1. திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை
2. அமெரிக்கத் திரு அவையின் அனைத்துலகக் கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு திருத்தந்தையின் செய்தி
3. மனித உரிமைகள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை
4. மும்பையில் முத்திப்பெற்ற திருததந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் சிலை திறப்பு
5. உற்பத்தித் துறையில் மாற்றுத் திறனாளிகளை இணைத்துக்கொள்வது வருங்காலத்திற்கு முக்கியம்
6. அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்: இவ்வாண்டு 16 ஆயிரம் பேர் பலி
7. திருப்பீடத்தூதர் வாகன விபத்தில் பலியானார்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை
டிச.10,2012. நுகர்வுக் கலாச்சாரத்தில் தன் மகிழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், கிறிஸ்து
பிறப்பு விழாவை நாம் எவ்விதம் கொண்டாடுவது எனப் புனித திருமுழுக்கு யோவான்
நமக்குக் கற்றுத் தருகிறார் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம்
நகரின் தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த
ஆயிரக்கணக்கான மக்களுக்கு இஞ்ஞாயிறு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பு விழா என்பது வெளிப்புற கொண்டாட்டங்களை மட்டும் குறிப்பதாக இல்லாமல், உண்மை மகிழ்வையும், வாழ்வையும், அமைதியையும் கொணரும் இறைமகனின் வருகையைச் சிறப்பிக்கும் விழாவாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் புனித திருமுழுக்கு யோவானைக் குறித்துப் பேசுவதைப் பற்றிக் குறிப்பிட்டத் திருத்தந்தை, இறைமகனின் முன்னோடியாக நோக்கப்படும் திருமுழுக்கு யோவான், பாலைநிலத்தில் முழங்கும் குரலாகவும், ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்க அழைப்பு விடுப்பவராகவும் புனித லூக்கா நற்செய்தியில் விவரிக்கப்படுகிறார் என்று கூறினார்.
புனித திருமுழுக்கு யோவானின் வார்த்தைக்கு நாம் செவிமடுத்து, வார்த்தையாம் இறைமகனுக்கு நம் மனதில் இடமளிப்போம் என, தன் மூவேளை செப உரையின்போது மெடலும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2. அமெரிக்கத் திரு அவையின் அனைத்துலகக் கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு திருத்தந்தையின் செய்தி
டிச.10,2012. இன்றையப் பிரச்சனைகளுக்கான தீர்வை இயேசுகிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் ஒன்றிப்பிலேயேக் காணமுடியும், ஏனெனில்
அதுவே அன்பு மற்றும் உண்மையை அடிப்படையாகக்கொண்ட வழிகளும் நடவடிக்கைகளும்
உருவாகக் காரணமாகிறது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்துகொள்வோருக்கு வழங்கியச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டத் திருத்தந்தை, அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என இறை அன்பு நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.
இறைவன் மீது மக்கள் கொண்டுள்ள தாகத்தை நினைவில்கொண்டு, அம்மக்களின் உள்மன வாழ்வைத் தூய்மைப்படுத்தி, பலப்படுத்தவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.
இறைவார்த்தைக்கும் திருஅவைக்கோட்பாடுகளுக்கும் விசுவாசமாக இருப்பதன்வழி நம்மையே நாம் உருவாக்கி, அதன்வழி மற்றவர்களையும் வழிநடத்த உதவமுடியும் எனவும் கூறினார் திருத்தந்தை.
3. மனித உரிமைகள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை
டிச.10,2012. இந்தியாவில் மனித உரிமை நிலை மிகுந்த கவலை தருவதாக உள்ளதாக, மனித உரிமை மீறல்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தியத் திருஅவை.
இத்திங்களன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட இந்திய ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி அவை, அணுமின்
நிலையங்களுக்கு எதிராக வன்முறையற்ற வழிகளில் போராடும் மக்கள் மீது
வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது குறித்து கவலையைத்
தெரிவித்துள்ளது.
பட்டினியால் மரணங்கள், 43 நிமிடத்திற்கு ஒரு விவசாயியின் தற்கொலை, நலஆதரவு திட்டமிட்டு புறக்கணிக்கப்படல், குழந்தைகள் கைவிடப்படல், மக்கள் காணாமல்போதல், சிறையில் சித்ரவதை, பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள், தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், மதச்சிறுபான்மையினர் சித்ரவதைப்படுத்தப்படல் போன்றவைகளை எடுத்துரைத்து, அவைகள் குறித்த புள்ளிவிவரங்களையும் தந்துள்ளது இந்தியத் திரு அவை.
4. முத்திப்பெற்ற திருததந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் சிலை மும்பையில் திறப்பு
டிச.10,2012. 26 ஆண்டுகளுக்கு முன் 1986ல் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், மும்பையின் Vasai பகுதிக்கு
திருப்பயணம் மேற்கொண்டதைச் சிறப்பிக்கும் விதமாக திருத்தந்தையின்
திருஉருவச் சிலை அப்பகுதி கோவில் ஒன்றில் திறக்கப்பட்டுள்ளது.
முத்திப்பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பாலின் திரு உருவச்சிலையைத் திறந்து வைத்து Vasai யின் Barampurலுள்ள கொன்சாலோ கார்சியா கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய இந்தியாவிற்கான திருப்பீடத்தூதர் சல்வத்தோரே பினாக்கியோ, திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலை 1986ல் வரவேற்கும் வாய்ப்புப் பெற்ற மக்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறினார்.
5. உற்பத்தித் துறையில் மாற்றுத் திறனாளிகளை இணைத்துக்கொள்வது வருங்காலத்திற்கு முக்கியம்
டிச.10,2012. சமூகத்திலும், அதன்
உற்பத்தித் துறையிலும் மாற்றுத் திறனாளிகளை இணைத்துக் கொள்வது
வருங்காலத்திற்கு முக்கியமான ஒரு கூறாகும் என்று பாகிஸ்தான் இஸ்லாம்
மற்றும் கிறிஸ்தவ நடவடிக்கையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
"சமூகத்தில் அனைவரும் இணைவதற்கு தடையாய் இருப்பவைகளை அகற்றல்" என்ற தலைப்பில் பாகிஸ்தான் Faisalabad ல் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு, பிறரன்பும், புரிந்துகொள்ளுதலும் மட்டும் போதாது, அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்று அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கும் முழு உரிமைகள் வழங்கும் வகையில், புதியச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நடவடிக்கையாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
6. அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்: இவ்வாண்டு 16 ஆயிரம் பேர் பலி
டிச.10,2012. இவ்வாண்டு ரயில் விபத்துக்களில் 16 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
பல்வேறு இரயில்வே வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் , ஆண்டு தோறும் இரயில் விபத்துக்களால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனக்கூறும் இரயில்வே அமைச்சகம், இரயில்வே மேம்பாலம், சாலையின்
குறுக்கே செல்லும் இரயில்பாதைகள் ஆகியவற்றில் பல்வேறு இரயில்பாதைகளில்
ஏற்படும் விபத்துக்களால் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் 15, 934 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது.
பல்வேறு இரயில் விபத்துக்களில் கடந்த ஆண்டில் 14,611 பேர் பலியாகினர்.
7. திருப்பீடத்தூதர் வாகன விபத்தில் பலியானார்
டிச.10,2012. ஐவரி கோஸ்ட் நாட்டிற்கான திருப்பீடத்தூதர், இந்தியப்பேராயர் Ambrose Madtha டிசம்பர் 8, கடந்த சனிக்கிழமை, அமல உற்பவ அன்னை திருவிழாவன்று வாகன விபத்தில் உயிரிழந்தார்.
ஐவரி கோஸ்ட் நாட்டின் தலைநகர் Abidjanக்கு மேற்கேயுள்ள Biankoum என்ற நகரில் இடம்பெற்ற விபத்தில் திருப்பீடத்தூதரின் வாகன ஓட்டுனரும் உயிரிழந்தார். பேராயர் Madthaவுடன் பயணம்செய்த அவரின் செயலரும் அருட்சகோதரி ஒருவரும் படுகாயமுற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
1955ம் ஆண்டு இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள Belthangady எனுமிடத்தில் பிறந்த பேராயர் Madtha, 2008ம் ஆண்டு முதல் ஐவரி கோஸ்டின் திருப்பீடத்தூதராகப் பணியாற்றி வந்துள்ளார்.
No comments:
Post a Comment