Thursday, 20 December 2012

Catholic news in Tamil - 20/12/12

1. திருத்தந்தை : ஒளியில் எப்போதும் நடக்க வேண்டுமெனில், இறை வார்த்தையின் வழி நடக்க வேண்டும்

2. இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் வணக்கத்துக்குரியவர் என அறிவிக்கப்பட்டுள்ளார்

3. ஜனவரி 28, கல்தேயரீதி கத்தோலிக்கத் திருஅவையின் ஆயர்கள் மாமன்றம்
4. பேராயர் Zimowski : மனிதர்களின் வலுவற்ற நிலையில் இறைவனின் வல்லமை வெளிப்படுகிறது

5. ஜப்பான் ஆயர்கள் பேரவைத் தலைவர் : ஆசியர்களின் நலமான வாழ்வுக்குத் திருஅவையின் தலைவர்கள் பொறுப்பு

6. இத்தாலியின் Rai தொலைக்காட்சி நிறுவனம் நாசரேத்தூர் இயேசு என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை ஒளிப்பரப்பியது

7. சிரியாவில் நிகழ்ந்துவரும் வன்முறைகளால் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் துன்புறுகின்றனர்

8. புனித பூமிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை குறித்து மலேசிய அரசு இதுவரை விதித்திருந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஒளியில் எப்போதும் நடக்க வேண்டுமெனில், இறை வார்த்தையின் வழி நடக்க வேண்டும்

டிச.20,2012. ஒவ்வொருவரின் விசுவாச வாழ்விலும் ஒளி நிறைந்த நேரங்கள் இருப்பதுபோல், இருளான நேரங்களும் உள்ளன. ஒளியில் நாம் எப்போதும் நடக்க வேண்டுமெனில், இறை வார்த்தையின் வழி நடக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் Twitter செய்தியில் கூறினார்.
இப்புதனன்று தன் மறைபோதகத்தை முடித்தபின், திருத்தந்தை இரு Twitter செய்திகளை அனுப்பினார். அவற்றில் ஒன்று விசுவாசத்தையும் இறை வார்த்தையையும் இணைத்து அவர் வெளியிட்ட செய்தி. மற்றொரு செய்தியில் திருத்தந்தை இறையன்னை மரியாவைப் பற்றி எடுத்துரைத்தார்.
இறைமகனின் வருகையை எதிர்பார்த்திருந்த அன்னை மரியா, தான் இறைவனுடன் கொண்டிருந்த ஆழ்ந்த உறவிலிருந்து தன் முழுமையான மகிழ்வைப் பெற்றார் என்று திருத்தந்தை தன் அடுத்த செய்தியில் குறிப்பிட்டார்.
இதுவரை திருத்தந்தை Twitter வழி ஆறு செய்திகள் அனுப்பியுள்ளார். Twitter வழியாக திருத்தந்தையைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 12 இலட்சம் பேர் ஆங்கிலத்திலும், 4 இலட்சத்து 65 ஆயிரம் பேர் ஸ்பானிய மொழியிலும், 2 இலட்சம் பேர் இத்தாலிய மொழியிலும் திருத்தந்தையை pontifex என்ற இணையதள முகவரி மூலம்   தொடர்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் வணக்கத்துக்குரியவர் என அறிவிக்கப்பட்டுள்ளார்

டிச.20,2012. புனிதர்பட்ட நிலைக்கு உயர்த்துவதற்குத் தேவையான விபரங்கள் அடங்கிய 24 பேரின் வாழ்க்கை வரலாறு குறித்த தொகுப்புகளை இவ்வியாழனன்று ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை.
இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல் உட்பட 10 இறையடியார்களின்  வீரத்துவமான பண்புகள் அடங்கிய தொகுப்புக்களையும், ஐந்து முத்திப்பெற்றவர்களின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளையும், இத்தாலியின் Otrantoவில் 1480ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட முத்திப்பெற்ற Antonio Primaldo மற்றும் அவரோடு சேர்ந்த தோழர்கள், இன்னும், கொலம்பியாவின் முத்திப்பெற்ற Laura di Santa Caterina, மெக்சிகோவின்  முத்திப்பெற்ற  Maria Guadalupe ஆகியோரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளையும் ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை.
இன்னும், குரோவேஷியாவில் 1947ல் கொல்லப்பட்ட அருட்பணி Miroslav Bulešić, இஸ்பெயினில் 1936 மற்றும் 1937ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்ட பல மறைசாட்சிகளின் வாழ்க்கை விபரங்களையும் ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை.
Giovanni Battista Montini என்ற இயற்பெயரைக் கொண்ட இறையடியார் திருத்தந்தை ஆறாம் பவுல், இத்தாலியின் Concesioவில் 1897ம் ஆண்டு பிறந்தவர். 1963ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இரண்டாவது பகுதியைத் தொடங்கி வைத்தார். 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இறந்த இவர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை நிறைவு செய்தவர். இவரின் வீரத்துவமான பண்புகள் அடங்கிய அறிக்கையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கையெழுத்திட்டுள்ளதன்மூலம் அவர் வணக்கத்துக்குரியவர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருஅவையில் மறைசாட்சி தவிர மற்றவர்கள் முத்திப்பெற்றவர் என அறிவிக்கப்படுவதற்கு அவர் பெயரால் குறைந்தது ஒரு புதுமை இடம் பெற்றிருக்க வேண்டும். புனிதர் என அறிவிக்கப்படுவதற்கு அந்த நபரின் பரிந்துரையால் மேலும் ஒரு புதுமை இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. ஜனவரி 28, கல்தேயரீதி கத்தோலிக்கத் திருஅவையின் ஆயர்கள் மாமன்றம்
டிச.20,2012. கல்தேய ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் ஆயர்கள் மாமன்றம் வருகிற ஆண்டு ஜனவரி 28ம் தேதி நடைபெறும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார்.
கல்தேய ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பணிபுரிந்த கர்தினால் மூன்றாம் எம்மானுவேல் டெல்லி (Delly) பணிஓய்வு பெற விழைந்ததை இப்புதனன்று திருத்தந்தை ஏற்றுக் கொண்டார். அவருக்குப் பதிலாக, கல்தேய ரீதித் தலைவரைத் தேர்ந்தெடுக்க, ஆயர்கள் உரோம் நகரில் வருகிற ஜனவரி மாதம் கூடுவர் என்று திருத்தந்தை அறிவித்துள்ளார்.
தற்போது பணி ஒய்வு பெற்றுள்ள கர்தினால் மூன்றாம் எம்மானுவேல், 1927ம் ஆண்டு பிறந்தவர். இவர் 1952ம் ஆண்டு குருவாகவும், 1962ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப் படுத்தப்பட்டார். இவர் 2003ம் ஆண்டு கல்தேய ரீதி திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரேபியம், பிரெஞ்ச், ஆங்கிலம், இத்தாலியம் ஆகிய மொழிகளில் தேர்ச்சிபெற்ற கர்தினால் மூன்றாம் எம்மானுவேல், தன் 85வது வயதில் பணி ஒய்வு பெற்றுள்ளார்.
இவருக்குப் பதிலாக, பேராயர் Jacques Ishaq என்பவரைக் கல்தேய ரீதித் திருஅவையின் தற்காலிகத் தலைவராக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று நியமித்துள்ளார். ஜனவரியில் உரோம் நகரில் கூடும் கல்தேய ரீதி ஆயர்கள் மாமன்றம் புதியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.

4. பேராயர் Zimowski : மனிதர்களின் வலுவற்ற நிலையில் இறைவனின் வல்லமை வெளிப்படுகிறது

டிச.20,2012. மனிதர்களின் இயலாமையிலும், வலுவற்ற நிலையிலும் இறைவனின் வல்லமை வெளிப்படுகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ASL என்று அழைக்கப்படும் உரோம் நகர் நல நிறுவனம் இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு திருப்பலியில் மறையுரையாற்றிய திருப்பீட நலப்பணி அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, இவ்வாறு கூறினார்.
இப்புதன் திருப்பலியின் இரு வாசகங்களில் குறிப்பிடப்பட்ட சாம்சன் மற்றும் திருமுழுக்கு யோவான் இவர்களின் பிறப்பு இறைவன் தந்த வரம் என்பதைச் சுட்டிக்காட்டியப் பேராயர் Zimowski, மனிதர்கள் பார்வையில் தாழ்வாகக் கருதப்பட்ட இரு பெண்கள் கடவுளின் வல்லமையால் இரு முக்கிய விவிலிய நாயகர்களின் அன்னையராக மாறும் பேறு பெற்றதையும் எடுத்துக் கூறினார்.
நோயுற்றிருப்போருக்குப் பணிகள் புரிவது மிகக் கடினமான ஓர் அழைப்பு என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Zimowski, நம்பிக்கையைக் கொணரும் கிறிஸ்மஸ் பெருவிழா கூறும் முக்கியச் செய்தியை தங்கள் பணிகளால் உலகிற்கு உணர்த்தும் நலப்பணியாளர்களை வாழ்த்துவதாகக் கூறினார்.

5. ஜப்பான் ஆயர்கள் பேரவைத் தலைவர் : ஆசியர்களின் நலமான வாழ்வுக்குத் திருஅவையின் தலைவர்கள் பொறுப்பு
டிச.20,2012. ஆசிய மக்களின் முன்னேற்றத்திற்கும் நலமான வாழ்வுக்கும் திருஅவையின் தலைவர்கள் பொறுப்பு என்றும், இந்த முன்னேற்றம் நன்னெறி மற்றும் ஆன்மீகத்துடன் இணைந்தது என்றும் ஜப்பான் ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் Leo Jun Ikenaga கூறினார்.
வியட்நாமில் அண்மையில் நடைபெற்ற ஆசிய ஆயர்கள் பத்தாவது கூட்டத்தில், நாகசாகி பேராயர் Takami Mitsuaki அவர்களால் வாசிக்கப்பட்ட இவ்வுரையில், பேராயர் Ikenaga, 2011ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி, மற்றும் அணுஉலைக் கசிவு ஆகிய நிகழ்வுகளை மையப்படுத்தியுள்ளார்.
இயற்கைப் பேரிடர்கள் ஒவ்வொரு முறையும் நிகழும்போது, அதனுடன் தொடர்புள்ள மனித முன்னேற்ற முயற்சிகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன என்று பேராயர் தன் உரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக நாடுகளிடையே வளர்ந்துள்ள பொருளாதாரப் போட்டிகளால், அத்துமீறிய வழிகளில் இயற்கையைச் சீரழிக்கும் வழிகளில் மனித குலம் ஈடுபடுவது ஆபத்தான ஒரு போக்கு என்பதையும் பேராயரின் உரை வலியுறுத்தியது.
உலகமயமாக்கல், இளையோரிடையிலும், முதியோரிடையிலும் அதிகரித்து வரும் தற்கொலைகள், இயற்கையும் பிற உயிரினங்களும் அழிதல் என்ற பல கருத்துக்களையும் தன உரையில் குறிப்பிட்டார் இயேசு சபையைச் சேர்ந்த பேராயர் Ikenaga.

6. இத்தாலியின் Rai தொலைக்காட்சி நிறுவனம் நாசரேத்தூர் இயேசு என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை ஒளிப்பரப்பியது

டிச.20,2012. நெருங்கி வரும் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு, இவ்வியாழன் இரவு இத்தாலியின் Rai தொலைக்காட்சி நிறுவனம் நாசரேத்தூர் இயேசு என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை ஒளிப்பரப்பியது.
கிறிஸ்துவின் வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் ஆய்வுகளின் அடிப்படையில் Maite Carpio என்பவர் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம், வத்திக்கானில் பாதுகாக்கப்பட்டுவரும் பல பழமைவாய்ந்த ஏடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தின் மூன்றாவது பகுதியில் விவிலிய அறிஞர்கள் சிலரது பேட்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இயேசு சபை அருள்தந்தை Francesco De Rossi Gasperis உட்பட பல அறிஞர்களின் பேட்டிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

7. சிரியாவில் நிகழ்ந்துவரும் வன்முறைகளால் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் துன்புறுகின்றனர்

டிச.20,2012. சிரியாவில் நிகழ்ந்துவரும் வன்முறைகளால் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் துன்புறுகின்றனர் என்றும், இவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய குறைந்தது 50 இலட்சம் யூரோக்கள், அதாவது, 35 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று கரித்தாஸ் அமைப்பு உலக நாடுகளிடம் விண்ணப்பித்துள்ளது.
குளிர்காலத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் தங்குவதற்கு சரியான உறைவிடங்கள், அருந்துவதற்கு சுத்தமான குடி நீர், மற்றும் மருந்துகள் என்று பல வகையிலும் உதவிகள் தேவைப்படுகின்றன என்று காரித்தாஸ் தெரிவித்துள்ளது.
சிரியா, லெபனான், ஜோர்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்புக்கள் இணைந்து இந்த அவசரத் தேவைகளை நிறைவேற்ற தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

8. புனித பூமிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை குறித்து மலேசிய அரசு இதுவரை விதித்திருந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது

டிச.20,2012. புனித பூமிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை குறித்து மலேசிய அரசு இதுவரை விதித்திருந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.
புனித பூமிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை 700 ஆகவும், அவர்கள் இப்பயணத்திற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் 7 என்றும் மலேசிய அரசு இதுவரை கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
தற்போது, இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, புனித பூமிக்குச் செல்ல விரும்பும் அனைவரும் செல்லலாம் என்றும், இப்பயணத்திற்கு ஒவ்வொருவரும் 21 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் மலேசிய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மலேசிய நாட்டின் அரசு, வெளியிட்டுள்ள இந்த முடிவுகளை கத்தோலிக்க மற்றும் கிறிஸ்துவ அமைப்புக்கள் பெரிதும் வரவேற்றுள்ளன.

 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...