Friday, 28 December 2012

Ctholic News in Tamil -27/12/12

1. வியட்நாமில் நடைபெற்ற பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டத்தின் தீர்மானங்கள் 

2. ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக இலங்கையை உருவாக்க அர்ப்பணிப்போம்

3. வெறுங்கைகளுடன் தோன்றிய கிறிஸ்து மக்கள் மனங்களில் இன்னும் வாழ்கிறார் - மியான்மார் பேராயர் Charles Bo

4. பாரம்பரியங்களின் சங்கமமாக விளங்குவது கிறிஸ்துபிறப்புப் பெருவிழா - ஆயர் Mikael Mouradian

5. பெத்லகேமில் ஒலித்த செய்தியை இவ்வுலகம் இன்னும் மறுத்து வருகிறது - முதுபெரும் தலைவர் Bartholomew

6. சீனப் பேரரசரின் அரண்மனையில் ஓவியராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்சகோதரரைப் பற்றிய ஆவணப் படம்

7. சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ்: வாழ்த்துகளை விட பரிசுகள் அனுப்பியோரே அதிகம்

------------------------------------------------------------------------------------------------------

1. வியட்நாமில் நடைபெற்ற பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டத்தின் தீர்மானங்கள் 

டிச.27,2012. முத்திபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் கூறிவந்துள்ள புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் விளங்கும் உண்மையான கிறிஸ்துவ வாழ்வு என்ற அடித்தளத்தில் எழுப்பப்படவேண்டும் என்று ஆசிய ஆயர்கள் கூறினர்.
டிசம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி முடிய வியட்நாமில் நடைபெற்ற பத்தாவது ஆசிய ஆயர் பேரவைக் கூட்டத்தில் ஆயர்கள் நிறைவேற்றியத் தீர்மானங்களின் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு, ஆசிய ஆயர்கள் பேரவை துவக்கப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவு, கத்தோலிக்க மறைகல்வி வெளியிடப்பட்ட 20ம் ஆண்டு நிறைவு ஆகிய முப்பெரும்  நிறைவுகளைக் கொண்டாடும் இவ்வாண்டில், பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டம் நடைபெறுவது சிறப்பான ஒரு நிகழ்வு என்று ஆயர்களின் அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.
பத்தாவது ஆசிய ஆயர்கள் கூட்டம் வியட்நாமில் நடைபெற்றதால், அங்குள்ள கத்தோலிக்கத் திருஅவை வெளிப்படுத்திவரும் விசுவாசம் தங்களுக்கு ஒரு பெரும் உந்துசக்தியாக உள்ளதென்று ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வறிக்கையில் காணப்படும் பத்து அம்சங்களில், இயேசு கிறிஸ்துவுடன் கொள்ளவேண்டிய தனிப்பட்ட உறவு, மறைபரப்புப் பணியில் காட்டும் ஆழ்ந்த ஆர்வம், ஏனைய மதங்களுடன் உரையாடல், தாழ்ச்சியில் ஆற்றப்படும் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களுடன் கொள்ளும் ஒற்றுமை, கடவுளின் படைப்பைப் பேணுதல் என்ற பல்வேறு கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன.
உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினரை உள்ளடக்கிய ஆசிய நாடுகளில், கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் கொண்டு செல்வதற்குத் தேவையான எண்ணிக்கையில் நாம் இருப்பது இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடை என்று ஆயர்களின் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.

2. ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக இலங்கையை உருவாக்க அர்ப்பணிப்போம்

டிச.27,2012. பல்வேறு பிறரன்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி உழைத்துவரும் இலங்கை திருஅவை அதையும் தாண்டிச் சென்று, எழைகளை இன்னும் ஏழைகளாக வைத்திருக்கும் காரணகாரியங்கள் குறித்து ஆராய வேண்டும் என்ற அழைப்பை, கிறிஸ்துபிறப்புப் பெருவிழா நமக்கு விடுக்கின்றது என தங்கள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளனர் இலங்கை ஆயர்கள்.
கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கென சிறப்புச்செய்தி வெளியிட்டுள்ள இலங்கை ஆயர்கள், எழைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தவும், நமது சமூகங்களைச் சூழ்ந்துள்ள துன்ப நிலைகள் குறித்து உணர்ந்துச் செயல்படுபவர்களாக வாழவும், கிறிஸ்துபிறப்புப் பெருவிழா அழைப்பு விடுக்கின்றது என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மனித மாண்பு மதிக்கப்படா நிலைகளும், குற்றங்கள் தண்டனையின்றி தப்பும் கலாச்சாரமும் பெருகிவருவது குறித்த கவலையையும் அச்செய்தியில் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.
இறைவிருப்பத்திற்கு எதிராகச் செல்லும் அனைத்தையும் மாற்றியமைக்க நம்மை அர்ப்பணித்து, நம்மிடையே அமைதியையும் ஒப்புரவையும் கொண்டுவருபவர்களாக ஒவ்வொருவரும் உழைப்போம் என்ற அழைப்பையும் விசுவாசிகளுக்கு விடுத்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.
அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக இலங்கையை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம் எனவும் தங்கள் செய்தியின் இறுதியில் விண்ணப்பித்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.

3. வெறுங்கைகளுடன் தோன்றிய கிறிஸ்து மக்கள் மனங்களில் இன்னும் வாழ்கிறார் - மியான்மார் பேராயர் Charles Bo

டிச.27,2012. அதிகாரம், செல்வம், படைபலம் என்று தங்கள் கைகளை நிறைத்து வாழ்ந்த உலகத் தலைவர்கள் இன்று மக்கள் நினைவுகளில் வாழ்வதில்லை, மாறாக, வெறுங்கைகளுடன் குழந்தையாய்த் தோன்றிய கிறிஸ்துவோ மக்கள் மனங்களில் இன்னும் வாழ்கிறார் என்று மியான்மார் பேராயர் ஒருவர் கூறினார்.
Yangon உயர் மறைமாவட்டத்தின் பேராயரான Charles Bo, கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியை, தூய மரியா பேராலயத்தில் நிறைவேற்றியபோது, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
பல ஆண்டுகளாக இராணுவ அடக்கு முறைகளைச் சந்தித்து வந்துள்ள மியான்மார் நாட்டு மக்களுக்கு, அண்மையில் உருவாகியுள்ள மதச் சுதந்திரம் இறைவன் வழங்கியுள்ள பெரும் கொடை என்று பேராயர் தன் மறையுரையில் மகிழ்வுடன் கூறினார்.
பேராலயத்தில் நிகழ்ந்தத் திருவிழிப்புத் திருப்பலியில் கலந்து கொள்ள அரசு அதிகாரிகளுக்கும், எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiக்கும் பேராயர் Charles Bo அழைப்பு விடுத்திருந்தார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

4. பாரம்பரியங்களின் சங்கமமாக விளங்குவது கிறிஸ்துபிறப்புப் பெருவிழா - ஆயர் Mikael Mouradian

டிச.27,2012. கிறிஸ்துபிறப்புப் பெருவிழா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமமாக விளங்கும் ஒரு விழா என்று அமெரிக்க, கனடா நாடுகளின் கத்தோலிக்க ஆர்மீனியத் திருஅவையின் தலைவரான ஆயர் Mikael Mouradian கூறினார்.
இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவையொட்டி செய்தி வெளியிட்ட ஆயர் Mouradian, நம்பிக்கை ஆண்டைத் துவக்கிவைத்த வேளையில், வானதூதரின் வார்த்தைகளைக் கேட்ட மரியா நமக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியதைத் தன் செய்தியில் சுட்டிக் காட்டினார்.
மகிழ்வையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கும் இத்திருநாளின்போது, அமெரிக்காவில் அண்மையில் குழந்தைகள் கொல்லப்பட்டது, சிரியா நாட்டில் தொடர்ந்துவரும் வன்முறைகள் ஆகியவை இத்திருநாளின் மகிழ்வைக் குறைக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார் ஆயர் Mouradian.
அன்னை மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நம்பிக்கையில் நம் வாழ்வைத் தொடர்ந்தால், நம் வாழ்வு குழந்தையாய்ப் பிறந்துள்ள இறைவனின் அழகை வெளிப்படுத்தும் என்று ஆர்மீனிய கத்தோலிக்கத் தலைவரான ஆயர் Mouradian கூறினார்.

5. பெத்லகேமில் ஒலித்த செய்தியை இவ்வுலகம் இன்னும் மறுத்து வருகிறது - முதுபெரும் தலைவர் Bartholomew

டிச.27,2012. "இறைவனுக்கு மகிமையும், நல்மனத்தோருக்கு அமைதியும்" என்று பெத்லகேமில் ஒலித்த செய்தியை இவ்வுலகம் இன்னும் மறுத்து வருகிறது என்று Constantinople Ecumenical சபையின் முதுபெரும் தலைவர் Bartholomew கூறினார்.
உலகப் பொருட்களின் மீது மனித சமுதாயம் வளர்த்துள்ள கட்டுக்கடங்காத பேராசையின் ஒரு வெளிப்பாடே நமது வன்முறைகள் என்று முதுபெரும் தலைவர் Bartholomew, கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவன்று வழங்கிய செய்தியில் குறிப்பிட்டார்.
மதம், அரசியல், பொருளாதாரம் என்ற பல நிலைகளிலும் வலுவானவர்களே ஆதிக்கம் செலுத்துவதும், வலுவற்றோர் பாதிக்கப்படுவதும் இன்றையச் சூழல் என்பதைச் சுட்டிகாட்டிய முதுபெரும் தலைவர் Bartholomew, இந்நிலை மாறவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
313ம் ஆண்டிலேயே பேரரசர் Constantine கிறிஸ்துவ வழிபாட்டிற்கு முழு சுதந்திரம் அளித்த போதிலும், 21ம் நூற்றாண்டிலும் கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் இன்னும் தாக்குதல்களுக்கு உள்ளாகிவருவது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது என்று முதுபெரும் தலைவரின் செய்தி எடுத்துரைக்கிறது.

6. சீனப் பேரரசரின் அரண்மனையில் ஓவியராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்சகோதரரைப் பற்றிய ஆவணப் படம்

டிச.27,2012. Qianlong என்ற சீனப் பேரரசரின் அரண்மனையில் ஓவியராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்சகோதரர் Giuseppe Castiglioneயின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒரு தொலைக்காட்சி ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளது.
Taiwan நாட்டின் தலைநகரான Taipeiயில் இயேசு சபையினரால் நடத்தப்படும் Kuangchi தொலைக்காட்சி நிறுவனம் தாயாரித்து வரும் இந்த ஆவணப் படம், Taiwanஇலும், சீனாவிலும் ஒளிபரப்பப்படும் என்று இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் அருள்தந்தை Jerry Martinson செய்தியாளர்களிடம் கூறினார்.
"சீனாவில் Giuseppe Castiglione, அரண்மனை ஓவியர், தாழ்ச்சியான பணியாளர்" என்ற தலைப்புடன் உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில், சீன அரசர்களின் அரண்மனையில் பணிபுரிந்த இயேசு சபை ஓவியரின் தனிப்பட்டச் சேவை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
சீன மண்ணில் கிறிஸ்துவ மறையைப் பரப்பிய Matteo Ricci என்ற இயேசு சபை அருள்தந்தை, அவரது சீடர் Paul Xu Guangqi, மற்றும் Adam Schall என்ற மற்றொரு இயேசு சபை அருள்தந்தை ஆகியோரைப் பற்றி உருவாக்கப்பட்ட ஆவணப் படங்களை 20 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை பார்த்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

7. சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ்: வாழ்த்துகளை விட பரிசுகள் அனுப்பியோரே அதிகம்

டிச.27,2012. சுவிட்சர்லாந்தில் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழாவுக்கு, வாழ்த்துகளை விட பரிசுகளே அதிகம் அனுப்பப்பட்டதாக Swiss.com தகவல் வெளியிட்டிருக்கிறது.
இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, சுவிஸ் தபால்துறை டிசம்பர் 1ம் தேதி  முதல் 24ம் தேதி வரை 1 கோடியே, 60 இலட்சம் பரிசுப்பொருட்களை அனுப்பியுள்ளது கடந்த வருடம் வரை இந்த எண்ணிக்கை 1 கோடியே, 50 இலட்சமாக இருந்தது.
கிறிஸ்துமஸ் அன்று 2 கோடியே, 44 இலட்சம் வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டதாக Swiss.comமின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் முன்னிரவு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று கடந்த ஆண்டைவிட குறைவான குறுந்தகவல்களே அனுப்பப்பட்டதாக Swiss.com தெரிவித்தது.
சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பலரும் வாழ்த்துகளை அனுப்பியதனால் அலைபேசிகளில் வாழ்த்துகள் அனுப்புவது குறைந்துபோனது என்று Swiss.comமின் தகவல் தொடர்பாளர் Jeff Huber கூறினார்.

 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...