Monday 17 December 2012

CaTHOLIC nEWS IN tAMIL - 15/12/12


1. தேவ அழைத்தல் செப நாளுக்கென திருத்தந்தை  வெளியிட்டுள்ள செய்தி

2. அமெரிக்கப் பள்ளி துப்பாக்கிச்சூடு குறித்து திருத்தந்தந்தையின் இரஙகல் செய்தி

3. திருத்தந்தை வழங்கிய உலக அமைதி நாள் செய்தியைக் குறித்து திருப்பீடப் பேச்சாளரின் கருத்துக்கள்

4. முதியோர்கள் பிரச்சினையில்லை, மாறாக பங்களிப்பவர்கள் என்கிறார் ஆங்கிலிக்கன் தலைவர்

5. தங்கள் வரிப்பணம் கருக்கலைப்பு தொடர்புடைய மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது - Tuscany மாநில மக்கள்

6. உடல்பருமனால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு

7. உயர் இரத்த அழுத்தமே முத‌ல் உயிர் கொல்லி

------------------------------------------------------------------------------------------------------

1. தேவ அழைத்தல் செப நாளுக்கென திருத்தந்தை  வெளியிட்டுள்ள செய்தி

டிச.15,2012. "தேவ அழைத்தல் என்பது விசுவாசத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையின் அடையாளம்" என்ற தலைப்பில் வரும் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இடம்பெறவுள்ள தேவ அழைத்தல் செப நாளுக்கான செய்தியை இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், திருத்தந்தை 6ம் பவுலால் உருவாக்கப்பட்ட தேவ அழைத்தல் செப நாளும் வரும் ஆண்டு 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளத் திருத்தந்தை, இயேசு உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின் வரும் நான்காம் ஞாயிறன்று கொண்டாடப்படும் இந்நாளில், உலகம் முழுவதும் ஒன்றிணைந்து எழுப்பும் செபங்கள் தேவ அழைத்தல்களை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
நம் வாழ்வின் பாதைகளில் நடந்துவரும் உயிர்த்த இயேசுவால் மட்டுமே, நம்பிக்கைக்கான நம் தாகத்தைத் தணிக்க முடியும் என அச்செய்தியில் கூறும் திருத்தந்தை, இயேசுவைப் பின்தொடர அவர் இன்றும் தொடர்ந்து நமக்கு அழைப்பு விடுத்து வருகின்றார் என மேலும் கூறியுள்ளார்.
இறைவனுடன் நாம் கொள்ளும் தொடர்பின் வழியாகவும், உண்மையான கலந்துரையாடல் மூலமாகவும் தேவ அழைத்தல் பிறக்கிறது என்பதைத் தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. அமெரிக்கப் பள்ளி துப்பாக்கிச்சூடு குறித்து திருத்தந்தந்தையின் இரஙகல் செய்தி

டிச.15,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள நியூடவுனின் சேன்டிஹூக் துவக்கப்பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த உயிரிழப்புகள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையையும் செப உறுதியையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தெரிவிக்குமாறு பிரிட்ஜ்போர்ட் மறைமாவட்டத்திற்குத் திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பிய தந்திச்செய்தி விண்ணப்பிக்கிறது.
இதற்கிடையே, துப்பாக்கி வன்முறை குறித்து தேசிய அளவிலான விவாதங்கள் இடம்பெறவேண்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்கக் குழு ஒன்று அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.
மேலும், அப்பகுதியின் கத்தோலிக்க குருக்கள் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆன்மீக மற்றும் உளரீதியான உதவிகளை வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


3. திருத்தந்தை வழங்கிய உலக அமைதி நாள் செய்தியைக் குறித்து திருப்பீடப் பேச்சாளரின் கருத்துக்கள்

டிச.15,2012. இறைவனையும், அவரது வாக்குறுதிகளையும் நம்புவோர் உலகின் கண்களுக்கு ஏமாளிகளாகவும், உலகின் உண்மை நிலைகளை அறியாதவர்கள் போலும் தோன்றினாலும், அவர்கள் உன்னதக் கொடைகளின் மகிழ்வைப் பெறுபவர்களாக இருப்பார்கள் என, திருத்தந்தை வழங்கிய உலக அமைதி நாள் செய்தி கூறுவதாகத் தெரிவித்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதெரிக்கோ லொம்பார்தி.
ஒவ்வொரு வாரமும் இத்தாலியத் தொலைக்காட்சியில் வழங்கப்படும் Octava Dies என்ற நிகழ்ச்சியில் உலக அமைதி நாளுக்கான திருத்தந்தையின் செய்தி குறித்து கருத்து வெளியிட்ட அருள்தந்தை லொம்பார்தி, "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற தலைப்பில் திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி, அமைதிக்கான முன் நிபந்தனையாக, மனச்சான்றின் குரல் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது எனக் கூறினார்.
மனித உயிர், திருமணம், மதச் சுதந்திரம், மனச்சான்றின் அடிப்படையில் மறுப்பு கூறும் உரிமைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தையின் செய்தி சுட்டிக்காட்டுவதாகத் திருப்பீடப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்புக்கள், உணவுக்கான உரிமை, பொதுநலனில் அக்கறை கொண்ட வளர்ச்சி, சகோதரத்துவம் போன்றவைகளையும் Octava Dies என்ற வாரத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டினார் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி.


4. முதியோர்கள் பிரச்சினையில்லை, மாறாக பங்களிப்பவர்கள் என்கிறார் ஆங்கிலிக்கன் தலைவர்

டிச.15,2012. சமூகத்திற்கு நேரடியாக ஏதாவது ஆற்றுபவர்களே பயனுடையவர்கள் என்ற நோக்குடன் முதியோர்களை ஒதுக்கி வைக்கும் சமுதாயப்போக்கு குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஆங்கிலிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ்.
ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுமுன்னர், பிரிட்டன் பிரபுக்கள் அவையில் உரையாற்றிய ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபைத் தலைவர் பேராயர் வில்லியம்ஸ், முதியோரைப் பிரச்சினையாக நோக்குவதே அவர்கள் தவறாக நடத்தப்படுவதற்கு மூலக்காரணமாக உள்ளது என்றார்.
சமூகத்தில் முதியோர் வெறும் பயணிகளாக நோக்கப்படாமல், பங்களிப்பவர்களாக நோக்கப்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் பேராயர் வில்லியம்ஸ்.


5. தங்கள் வரிப்பணம் கருக்கலைப்பு தொடர்புடைய மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது - Tuscany மாநில மக்கள்

டிச.15,2012. தங்கள் வரிப்பணம் கருக்கலைப்பு தொடர்புடைய மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை இத்தாலிய அரசு அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என அந்நாட்டின் Tuscany மாநில மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக, கரு தாங்கியப் பெண்களின் நலம் குறித்த விடயங்களுக்குத் தங்கள் வரிப்பணம் செலவிடப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், இத்தாலியின் வாழ்வுக்கு ஆதரவான இக்குழுவினர்.
கரு தாங்கிய  முதல் மூன்று மாதங்களுக்குள் கருக்கலைப்பை மேற்கொள்ளலாம் என்ற இத்தாலியின் 1978ம் ஆண்டு சட்டப்படி, Tuscany மாநிலத்தில் மட்டும் 2010ம் ஆண்டு 7665 கருக்கலைப்பும், 2011ம் ஆண்டில் 7479 கருக்கலைப்பும் இடம்பெற்றுள்ளன. இதற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து 90 இலட்சம் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.


6. உடல்பருமனால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு

டிச.15,2012. உணவின்மையால்  இறப்பவர்களைவிட, உடல்பருமனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என்று உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பெரியதோர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய சத்துணவின்மையால் இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் வேளையில், உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
மக்களின் ஆயுட்காலம் பரவலாகப் பல நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்றாலும், சராசரி ஆயுட்கால வயதில் செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகக் குறையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. உயர் இரத்த அழுத்தமே முத‌ல் உயிர் கொல்லி

டிச.15,2012. 21ம் நூற்றாண்டில் மக்களின் மரணங்களுக்கு காரணமான நோய்களுள், உயர் இரத்த அழுத்தம் என்பது முதன்மை இடத்தைக் கொண்டிருந்ததாக அனைத்து மருத்துவக்குழு நடத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளின்படி, உயர் இரத்த அழுத்தம் முதல் இடத்திலும், புகைப்பிடித்தல் இரண்டாம் இடத்திலும், போதைப்பானம் பயன்படுத்தல் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
உயிருக்கு எமனாக இருக்கும் 43 கூறுகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்திய இக்குழு, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உப்பை உணவில் குறைப்பதன் மூலமும், பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலமும் உதவ முடியும் என தெரிவித்துள்ளது.
பசியால் மக்கள் உயிரிழப்பது அண்மைக்காலங்களில் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது அனைத்துலக மருத்துவர் குழு.


No comments:

Post a Comment