செய்திகள் - 11.06.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. Sant'Egidio என்ற பிறரன்பு குழுமத்தால் பராமரிக்கப்படும் வறியோரை, திருத்தந்தை பிரான்சிஸ் சந்திக்கிறார்
2. பணிவுடன் ஒருவர் ஒருவரை நெருங்கினால், கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்னும் ஆழமாக வேரூன்ற முடியும் - கர்தினால் Kurt Koch
3. உலகக் கால்பந்து போட்டியின்போது, மனித வர்த்தகம் நடைபெறுவதைத் தடுக்க, Brasilia நகரில், இருபால் துறவியர் அமைப்பின் மாபெரும் பேரணி
4. Mosul நகரைவிட்டு ஓடிச்செல்லும் மக்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்காவிடில், பெரியதொரு நெருக்கடி உருவாகும் - பேராயர் Shimoun Emil Nona
5. புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைகள் கடினமான நிலையில் பயன்படுத்தப்படக்கூடாது - அமெரிக்க ஆயர் பேரவை
6. படகு மக்களும் உண்மையான மனிதப் பிறவிகள் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும் - ஆஸ்திரேலிய ஆயர்கள்
7. எரிட்ரியாவில் புலம்பெயரும் மக்களின் பிரச்சனைகள் களையப்பட ஆயர்கள் வேண்டுகோள்
8. வளரும் நாடுகளில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மந்தமான பொருளாதாரம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. Sant'Egidio என்ற பிறரன்பு குழுமத்தால் பராமரிக்கப்படும் வறியோரை, திருத்தந்தை பிரான்சிஸ் சந்திக்கிறார்
ஜூன்,11,2014. ஜூன் 15, வருகிற ஞாயிறு மாலை, உரோம் நகரில் பணியாற்றிவரும் Sant'Egidio என்ற பிறரன்பு குழுமத்தால் பராமரிக்கப்படும் வறியோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோம் நகரின் Trastevere பகுதியில் அமைந்துள்ள சதுக்கத்திற்கு மாலை 5 மணிக்குச் சென்றடையும் திருத்தந்தை, அங்குள்ள அன்னை மரியா பசிலிக்காவில் பாதுகாக்கப்பட்டுவரும் மிகப் பழமை வாய்ந்த அன்னை மரியா திரு உருவத்திற்கு முன்பு செபிப்பார்.
பின்னர் சதுக்கத்தில் கூடியுள்ள மக்களைச் சந்தித்துவிட்டு, Sant'Egidio குழுமத்தால் நடத்தப்படும் மையத்தில், நிர்வாகிகளுடனும், வறியோருடனும் சந்திப்புக்கள் மேற்கொள்வார் திருத்தந்தை.
மேலும், ஜூன் 21, அடுத்த வாரம் சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் Calabria பகுதியில் அமைந்துள்ள Cassano all'Jonio மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு வத்திக்கானைவிட்டு ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றைய நாள் முழுவதும் அம்மறைமாவட்டத்தின் பல்வேறு குழுவினரைச் சந்தித்து, திருப்பலியாற்றிய பின், மாலை, 7 மணியளவில் வத்திக்கான் வந்து சேருவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி/VIS
2. பணிவுடன் ஒருவர் ஒருவரை நெருங்கினால், கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்னும் ஆழமாக வேரூன்ற முடியும் - கர்தினால் Kurt Koch
ஜூன்,11,2014.
கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற இலக்கை நோக்கி கத்தோலிக்கத் திருஅவையும் ஏனைய
கிறிஸ்தவ சபைகளும் கடந்த 50 ஆண்டுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் உற்சாகம்
தருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Connecticut மாநிலத்தில் Fairfield பல்கலைக் கழகத்தில் இவ்வாரம் நடைபெற்றுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
அண்மையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணத்தில் தானும் அவருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்ததை, தன் செய்தியில் குறிப்பிட்ட கர்தினால் Koch அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையில், ஒருவர் ஒருவரை வரவேற்கும் மனப்பான்மை நம்மிடம் வளரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவம் என்பது தனிப்பட்ட மனிதர்களிடம் தங்கிவிடுவதில் அர்த்தமில்லை, மாறாக, அது ஒரு குடும்பத்தில் வளரவேண்டிய சிறப்பு அம்சம் என்று கர்தினால் Koch அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் அனைவருமே தவறக் கூடியவர்கள் என்ற பணிவுடன் ஒருவர் ஒருவரை நெருங்கினால், கிறிஸ்தவ
ஒன்றிப்பு இன்னும் ஆழமாக நம் மத்தியில் வேரூன்ற முடியும் என்று கர்தினால்
ஜான் ஹென்றி நியூமன் அவர்கள் கூறியதை நினைவுறுத்திய கர்தினால் Koch அவர்கள், இத்தகையப் பணிவை வளர்க்க முயல்வோம் என்று விண்ணப்பித்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. உலகக் கால்பந்து போட்டியின்போது, மனித வர்த்தகம் நடைபெறுவதைத் தடுக்க, Brasilia நகரில், இருபால் துறவியர் அமைப்பின் மாபெரும் பேரணி
ஜூன்,11,2014. ஜூன் 12, இவ்வியாழனன்று பிரேசில் நாட்டில் துவங்கவிருக்கும் உலகக் கால்பந்து போட்டியின்போது, மனித வர்த்தகம் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், இப்புதன் மாலை, Brasilia நகரில், அந்நாட்டின் இருபால் துறவியர் அமைப்பு, மாபெரும் பேரணி ஒன்றை மேற்கொள்கின்றது.
பிரேசில் ஆயர் பேரவையின் ஆதரவுடன், இன்னும் பல்வேறு நாடுகளின் துறவு அமைப்புக்கள் இணைந்து நடத்தும் இந்த பேரணியில், "அனைவருக்கும் நீதி கிடைக்க, நேரிய விளையாட்டு விதிமுறைகள் பத்து" என்ற தலைப்பில், பிரேசில் அரசிடம் பத்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
மேமாதம் 19ம் தேதி, São Sebastião என்ற உயர்மறைமாவட்டத்தில் துவக்கப்பட்ட இந்த முயற்சி, பல்வேறு நிலைகளைக் கடந்து, ஜூன் 11ம் தேதி, Brasilia நகரில் பேரணியாக மேற்கொள்ளப்படுகிறது.
"நூறு நாட்கள் அமைதி" என்ற விருதுவாக்குடன் துவக்கப்பட்ட இந்த முயற்சிகள், "துப்பாக்கி, போதைப்பொருள், வன்முறை, இனப் பாகுபாடு அற்ற உலகம்" ஒன்றை உருவாக்குவதில் தீவிரமடைந்துள்ளன என்று பேரணி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. Mosul நகரைவிட்டு ஓடிச்செல்லும் மக்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்காவிடில், பெரியதொரு நெருக்கடி உருவாகும் - பேராயர் Shimoun Emil Nona
ஜூன்,11,2014. ஈராக் நாட்டின் Mosul நகரைவிட்டு ஓடிச்செல்லும் மக்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்காவிடில், இது பெரியதொரு நெருக்கடியாக மாறும் என்று Mosul கல்தேய வழிபாட்டு முறை பேராயர் Shimoun Emil Nona அவர்கள் கூறியுள்ளார்.
புரட்சிக் குழுவினரின் தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ள Mosul நகரிலிருந்து
கடந்த சில மணி நேரங்களில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை
விட்டு ஓடிவிட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Emil Nona அவர்கள், அந்நகரை இதுவரைப் பாதுகாத்து வந்த இராணுவத்தினரும் தங்கள் சீருடைகளைக் களைந்துவிட்டு, மக்களோடு மக்களாக அந்நகரை விட்டு வெளியேறி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களில், இந்நகரில் உருவான பயங்கரச் சூழல் குறித்து ஆசிய செய்திக்கு அளித்துள்ள பேட்டியில், Mosul நகரில் சட்டத்தை நிலைநிறுத்தக்கூடிய காவல் துறையும், இராணுவமும் இல்லாததால், அந்நகரம் அழிவை நோக்கிச் செல்கிறது என்று பேராயர் Emil Nona அவர்கள் கூறியுள்ளார்.
அரசியல், இனம், மதம்
என்று பல வழிகளிலும் பிளவுபட்டு நிற்கும் ஈராக் நாட்டிற்கு வலிமை வாய்ந்த
ஓர் அரசு உருவாவது மிக அவசரமானத் தேவை என்றும் பேராயர் Emil Nona அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : AsiaNews
5. புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைகள் கடினமான நிலையில் பயன்படுத்தப்படக்கூடாது - அமெரிக்க ஆயர் பேரவை
ஜூன்,11,2014.
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் தஞ்சம் தேடிவரும் புலம்பெயர்ந்தோரை
கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைகள் இனியும் அதே கடினமான நிலையில்
பயன்படுத்தப்படக்கூடாது என்று அமெரிக்க ஆயர் பேரவை, அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
ஜூன் 10, இச்செவ்வாய் முதல், 13ம் தேதி, இவ்வெள்ளி முடிய, அமெரிக்காவின் New Orleans நகரில் நடைபெறும் அமெரிக்க ஆயர் பேரவை ஆண்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை, அமெரிக்க ஆயர்கள் சார்பில், Louisville பேராயர் Joseph Edward Kurtz அவர்கள், அரசுக்கு அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு, ஜூன் 27ம் தேதி, புலம்பெயர்ந்தோர் தொடர்பாக, அமெரிக்கப் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மாற்றங்கள், அரசின் பிரதிநிதிகள் அவையில் இன்னும் விவாதத்திற்கு கொண்டுவரப்படாமல் இருப்பது, நல்லதொரு அடையாளம் அல்ல என்று ஆயர்களின் விண்ணப்பம் சுட்டிக்காட்டுகிறது.
மக்களின் மேய்ப்பர்கள் என்ற அடிப்படையில், இந்த மனிதப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதில் ஆயர்கள் தீவிரமாக உள்ளனர் என்று கூறிய பேராயர் Kurtz அவர்கள், குறிப்பாக, இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அரசு விரைவில் நல்ல முடிவுகளைத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல்
1ம் தேதி முதல் மேமாதம் இறுதிவரை அமெரிக்க ஆயர்கள் பல்வேறு தருணங்களில்
புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொணரும் முயற்சிகளில்
ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. படகு மக்களும் உண்மையான மனிதப் பிறவிகள் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும் - ஆஸ்திரேலிய ஆயர்கள்
ஜூன்,11,2014. நாடுவிட்டு நாடு செல்லும் மக்களுக்குத் தஞ்சம் அளிப்பது, மனித முயற்சிகளிலேயே தலைசிறந்த ஒன்று என்று ஆஸ்திரேலிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
பல்வேறு நாடுகளிலிருந்து, ஆஸ்திரேலியாவை நாடி வரும் புலம்பெயர்ந்தோர், பொதுவாக, 'படகு மக்கள்' (boat people) என்று
அழைக்கப்படுகின்றனர். படகு மக்களும் உண்மையான மனிதப் பிறவிகள் என்பதை
முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஆஸ்திரேலியாவின், டார்வின் ஆயர் Eugene Hurley அவர்கள் கூறினார்.
தஞ்சம் தேடிவரும் மக்களிடம் அரசும், ஏனையோரும் பயன்படுத்தும் கடினமான, புண்படுத்தும் வார்த்தைகளில் துவங்கும் வன்முறை, முதலில் களையப்பட வேண்டும் என்று ஆயர் Hurley அவர்கள் கேட்டுக் கொண்டார்.
ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் தொடர்ந்துவரும் நிலையற்ற, வன்முறை நிறைந்தச் சூழல்களால், ஆஸ்திரேலியாவை நாடிவரும் மக்களை, அரசும், ஆஸ்திரேலிய மக்களும் வரவேற்கும் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சம் தேடிவரும் மக்களைத் தடுத்துவைக்கும் முகாம்கள், மனநிலை பாதிப்பை உருவாக்கும் தொழிற்சாலைகள் என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இத்தகைய நிலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வெகுவாக வேதனைப்படுத்தும் நிலையாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆதாரம் : CNA
7. எரிட்ரியாவில் புலம்பெயரும் மக்களின் பிரச்சனைகள் களையப்பட ஆயர்கள் வேண்டுகோள்
ஜூன்,11,2014.
எரிட்ரியா நாடு சுதந்திரம் அடைந்ததன் 23வது ஆண்டு நிறைவை முன்னிட்டு
மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க
ஆயர்கள்.
“உனது சகோதரர் எங்கே?” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், அந்நாட்டு மக்கள் தரமான வாழ்வு தேடி வேறு நாடுகளுக்குக் குடிபெயர்வதில் ஏற்படும் பிரச்சனைகள் களையப்படுமாறு கேட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான எரிட்ரிய மக்கள், நல்லதொரு வாழ்வைத் தேடி ஐரோப்பாவுக்குச் செல்வதையும், அவ்வாறு செல்லும் பயணத்தில் மத்திய தரைக் கடலில் பலர் இறப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர் ஆயர்கள்.
நீதியும் வேலையும் பேச்சுச் சுதந்திரமும் கிடைக்கும் நாடுகளையும், அமைதி நிலவும் நாடுகளையும் நாடி எரிட்ரியா இளையோர் செல்கின்றனர் என்றும், குடும்ப
ஒற்றுமை சிதைவுபட்டிருப்பதே இந்நாட்டினர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான
முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
இராணுவம், மறுவாழ்வு மையங்கள், சிறைகள், எனக் குடும்பத்தினர் பிரிந்து உல்ளனர் எனவும்,
வயதானவர்கள் கைவிடப்பட்ட நிலையில் வாழ்கின்றனர் எனவும் இன்றைய எரிட்ரியக்
குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் குறிப்பிட்டுள்ளனர் ஆயர்கள்.
எரிட்ரியா நாடு சுதந்திரம் அடைந்ததன் 23வது ஆண்டு நிறைவு, 2014ம் ஆண்டு மே 25ம் தேதி சிறப்பிக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. வளரும் நாடுகளில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மந்தமான பொருளாதாரம்
ஜூன், 11,2014. வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இந்த ஆண்டும் மந்தமாகவே இருக்குமென்று தெரிவதாக உலக வங்கி கூறியுள்ளது.
உலகப் பொருளாதாரத்தைக் கணித்து உலக வங்கி ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடும் அறிக்கையில், இம்முறை வளர்ச்சி ஐந்து விழுக்காட்டுக்கு குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகில்
ஏழ்மை மிகுந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு
தேவையான அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப் போதுமான பொருளாதார வளர்ச்சி
இல்லை என்று உலக வங்கியின் தலைவர் Jim Kim தெரிவித்துள்ளார்.
ஏழை நாடுகளில் எரிசக்தித்துறை, உள்கட்டமைப்புத்துறை, வர்த்தகச் சந்தைகள் போன்றவற்றில் பிரச்சனைகள் இருப்பதே இந்த மந்தமான வளர்ச்சிக்குக் காரணம் என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
பொருளாதார
சீர்திருத்த செயல்திட்டங்களுக்கு மீண்டும் செயலூக்கம் அளிக்க இந்த
நாடுகளின் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment