Saturday 8 December 2012

Catholic News in Tamil - 07/12/12


1. திருத்தந்தை - புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் இறையியல் வல்லுனர்களின் பங்களிப்பு முக்கியம்

2. ஜெர்மனியில் உள்ள மரியன்னைத் திருத்தலத்தில் 21வது அகில உலக நோயுற்றோர் நாள்

3. பிலிப்பின்ஸ் புயலால் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் திருத்தந்தையின் செய்தி

4. திருத்தந்தையுடன் Twitter வழியாக தொடர்பு கொள்ள பத்து இலட்சம் பேர் காத்திருப்பர்

5. மத்திய கிழக்குப் பகுதி நாடுகளில் அமைதியை உறுதிப்படுத்த உலக நாடுகள் அவசரமாக உதவிகள் செய்யவேண்டும் - ஆயர்களின் அறிக்கை

6. வாழ்வுக்கு ஆதரவு, மதச் சுதந்திரம், திருமண உறவு ஆகியவற்றை ஆதரிக்க அமெரிக்க ஆயர்கள் அழைப்பு

7. இந்தியாவில் இன்னும் வசூலிக்கப்படாமல் இருக்கும் மொத்த வரி ரூ.2.49 இலட்சம் கோடி

8. கூடங்குளம் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் இறையியல் வல்லுனர்களின் பங்களிப்பு முக்கியம்

டிச.07,2012. நம்பிக்கை ஆண்டில் திருஅவை மேற்கொண்டுள்ள புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் இறையியல் வல்லுனர்களின் பங்களிப்பு முக்கியம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
2012ம் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை முடித்திருந்த அகில உலக இறையியலாளர் குழவின் உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நம்பிக்கை ஆண்டையொட்டி இறையியலாளர்கள் வெளியிட்டுள்ள சிறப்பானச் செய்தியைப் பாராட்டிப் பேசினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின், கத்தோலிக்க இறையியல்  எண்ணங்கள் பன்முகக் கண்ணோட்டம் கொண்டு வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல இறையியல் வகிக்கும் இன்றியமையாத பங்கையும் எடுத்துரைத்தார்.
மக்களின் விசுவாச உணர்வுகள் வழியே தூய ஆவியார் இன்னும் பல வழிகளில் பேசி வருகிறார் என்பது உண்மையாயினும், இந்த விசுவாச உணர்வுகளில் உண்மையானவை எவை என்றும், போலியானவை எவை என்றும் அறிவது முக்கியம் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
ஆண்டு இறுதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் புனித Mary Major என்ற அன்னையின் பசிலிக்காப் பேராலயத்திற்கு நடைபயணம் மேற்கொண்டதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அன்னையின் பாதுகாப்பில் அனைத்து இறையியலாளர்களும் வளரவேண்டும் என்ற தன் அசீரையும் அவர்களுக்கு அளித்தார்.


2. ஜெர்மனியில் உள்ள மரியன்னைத் திருத்தலத்தில் 21வது அகில உலக நோயுற்றோர் நாள்

டிச.07,2012. 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஜெர்மனியில் Altötting எனுமிடத்தில் உள்ள மரியன்னைத் திருத்தலத்தில் நோயுற்றோருக்கெனச் சிறப்பிக்கப்படும் 21வது அகில உலக நாள் கொண்டாடப்படும்.
இந்த முக்கிய நிகழ்வில் திருத்தந்தையின் சார்பில் கலந்து கொள்ள நலப்பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski செல்வார் என்று இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு அக்டோபர் முதல் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிய நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, பிப்ரவரி மாதம் Altötting மரியன்னை திருத்தலத்தில் அகில உலக நோயுற்றோர் நாள் கொண்டாடப்படும்.
1991ம் ஆண்டு முத்திபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் பார்கின்சன்ஸ் எனப்படும் நரம்புத் தளர்ச்சி நோயால் தாக்கப்பட்ட பின்னர், அவர் 1992ம்  ஆண்டு அகில உலக நோயுற்றோர் நாளை நிறுவினார்.
ஒவ்வோர் ஆண்டும் லூர்து அன்னை திருநாளான பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படும் இவ்வுலக நாள் வழியே, நோயால் துன்புறுவோர் உலகின் மீட்புக்காகத் தங்கள் வேதனைகளை அர்ப்பணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இந்த நாளை நிறுவினார்.


3. பிலிப்பின்ஸ் புயலால் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் திருத்தந்தையின் செய்தி

டிச.07,2012. Bopha புயலால் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தன் அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் Jose Palma அவர்களுக்கு இவ்வியாழனன்று செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களைக் காணும் நம் உள்ளங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன, நமது பிறரன்புச் செயல்கள் அனைத்தும் இந்நேரத்தில் தேவைப்படுகின்றன என்று பேராயர் Palma கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டை இவ்வாண்டு தாக்கிய புயல்களிலேயே மிகவும் கடுமையானப் புயல் Bopha புயல் என்று சொல்லப்படுகிறது. இப்புயலால் இதுவரை 350க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இன்னும் 400க்கும் அதிகமானோர் காணாமற் போயுள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யக் கோரி, பேராயர் Palma 86 மறைமாவாட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
காரித்தாஸ் அமைப்பும், பன்னாட்டு கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்களும் Bopha புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வதில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்று கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.


4. திருத்தந்தையுடன் Twitter வழியாக தொடர்பு கொள்ள பத்து இலட்சம் பேர் காத்திருப்பர்

டிச.07,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இம்மாதம் 12ம் தேதி Twitter வழியாக உலக மக்களுடன் தொடர்பு கொள்ளும் வேளையில், அவரைத் தொடர்வதற்கு, குறைந்தது பத்து இலட்சம் பேர் காத்திருப்பர் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
சமூகத் தொடர்புத் திருப்பீட அவையின் செயலரான, பேரருள் தந்தை Paul Tighe, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு இவ்வியாழனன்று அளித்த பேட்டியொன்றில் திருத்தந்தை துவங்கவிருக்கும் Twitter குறித்த விவரங்களை வெளியிட்டார்.
டிசம்பர் 6, இவ்வியாழன் வரை pontifex என்ற இந்தப் புதிய முயற்சியைத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 இலட்சம் என்று கூறிய பேரருள் தந்தை Tighe, ஒவ்வொரு நாளும் குறைந்தது 10,000 பேர் இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி திருத்தந்தை வத்திகானில் இருந்தபடியே, கணனியின் Tablet கருவியைப் பயன்படுத்தி, இத்தாலியில் Gubbio என்ற இடத்தில் ஒரு மலைச்சரிவில் மின் விளக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகளை ஏற்றிவைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


5. மத்திய கிழக்குப் பகுதி நாடுகளில் அமைதியை உறுதிப்படுத்த உலக நாடுகள் அவசரமாக உதவிகள் செய்யவேண்டும் - ஆயர்களின் அறிக்கை

டிச.07,2012. பாலஸ்தீனம் தொடர்பான விடயங்களில் நீதியான, அமைதியை வளர்க்கும் தீர்வுகளை உலகின் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து காணவேண்டும் என்று மத்திய கிழக்குப் பகுதி கத்தோலிக்க ஆயர்களும், முதுபெரும் தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் Harissa எனும் நகரில் இப்புதனன்று நிறைவுற்ற ஆண்டு கூட்டத்தின் இறுதியில் அனைத்து ஆயர்களும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
பாலஸ்தீனம் தவிர, மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள பல நாடுகளிலும், சிறப்பாக, சிரியாவிலும் ஒப்புரவை வளர்க்கவும், அமைதியை உறுதிப்படுத்தவும், அப்பாவி மக்களின் வாழ்வைப் பாதுகாக்கவும் உலக நாடுகள் அவசரமாக உதவிகள் செய்யவேண்டுமென்று ஆயர்களின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
அமைதியை வளர்க்கும் ஒரு முக்கியத் தீர்வாக, மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒன்றிணையவும், இஸ்லாம் மதத்தினருடன் உரையாடல்களை வளர்க்கவும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இப்புதனன்று தன் 92ம் வயதில் இறைபதம் சேர்ந்த அந்தியோக்கியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தலைவர் 4ம் இக்னேசியஸ் மறைவுக்கு, ஆயர்களின் ஆழ்ந்த அனுதாபங்களை Maronite ரீதி முதுபெரும் தலைவர் கர்தினால் Bechara Boutros Rai தெரிவித்தார்.


6. வாழ்வுக்கு ஆதரவு, மதச் சுதந்திரம், திருமண உறவு ஆகியவற்றை ஆதரிக்க அமெரிக்க ஆயர்கள் அழைப்பு

டிச.07,2012. வாழ்வுக்கு ஆதரவு, மதச் சுதந்திரம், திருமண உறவு ஆகிய உயர்ந்த கொள்கைகளை, கத்தோலிக்க மக்கள் அனைவரும் போற்றி வளர்க்கவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இக்கொள்கைகளை ஆதரிக்கும் ஐந்து செயல் திட்டங்கள் அடங்கிய ஓர் அறிக்கையை ஆயர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டனர். கிறிஸ்மஸ் காலத்தைத் தொடர்ந்து, இச்செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயல் திட்டங்கள் ஒவ்வொரு கத்தோலிக்கரின் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக வேண்டும் என்றும், இக்கொள்கைகளை வளர்க்க ஒவ்வொருவரும் செபம், தியாகம் இவற்றை ஏற்க வேண்டும் என்றும் அமெரிக்க ஆயர் பேரவையின் குடும்பநலப் பணிக்குழுவின் தலைவர் பேராயர் Salvatore Cordileone கூறினார்.
கிறிஸ்மஸ் விழாவைத் தொடர்ந்து வரும் திருக்குடும்பத் திருவிழாவுடன் ஆரம்பமாகும் இம்முயற்சிகள் 2013ம் ஆண்டு நம்பிக்கை ஆண்டின் இறுதி ஞாயிறான கிறிஸ்து அரசர் திருநாளன்று  முடிவடையும் என்றும் ஆயர்களின் இவ்வறிக்கை கூறுகிறது.


7. இந்தியாவில் இன்னும் வசூலிக்கப்படாமல் இருக்கும் மொத்த வரி ரூ.2.49 இலட்சம் கோடி

டிச.07,2012. இந்தியாவில் இன்னும் வசூலிக்கப்படாமல் இருக்கும் மொத்த வரி ரூ.2.49 இலட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம், பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
இத்தொகையில் 2.8 விழுக்காடு ‌தொகையான ரூ.7000 கோடி மட்டுமே இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமோசடி மற்றும் பத்திர மோசடி வழக்குகள் காரணமாக ரூ.1.30 லட்சம் கோடி நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹசன் அலிகான் வழக்கில் ரூ.92,000 கோடி, பாதுகாப்பு முறைகேடு வழக்குகளில் ரூ.20,000 கோடி, ஹர்சத் மேத்தா குழும நிறுவனங்களிடம் இருந்தும், தலால் குழுமத்திடம் இருந்து ரூ.14,000 கோடியும், கேதன் பராக் குழுமத்திடம் இருந்து ரூ.4000 கோடியும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் பாக்கி காரணமாக அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்நிறுவனங்களின் சொத்துக்களை கையகப்படுத்தியும், விற்றும் பணம் பெற்றப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அவைகள் நிலுவை தொகையை ஈடுசெய்வதற்கு போதுமானதாக இல்லை எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலை உருவாகும் வரை நிமையை புரிந்து கொள்ளமல் இருந்தது எப்படி எனவும், வரி பாக்கிகள் ஆயிரம் கோடி அளவை எட்டும் வரை நிலையை புரிந்து கொண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் பாராளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும், நிலுவை தொகையை வசூல் செய்வதில் நிதியமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மந்த நிலையும், அவர்களின் அலட்சியப் போக்கும் வேதனை தருவதாக உள்ளது எனவும் பாராளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்துள்ளது.


8. கூடங்குளம் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

டிச.07,2012. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், அணு உலையைத் துவக்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் சார்பில், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்புத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த அந்த வழக்கு விசாரணை இவ்வியாழனன்று நிறைவடைந்தது.
பூவுலகின் நண்பர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் நாராயணசாமி, அணு உலை இம்மாத இறுதியில் துவங்கும் என நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அணுக்கழிவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பது கூட முடிவாகாத நிலையில், அணு உலையை செயல்பட அனுமதிக்கக் கூடாது, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
அணுக்கழிவுகள் எங்கு சேமித்து வைக்கப்படும் என்பது குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீசிமன்றம் உத்தரவிட்டது. நேற்று உச்சநீதிமன்றத்தில் இதுபற்றித் தெரிவித்த மத்திய அரசு, அணுக்கழிவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அணு உலையை அடுத்துள்ள ராதாபுரம், இடிந்தகரை, உவரி, பெருமணல் உள்பட 10 கிராமங்களில் மக்களைத் தங்கவைக்க போதிய வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த 6 மாதங்களுக்குள் கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் பேரிடர்கால தற்காப்புப் பயிற்சிகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்பகுதியின் குடிநீர் தேவைக்காக, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் என்பது மிகவும் நீண்டகாலம் என்றும், அதை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment