Thursday, 13 December 2012

Catholic News in Tamil - 12/12/12

1. திருத்தந்தையின் Twitter வழித் தொடர்புகள் ஆரம்பம்

2. குவாதலுபே மரியன்னைத் திருநாள், கலாச்சாரங்களுக்கு இடையே வளர வேண்டிய எண்ணப் பகிர்வுகளை உணர்த்துகிறது - கர்தினால் Marc Ouellet

3. உகாண்டா நாட்டில் Arua மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கர்தினால் Fernando Filoni

4. திருப்பீடத்திற்கும், சீன அரசுக்கும் இடையே நிலவும் உறவில் அதிகப் பிரச்சனைகள் - திருப்பீடப் பேச்சாளர்

5. பிலிப்பின்ஸ் பாராளு மன்றத்தில் குழந்தைப்பேறு நல சட்டவரைவு வாக்கெடுப்புக்கு கத்தோலிக்கர்களின் எதிர்ப்பு

6. ஓரினத் திருமணத்தைச் சட்டமாக்க முயலும் பிரித்தானிய அரசின் செயல்பாடுகள் வெட்கத்தைத் தருகின்றன - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள்

7. ஊடகத்துறை அறிஞர் Gaston Roberge அவர்களுக்கு மும்பை நகரில் விருது

8. ஐந்துலட்சம் ஆண்டுகளுக்குமுன் புதையுண்ட அண்டார்டிகா ஏரியில் ஆய்வு


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் Twitter வழித் தொடர்புகள் ஆரம்பம்

டிச.12,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று தன் பொது மறைபோதகத்தை வழங்கியபின்னர், Twitter வழிச் செய்தியை முதன்முதலாக ஆரம்பித்தார்.
புதன் பொது மறைபோதகம் நடைபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் மன்றத்திற்கு வந்திருந்த ஐந்து இளையோர் எடுத்துவந்த Tablet கணணி வழியாக, திருத்தந்தை தன் முதல் Twitter செய்தியை வழங்கினார்.
உலகின் ஐந்து கண்டங்களை நினைவுறுத்தும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஐந்து இளையோர் வழியாக, pontifex என்ற இணையதள முகவரி மூலம் திருத்தந்தை தன் Twitter தொடர்புகளை ஆரம்பித்தார்.
ஒவ்வொரு நாளும் நம்பிக்கை ஆண்டை எவ்விதம் சிறப்பான முறையில் வாழ்வது என்பது குறித்து Twitter வழியாக ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த திருத்தந்தை, செபத்தில் இயேசுவுடன் கொள்ளும் உரையாடல், நற்செய்தியில் அவர் பேசுவதற்குச் செவிமடுத்தல், உதவி தேவைப்படுவோரில் உறைந்திருக்கும் இயேசுவைச் சந்தித்தல் ஆகியவைகள் மூலம் இதை வாழ முடியும் எனக் கூறியுள்ளார்.
ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம், பிரெஞ்ச், ஜெர்மன், போர்த்துகீசியம், போலந்து, அரேபியம் ஆகிய எட்டு மொழிகளில் ஆரம்பமாகியுள்ள திடுத்தந்தையின் Twitter தொடர்பு, இன்னும் பிற மொழிகளில் விரைவில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எட்டு மொழிகளில் Twitter வழி திருத்தந்தையை தொடர்புகொள்ள விரும்பியோரின் எண்ணிக்கை 10இலட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. குவாதலுபே மரியன்னைத் திருநாள், கலாச்சாரங்களுக்கு இடையே வளர வேண்டிய எண்ணப் பகிர்வுகளை உணர்த்துகிறது - கர்தினால் Marc Ouellet

டிச.12,2012. அன்னை மரியா குவாதலுபே அன்னையாகத் தோன்றியபோது, இயேசுவைக் கருதாங்கிய வண்ணம் தோன்றியது இன்றைய உலகிற்கு முக்கியமான ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 9, இஞ்ஞாயிறு முதல் இப்புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்று வரும் அமெரிக்கத் திருஅவை அனைத்துலக மாநாட்டின் ஓர் அமர்வில் உரையாற்றிய திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet இவ்வாறு கூறினார்.
மரியா என்ற வார்த்தை யூதப் பாரம்பரியத்தில் இருந்து வந்ததென்றும், குவாதலுபே என்ற வார்த்தை அரேபிய அடிப்படையைக் கொண்டுள்ளதென்றும் கூறிய கர்தினால் Ouellet, இவ்விரண்டையும் இணைக்கும் குவாதலுபே மரியன்னைத் திருநாள், கலாச்சாரங்களுக்கு இடையே வளர வேண்டிய எண்ணப் பகிர்வுகளையும் நமக்கு உணர்த்துகிறது என்று கூறினார்.
கிறிஸ்துவப் பாரம்பரியங்களில் ஊன்றப்பட்டுள்ள வட, மத்திய, மற்றும் தென் அமெரிக்க நாடுகள் அனைத்துமே, இந்த நம்பிக்கை ஆண்டில் புத்துணர்வு பெற்று, தங்கள் விசுவாச வாழ்வை ஆழப்படுத்த வேண்டும் என்று இலத்தீன் அமெரிக்கத் திருப்பீட அவையின் தலைவராகவும் பணியாற்றும் கர்தினால் Ouellet கூறினார்.
டிசம்பர் 12, இப்புதனன்று கொண்டாடப்படும் குவாதலுபே அன்னை மரியாவின் திருநாளன்று அமெரிக்கத் திருஅவை அனைத்துலக மாநாடு நிறைவு பெற்றுள்ளது.

3. உகாண்டா நாட்டில் Arua மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கர்தினால் Fernando Filoni

டிச.12,2012. ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் உள்ள Arua மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள திருப்பீட மறைபரப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni சென்றுள்ளார்.
ஆப்ரிக்காவில் தன் மெய்ப்புப் பணி பயணத்தை மேற்கொண்டுள்ள கர்தினால் Filoni, Arua தவிர, Gulu, Lira, Nebbi ஆகிய மறைமாவட்டங்களின் முக்கிய விழாக்களிலும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வியாழனன்று Arua பேராலயத்தில் நடைபெறும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியுடன் ஆரம்பமாகும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், இஞ்ஞாயிறு முடியத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் மேய்ப்புப்பணி பயணத்தில், கர்தினால் Filoni உகாண்டா ஆயர்கள் பேரவையையும், அந்நாட்டின் குருக்கள், குரு மாணவர்கள் மற்றும் பொது நிலையினர் அனைவரையும் சந்திப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

4. திருப்பீடத்திற்கும், சீன அரசுக்கும் இடையே நிலவும் உறவில் அதிகப் பிரச்சனைகள் - திருப்பீடப் பேச்சாளர்

டிச.12,2012. சீனாவில் வாழும் கத்தோலிக்கத் திருஅவை தலைவர்களுக்கு அந்நாட்டு அரசும், அங்கு திருப்பீடத்தின் அனுமதி இன்றி செயல்படும் சீன ஆயர் குழுவும் இழைக்கும் அநீதிகள் வருத்தத்தைத் தருகின்றன என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
திருப்பீடத்தால் நியமிக்கப்பட்ட ஆயர் Thaddeus Ma Daqin அவர்களின் ஆயர் நிலைக்குரிய தகுதியை நீக்கியுள்ளதாக சீன அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆயர்கள் குழு அறிவித்தததைத் தொடர்ந்து, திருப்பீடத்தின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய அருள்தந்தை Lombardi, இவ்வாறு கூறினார்.
ஆயர் Ma Daqin அவர்களின் திருநிலைப்பாட்டுச் சடங்கில் சீன ஆயர் குழுவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட Zhan Silu என்பவர் தன் தலைமீது கைவைக்கக் கூடாதென்று ஆயர் Ma Daqin கூறியதைத் தொடர்ந்து, அவர் ஒரு குரு மடத்தில் 'வீட்டுக் காவலில்' வைக்கப்பட்டார்.
அண்மையில், ஆயர் Ma Daqin அவர்களின் ஆயர் நிலையை தாங்கள் விலக்கியுள்ளதாக சீன அரசின் ஆயர் குழு அறிவித்ததைக் கண்டு திருப்பீடம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இவ்வறிக்கை, திருப்பீடத்திற்கும், சீன அரசுக்கும் இடையே நிலவும் உறவில் அதிகப் பிரச்சனைகளை உருவாக்குகிறது என்றும் அருள்தந்தை Lombardi தெரிவித்தார்.

5. பிலிப்பின்ஸ் பாராளு மன்றத்தில் குழந்தைப்பேறு நல சட்டவரைவு வாக்கெடுப்புக்கு கத்தோலிக்கர்களின் எதிர்ப்பு

டிச.12,2012. பிலிப்பின்ஸ் நாட்டின் பாராளு மன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் குழந்தைப்பேறு நல சட்டவரைவு, தோல்வியடைய கத்தோலிக்கர்கள் வேண்டிக்கொள்ளுமாறு  பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் குடும்பநலப் பணி அவையின் செயலர் அருள்தந்தை Melvin Castro, ஆயர் பேரவை சார்பில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
இதே கருத்துக்காக, Makaty எனும் நகரில் அமைந்துள்ள குவாதலுபே அன்னைத் திருத்தலத்தில் திருவிழிப்பு செபங்கள் நடைபெறும் என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அறிவித்துள்ளார்.
குவாதலுபே மரியன்னைத் திருநாளன்று இத்தகைய வாக்கெடுப்பு இடம்பெறுவது கத்தோலிக்கர்களின் மனதைப் புண்படுத்தும் ஒரு முயற்சி என்று கருதப்படுவதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
அரசின் இந்த முயற்சிக்கு எதிராக, பாராளுமன்றத்தின் அருகே அமைந்துள்ள புனித பேதுரு கோவிலில் ஒரு திருப்பலியும், அதைத் தொடர்ந்து ஒரு ஊர்வலமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6. ஓரினத் திருமணத்தைச் சட்டமாக்க முயலும் பிரித்தானிய அரசின் செயல்பாடுகள் வெட்கத்தைத் தருகின்றன - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள்

டிச.12,2012. ஓரினத் திருமணத்தைச் சட்டமாக்க முயலும் பிரித்தானிய அரசின் செயல்பாடுகள் மக்களின் எண்ணங்களுக்கு எதிராகவும், வெட்கத்தைத் தருவதாகவும் அமைகிறது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சட்ட வரைவு இப்புதனன்று பாராளு மன்றத்தில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், ஓரினத் திருமணத்தை எதிர்த்து 600000 பிரித்தானிய மக்கள் கையெழுத்திட்டு அனுப்பிய விண்ணப்பம் எவ்வகையிலும் கருத்தில் கொள்ளப்படாதது வேதனையைத் தருகிறது என்று ஆயர்கள் இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் சட்டம் உருவாக்கப்படுவதற்கு வரையறுக்கப்பட்ட வழிகளைச் சரிவரக் கடைபிடிக்காமல், இம்முறை பிரித்தானிய அரசு நடந்துகொள்ளும் முறை நாட்டின் சட்டங்களுக்கும், மக்கள் எண்ணங்களுக்கும் எதிராகச் செல்கிறது என்று ஆயர்கள் சார்பில் பேசிய பேராயர் Vincent Nichols மற்றும் பேராயர் Peter Smith இருவரும் கூறினர்.
ஓரினத் திருமணம் சட்டமயமாவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை மட்டுமல்லாமல், ஆங்கலிக்கன், எவன்ஜெலிக்கள் சபைகளும், யூதர்கள், இஸ்லாமியக் குழுக்களும் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

7. ஊடகத்துறை அறிஞர் Gaston Roberge அவர்களுக்கு மும்பை நகரில் விருது

டிச.12,2012. ஊடகத்துறையை, சிறப்பாக, திரைப்படங்களைப் பற்றிய அறிவை வளர்க்கும் முயற்சிகளை இந்தியாவில் ஒரு கல்வி முயற்சியாகத் துவக்கிய இயேசு சபை அருள்தந்தை Gaston Roberge அவர்களுக்கு மும்பை நகரில் விருது ஒன்று வழங்கப்பட்டது.
கனடா நாட்டைச் சேர்ந்த 77 வயதான அருள்தந்தை Roberge, 1970ம் ஆண்டு கொல்கத்தாவில் சித்ரபானி என்ற ஒரு மையத்தை உருவாக்கி, திரைப்பட கல்வியைத் துவக்கி வைத்தார்.
உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் Satyajit Ray உட்பட பல திரைப்பட அறிஞர்களின் உதவியுடன் அருள்தந்தை Roberge திரைப்படத் திறனாய்வு குறித்த அறிவை வளர்த்துவந்தார்.
இந்தியாவில் திரைப்பட முயற்சிகளை முதன் முதலாக மேற்கொண்டவர்களில் முக்கியமான, Bimal Roy என்ர்பவரின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு விருது ஒன்றை அருள்தந்தை Roberge அண்மையில் பெற்றார்.
திரைப்பட ஆய்வுகள் பற்றிய 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள அருள்தந்தை Roberge, தற்போது கொல்கத்தாவில் புனித சேவியர் கல்லூரியில் பேராசிரியாகப் பணியாற்றி வருகிறார்.

8. ஐந்துலட்சம் ஆண்டுகளுக்குமுன் புதையுண்ட அண்டார்டிகா ஏரியில் ஆய்வு

டிச.12,2012. அண்டார்டிகா என்றழைக்கப்படும் தென்துருவத்தில், உறைபனிக்கு கீழே சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் புதையுண்டுபோன மிகப்பெரிய ஏரியில் ஏதாவது உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வதற்காக பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழக பேராசிரியர் மார்டின் சீகர்ட் (Martin Siegert) தலைமையிலான 12 அறிவியலாளர்கள் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஏறக்குறைய பதினாறு ஆண்டுகால திட்டமிடலுக்குப்பிறகு இக்குழுவினர் தற்போது அண்டார்டிகாவின் உறைபனியில் தங்கி தங்களின் ஆய்வுகளைத் துவக்கியுள்ளனர்.
அண்டார்டிகாவின் உறைபனிக்கு கீழே 3.2 கிமீ ஆழத்தில் புதையுண்டிருக்கும் Ellsworth எனப்படும் இந்த ஏரி, சுமார் 14 கிலோ மீட்டர் நீளம், 3 கிலோமீட்டர் அகலம் 160 மீட்டர் ஆழம் கொண்டதாக இருக்கிறது.
சுமார் 5 லட்சம் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாத இருண்ட ஏரியில் இருக்கும் இந்த தண்ணீரில் ஏதாவது உயிரினம் வாழ்கிறதா என்பதை கண்டறிவது தான் இந்த ஆய்வின் பிரதான நோக்கம் என்கிறார் இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் பேராசிரியர் Martin Siegert.
இந்த ஆய்வின் முதல் சவால், ஏரியை மூடியிருக்கும் மூன்று கிலோமீட்டர் அடர்த்தியான உறைபனியை உடைப்பது. அப்படி உடைக்கப்பயன்படுத்தும் இயந்திரங்கள் அதிகபட்ச சுத்தமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த உபகரணங்களில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் எல்ஸ்வொர்த் ஏரித்தண்ணீரை மாசுபடுத்திவிடும் ஆபத்திருக்கிறது.
இந்த ஏரித்தண்ணீர் மற்றும் அதன் சகதிகளில் கண்டிப்பாக நுண்ணுயிரிகள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு இருந்தால், நுண்ணுயிர்களின் உயிர்வாழும் தன்மை குறித்த புதிய புரிதலை இது மனித இனத்துக்கு அளிக்கும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.

 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...