செய்திகள் - 31.05.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - சிரியாவில் துன்புறும் மக்களுக்காக மீண்டும் ஒருமுறை விண்ணப்பம்
2. திருத்தந்தை பிரான்சிஸ் - ஆயரின் பணியில் முக்கிய இடம் பெறுபவர்கள் வலுவற்ற, வறியோர்
3. செபங்களின் வலிமையை நம்பினால், உலகின் போர்கள் பலவற்றைத் தீர்க்க முடியும் - திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்
4. Cameroon நாட்டின் Bamenda உயர் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் கர்தினால் Filoni
5. இஸ்லாமியப் பெண், கல்லால் எறிந்து கொல்லப்பட்ட பயங்கர நிகழ்வு, பெரும் கண்டனத்திற்குரியது - லாகூர் முன்னாள் பேராயர் Saldhana
6. மே 31, புகையிலை எதிர்ப்பு உலக நாள்
7. சார்ஸ் (SARS) மற்றும் மெர்ஸ் (MERS) நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - சிரியாவில் துன்புறும் மக்களுக்காக மீண்டும் ஒருமுறை விண்ணப்பம்
மே,31,2014.
சிரியாவில் ஒவ்வொரு நாளும் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும் மக்களுக்காக
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் ஒருமுறை விண்ணப்பம்
எழுப்பியுள்ளார்.
திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான Cor Unum அவையைச் சார்ந்தவர்கள், ஏனைய பிறரன்பு அமைப்புக்களுடன் சேர்ந்து, சிரியாவின் நிலை குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் உரோம் நகரில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்திற்கு தன் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அடுத்தவரைப் பற்றிய அக்கறையின்மையின் உலகமயமாக்கல்" என்று தான் முன்னர் கூறிய கருத்தை மீண்டும் வலியுறுத்தி, சிரியாவின் துன்பங்களுக்கு நாம் பழகிப் பொய், அவர்களை மறந்துவிடக் கூடாது என்று விண்ணப்பித்தார்.
ஓராண்டுக்கு முன்னர், புனித
பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் சிரியாவின் அமைதிக்கென உலக மக்கள்
அனைவரோடும் இணைந்து செபித்ததை மீண்டும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, உலகில் நிகழும் துன்பங்களைக் கண்டும் அக்கரையின்றி அகன்று போவதே, தீமைகள் வளர்வதற்குத் துணையாகிறது என்று எடுத்துரைத்தார்.
"வாழ்வின் கடினமானத் தருணங்களில், இறைவனின் தாயிடம் சென்றால், பாதுகாப்பைக் காண முடியம்" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை வழங்கிய Twitter செய்தியாக அமைந்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் - ஆயரின் பணியில் முக்கிய இடம் பெறுபவர்கள் வலுவற்ற, வறியோர்
மே,31,2014. ஆயர் பணி என்பது, அதிகாரத்தையும், பெருமையையும் குறிக்கும் பணி அல்ல; மாறாக, அது பணிவுடன் மேற்கொள்ளப்படவேண்டிய பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், அருள் பணியாளர் Fabio Fabene அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆயராகத் திருநிலைப்படுத்தியத் திருப்பலியில் இவ்விதம் மறையுரையாற்றினார்.
ஆயர்கள்
திருநிலைப்பாடுத் திருப்பலியில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான மறையுரையை
அடித்தளமாகக் கொண்டு திருத்தந்தை வழங்கிய மறையுரையில், "உங்களில் பெரியவர், உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்" என்று இயேசு தன் சீடர்களுக்குக் கூறிய அறிவுரையை வலியுறுத்திப் பேசினார்.
ஆயர்களின் கண்காணிப்பில், ஏனைய அருள் பணியாளர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஆயரின் பணியில் முக்கிய இடம் பெறுபவர்கள் மக்கள், குறிப்பாக, வலுவற்ற, வறியோர் என்பதையும் ஆயர்கள் மறக்கக்கூடாது என்று எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. செபங்களின் வலிமையை நம்பினால், உலகின் போர்கள் பலவற்றைத் தீர்க்க முடியும் - திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்
மே,31,2014. பாலஸ்தீனா, இஸ்ரேல் ஆகிய இரு நாட்டுத் தலைவர்கள் வத்திக்கானில் சந்திப்பது, அமைதி வேண்டி செபத்திற்காக மட்டுமே என்றும், உலக அமைதிக்கு செபம் ஒரு வலிமை வாய்ந்த கருவி என்றும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
புனித பூமி பயணத்தின்போது திருத்தந்தை விடுத்த அழைப்பை ஏற்று, ஜூன் 8, ஞாயிறன்று, பாலஸ்தீனா
மற்றும் இஸ்ரேல் அரசுத் தலைவர்கள் வத்திக்கானில் மேற்கொள்ளும் அமைதி செப
முயற்சி குறித்துப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.
ஆயுதங்களின் வலிமையை நம்புவதைக் காட்டிலும், ஆண்டவரிடம் எழுப்பும் செபங்களின் வலிமையை நம்பினால், உலகின் போர்கள் பலவற்றைத் தீர்க்கமுடியும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் மேலும் கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர் குறித்து முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் விடுத்துள்ள விண்ணப்பங்களைக் குறித்துப் பேசியத் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், சிரியாவின் உடனடித் தேவைகள், மனிதாபிமான உதவிகள் என்பதை வலியுறுத்தினார்.
மேலும், சிரியாவின் உள்நாட்டுப் போரையொட்டி கடத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆயர்கள், அருள்
பணியாளர்கள் அனைவரையும் வன்முறையாளர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும்
என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. Cameroon நாட்டின் Bamenda உயர் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் கர்தினால் Filoni
மே,31,2014. Cameroon நாட்டில்
நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது
நற்செய்திப் பணிக்கென இந்த நாட்டைச் சார்ந்த பலர் முன்வந்திருப்பது அழகான
ஓர் அடையாளம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Cameroon நாட்டின் Bamenda உயர்
மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள அங்கு
சென்ற நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால்
Fernando Filoni அவர்கள் இவ்வாறு கூறினார்.
இந்த நூற்றாண்டு விழாவையொட்டி, மே 29, வியாழனன்று, கர்தினால் Filoni அவர்கள், Bamenda உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 9 அருள் பணியாளர்களையும், 7 தியாக்கொன்களையும் திருநிலைப்படுத்தினார்.
நற்செய்தி எனும் கொடையை பெறும் எவரும், அதைத் தன் சொந்த உடைமையாகக் கருதாமல், மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு கொடையாக அதைக் கருதவேண்டும் என்று கர்தினால் Filoni அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.
ஆதாரம் : Fides
5. இஸ்லாமியப் பெண், கல்லால் எறிந்து கொல்லப்பட்ட பயங்கர நிகழ்வு, பெரும் கண்டனத்திற்குரியது - லாகூர் முன்னாள் பேராயர் Saldhana
மே,31,2014. பாகிஸ்தான் லாகூரில் Farzana Bibi என்ற இஸ்லாமியப் பெண், கல்லால் எறிந்து கொல்லப்பட்ட பயங்கர நிகழ்வு, பெரும் கண்டனத்திற்குரியது என்று லாகூர் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் Lawrence Saldhana அவர்கள் கூறினார்.
குடும்பத்தினரின் இசைவு இன்றி, தான் விரும்பிய Mohammad Iqbal என்ற இஸ்லாமியரை மணந்ததற்காக, Farzana Bibi என்ற பெண், மே 27ம் தேதி, லாகூர் நீதி மன்றத்திற்கு முன், பகல் நேரத்தில், அவரது தந்தையாலும், மற்ற உறவினர்களாலும் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார்.
இந்தக் கொடுமையைக் கண்டனம் செய்த பாகிஸ்தான் பிரதமர், இக்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யவும், இந்த நிகழ்வைத் தடுக்காமல் இருந்த காவல் துறையினர் மீது விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
மானத்தைக் காக்கும் கொலைகள் என்ற பெயரில், கடந்த ஆண்டு மட்டும் 900க்கும் அதிகமான பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிகாரப் பூர்வத் தகவல் என்றால், அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெறும் இத்தகையக் கொலைகள் இன்னும் பல நூறு அதிகம் என்று Fides செய்திக்குறிப்பு கூறுகிறது.
ஆதாரம் : Fides
6. மே 31, புகையிலை எதிர்ப்பு உலக நாள்
மே,31,2014. புகைபொருட்கள் மீது பெருமளவு வரி விதிக்குமாறு WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் உலகநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்மூலம்
புகைபிடிப்போரின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கமுடியும் என்றும்
நலப்பணிகளுக்கான வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் அந்த அமைப்பு
தெரிவித்துள்ளது.
மே 31, இச்சனிக்கிழமையன்று, புகையிலை எதிர்ப்பு உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, உலக நலவாழ்வு நிறுவனம் சிகரெட்டுக்கள் மீதான வரியை 50 விழுக்காடு உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளது.
புகைத்தல் காரணமாக ஒவ்வொரு 6 நொடிக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகின்றது.
‘புகையிலைக்கான வரியை உயர்த்துவதைவிட புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வே முக்கியம்' என்கிறார் ஆவடியைச் சேர்ந்த தேவேந்திரன். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பழக்கத்துக்கு அடிமையான இவர், இன்று புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்.
வரி உயர்த்துவதை விடுத்து, புகையிலையால்
ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அதற்கு
செலவழிப்பது நல்ல பயனைத் தரும். தயவுசெய்து இன்றைய இளைஞர்களை என்னுடைய
நிலைமைக்கு ஆளாக்கி விடாதீர்கள் என்கிறார் தேவேந்திரன்.
ஆதாரம் : BBC / The Hindu
7. சார்ஸ் (SARS) மற்றும் மெர்ஸ் (MERS) நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பு
மே,31,2014. உலக அறிவியலாளர்களுடன் இணைந்த சுவிஸ் ஆய்வாளர்கள் கொரோனா (Coronavirus) என்ற ஒரு வகை கிருமிக்கான புதிய தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா என்ற கிருமியினால் ஏற்படும் சார்ஸ் (SARS) மற்றும் மெர்ஸ் (MERS) ஆகிய நோய்கள் மனிதனின் மேல் மற்றும் கீழ் சுவாச தடங்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதனால்
2002ம் ஆண்டு உலக முழுவதும் இந்த நோய் தாக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட
மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சவுதி அரேபியாவில் சுமார் 636 பேர்
பாதிக்கப்பட்டதுடன், 193 பேர் பலியாகினர்.
இந்நிலையில்
இந்நோயை போக்குவதற்கான மருந்தை சுவீடன் நாட்டை சார்ந்த எட்வர்ட் என்ற
அறிவியலாளரும் சுவிசை சேர்ந்த வால்கோர் என்ற ஆய்வாளரும் தங்களது ஆராய்ச்சி
குழுவினருடன் இணைந்து, k22 என்ற மருத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த மருந்து கொரோனா வைரஸ் கிருமியை தாக்கிக் கொல்லும் வல்லமை படைத்தது என அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment