1. சாகச விளையாட்டு வீரர்களிடம் திருத்தந்தை : பயணம் செய்யும் திருஅவை உங்களோடு இருக்கின்றது, உங்களது விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
2. முதல் இந்தியப் பொதுநிலையினர் ஒருவர் முத்திப்பெற்றநிலைக்கு உயர்த்தப்படவுள்ளார்
3. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஐ.நா. நடவடிக்கைக்கு எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் பாராட்டு
4. அருள்தந்தை லொம்பார்தி : திருவருகைக்காலம், நம்பிக்கை மற்றும் காத்திருப்பின் காலம்
5. நம்பிக்கை ஆண்டில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து நற்செய்தியை வாசிக்குமாறு ஆந்திர ஆயர் ஜோசி வலியுறுத்தல்
6. எய்ட்ஸ் நோய்த் தொடர்புடைய இறப்புக்களை நிறுத்துவதற்கு இந்தியத் திருஅவை அர்ப்பணம்
7. ஆப்ரிக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 35 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி
8. இந்தியாவில் ஏழைகள் அதிகமாக வாழுகின்ற மாநிலம் உத்தரப்பிரதேசம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. சாகச விளையாட்டு வீரர்களிடம் திருத்தந்தை : பயணம் செய்யும் திருஅவை உங்களோடு இருக்கின்றது, உங்களது விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
டிச.01,2012. இன்றைய உலகில் குறைவுபடும் தன்னலமறுப்பு, தியாகம், பொறுப்புணர்வு, விடாமுயற்சி, துணிவு, தாராளம்
ஆகிய பண்புகள் சாகச விளையாட்டுக்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தும்
சர்க்கஸ் குழுக்களிடம் இருக்கின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
பாராட்டிப் பேசினார்.
திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வு அவையின் ஏற்பாட்டின்பேரில் 12 நாடுகளைச் சேர்ந்த சர்க்கஸ் குழுக்கள், தெருக் கலைஞர்கள், கழைக்கூத்தாடிகள், கோமாளிகள் என ஏறக்குறைய ஏழாயிரம் பேர் வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் இச்சனிக்கிழமையன்று கூடி, திருத்தந்தையின் முன்பாக, குறிப்பாக
இளம் கலைஞர்கள் பலவிதமான சாகசங்களைச் செய்து காட்டினர். ஒரு சிங்கக்
குட்டியும் அரங்கத்தின் மேடைக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தக் குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டி ஆசீர்வதித்ததோடு இவர்களுக்கு ஆற்றிய உரையில், ஊர்
ஊராகச் சென்று சாகச நிகழ்ச்சிகளை நடத்தும் இந்தக் கலைஞர்களின் சமூக
மற்றும் கலாச்சார வாழ்வை அரசுகள் அங்கீகரிக்கும் என்ற தனது நம்பிக்கையையும்
தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைத் தான் அறிந்திருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, பங்குக்
கோவில்களுக்குச் செல்ல முடியாமலும் மறைக்கல்வியில் பங்கு கொள்ள இயலாமலும்
இருக்கும் இம்மக்களுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி
தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.
இந்த
மக்கள் தங்களைச் சுற்றி ஒரு மகிழ்ச்சியான சூழலை உருவாக்குகிறார்கள்
மற்றும் அன்றாடப் பணியின் சுமையை எளிதாக்குகிறார்கள் என்றும் உரைத்த
திருத்தந்தை,
உறுதியான அகவாழ்வைக் கொண்டு இறைவனோடு உரையாடல் செய்வதற்கும் அவரைத்
தியானிப்பதற்கும் திறந்த மனம் கொண்டுள்ளார்கள் என்றும் பாராட்டினார்.
கத்தோலிக்கத்
திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு பகுதியாக
இடம்பெற்ற இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று வத்திக்கான்
அதிகாரிகள் கூறினர். பங்கு ஆலயங்களுக்குச் செல்ல முடியாமல் தொடர்ந்து பயணம்
செய்து கொண்டு சமூகத்தின் விளிம்புகளில் வாழ்கின்ற இம்மக்களின்
பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு
செய்யப்பட்டதாகவும் வத்திக்கான் அதிகாரிகள் மேலும் கூறினர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் ஒரு பெரிய சர்க்கஸ் கூடாரமும் போடப்பட்டிருந்தது.
2. முதல் இந்தியப் பொதுநிலையினர் ஒருவர் முத்திப்பெற்றநிலைக்கு உயர்த்தப்படவுள்ளார்
டிச.01,2012. இந்தியாவின் பொதுநிலையினரில் முதல் மறைசாட்சி இறை ஊழியர் தேவசகாயம், இஞ்ஞாயிறன்று தமிழ்நாட்டின் நாகர்கோவில் கார்மேல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் முத்திப்பெற்றநிலைக்கு உயர்த்தப்படவுள்ளார்.
திருப்பீட
புனிதர் பட்டமளிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ தலைமையில்
நடைபெறவிருக்கும் இந்த முத்திப்பெற்றநிலை அறிவிப்புத் திருப்பலியில், இந்தியாவின் அனைத்துக் கர்தினால்கள், நாடு முழுவதிலிமிருந்து 50க்கும் அதிகமான ஆயர்கள், 500க்கு அதிகமான அருள்பணியாளர்கள், 1,500க்கும்
அதிகமான அருள்சகோதரிகள் உட்பட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுநிலையினர்
கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கோட்டாறு ஆயர் மேதகு பீட்டர்
ரெமிஜியுஸ் கூறினார்.
இந்த நிகழ்வு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த ஆயர் ரெமிஜியுஸ், இந்த நம்பிக்கை ஆண்டில் இந்த அறிவிப்பு ஒரு கொடை என்று கூறினார்.
1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தில் இந்துக் குடும்பத்தில் பிறந்த நீலகண்டன் பிள்ளை, திருவிதாங்கூர்
அரசவையில் முக்கிய பணியாற்றி வந்தார். கிறிஸ்தவராக மனம் மாறிய பின்னர்
தேவசகாயம் என்ற பெயரை ஏற்றார். கிறிஸ்தவராக மனம் மாறியதால், பல கொடுந்துன்பங்களுக்குப் பின்னர் 1752ம் ஆண்டு சனவரி 14ம் நாளன்று ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
3. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஐ.நா. நடவடிக்கைக்கு எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் பாராட்டு
டிச.01,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் பாலஸ்தீனத்துக்கு,
உறுப்பினரல்லாத பார்வையாளர் நாடு என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளதற்குத் தனது
மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal.
அனைத்துலகச் சமுதாயமும், நாடுகளின் தலைவர்களும் பிற அழுத்தங்களுக்கு உள்ளாகாமல், தங்களது மனசாட்சிப்படி, எதையும் கணக்குப்பார்க்காமல் இம்முறை செயல்பட்டுள்ளார்கள் என்றுரைத்த முதுபெரும் தலைவர் Twal, இந்தச் சுதந்திர உணர்வு குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம், மிதவாத மற்றும் நியாயமான அரசு அமைக்கப்படுவதற்கு உதவி செய்யும் என்றும் அவர், ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இவ்வியாழனன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்தியா உட்பட 138 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தன.
இதற்கிடையே, இஸ்ரேல், மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளைக் கட்ட முடிவெடுத்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
4. அருள்தந்தை லொம்பார்தி : திருவருகைக்காலம், நம்பிக்கை மற்றும் காத்திருப்பின் காலம்
டிச.01,2012. கிறிஸ்மஸை எதிர்நோக்கும் திருவருகைக்காலம், நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பின் காலமாக இருக்கின்றது என்று இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கென வழங்கிய வார இறுதி நிகழ்ச்சியில் இவ்வாறு கூறிய, வத்திக்கான் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் இயக்குனரான அருள்தந்தை லொம்பார்தி, மனிதர் மற்றும் மத நம்பிக்கையாளர் என்ற வகையில் இவ்வுலகில் பல பிரச்சனைகள் சவால்களை நம்முன் வைக்கின்றன என்று கூறினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை, எய்ட்ஸ் நோய்ப் பிரச்சனை போன்ற சமூகப் பிரச்சனைகளையும் நலவாழ்வு விவகாரங்களையும் குறிப்பிட்டுப் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, சிரியா, மாலி, நைஜீரியா, காங்கோவின் கிழக்குப்பகுதி, சொமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக், போன்ற
நாடுகளில் இடம்பெறும் சண்டைகளையும் வன்முறைகளையும் குறிப்பிட்டதோடு
எகிப்து போன்ற நாடுகளில் இடம்பெறும் சமூக மற்றும் அரசியல் பதட்டநிலைகள்
குறித்தும் கூறினார்.
உலகில் நம்பிக்கை ஒளியை எப்போதும் பார்ப்பது எளிது இல்லை எனினும், கியூபாவில் கொலம்பிய அரசுக்கும் FARC
கெரில்லாக் குழுவுக்குமிடையே இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள்
நம்பிக்கையின் ஒளிக்கான அடையாளங்கள் குறைவுபடவில்லை என்பதையும்
காட்டுகின்றன என்றார் அவர்.
இஞ்ஞாயிறன்று தொடங்கும் திருவருகைக்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
5. நம்பிக்கை ஆண்டில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து நற்செய்தியை வாசிக்குமாறு ஆந்திர ஆயர் ஜோசி வலியுறுத்தல்
டிச.01,2012.
இந்த நம்பிக்கை ஆண்டில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து செபம்
செய்து நற்செய்தியை வாசிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஆந்திர மாநில ஆயர்
ஒருவர்.
கிறிஸ்துராஜபுரம் பங்கில் கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்தி மறையுரையாற்றிய விஜயவாடா ஆயர் கோவிந்து ஜோசி, குடும்பங்களில் பெற்றோர் ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுடன் சேர்ந்து செபமாலை செபிக்குமாறும் கூறினார்.
1955ம்
ஆண்டில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துராஜபுரம் புனித பீட்டர் பங்கின் மொத்த
மக்கள்தொகையில் பத்து விழுக்காட்டுக்கு அதிகமானோர் கிறிஸ்தவர்கள். விஜயவாடா
மறைமாவட்டத்தில் 145க்கு மேற்பட்ட துறவற சபைகள் உள்ளன.
6. எய்ட்ஸ் நோய்த் தொடர்புடைய இறப்புக்களை நிறுத்துவதற்கு இந்தியத் திருஅவை அர்ப்பணம்
டிச.01,2012.
உலகில் 2015ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிப்பது குறித்த
ஐ.நா.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இலக்கைத் தொடர்ந்து இந்தியத்
திருஅவையும், 2015ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் தொடர்புடைய இறப்புக்களை நிறுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது.
டிசம்பர்
முதல் தேதி இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக எய்ட்ஸ் நோய்
தினத்தையொட்டி செய்தி வழங்கிய பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ, பொது சமுதாயத்தோடு சேர்ந்து திருஅவையும் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது என்று கூறினார்.
2012ம் ஆண்டின் அனைத்துலக எய்ட்ஸ் நோய் தினத்தையொட்டி ஐ.நா.நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், வருவாய்க்
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள 25 நாடுகளில் எய்ட்ஸ் நோய்க்
கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 50
விழுக்காட்டுக்கும் மேலாகக் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம், குஜராத், ஒடிசா, பீஹார், சட்டீஸ்கார், அசாம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நலவாழ்வு மையங்களை 2007ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அமைத்துள்ளது.
7. ஆப்ரிக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 35 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி
டிச.01,2012. தெற்கு ஆப்ரிக்காவில், குறிப்பாக, மலாவி, ஜிம்பாபுவே,
லெசோத்தோ ஆகிய நாடுகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 35 இலட்சத்துக்கு
மேற்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு ஐ.நா.வின் உணவு திட்ட அமைப்பு
முயற்சித்து வருகிறது.
பெருமளவான குறுநில விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் அண்மை ஆண்டுகளில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன என்று WFP என்ற உலக உணவு திட்ட அமைப்பின் தெற்கு ஆப்ரிக்க அதிகாரி Brenda Barton கூறினார்.
அரசுகள், நன்கொடையாளர்கள், மாநில நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியைக் கொண்டு இதனைச் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் சோளத்தின் விலை, லெசோத்தோவில் 60 விழுக்காடும், மலாவியில் ஏறக்குறைய 80 விழுக்காடும் அதிகரித்துள்ளன என்றும் Barton கூறினார்.
8. இந்தியாவில் ஏழைகள் அதிகமாக வாழுகின்ற மாநிலம் உத்தரப்பிரதேசம்
டிச.01,2012. இந்தியாவில் ஏழைகள் அதிகமாக இருக்கின்ற மாநிலம் உத்தரப்பிரதேசம் எனவும், அதற்கடுத்தபடியாக பீகாரும், மகாராஷ்ராவும் உள்ளன என்று, 2009-10ம் ஆண்டுப் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள
ஏழைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாக திட்டக் குழு வெளியிட்டுள்ளது. இந்தப்
பட்டியலில் உத்திரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7.37 கோடி ஏழை மக்கள் வாழ்வதாகவும், அதனைத் தொடர்ந்து பீகாரில் 5.43 கோடி ஏழைகளும், மகாராஷ்டிராவில் 2.7 கோடி ஏழைகளும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டுல்கர் கமிட்டிக் கொள்கையின்படி அளிக்கப்பட்ட இந்தப் பட்டியலைத் திட்டக்குழு இவ்வியாழனன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
நலவாழ்வு, கல்வி, உண்ணும்
உணவு ஆகியவற்றிற்காகச் செலவிடப்படும் தொகையின் அடிப்படையில்
தயாரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி மத்திய பிரதேசத்தில் 2.61 கோடிப்
பேரும், மேற்கு வங்காளத்தில் 2.4 கோடிப் பேரும், ஆந்திராவில் 1.76 கோடிப் பேரும், இராஜஸ்தானில் 1.67 கோடிப் பேரும், ஒடிசாவில் 1.53 கோடிப் பேரும், கர்நாடகாவில் 1.42 கோடிப் பேரும், குஜராத்தில் 1.36 கோடி பேரும், ஜார்க்கண்டில் 1.26 கோடிப் பேரும், தமிழகம் மற்றும் சட்டீஸ்கரில் முறையே 1.21 கோடி பேரும், அசாமில் 1.16 கோடிப் பேரும் உள்ளனர். மிகவும் குறைந்த அளவாக அரியானாவில் 49.96 இலட்சம் ஏழை மக்கள் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment