Friday 7 December 2012

Catholic News in Tamil - 06/12/12

1. ஜெர்மன் குடியரசின் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

2. வத்திக்கான் அருங்காட்சியகம் உரோம் நகரில் நடத்தும் UNESCO கருத்தரங்கு

3. குழந்தைப்பேறு சட்டம் குறித்த பிரச்சனையில் பாராளுமன்றம் அதிக அவசரம் காட்டுகிறது - பிலிப்பின்ஸ் ஆயர்கள்

4. வாழ்வை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கானோர் அயர்லாந்து பாராளுமன்றத்திற்கு முன்பாக திருவிழிப்புப் போராட்டம்

5. திட்டங்கள் வகுப்பதில் அரசு காட்டும் தீவிரம் அவற்றை நிறைவேற்றுவதில் காட்டுவதில்லை - இந்திய ஆயர் பேரவை அதிகாரி

6. காங்கோ குடியரசில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்க உலக நாடுகளின் தலையீடு அவசியம் - இயேசு சபை JRSன் இயக்குனர்

7. பாலஸ்தீன நாட்டுக்கு வழங்கவிருந்த நிதி உதவியை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறுத்தப் போவதில்லை - கிறிஸ்தவ சபைகள் மகிழ்ச்சி

8. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தலைவர் இறைபதம் சேர்ந்தார்.

------------------------------------------------------------------------------------------------------

1. ஜெர்மன் குடியரசின் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

டிச.06,2012. ஜெர்மன் குடியரசின் அரசுத் தலைவர் Joachim Gauck, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்பின்போது, உலகமயமாக்கப்பட்ட, மத சார்பற்ற வழிகளில் செல்லும் உலகில் ஐரோப்பா சந்தித்துவரும் பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது.
சிறப்பாக, தற்போது உலகெங்கும் இன்னும் நிலவிவரும் பொருளாதாரச் சரிவு குறித்தும், இப்பிரச்சனையில் கத்தோலிக்கத் திருஅவை அளிக்கவல்ல தீர்வுகள் குறித்தும், கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே மற்றும் நாடுகளுடன் உறவுகொள்ளும் திருப்பீட அவையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Ettore Balestrero அவர்களையும் ஜெர்மன் அரசுத்தலைவர் சந்தித்து உரையாடினார்.


2. வத்திக்கான் அருங்காட்சியகம் உரோம் நகரில் நடத்தும் UNESCO கருத்தரங்கு

டிச.06,2012. கத்தோலிக்கத் திருஅவை தன் பாரம்பரியத்தின் நினைவுகளை வரலாறு வழியாகவும், அரும்பொருள் பாதுகாப்பின் வழியாகவும் வளர்த்துவந்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 5, இப்புதன் முதல் இவ்வெள்ளி முடிய உரோம் நகரில் வத்திக்கான் அருங்காட்சியகம் நடத்தும் ஓர் கருத்தரங்கில் உரையாற்றிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் Antonio Paolucci இவ்வாறு கூறினார்.
ஐ.நா.அவையின் கல்வி, கலாச்சார அமைப்பான UNESCOவும், HERITY எனப்படும் ஓர் பன்னாட்டு நிறுவனமும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கு, வத்திக்கான் அருங்காட்சியகத்தில் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது என்று இயக்குனர் Paolucci எடுத்துரைத்தார்.
உலகப் புகழ்பெற்ற Sistine சிற்றாலயத்தின் 500ம் ஆண்டு நிறைவை, அக்டோபர் மாதம் கொண்டாடியபோது, அச்சிற்றாலயம் என்ற கருவூலத்தைக் குறித்து திருத்தந்தை பேசிய வார்த்தைகளை Paolucci தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பன்னாட்டு உறுப்பினர்கள் இவ்வியாழன் பிற்பகலில் இப்புகழ்பெற்ற Sistine சிற்றாலயத்தைப் பார்வையிட்டனர்.


3. குழந்தைப்பேறு சட்டம் குறித்த பிரச்சனையில் பாராளுமன்றம் அதிக அவசரம் காட்டுகிறது - பிலிப்பின்ஸ் ஆயர்கள்

டிச.06,2012. குழந்தைப்பேறு குறித்த ஒரு சட்டத்தை பிலிப்பின்ஸ் பாராளுமன்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதையொட்டி, அந்நாட்டு ஆயர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இச்செவ்வாயன்று விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் தலைமையில் கூடிவந்த பிலிப்பின்ஸ் ஆயர்கள், இந்தப் பிரச்சனையில் பாராளுமன்றம் அதிக அவசரம் காட்டுகிறது என்று கூறினர்.
மக்களின் வாழ்வைப் பலவகையிலும் பாதிக்கும் இந்த விடயத்தில் இன்னும் அதிகமான ஆலோசனைகளை மக்களின் பிரதிநிதிகள் பெற்றபின்னரே இந்த முக்கிய முடிவை எடுக்க வேண்டுமென்று 14 ஆயர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த விண்ணப்பம் கூறியுள்ளது.
டிசம்பர் 21ம் தேதி அந்நாட்டு பாராளுமன்றம் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக கலைந்து செல்வதற்கு முன்பாக இந்த முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்படுவதால், ஆயர்கள் இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளனர்.


4. வாழ்வை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கானோர் அயர்லாந்து பாராளுமன்றத்திற்கு முன்பாக திருவிழிப்புப் போராட்டம்

டிச.06,2012. கருக்கலைப்பை ஒரு சட்டமாக கொண்டுவர முயலும் அயர்லாந்து அரசுக்கு எதிராக, இச்செவ்வாயன்று 8000க்கும் அதிகமானோர் பாராளுமன்றத்திற்கு முன்பாக இரவு திருவிழிப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் Enda Kenny, கருக்கலைப்பைச் சட்டமாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளப்போவதில்லை என்று கூறிய வாக்குறுதியை மீண்டும் அவருக்கு நினைவுறுத்தும் விதமாக இந்தத் திருவிழிப்புப் போராட்டம் நடைபெற்றது.
கிறிஸ்மஸ் வருவதற்கு முன்னர் இப்பிரச்சனை தீர்க்கப்படும் என்று பிரதமர் கூறியதைத் தொடர்ந்து, வாழ்வை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் அயர்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் Savita Halappanavar என்ற இந்தியப் பெண் இறந்தார் என்பதை ஊடகங்கள் பெருமளவில் பேசிவந்ததைத் தொடர்ந்து, இவ்விவாதம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்னும் வலுவடைந்துள்ளது என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


5. திட்டங்கள் வகுப்பதில் அரசு காட்டும் தீவிரம் அவற்றை நிறைவேற்றுவதில் காட்டுவதில்லை - இந்திய ஆயர் பேரவை அதிகாரி

டிச.06,2012. இந்தியாவின் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வாழும் கிராமங்களை முன்னேற்றுவதற்கு இந்திய அரசு கொணர்ந்துள்ள புது திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று எனினும், இது வெறும் காகிதத்தில் பதிந்துள்ள திட்டமாக மாறும் ஆபத்தும் உள்ளதென்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரதமரின் கிராமத் திட்டம் என்ற பெயருடன் இச்செவ்வாயன்று மத்திய அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தைக் குறித்து பேசிய இந்திய ஆயர் பேரவையின் பழங்குடியினர் பணிகள் அவையின் செயலர் இயேசு சபை அருள் பணியாளர் Stanislaus Tirkey, இத்திட்டத்தைப் பற்றிய ஐயங்களை வெளியிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் 1000 கிராமங்கள் பயன்பெறும் என்றும், இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அஸ்ஸாம், பீகார், இமாச்சல் பிரதேசம், இராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்கள் பயன்பெறும் என்றும் தெரிகிறது.
சமுதாய நீதி மற்றும் முன்னேற்றத் துறையின் அமைச்சர் Balram Naik, மூன்று ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளதைத் தொடர்ந்து, பொதுவாக திட்டங்கள் வகுப்பதில் அரசு காட்டும் தீவிரம் அவற்றை நிறைவேற்றுவதில் காட்டப்படுவதில்லை என்று அருள்தந்தை Stanislaus Tirkey சுட்டிக்காட்டினார்.


6. காங்கோ குடியரசில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்க உலக நாடுகளின் தலையீடு அவசியம் - இயேசு சபை JRSன் இயக்குனர்

டிச.06,2012. ஆப்ரிக்காவிலுள்ள காங்கோ குடியரசின் ஒரு பகுதியான Masisiயில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்க உலக நாடுகளின் தலையீடு அவசியம் என்று இயேசு சபை அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
காங்கோ குடியரசில் நடைபெறும் வன்முறைகள் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதன் மறைபோதகத்தின் இறுதியில் ஒரு சிறப்பான விண்ணப்பம் விடுத்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, ஆப்ரிக்காவில் புலம்பெயர்ந்தோரிடையே பணிபுரியும் இயேசு சபை அமைப்பான JRSன் இயக்குனர் Isaac Kiyaka என்ற அருள் பணியாளர் Masisi பகுதி மக்களைக் காக்கும் விண்ணப்பத்தை Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
Goma எனும் நகரைப் புரட்சிக் குழுக்கள் கைப்பற்றியபோது, பன்னாட்டு அரசுகளின் தலையீடு இருந்ததால், அங்கு நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல், Masisi நகரிலும் பன்னாட்டு அரசுகளின் தலையீடு வேண்டுமென்று அருள் பணியாளர் Kiyaka விண்ணப்பித்துள்ளார்.
நிலத்தடி கனிமங்கள் நிறைந்துள்ள Masisi பகுதியில் புரட்சியாளர்கள் நுழைந்ததை அடுத்து, அங்கிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருகின்றனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. பாலஸ்தீன நாட்டுக்கு வழங்கவிருந்த நிதி உதவியை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறுத்தப் போவதில்லை - கிறிஸ்தவ சபைகள் மகிழ்ச்சி

டிச.06,2012. பாலஸ்தீன நாட்டுக்கு வழங்கவிருந்த நிதி உதவியை அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாராளுமன்றம் நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்திருப்பதை அந்நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளும் வெகுவாக வரவேற்றுள்ளன.
நவம்பர் 29, கடந்த வியாழனன்று ஐ.நா.பொது அவை எடுத்த வாக்கெடுப்பின்  மூலம் பாலஸ்தீனம் ஒரு தனி நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து எதிர்த்து வந்த அமெரிக்க ஐக்கிய நாடு, இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு வழங்கவிருந்த 440 மில்லியன் டாலர்கள், அதாவது, 2420 கோடி ரூபாய் நிதி உதவியை நிறுத்தப்போவதாக இத்திங்களன்று அறிவித்திருந்தது.
அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இந்த முடிவை மாற்றும்படி பாராளு மன்றத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்தன.
திங்களன்று வெளியிட்ட முடிவை நிறைவேற்றப்போவதில்லை என்றும், முன்னர் கூறியபடியே, அந்நாட்டுக்கு நிதி உதவிகள் வழங்கப்படும் என்றும் இப்புதனன்று பாராளு மன்றம் அறிவித்ததை அனைத்து கிறிஸ்தவ சபைகளும் மகிழ்வுடன் வரவேற்றுள்ளன.


8. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தலைவர் இறைபதம் சேர்ந்தார்.

டிச.06,2012. அந்தியோக்கியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தலைவர் 4ம் இக்னேசியஸ் இப்புதனன்று தன் 92ம் வயதில் இறைபதம் சேர்ந்தார்.
சிரியாவின் Hama நகருக்கு அருகே Muharda என்ற கிராமத்தில் 1920ம் ஆண்டு பிறந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் 4ம் இக்னேசியஸ், பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்திலும், பாரீஸ் நகரின் புனித செர்ஜியுஸ் இறையியல் கல்லூரியிலும் பயின்றவர். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவையில் இளையோரின் பங்கேற்பை அதிகம் அதிகமாக ஊக்குவித்த இவர், 1961ம் ஆண்டு ஆயராகவும், 1979ம் ஆண்டு அந்தியோக்கியா திருஅவையின் முதுபெரும் தலைவராகவும் தேர்வுச்செய்யப்பட்டார்.
கடந்த சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த முதுபெரும் தலைவர் 4ம் இக்னேசியஸ், அண்மைமாதங்களில், சிரியாவில் அமைதி நிலவவேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment