Friday, 7 December 2012

Catholic News in Tamil - 04/12/12


1. அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலக மாநாடு உரோம் நகரில் நடைபெறவுள்ளது

2. நைஜீரியாவில் மீண்டும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

3. கிறிஸ்தவ நூல்களைக் கொண்டுவர முயன்றதற்காக கிறிஸ்தவர் ஒருவரை நாடு கடத்தியுள்ளது மாலத்தீவு அரசு

4. வியட்நாமின் மதவழிபாட்டுக் கட்டுப்பாடுகள் குறித்து மதநம்பிக்கையாளர்கள் கவலை

5. கொலம்பியா இளையோர் கருக்கலைத்தலுக்கும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கும் எதிர்ப்ப்பு

6. பொய்க்குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் சிறைவைக்க‌ப்ப‌ட்ட‌ கிறிஸ்தவ இளைஞ‌ர் ம‌ர‌ண‌ம்

7. 38 ஆண்டுகளுக்கு பின் தலித் மாணவர்கள் கல்வி நிலை குறித்து ஆய்வு

8. மன்னார் தமிழ் மீனவர்களுக்கு 175 படகுகள் இந்தியா உதவி!

------------------------------------------------------------------------------------------------------

1. அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலக மாநாடு உரோம் நகரில் நடைபெறவுள்ளது

டிச.04,2012. உலகின் பல பகுதிகளிலும் பிரிவினைச் சுவர்கள் தகர்ந்துவந்ததைச் சுட்டிக்காட்டி, மூன்றாம் மில்லேன்னியத் துவக்கத்தில் முத்திபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்தி விடுத்த அழைப்பை வத்திக்கான் அதிகாரி ஒருவர் மீண்டும் இச்செவ்வாயன்று நினைவு கூர்ந்தார்.
டிசம்பர் 9, வருகிற ஞாயிறு முதல் டிசம்பர் 12, புதன்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறவுள்ள அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலக மாநாடு குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இலத்தீன் அமெரிக்க         திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Marc Ouellet, மாநாட்டின் குறிக்கோள் பற்றி பேசுகையில் இவ்வாறு கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி, வட மற்றும் தென் அமெரிக்காவில் எவ்விதம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கர்தினால் Ouellet கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அமெரிக்க ஆயர்களுடன் நடத்திய சிறப்பு மாமன்றத்தின் 15ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் மாநாடு இது என்றும்,   இலத்தீன் அமெரிக்கத் திருப்பீட அவையுடன், Knights of Columbus அமைப்பும், Guadalupe ஆய்வுக் கழகமும் இணைந்து, இந்த மாநாட்டை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், Knights of Columbus அமைப்பின் தலைவர் முனைவர் Carl Anderson, திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi ஆகியோர் கலந்து கொண்டனர்.


2. நைஜீரியாவில் மீண்டும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

டிச.04,2012. நைஜீரியாவின் வடகிழக்குப்பகுதியில் 10 கிறிஸ்தவர்களின் கழுத்தை அறுத்துக் கொன்றதோடு மூன்று கோவில்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர் இஸ்லாமிய தீவிரவாதிகள்.
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள Chibok என்ற நகரில் இம்மாதம் முதல் தேதி புகுந்த தீவிரவாதிகள் 10 கிறிஸ்தவர்களின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்ததோடு அங்குள்ள கிறிஸ்தவ வீடுகளையும் தீக்கிரையாக்கிச் சென்றனர். அதற்கு மறுநாள் Gamboru Ngala என்ற நகரில் மூன்று கிறிஸ்தவ கோவிலகளை தீயிட்டுக் கொளுத்திச் சென்றுள்ளனர்.
Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாதக்குழுவே இக்கொடுஞ்செயல்களை ஆற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


3. கிறிஸ்தவ நூல்களைக் கொண்டுவர முயன்றதற்காக கிறிஸ்தவர் ஒருவரை நாடு கடத்தியுள்ளது மாலத்தீவு அரசு

டிச.04,2012. மாலத்தீவு நாட்டிற்குள் கிறிஸ்தவ நூல்களைக் கொண்டுவர முயன்றதற்காக பங்களாதேஷ் நாட்டு கிறிஸ்தவர் ஒருவரை 23 நாட்கள் சிறையிலடைத்தபின் நாடு கடத்தியுள்ளது மாலத்தீவு அரசு.
மூன்று இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட மாலத்தீவில் 100 விழுக்காட்டினரும் இஸ்லாமியர்களே எனக்கூறும் அரசு, மாலத்தீவுக்கு வந்த கிறிஸ்தவ சமூக பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் Jathish Biswas என்பவர் 11 கிறிஸ்தவ புத்தகங்களை நாட்டிற்குள் கொண்டுவர முயன்றதற்காக அவரை கைது செய்து சிறையிலடைத்தது.
23 நாள் சிறைவாசத்திற்குப் பின் தற்போது அவரை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது.


4. வியட்நாமின் மதவழிபாட்டுக் கட்டுப்பாடுகள் குறித்து மதநம்பிக்கையாளர்கள் கவலை

டிச.04,2012. மதவழிபாடுகள்மீது தீவிரக் கட்டுப்பாடுகளைக் கொணரும் சீனாவையொத்த சட்டம் வியட்நாமிலும் வரும் சனவரி முதல்தேதி முதல் நடைமுறைக்கு வருவதையொட்டி வியட்நாம் மத நம்பிக்கையாளர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலங்களில் மதநடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தி வந்த வியட்நாம் அரசு, திடீரென சீனாவையொத்த மதக்கட்டுப்பாட்டுச் சட்டங்களை புகுத்துவது குறித்து கவலையை வெளியிட்ட புத்த மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள், வியட்நாம் நாடு முன்னேற்றப் பாதையில் பின்னோக்கிச் செல்வதாகத் தெரிவித்தனர்.
வியட்நாம் நாட்டில் மதசுதந்திரத்தின் மீதான புதிய கட்டுப்பாடுகள் வியட்நாம் அரசுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே இடம்பெற்றுவரும் பேச்சுவர்ர்த்தைகளை பெருமளவில் பாதிக்கும் என்ற கவலையையும் தலத்திருஅவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


5. கொலம்பியா இளையோர் கருக்கலைத்தலுக்கும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கும் எதிர்ப்ப்பு

டிச.04,2012. கொலம்பியா நாட்டின் பெரும்பான்மை இளையோர், கருக்கலைத்தல், ஒரே பாலினத் திருமணம், போதைப் பொருட்களை சட்டபூர்வமாக அங்கீகரித்தல் போன்றவைகளை எதிர்ப்பதாக அண்மை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
Ipsos Napoleon Franco என்ற ஆய்வு நிறுவனம் 18 முதல் 34 வயது வரை உடையவரிடையே நடத்திய ஆய்வில் பெரும்பான்மையினர் கருக்கலைத்தலையையும் போதைப்பொருள் பயன்பாட்டையும், ஒரே பாலினத்திருமணங்களையும் எதிர்ப்பதாகத் தெரியவந்துள்ளது.
கொலம்பியாவின் 13 நகரங்களைச் சேர்ந்த 1006 இளைஞர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.


6. பொய்க்குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் சிறைவைக்க‌ப்ப‌ட்ட‌ கிறிஸ்தவ இளைஞ‌ர் ம‌ர‌ண‌ம்

டிச.04,2012. குரானை எரித்தார் என்ற பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி சிறையிலடைக்கப்பட்ட 22 வயது கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்ட இந்த இளைஞர் பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதைத்தொடர்ந்து, சிறைக்குள்ளேயே மனநிலை மேலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது காவல்துறையால் கொடுமைப்படுத்தப்பட்டதால் இறந்தாரா என தலத்திருஅவைத் தலைவர்களும் மனித் உரிமை அமைப்புகளும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
Nadeem Masih  என்ற இளைஞர் குரானை எரித்தார் என சில இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு ஒரு வாரம் எந்த வித விசாரணையும் இன்றி காவலில் வைக்கப்பட்டர். அவர்மீதான குற்றங்களை நிருப்பிக்க குற்றம் சுமத்தியோர் முன்வராத நிலையில், இம்மாதம் முதல்தேதி இரவு சிறையில் திடீரென நோய்வாய்ப்பட்டு அவ்விளைஞர் இறந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.
இவ்விளைஞரின் மரணம் குறித்து முழுவிசாரணைகள் இடம்பெறவேண்டும் என பாகிஸ்தான் கத்தோலிக்க குருக்களும் மனிதஉரிமை ஆர்வலர்களும் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.


7. 38 ஆண்டுகளுக்கு பின் தலித் மாணவர்கள் கல்வி நிலை குறித்து ஆய்வு

டிச.04,2012. தலித் மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆய்வுசெய்யும் பணி, 38 ஆண்டுகளுக்குப் பின், இந்தியா முழுவதும் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் உள்ள, தலித் மாணவர்களின் கல்வி நிலை குறித்த ஆய்வை,. தலித் பிரிவினர் அதிகளவில் உள்ள, அரியானா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட, 15 மாநிலங்களில் உள்ள, பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம், மத்திய அரசின், இந்திய சமூக அறிவியல் ஆய்வு குழு மேற்கொள்கிறது. தமிழக அளவிலான ஆய்வை, சென்னை பல்கலைக் கழக, பொருளியல் துறை மேற்கொள்கிறது.
ஒதுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறுவதில் உள்ள சிக்கல்கள், கல்வி மூலம் தலித் மக்களின் வாழ்க்கை ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தலித் மக்களுக்கு கல்வி பரவலாக்க உள்ள தடைகள், தலித் மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் கல்வி பெறுவதில் உள்ள முரண்பாடுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
தலித் மாணவர்களின் கல்வி நிலை குறித்து, 1974-75ம் ஆண்டு மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வின் முடிவை அடிப்படையாக வைத்து, தலித் மாணவர்களுக்கு முழுமையாக கல்வி சேரவும், மாணவர்களின் கல்வி நிலையை உயர்வதற்கும் பல்வேறு திட்டங்களை அரசு வகுத்ததைத் தொடர்ந்து, தற்போது, 38 ஆண்டுகள் கழிந்து மறுபடியும், 2012-2013ம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


8. மன்னார் தமிழ் மீனவர்களுக்கு 175 படகுகள் இந்தியா உதவி!

டிச.04,2012. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு இந்தியா 175 படகுகளை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா, மன்னார் பகுதிக்குச் சென்று ரூ.7 கோடியே 10 இலட்சம் மதிப்புள்ள இந்தப் படகுகளை மீனவர்களிடம் ஒப்படைத்தார்.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிவாரண உதவி வழங்குவதை நோக்கமாகக்கொண்ட இந்தியா, போரால் இடம்பெயர்ந்தவர்கள் மறுகுடியேற்றம் செய்யப்பட கவனம் செலுத்துகிறது என்ற இந்தியத் தூதர் அசோக் காந்தா, இந்திய வீட்டு வசதித் திட்டம், வடக்கு ரயில்வே மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களையும் சுட்டிக்காட்டினார்.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான படகுச் சேவை விரைவில் தொடங்க வேண்டும் என்று விரும்பும் இந்தியா, இந்த விடயத்தில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளது என்றார் தூதர் காந்தா.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...