1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : தன்னலத்தில் வாழும்வரை கிறிஸ்துவுக்கு முன்னான காலத்தில் வாழ்கிறோம்
2. கர்தினால் Sandri : ஈராக்கில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படுவதற்கு கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
3. கர்தினால் Filoni : ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்றுவோர் தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தப்படுவார்களாக
4. பாஸ்டன் கர்தினால் : அரசியலிலும் ஊடகத்துறையிலும் கத்தோலிக்கர் அதிகம் தேவை
5. மெக்சிகோ கர்தினால் : குடியேற்றதாரர்கள் போதைப்பொருள்களை எடுத்துச் செல்லக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
6. கருத்தடை தொடர்பான மசோதாவுக்கு எதிரான போர் தொடரும், பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எச்சரிக்கை
7. ஐ.நா.பொதுச்செயலர் : உலக அளவில் 21 கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்டோர் புலம்பெயர்வு
8. மலேரியா ஒழிப்பில் தாமதம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
9. கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ஜெர்மனியில் ஆயிரம் கைதிகள் விடுதலை
10. தமிழகத்தில் மிதிவண்டி ஓட்டிகள் உயிரிழப்பு அதிகம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : தன்னலத்தில் வாழும்வரை கிறிஸ்துவுக்கு முன்னான காலத்தில் வாழ்கிறோம்
டிச.18,2012. துன்பங்களைத் தாங்குவதில் வளருதல், அன்பு
செய்வதற்கான சக்தியில் வளருவதாகும் என்பது சிறாருக்குக்
கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்று திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சிசியோ
பெர்த்தோனே கூறினார்.
இச்செவ்வாயன்று
உரோம் பம்பினோ ஜேசு குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று அங்கு
பணியாற்றுவோர் மற்றும் நோயாளிக் குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப்
பகிர்ந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
குழந்தைகள் தங்களது கேள்விகளுக்கானப் பதிலை அவர்கள் காண வேண்டியிருக்கிறது, சிறுகுழந்தைகூட அறிவதற்கும் புரிந்து கொள்வதற்கும் விரும்புகிறது, இதில் வயது வந்தோர் அவர்களுக்கு உதவ வேண்டுமென்றும் கர்தினால் கேட்டுக் கொண்டார்.
தன்னலத்தில்
வாழும்வரை கிறிஸ்துவுக்கு முன்னான காலத்தில் வாழ்கிறோம் என்ற திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்களின் கூற்றையும் குறிப்பிட்ட கர்தினால் பெர்த்தோனே, ஒவ்வொருவரும் தன்னலத்தைக் கடந்து, மீட்பரின் பிறப்போடு திறந்துள்ள புதிய சகாப்தத்தின் உண்மையில் வாழ முயற்சிப்போம் எனவும் கூறினார்.
2. கர்தினால் Sandri : ஈராக்கில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படுவதற்கு கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
டிச.18,2012.
ஈராக்கில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படுவதற்கு அந்நாட்டின்
கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனக்
கேட்டுக்கொண்டார் கீழைரீதிப் பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri.
ஈராக்கின் கிர்குக்கிலுள்ள மிகப் பெரிய மசூதிக்கு கர்தினால் Sandri சென்றதை வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அந்நாட்டின் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நோக்கும்வேளை, இவ்விரு மதத்தவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டி எழுப்புமாறு வலியுறுத்தினார் அவர்.
அமைதியின்றி எந்த ஒரு கலாச்சாரமும் முன்னேற்றமும் இடம்பெறாது என்பதால்,
அமைதி என்ற திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்
ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுக் கொண்டார் கீழைரீதிப் பேராயத் தலைவர் கர்தினால் Sandri.
மேலும், இச்சனிக்கிழமையன்று கிர்குக் நகர் ஆளுனர் Najm Alddin Karimஐச் சந்தித்த கர்தினால் Sandri, கிறிஸ்மஸ்
தினமான டிசம்பர் 25ம் தேதி அரசு விடுமுறையாகத் தொடர்ந்து
கடைப்பிடிக்கப்படும் என்பதையும் உறுதி செய்தார் என ஊடகங்கள் கூறுகின்றன.
3. கர்தினால் Filoni : ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்றுவோர் தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தப்படுவார்களாக
டிச.18,2012.
ஆப்ரிக்கத் திருஅவையின் நலனுக்காக மறைப்பணி செய்வோர் தூய ஆவியின்
வல்லமையால் வழிநடத்தப்படுவதற்குத் தான் செபிப்பதாகத் தெரிவித்தார்
நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.
ஆப்ரிக்காவின்
உகாண்டா நாட்டின் வடபகுதியில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டுக்
கொண்டாட்டங்களை நிறைவு செய்த திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய
கர்தினால் Filoni,
உகாண்டாவை ஆட்சி செய்யும் அரசியல் மற்றும் பழங்குடி இனத் தலைவர்கள்மீது
உயிர்த்த ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் நிரம்பட்டும் எனவும் வாழ்த்தினார்.
1912ம்
ஆண்டின் தொடக்க காலத்தில் உகாண்டாவின் வடபகுதிக்கு முதன் முதலில்
நற்செய்தியை எடுத்துச் சென்ற கொம்போனி மறைபோதக சபையினரைச் சிறப்பாகக்
குறிப்பிட்டு நன்றி தெரிவித்த கர்தினால் Filoni, இந்தப் பகுதியில் தங்களது எடுத்துக்காட்டான வாழ்க்கையால் நற்செய்தியை அறிவிப்பதற்குத் தங்கள் வாழ்வையே தியாகம் செய்த புனிதர்கள் Daudi Okelo, Jildo Irwa , மறைசாட்சிகளாக உயிர்நீத்த வேதியர்கள் மற்றும் பலரையும் நன்றியோடு நினைவுகூர்ந்தார்.
உகாண்டாவின் குருக்கள், துறவிகள், பொது
நிலையினர் ஆகிய அனைவரும் இந்த நம்பிக்கை ஆண்டில் தங்களது கிறிஸ்தவ
விசுவாசத்தில் இன்னும் ஆழப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
4. பாஸ்டன் கர்தினால் : அரசியலிலும் ஊடகத்துறையிலும் கத்தோலிக்கர் அதிகம் தேவை
டிச.18,2012. ஒரு சமுதாயத்தின் பொதுவாழ்வில் கிறிஸ்தவ
விசுவாசத்தை எடுத்துச் செல்லக்கூடிய கத்தோலிக்க அரசியல்வாதிகளும்
ஊடகவியலாளரும் அதிகம் தேவைப்படுகிறார்கள் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு
பாஸ்டன் கர்தினால் Sean P. O’Malley கூறினார்.
ஒரு
சமுதாயத்தில் பொதுவான கருத்துக்களை உருவாக்கி பல்வேறு வழிகளில் மக்களிடம்
தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் பொதுவாழ்வில்
அவர்கள் கொண்டிருக்கும் முக்கிய பங்கை முதலில் புரியச் செய்ய வேண்டுமெனவும்
கூறினார் கர்தினால் O’Malley.
அமெரிக்காவில் திருஅவை என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்ற மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த அவர், கலாச்சாரத்தை நாம் அறிவிப்பதற்கு கலாச்சாரங்கள் வெளிப்படும் இடங்களில் நாம் நற்செய்தியை அறிவிப்பவர்களாக இருக்க வேண்டுமெனவும் கூறினார்.
இளையோருக்கு
மறைக்கல்வியைப் போதித்து அவர்கள் தங்கள் அழைத்தலை அறிந்து கொள்வதற்கு உதவ
வேண்டிய முக்கிய கடமையைத் திருஅவை கொண்டுள்ளது எனவும் பாஸ்டன் கர்தினால் O’Malley கூறினார்.
5. மெக்சிகோ கர்தினால் : குடியேற்றதாரர்கள் போதைப்பொருள்களை எடுத்துச் செல்லக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
டிச.18,2012.
அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் செல்லும் மத்திய அமெரிக்க நாடுகளின் மக்கள்
போதைப்பொருள்களை எடுத்துச் செல்லக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று
மெக்சிகோ கர்தினால் Juan Sandoval Iniguez கூறினார்.
போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள்களை
வியாபாரம் செய்வதற்கு குடியேற்றதாரர்களைப் பயன்படுத்தும் புதிய
யுக்திகளைக் கையில் எடுத்துள்ளார்கள் என்று எச்சரித்த Guadalajaraவின் முன்னாள் பேராயர் கர்தினால் Sandoval Iniguez, இவ்வாறு செய்வதற்கு மறுக்கும் குடியேற்றதாரர்கள் கொலை மிரட்டலை எதிர்நோக்குகின்றார்கள் என்றும் கூறினார்.
அண்மையில் வட மெக்சிகோவில் அறுபதுக்கும் மேற்பட்ட குடியேற்றதாரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறிய கர்தினால் Sandoval Iniguez, மத்திய அமெரிக்க நாடுகளின் குடியேற்றதாரர்கள், மெக்சிகோ நாட்டுக் குடியேற்றதாரர் அலுவலக அதிகாரிகளால் கொடூரமாய் நடத்தப்படுகிறார்கள் என்றும் குறை கூறினார்.
இந்த அதிகாரிகள், குடியேற்றதாரப்
பெண்களைச் சில நேரங்களில் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்குகின்றனர் மற்றும்
ஆதரவற்ற குடியேற்றதாரர்களிடமிருந்து பணத்தையும் பொருள்களையும்
அபகரிக்கின்றனர் என்றும் மெக்சிகோ கர்தினால் Sandoval Iniguez குற்றம் சாட்டினார்.
6. கருத்தடை தொடர்பான மசோதாவுக்கு எதிரான போர் தொடரும், பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எச்சரிக்கை
டிச.18,2012. பிலிப்பீன்சின் நாடாளுமன்றமும் சட்டமன்றமும் கருத்தடை தொடர்பான மசோதாவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளவேளை, இந்த
மசோதாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்று அந்நாட்டு க்த்தோலிக்க
ஆயர்கள் அரசியல்வாதிகளை இச்செவ்வாயன்று எச்சரித்துள்ளனர்.
நம்மைத்
தூய்மைப்படுத்துவதற்காகவே கருத்தடை தொடர்பான மசோதாவுக்கு எதிரான தங்களது
போராட்டம் தோல்வியடைந்திருப்பதைக் கடவுள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்
என்றுரைத்த Batanes ஆயர் Camilo Gregorio, எனினும், கடவுள் தங்களது போரை தங்களுக்குச் சாதகமாக முடித்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் அரசுத்தலைவர் அலுவலகத்தின் தூண்டுதலாலேயே இம்மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளார்கள், இது
அரசுத்தலைவர் அலுவலகத்தின் ஊழலின் ஒரு பகுதி எனக் குறை கூறினார்
பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் வாழ்வு ஆணையத் தலைவர் ஆயர் Gabriel Reyes.
அரசியல்வாதிகள், இதில் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் இதன்மூலம் அவர்கள் செய்தது சரியானதாக இருக்க முடியாது என Lingayen-Dagupan ஆயர் Socrates Villegas கருத்து தெரிவித்தார்.
7. ஐ.நா.பொதுச்செயலர் : உலக அளவில் 21 கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்டோர் புலம்பெயர்வு
டிச.18,2012. உலக அளவில் ஆண்டுதோறும் 21 கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான
அல்லது தரமான வாழ்வைத்தேடி தங்களது சொந்த நாடுகளைவிட்டு வேறு
நாடுகளுக்குச் செல்கின்றனர் என ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 18, இச்செவ்வாயன்று அனைத்துலக குடியேற்றதாரர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், மனித உரிமை மீறல்கள், வறுமை, பாகுபாடு போன்ற காரணங்கள் உட்பட பல கடினமான சூழல்களால் இம்மக்கள் புலம்பெயர்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த
மக்களுக்குத் தகுந்த ஆதரவு வழங்கப்பட்டால் இவர்கள் வாழும் சமுதாயங்களின்
முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றுவார்கள் என்றும் அவரின் செய்தி
கூறுகின்றது.
தேசிய அளவில் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் வகுக்கப்படுமாறும் வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர்.
உலகில் குடியேற்றதாரரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையொட்டி இரண்டாயிரமாம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியன்று கூடிய ஐ.நா.பொது அவை, அனைத்துலக குடியேற்றதாரர் தினத்தை உருவாக்கி, அந்நாள் டிசம்பர் 18ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்தது.
8. மலேரியா ஒழிப்பில் தாமதம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
டிச.18,2012.
மலேரியா ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கென உலக அளவில் வழங்கப்படும்
நிதியுதவியில் குறிப்பிடத்தகும் வகையில் தாமதம் ஏற்படுவதால், இந்நோய் ஒழிப்பு நடவடிக்கைகளும் தாமதம் அடையக்கூடும் என WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதன் மூலம் அந்நோய் ஒழிப்பில் அண்மைக் காலங்களில் கிடைத்த பலன்கள், பலனற்றுப் போய்விடக்கூடும் எனவும், “மலேரியா குறித்த உலகளாவிய அறிக்கை 2012” என்ற தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது WHO நிறுவனம்.
மலேரியா நோயைத் தடுப்பதற்கும் அதனைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கான நிதிக் கையிருப்புக்கும், தேவைப்படும் நிதிக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த
இரண்டு ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் கொசு வலை விநியோகிக்கப்படுவது முந்தைய
ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவான அளவுக்கு குறைந்துள்ளது
என்றும், அதன்
காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் மலேரியா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும்
அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மலேரியா ஒழிப்புக்கு எதிரான செயற்பாடுகளை இன்னும் துரிதமாகச் செயல்படுத்துவதற்கு நேலும் 300 கோடி டாலர்கள் தேவை என்றும், அதற்காக புதிய வழிகளில் நிதியாதாரங்களை அதிகரிக்கும் வழிகளை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2010ம் ஆண்டில் உலக அளவில் 21 கோடியே 90 இலட்சம் பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர். மேலும், ஏறக்குறைய 6 இலட்சத்து 60 ஆயிரம் பேர் மலேரியாவால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்கு உட்பட்ட சிறார் எனவும் WHO நிறுவனம் கூறியுள்ளது.
9. கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ஜெர்மனியில் ஆயிரம் கைதிகள் விடுதலை
டிச.18,2012. கிறிஸ்மஸ் பெருவிழாவை வரவிருப்பதை முன்னிட்டு ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய Rhineland-Palatinate நீதித்துறையின் தகவல் தொடர்பாளர், கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு ஆயிரம் சிறைக்கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளனர் என்று அறிவித்தார்.
கொடூரமான வன்முறை, தீவிரவாதம், திருட்டு மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்தப் பொது மன்னிப்பு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு அதிகபட்சமாக நார்த் ரைன் – வெஸ்ட்ஃபேலியா மாநிலத்தில் 710 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
அதற்கு அடுத்ததாக, ஹெசி மாநிலத்தில் 150 முதல் 200 பேர் வரை விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10. தமிழகத்தில் மிதிவண்டி ஓட்டிகள் உயிரிழப்பு அதிகம்
டிச.18,2012. இந்தியாவில்,
இரண்டு சக்கர மிதிவண்டி ஓட்டுபவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி இறக்கும்
மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை வகிப்பதாக மத்திய
தரைவழிப்போக்குவரத்து அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன.
வட
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்தான் தமிழ்நாட்டைவிட அதிக அளவில்
மிதிவண்டி ஓட்டுபவர்கள் விபத்துக்களில் உயிரிழந்திருக்கின்றனர்.
மிதிவண்டியில் போகும்போது ஏற்பட்ட சாலை விபத்துக்களில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 1,412 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதாவது ஒரு நாளுக்கு நான்கு பேர் என்ற விகித்த்தில் இது இடம் பெற்றிருக்கின்றது.
இத்தகைய விபத்துக்களினால் உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த ஆண்டு 2,338 பேர் இறந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கென்று சாலைகளில் தனியாக ஒதுக்கப்பட்ட வழிகள் இல்லாததே, இந்த
அளவு அதிக எண்ணிக்கையில் மிதிவண்டி பயணிகள் விபத்தில் சிக்கி இறப்பதற்கு
ஒரு முக்கிய காரணம் என்று தமிழ் நாடு மிதிவண்டி சங்கத்தின் செயலர்
எஸ்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment