1. அந்தியோக்கிய புதிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவருக்குத் திருத்தந்தை வாழ்த்து
2. கர்தினால் கிரேசியஸ் : இளம்பெண்ணின் மரணம் இந்தியச் சமுதாயத்தில் தீவிர மாற்றம் இடம்பெறுவதற்கான அறைகூவல்
3. பிரதமர் மன்மோகன் சிங் : வன்முறை வேண்டாம்
4. சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு அலெப்போ ஆயர் அழைப்பு
5. திருமணம் குறித்துப் பேசுமாறு Westminster பேராயர் வலியுறுத்தல்
6. இங்கிலாந்து ஆயர் Conry : குடும்பத்தில் குழந்தையின் முக்கியத்துவத்தைச் சிந்திக்க அழைப்பு
7. அருள்தந்தை லொம்பார்தியின் ஆசிரியர் பகுதி
8. உதவி கேட்டு ஆலயக் கதவுகளைத் தட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
9. சிரியாவில் இடைக்கால அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், ஐ.நா.பிரதிநிதி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அந்தியோக்கிய புதிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவருக்குத் திருத்தந்தை வாழ்த்து
டிச.29,2012. மத்திய கிழக்குப்பகுதி, உறுதியற்ற நிலையிலும் எளிதில் வன்முறை இடம்பெறும் இடமாகவும் இருக்கும் இக்காலத்தில், கிறிஸ்துவின்
சீடர்கள் தங்களுக்கிடையே நிலவும் ஒன்றிப்புக்கு உண்மையான சாட்சி பகர
வேண்டியதன் உடனடித் தேவை அதிகமாக ஏற்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் கூறினார்.
இவ்வாறு சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலம், அன்பு, அமைதி, ஒப்புரவு ஆகிய நற்செய்தி அறிவிக்கும் செய்தியை உலகம் நம்பும் என்றும் திருத்தந்தை கூறினார்.
அந்தியோக்கியா மற்றும் அனைத்துக் கிழக்குப் பகுதிக்குமான புதிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் John X Yazigiக்கு கிறிஸ்துவின் அன்பில் சகோதரத்துவ வாழ்த்துச் சொல்லி அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
உரோமன் கத்தோலிக்கத் திருஅவைக்கும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே இருக்கும் ஒன்றிப்பு முழுமையடையாத நிலையில், இவ்விரு
சபைகளும் தங்களுக்கு இடையேயான ஆன்மீக ஒன்றிப்பை மேலும் காணக்கூடிய
விதத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கானப் பொறுப்புணர்வை இவ்விரு சபைகளும்
கொண்டுள்ளன என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறைக்குப் பலியாகுவோரைக் கிறிஸ்து குணப்படுத்தவும், அமைதிக்கான செயல்கள் அப்பகுதியில் தூண்டப்படவும் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
92 வயதான கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Ignatius IV Hazim இம்மாதம் 5ம் தேதி இறந்ததையொட்டி அவ்விடம் தலைவரின்றி காலியாக இருந்தது. பெய்ரூட்டின் வடக்கேயுள்ள Balamand நமதன்னை துறவு இல்லத்தில் இம்மாதம் 17ம் தேதி கூடிய பேரவையில் அச்சபையின் புதிய முதுபெரும் தலைவர் John X Yazigi தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. கர்தினால் கிரேசியஸ் : இளம்பெண்ணின் மரணம் இந்தியச் சமுதாயத்தில் தீவிர மாற்றம் இடம்பெறுவதற்கான அறைகூவல்
டிச.29,2012.
இம்மாதம் 16ம் தேதி புதுடெல்லி புறநகர்ப் பகுதியில் ஓடும் பேருந்தில் ஆறு
ஆண்களினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 23 வயது மருத்துவக் கல்லூரி
மாணவி உயிரிழந்ததற்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அம்மாணவியின்
குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர்
கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
சிங்கப்பூரில் புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி, சிகிச்சை
பலனின்றி இச்சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தது குறித்து ஆசியச் செய்தி
நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ்,
முழு இந்தியத் திருஅவையும் அந்த இளம் பெண்ணுக்காகச் செபிக்கின்றது மற்றும்
அவரது குடும்பத்தினருடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்வு, இந்தியாவுக்கு வருத்தமான தருணம் எனவும், ஒரு சமுதாயம் தனது பெண்களை எவ்வாறு நடத்துகிறதோ அதுவே அதன் அறநெறி முன்னேற்றத்தின் அடையாளம் எனவும், இந்த இளம்பெண்ணின் மரணம் இந்தியச் சமுதாயத்தில் தீவிர மாற்றம் இடம்பெறுவதற்கான அழுகுரல் என்றும் கர்தினால் கிரேசியஸ் கூறினார்.
இந்தப் பெண்ணின் இறப்புக்காக அழுவது, சமுதாயத்தில்
மனித வாழ்வின் மதிப்புக்கு உறுதியான சான்றுகளாக வாழ்வதற்கு அனைத்துக்
கத்தோலிக்கரையும் தூண்ட வேண்டுமெனவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.
3. பிரதமர் மன்மோகன் சிங் : வன்முறை வேண்டாம்
டிச.29,2012.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம் மருத்துவக் கல்லூரி மாணவியின்
மரணத்தையொட்டி தலைநகர் புதுடெல்லியில் ஆயிரக்கணக்கானோர் அமைதியான
போராட்டத்தை மேற்கொண்டனர்.
இவ்விறப்பு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இம்மாணவி உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது; அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகமும் ஒன்றுபட்டு இது போன்ற சம்பவங்களுக்கு எதிராகக் கைகோர்க்க வேண்டும்; இந்தியா பாதுகாப்பான வாழ்விற்கு ஏற்ற இடம் என்பதை நிலைநாட்ட வேண்டும்; அதேசமயம் வன்முறை வேண்டாம்; இளைஞர்கள் அமைதியான முறையில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அப்பெண்ணின் மரணம் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு; இது தொடர்பாக ஏற்கனவே அனைவரும் தங்களின் எதிர்ப்புக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருக்கிறோம்; அப்பெண்ணின் மரணத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; இச்சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்; நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்; அனைவரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்துங்கள் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மருத்துவக் கல்லூரி மாணவியின் இறப்பினால், இந்தியா முழுவதிலும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்செயலைச் செய்த ஆறுபேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் மீது கொலைக் குற்றமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு அலெப்போ ஆயர் அழைப்பு
டிச.29,2012.
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையினால் சின்னாபின்னமாக
ஆக்கப்பட்டிருக்கும் சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு அழைப்பு
விடுத்துள்ளார் அலெப்போ நகர் கல்தேயரீதி ஆயர் Antoine Audo.
வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கேட்டுள்ள ஆயர் Audo, ஏழைகளுக்காகச் செபித்து அவர்களுக்குச் சேவை செய்யும்போது, கிறிஸ்தவர்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியிலும் மகிழ்ச்சியிலும் வாழ முடியும் என்று கூறினார்.
கஷ்டமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் அலெப்போ தலத்திருஅவை, ஏழைகளுக்கும்
தேவையில் இருப்போருக்கும் காரித்தாஸ் மற்றும்பிற பிறரன்பு நிறுவனங்கள்
மூலம் உதவி செய்து வருகிறது என்றும் ஆயர் கூறினார்.
தற்போது அலெப்போ கடும் குளிராக இருப்பதால் எரிபொருள் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்றும், சுமார் இரண்டாயிரம் கிறிஸ்தவக் குடும்பங்கள் அலெப்போவிலிருந்து லெபனன் சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
5. திருமணம் குறித்துப் பேசுமாறு Westminster பேராயர் வலியுறுத்தல்
டிச.29,2012.
ஒரு குடும்பத்தின் இதயமாக இருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள
திருமணம் குறித்து பேசுவதற்கு உண்மையிலேயே இதுவே தக்க தருணம் என்று
இங்கிலாந்தின் Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.
டிசம்பர் 30, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்ப விழாவையொட்டி Westminster
உயர்மறைமாநிலத்தின் 214 கத்தோலிக்க ஆலயங்களிலும் வாசிப்பதற்கென பேராயர்
வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குடும்பம் குறித்த இந்தக் கண்ணோட்டமானது, ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருக்கும் விசுவாசமான அன்பில் வேரூன்றப்பட்டது, இது திருமணத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் பேராயரின் அறிக்கை கூறுகின்றது.
மேலும், அடுத்த
தலைமுறையைப் பொறுப்புள்ள விதத்தில் பெற்றெடுத்து அன்பினால் அவர்களை
வளர்ப்பதையும் இது உள்ளடக்கியுள்ளது எனவும் கூறியுள்ளார் பேராயர்
நிக்கோல்ஸ்.
6. இங்கிலாந்து ஆயர் Conry : குடும்பத்தில் குழந்தையின் முக்கியத்துவத்தைச் சிந்திக்க அழைப்பு
டிச.29,2012. இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்ப விழாவையொட்டி மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் Arundel மற்றும் Brighton மறைமாநில் ஆயர் Kieran Conry, குடும்பம் மனித வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அங்கம் என்பதால் எந்த விலை கொடுத்தும் அதனைக் கட்டிக் காக்குமாறு கேட்டுள்ளார்.
ஒரு குழந்தைக்கு யாராவது ஒருவரது ஆதரவு தேவைப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர் Conry, குடும்பத்தில் குழந்தைகள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குழந்தைகளுக்குத்
தேவை என உணரும் மற்ற காரியங்களோடு கிறிஸ்தவ விசுவாசத்தையும் நாம் எவ்வாறு
அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திப்பதற்கு
திருக்குடும்ப விழா நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்றும் ஆயரின் செய்தி
கூறுகின்றது.
7. அருள்தந்தை லொம்பார்தியின் ஆசிரியர் பகுதி
டிச.29,2012.
கிறிஸ்மஸ் பெருவிழாவன்று முடிவின்றி இரத்தம் சிந்துதல் இடம்பெறும் சிரியா
உட்பட உலக நாடுகளின் அமைதிக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சீனாவின்
புதிய தலைவர்களுக்கும் வெளிப்படையாகத் தனது நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்திருப்பது திருஅவை மனுக்குலத்தின் பாதையை எவ்வாறு கவனித்து
வருகிறது என்பதைக் காட்டுகின்றது என்று இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ
லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு வழங்கிய வாரச் செய்தியில்,
திருத்தந்தை தனது ஊர்பி எத் ஓர்பி செய்தியில் சீனாவுக்கு வழங்கிய
நல்வாழ்த்துக்கள் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருப்பீடப்
பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி.
மனித சமுதாயத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் தொகையைக் கொண்டுள்ள சீனா உலகின் அதிகாரச் சக்தியில் வளர்ந்து வருகின்றது என்றும், அந்நாட்டின் புதிய தலைமை,
வழக்கமான அதிகாரக் கண்ணோட்டத்தோடு செயல்படாமல் அமைதி மற்றும்
ஒருமைப்பாட்டுணர்வில் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார் அருள்தந்தை
லொம்பார்தி.
8. உதவி கேட்டு ஆலயக் கதவுகளைத் தட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
டிச.29,2012. திருத்தந்தையின் பிறரன்பு அலுவலகத்துக்கு 2011ம் ஆண்டில் நிதி உதவி கேட்டு ஏழாயிரம் விண்ணப்பங்கள் வந்ததாகவும், ஏறக்குறைய ஒன்பது இலட்சம் யூரோக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார
நெருக்கடிகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சூழலில் திருத்தந்தையின் பிறரன்பு
அலுவலகத்துக்கு உதவி கேட்டு விண்ணப்பிக்கின்றவர்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாக, இந்த அலுவலகத்துக்குப் பொறுப்பான பேராயர் Guido Pozzo கூறினார்.
பொதுவாக இந்த அலுவலகம், உரோம் மறைமாநிலத்துக்கு மட்டுமே உதவும், ஆயினும், தற்போது பிற நாடுகளுக்கும், குறிப்பாக, கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உதவி வருகின்றது என்றும் பேராயர் Pozzo கூறினார்
9. சிரியாவில் இடைக்கால அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், ஐ.நா.பிரதிநிதி
டிச.29,2012.
ஏறக்குறைய 21 மாதங்களாக இடம்பெற்று வரும் ஆயுதத் தாக்குதல்களால்
சிதைவடைந்துள்ள சிரியாவில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும்வரை
உருவாக்கப்படும் இடைக்கால அரசு முழு அதிகாரங்களுடன் செயல்படுவதற்கு
வழிசெய்யப்படுமாறு ஐ.நா மற்றும் அரபு கூட்டமைப்பின் பிரதிநிதி Lakhdar Brahimi அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து தமஸ்குவில் நிருபர் கூட்டத்தில் பேசிய Brahimi, அனைத்துலக அமைதிகாப்புப் படையினரை அமர்த்துவது குறித்து சிந்திக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புரட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அந்நாட்டு அரசை இரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மாக்தாத்திடம் வலியுறுத்தியாக இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரெவ் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 30ம் தேதி ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, சிரியாவில் இடைக்கால அரசை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது.
ஆனால், அரசுத்தலைவர் பஷார் அல்-அசாத்தும், புரட்சியாளர்களும் இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை.
இந்த நிலையில், அடுத்த மாதம் மாஸ்கோவில் அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின்போது, புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment