகள், இராணுவத்தின் நில அபகரிப்புப் போன்ற விடயங்களை அரசுத்தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள் கூறினார்.
யாழ் ஆயர் என்ற முறையில் தான் குறிப்பாக இரு விடயங்கள் பற்றி எடுத்துரைத்ததாகவும் கூறிய அவர், முதலாவதாக, போர் முடிந்து ஐந்து ஆண்டுகளும், மாநில அவை நிறுவப்பட்டு மூன்று ஆண்டுகளும் கடந்த நிலையிலும் சில அபிவிருத்தி நடவடிக்கைகள் தவிர்த்து எந்த வித அரசியல் தீர்வுகளும் தமிழர்களுக்கு முன்வைக்கவோ கொடுக்கப்படவோ இல்லை என்பதும், இரண்டாவதாக, தமிழர் குடிநிலங்களும், அவர்களது வழிபாட்டுத் தலங்களும் இராணுவத்தின் நில அபகரிப்புக்கு உள்ளாவதும் மிக வேதனைக்குரியது என்பதை அரசுத்தலைவரிடம் முறையிட்டதாகவும்  ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Jaffna diocese  
                                                             
5. ஈராக்கில் துன்புறும் மக்களுக்காக பாகிஸ்தானில் செபவழிபாடு

செப்.02,2014. ஈராக் மற்றும் காசாவில் வன்முறைக்குப் பலியாகிவரும் அப்பாவி மக்களுக்காக மெழுகுதிரி ஏந்திய செபவழிபாடு ஒன்றை மேற்கொண்டனர் பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண்கள்.
பல்வேறுக் கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த மகளிர் ஒன்றுகூடி நடத்திய இந்த செபவழிபாட்டில், ஈராக் மற்றும் காசாவில் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களுக்கு ஐ.நா. அமைப்பு பாதுகாப்பு உறுதியை வழங்கவேண்டும் என விண்ணப்பிக்கப்பட்டது.
அப்பாவி மக்களின் இரத்தத்தால் இந்த உலகு மேலும் சிகப்பாகிக்கொண்டு வருவது நிறுத்தப்படவேண்டும் என்ற நோக்குடன் இவ்விண்ணப்பங்களையும் செபங்களையும் முன்வைப்பதாக உரைத்த இந்த கிறிஸ்தவ மகளிர், அனைத்துலக சமுதாயத்திற்கும், போரிடும் துருப்புகளுக்கும் தங்கள் உருக்கமான வேண்டுகோளையும் வைத்துள்ளனர்.

ஆதாரம் : EWTN

6. Boko Haram அச்சுறுத்தலுக்குப் பயந்து, பாதுகாப்பு வீரர்களுடன் நடைபோடுவது, மக்களை தன்னிடமிருந்து பிரித்துவிடும் - பேராயர் Ignatius Kaigama

செப்.02,2014. நைஜீரியாவில் Boko Haram தீவிரவாதிகளால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றபோதிலும், தனக்கென தனியாக எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் தேவையில்லை என்று அறிவித்துள்ளார், அந்நாட்டுப் பேராயர் Ignatius Kaigama அவர்கள்.
பாதுகாப்பு வீரர்களுடன் நடைபோடுவது, மக்களை தன்னிடமிருந்து பிரித்துவிடும் என்று கூறிய Jos உயர்மறைமாவட்டப் பேராயர் Kaigama அவர்கள், சில வேளைகளில் அச்சம் தனக்குள் எழுந்தாலும், மனிதகுலத்தின் ஒன்றிப்பிற்காகவும் வழிபாட்டு உரிமைக்காகவும் உயிர் துறக்க தான் தயாராகவே இருப்பதாகக் கூறினார்.
குடும்பம், குழந்தைகள் என்ற நெருங்கிய உறவுகளைத் துறந்து இறைவனுக்குப் பணியாற்ற தான் வந்துள்ளதால், தான் இவ்வுலகைவிட்டு திடீரென மறைந்தாலும், அதனால் பெரும் இழப்புக்கள் ஏதும் இராது என்ற உணர்வே தனக்கு இந்த உள்மனச் சுதந்திரத்தைத் தந்துள்ளது என்று பேராயர் Kaigama அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CCN

7. ஒடிஸ்ஸா வெள்ள துயர்துடைப்புப் பணிகளுக்கு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் விண்ணப்பம்

செப்.02,2014. ஒடிஸ்ஸாவில் அண்மைய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கென அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு 10 இலட்சம் டாலர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.
பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புக்களை இழந்துள்ளதாகவும், அவர்கள் உடைமைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், வருங்காலம் குறித்த அச்சத்துடனேயே அவர்கள் வாழ்வதாகவும் அறிவித்தார், இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி, Thangsha Sebastian அவர்கள்.
ஒடிஸ்ஸாவின் அண்மைய வெள்ளப்பெருக்கால், 23 மாவட்டங்களில் 3990 கிராமங்களைச் சார்ந்த ஏறத்தாழ 17 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CCN

8. உத்திரப்பிரதேசத்தில் கிறிஸ்தவக் கோவிலை ஆக்ரமித்தோர் கைது

செப்.02,2014. உத்திரப்பிரதேசத்தில் ஒரு கிறிஸ்தவக் கோவிலை ஆக்ரமித்து அதனை இந்து கோவிலாக மாற்றியக் குற்றத்திற்காக பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 11பேரைக் கைதுச் செய்துள்ளது அம்மாநிலக் காவல்துறை.
இராஷ்டிரிய சுவயம்சேவாக், பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த இந்து தீவிரவாதிகள், உத்தரபிரதேசத்தின் Asroi எனுமிடத்தில் உள்ள கிறிஸ்தவக்கோவிலை ஆக்ரமித்து அங்குள்ள சிலுவைகளையும் ஏனைய வழிபாட்டுப் பொருட்களையும் அகற்றி, கோவிலுக்குள் ஹோமம் வளர்த்து அதனை இந்து கோவிலாக அறிவித்தனர்.
தற்போது இந்த கோவில் கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளபோதிலும், சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உத்திரப்பிரதேசத்தில் தொடர்வதாக அங்குள்ள கிறிஸ்தவர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : ICN

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...