Friday 7 December 2012

Catholic News in Tamil - 05/12/12

1. இஸ்ரேல் நாட்டின் அரசுத் தலைவர் திருத்தந்தைக்கு Twitter வழியாக செய்தி

2. அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி பேராயர் Zygmunt Zimowski வெளியிட்ட செய்தி

3. நடைபெறவிருக்கும் ஆசிய ஆயர்கள் பேரவைக் கூட்டம், வியட்நாம் திருஅவைக்கு புத்துணர்வை வழங்கும் - Saigon கர்தினால்

4. கிறிஸ்மஸ் காலத்தின் நம்பிக்கை செய்தி குழந்தைகளை முக்கியமாகச் சென்றடைய வேண்டும் - ஈராக் பேராயர்

5. இயேசு கிறிஸ்துவின் வாழ்வை எடுத்துக்கூறும், ஆறு மணி நேர இந்தியத் திரைப்படம்

6. பாகிஸ்தானில் கிறிஸ்தவ மறைபணியாளர் அடையாளம் தெரியாத இருவரால் சுடப்பட்டார்

7. அனைத்துலகத் தன்னார்வத் தொண்டர்கள் நாளன்று ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி

8. வேலை செய்யும் கட்டாயத்திற்குள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை குறையவில்லை

------------------------------------------------------------------------------------------------------

1. இஸ்ரேல் நாட்டின் அரசுத் தலைவர் திருத்தந்தைக்கு Twitter வழியாக செய்தி

டிச.05,2012. "திருத்தந்தையே, Twitterக்கு உங்களை வரவேற்கிறேன். நமக்கிடையே நிலவும் உறவு உலக அமைதியை வளர்க்கும் ஓர் உறவாக அமைய விழைகிறேன்" என்று இஸ்ரேல் நாட்டின் அரசுத் தலைவர் Shimon Peres, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு Twitter வழியாக ஒரு  செய்தியை அனுப்பியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டுக்குத் திருப்பீடத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள பேராயர் Giuseppe Lazzarotto அவர்களை இச்செவ்வாயன்று தன் அரசுத் தலைவர் இல்லத்தில் சந்தித்த Peres, திருத்தந்தை இணையதளத்தில் Twitter வழியாக தன் தொடர்புகளை வளப்படுத்தியதற்காக தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் நாட்டுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள சிறப்பான வாழ்த்துக்களை அரசுத் தலைவர் Peresஇடம் சமர்ப்பித்த திருப்பீடத் தூதர் பேராயர் Lazzarotto, இஸ்ரேலுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உரையாடல்கள் வரும் நாட்களில் இன்னும் வலிமை பெரும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
இன்றைய சமூகத்தொடர்பு தொழில்நுட்பத்தில் திரு அவையின் இருப்பை வலியுறுத்தும் விதமாகவே இம்மாதம் 12ம் தேதி திருத்தந்தையின் Twitter பக்கம் துவக்கப்படும் என்று திருப்பீட அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


2. அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி பேராயர் Zygmunt Zimowski வெளியிட்ட செய்தி

டிச.05,2012. உலகின் உரிமைகள் அனைத்தும் சக்திவாய்ந்தவர்களுக்கும், வெற்றி பெறுபவர்களுக்கும் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள தனிச்சொத்து ஆக முடியாது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 3, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி நலப்பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறினார்.
உடலாலும், மனதாலும் பல்வேறு தடைகளைச் சந்தித்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்குத் திருஅவை தனிப்பட்ட அர்ப்பணிப்பை அளித்து வந்துள்ளது என்று பேராயர் Zimowski தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் மனித சமுதாயத்தில் முழுமையாக இணைக்கப்படுவதற்கு ஒவ்வொரு நாடும் பெரும் நிதியை ஒதுக்கவேண்டியிருந்தாலும், அனைத்து நாடுகளும் நிறைவேற்ற வேண்டிய ஒரு முக்கியக் கடமை இது என்று பேராயர் Zimowski தன் செய்தியில் வலியுறுத்தினார்.
உலகெங்கும் 100 கோடிக்கும் அதிகமானோர், அதாவது உலகின் மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் உடல் மற்றும் மனக் குறைகள் உள்ளவர்கள் என்றும், இவர்களில் 20 கோடிக்கும் அதிகமானோர் இக்குறைகளால் பெரும் துயர்களைச் சந்திக்கின்றனர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. நடைபெறவிருக்கும் ஆசிய ஆயர்கள் பேரவைக் கூட்டம், வியட்நாம் திருஅவைக்கு புத்துணர்வை வழங்கும் - Saigon கர்தினால்

டிச.05,2012. டிசம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி முடிய வியட்நாமில் நடைபெறவிருக்கும் ஆசிய ஆயர்கள் பேரவைக் கூட்டம், வியட்நாம் திருஅவைக்கும், கத்தோலிக்க மக்கள் அனைவருக்கும் புத்துணர்வை வழங்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் Saigon பேராயர் கர்தினால் Pham Minh Man.
வருகிற செவ்வாயன்று Ho Chi Minh நகரில் நடைபெறும் ஆறு நாள் கூட்டத்தில் மணிலா உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Gaudencio Rosales திருத்தந்தையின் சார்பில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் 118 பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு நாட்டுக்குள் நுழையும் அனுமதியை எவ்விதத் தடையுமின்றி அளித்துள்ளது என்பதைச் சிறப்பான முறையில் கர்தினால் Minh Man சுட்டிக்காட்டினார்.
மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அண்மைய காலங்களில் வியட்நாம் அரசு சீன அரசின் வழியில் செல்லக்கூடும் என்ற ஐயம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


4. கிறிஸ்மஸ் காலத்தின் நம்பிக்கை செய்தி குழந்தைகளை முக்கியமாகச் சென்றடைய வேண்டும் - ஈராக் பேராயர்

டிச.05,2012. நம்பிக்கையையும், பகிர்வையும் வளர்க்கும் கிறிஸ்மஸ் காலத்தின் அடிப்படை செய்தி குழந்தைகளை முக்கியமாகச் சென்றடைய வேண்டும் என்று ஈராக் பேராயர் ஒருவர் கூறினார்.
இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ள திருவருகைக் காலத்தையொட்டி தன் கிறிஸ்மஸ் செய்தியை வெளியிட்ட கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ, குழந்தைகளுக்கு உதவிகள் செய்யும்வண்ணம் நிதிதிரட்டும் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
பேராயரின் அழைப்பைத் தொடர்ந்து, எதிர்பார்ப்பைக் கடந்து, குழந்தைகள் நிதிக்கு அதிகத் தொகையை இளையோர் திரட்டியுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கிறிஸ்மஸ் காலம் முழுவதும் திரட்டப்படும் இத்தொகை ஈராக்கின் வன்முறைகளால் பெற்றோரை இழந்துத் தவிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமியக் குழந்தைகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று பேராயர்  சாக்கோ அறிவித்துள்ளார்.


5. இயேசு கிறிஸ்துவின் வாழ்வை எடுத்துக்கூறும், ஆறு மணி நேர இந்தியத் திரைப்படம்

டிச.05,2012. இயேசு கிறிஸ்துவின் வாழ்வை எடுத்துக்கூறும், ஆறு மணி நேரம் ஓடக்கூடிய ஒரு திரைப்படம் இந்தியாவில் அண்மையில் வெளியானது.
கிறிஸ்துவின் பயணம் என்ற பொருள்படும் Kristayan என்ற தலைப்புடன், இந்தி மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் Geo George என்ற கத்தோலிக்க அருள் பணியாளரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் ஆசியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இத்திரைப்படத்தில் 200க்கும் அதிகமானோர் நடித்துள்ளனர்.
Ankit Sharma என்ற ஓர் இந்து இளைஞர் கிறிஸ்துவாக நடித்துள்ள இத்திரைப்படத்தை உருவாக்கியவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் கிறிஸ்துவின் மீது ஈடுபாடு கொண்டுள்ள பல்வேறு மதத்தினர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்தவ மறையைக் குறித்தும் இந்தியாவில் நிலவும் பல்வேறு தவறான கருத்துக்களைக் களைய இத்திரைப்படம் பெரும் உதவியாக இருக்கும் என்று இந்து மதத்தைச் சார்ந்த கல்வியாளரான Neetu Joshi கூறினார்.


6. பாகிஸ்தானில் கிறிஸ்தவ மறைபணியாளர் அடையாளம் தெரியாத இருவரால் சுடப்பட்டார்

டிச.05,2012. பாகிஸ்தானில் கடந்த 38 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த ஒரு கிறிஸ்தவ மறைபணியாளர் இத்திங்களன்று லாகூரில் அடையாளம் தெரியாத இருவரால் சுடப்பட்டார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த Bargeeta Almby என்ற 72 வயது பெண்மணி கடந்த 38 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பணி புரிந்து வருபவர். இவர் டிசம்பர் 3, இத்திங்களன்று தன் வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத இருவர் இவரைச் சுட்டதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மாற்றுத் திறன் கொண்ட, ஏழைக் குழந்தைகளுக்காக ஓர் காப்பகம் நடத்தி வரும் Almby, பெண்கள் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருபவர்.
பாகிஸ்தான் அரசில் பணிபுரியும் கத்தோலிக்க அமைச்சர் Paul Bhatti இத்தாக்குதல் வன்மையான கண்டனத்திற்கு உரியது என்று கூறி, அடிப்படைவாதத்திலிருந்து பாகிஸ்தானை மீட்க அனைத்து மக்களும் ஒன்றிணையவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.


7. அனைத்துலகத் தன்னார்வத் தொண்டர்கள் நாளன்று ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி

டிச.05,2012. உலகின் பல்வேறு சவால்களைச் சந்திக்க, தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் தன்னார்வத் தொண்டர்களை வாழ்த்துவதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 5, இப்புதனன்று சிறப்பிக்கப்படும் அனைத்துலகத் தன்னார்வத் தொண்டர்கள் நாளன்று செய்தி வெளியிட்ட பான் கி மூன், ஒவ்வொரு நாட்டுச் சமுதாயத்தில் வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற சவால்களையும், உலகச் சமுதாயத்தில் அமைதி, வன்முறை ஒழிப்பு போன்ற சவால்களையும் தீர்க்க உழைக்கும் பணியாளர்களைப் பாராட்டினார்.
ஐ.நா.தன்னார்வத் தொண்டர்கள் என்ற அமைப்பில், அண்மையக் காலங்களில், இணையதளம் வழியாக தங்கள் நேரத்தையும், பணத்தையும் பகிர்ந்துவரும் பல்வேறு ஆர்வலர்களைச் சிறப்பாகப் பாராட்டுவதாக பான் கி மூன் கூறினார்.
1985ம் ஆண்டில் துவக்கப்பட்ட அனைத்துலகத் தன்னாவர்வத் தொண்டர்கள் நாள், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.


8. வேலை செய்யும் கட்டாயத்திற்குள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை குறையவில்லை

டிச.05,2012. உலகெங்கும் 20 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்று சிறார் தொழில் செய்வது குறித்து ஐ.நா.அவை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
இவர்களில் சுமார் ஒன்றரை கோடி சிறார்கள் எந்த ஒரு பள்ளிக் கல்வியும் கிடைக்கப் பெறாமலே இருக்கிறார்கள் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
இதுபோல சிறார்கள் வேலை வாங்கப்படுவது குறைந்து வரும் விகிதம் மிகவும் மந்தமாகவே இருப்பதாகவும், உலக அளவில் கல்வியை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை இது குலைப்பதாகவும், கல்விக்கான ஐ.நா.அவை சிறப்புத் தூதர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறுகிறது.
ஆப்ரிக்காவில் வேலை செய்யும் கட்டாயத்திற்குள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டையொட்டி, மேலும் 1.6 கோடியாக அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது.

No comments:

Post a Comment