Saturday 22 December 2012

Catholic News in Tamil - 21/12/12

1. திருத்தந்தை : குடும்பமும் உரையாடலும் இக்காலத் திருஅவைக்குச் சவால்களாக உள்ளன

2. உதய்ப்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Devprasad John Ganawa

3. கிறிஸ்மஸ் காலத்தில் மது அருந்துவோர் குறித்து கேரள ஆயர்கள் கவலை

4. அணுசக்தி தொடர்பாக இரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்க ஆயர் ஒருவர் வேண்டுகோள்

5. தென் கொரியப் புதிய அரசுத்தலைவர் திறமையாகப் பணியாற்றுவார், தலத்திருஅவை நம்பிக்கை

6. பன்னாட்டுக் கிறிஸ்மஸ் குடில் அருங்காட்சியகத்துக்கு முதன்முறையாக இந்தியக் குடில்

7. ஐ.நா.பொதுச் செயலர் : இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமையே சிறந்த வழி

8. பெண்கள் கூடுதலாக உழைத்தாலும் ஊதியம் குறைவு: ஆய்வில் தகவல்


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : குடும்பமும் உரையாடலும் இக்காலத் திருஅவைக்குச் சவால்களாக உள்ளன

டிச.21,2012. குடும்பத்தைப் பாதுகாப்பது என்பது மனிதரையே பாதுகாப்பதாகும், கடவுள் புறக்கணிக்கப்படும்போது மனித மாண்பும் மறைகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது, கடவுளுக்காகப் பரிந்துபேசும் எவரும் மனிதருக்காகப் பரிந்து பேசுகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீடத் தலைமையகத்தின் உறுப்பினர்களை வத்திக்கானிலுள்ள கிளமெந்தினா அறையில் இவ்வெள்ளிக்கிழமை முற்பகலில் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றிய திருத்தந்தை, குடும்ப விழுமியங்கள் குறித்த கருத்துக்களை மிக அதிகமாகவும் ஆழமாகவும் வலியுறுத்திப் பேசினார்.
இந்த 2012ம் ஆண்டு நிறைவடையவிருக்கும் இந்நாள்களில், அனைத்துவிதமான இன்னல்நிறைந்த சூழல்களையும், முக்கியமான கேள்விகளையும், சவால்களையும் நாம் பார்க்கிறோம், அதேசமயம் திருஅவையிலும் உலகிலும் நம்பிக்கையின் அடையாளங்களையும் காண்கிறோம் என்றும் திருத்தந்தை கூறினார்.
இவ்வாண்டில் திருஅவை மற்றும் தனது பாப்பிறைப்பணி வாழ்வில் நடந்த சில முக்கியமானவைகளைக் குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, மெக்சிகோ, கியூபா, லெபனன் ஆகிய நாடுகளுக்குத் தான் திருப்பயணம் மேற்கொண்டதையும், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து இடம்பெற்ற 13வது உலக ஆயர்கள் மாமன்றம் பற்றியும், மிலானில் இடம்பெற்ற அனைத்துலகக் குடும்ப மாநாட்டில் தான் கலந்து கொண்டதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
குடும்பக் கட்டமைப்பு இன்னும் உறுதியாகவும் உயிரோட்டத்துடனும் இருக்கின்றது என்பதை மிலான் மாநாட்டில் உணர முடிந்தது, எனினும், குடும்பத்தின் அடித்தளங்களை அச்சுறுத்தும் நெருக்கடிகள், குறிப்பாக, மேற்கத்திய உலகில் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது என்றும் திருத்தந்தை கூறினார்.
இன்றைய உலகில் எந்தவித அர்ப்பணத்துக்கும் புறக்கணிப்பு பரவலாக இருக்கின்றது, இது குடும்ப வாழ்வுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது எனவும், தன்னையே வழங்குவதில் மனிதர் தனது மனிதத்தின் மூச்சைக் கண்டுகொள்கிறார், இத்தகைய அர்ப்பணம் உதறித்தள்ளப்படும்போது, அப்பா, அம்மா, குழந்தை ஆகிய அடிப்படைக் கூறுகள் அழிகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.
இன்று பாலியல் என்பது அதன் இயல்பான தன்மையிலிருந்து விலகி, நமக்கு நாமே தேர்ந்தெடுக்கிறோம் என்ற சமூகப் பங்குக்குக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி மற்றும் உரையாடல் குறித்த மூன்று முக்கிய கூறுகள் குறித்தும் தனது கிறிஸ்மஸ் உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை. 

2. உதய்ப்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Devprasad John Ganawa

டிச.21,2012. இந்தியாவின் உதய்ப்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, Jhabua மறைமாவட்ட ஆயர் Devprasad John Ganawa அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உதய்ப்பூர் மறைமாவட்டத்தை இந்நாள்வரை வழிநடத்திவந்த ஆயர் Joseph Pathalil அவர்களின் பணி ஓய்வை, திருஅவை சட்ட எண் 401,1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அம்மறைமாவட்டத்திற்கு, Jhabua மறைமாவட்ட ஆயர் Devprasad John Ganawa அவர்களை புதிதாக நியமித்துள்ளார்.
இறைவார்த்தை துறவு சபையைச் சேர்ந்த ஆயர் Devprasad, 1951ம் ஆண்டில் பிறந்தவர். 1982ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 2009ம் ஆண்டு மே 11ம் தேதி Jhabua மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராகத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார். இவ்வெள்ளியன்று இவர் உதய்ப்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதய்ப்பூர் மறைமாவட்டம், 1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி ஆக்ரா உயர்மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மறைமாவட்டமாகச் செயல்படத் தொடங்கியது.

3. கிறிஸ்மஸ் காலத்தில் மது அருந்துவோர் குறித்து கேரள ஆயர்கள் கவலை

டிச.21,2012. கிறிஸ்மஸ் பெருவிழா நெருங்கிவரும்வேளை, கேரளாவில் இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் மதுபானம் அருந்துவோர் குறித்த கவலையை வெளியிட்டுள்ளனர் கேரள ஆயர்கள்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் காலங்களில் மதுபானங்கள் கட்டுப்பாடின்றி விற்கப்படுவதாலும், சந்தைகளில் விற்கப்படும் மதுபானங்களின் அளவைக் கண்டுபிடிப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லாததாலும் இவற்றை அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகக்கூடும் என்று கேரள ஆயர்கள் பேரவையின் மதுபானங்கள் ஒழிப்பு ஆணையம் கூறியுள்ளது.
மதுபானங்கள் விற்பனை மற்றும் அவற்றை அருந்துவோர் குறித்த 27 வழிகாட்டிக் குறிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவை வருகிற சனவரியிலிருந்து அமலுக்கு வரும் எனவும் மதுபானங்கள் ஒழிப்பு ஆணையத்தின் செயலர் அருட்பணி டி.ஜே.அந்தோணி கூறினார்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் காலங்களில் விற்கப்படும் மதுபானங்கள் அதிகம் வீரியம் உள்ளவை எனவும், போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஆயர்களின் இந்த ஆணையம் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் அவ்வாணையச் செயலர் மேலும் கூறினார்.

4. அணுசக்தி தொடர்பாக இரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்க ஆயர் ஒருவர் வேண்டுகோள்

டிச.21,2012. அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தியைப் பொருத்தவரை, அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இரானுக்கும் இடையே இடம்பெறும் பிரச்சனைகளுக்கு அமைதியான வழிகளில் தீர்வுகள் காணப்படுமாறு கேட்டுக் கொண்டார் ஆயர் Richard E. Pates.
அணு விவகாரத்தில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து அதிகரித்துவரும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்குத் துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு கேட்டுள்ளார் அமெரிக்க ஆயர் பேரவையின் அனைத்துலக விவகாரங்கள் ஆணையத் தலைவரான ஆயர் Pates.
அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ள ஆயர் Pates, ஆபத்தான சூழல், அமெரிக்க ஐக்கிய நாட்டையும், இரானையும், அனைத்துலக சமுதாயத்தையும் அச்சுறுத்துகின்றது என்று குறிப்பிட்டு, இதற்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளார்.    

5. தென் கொரியப் புதிய அரசுத்தலைவர் திறமையாகப் பணியாற்றுவார், தலத்திருஅவை நம்பிக்கை
டிச.21,2012. கடவுளின் அன்பும், அவரது எண்ணங்களும் ஆராய்ந்தறிய முடியாதவை என்பதை வெளிப்படுத்தும் பல அடையாளங்களில் ஒன்றாக, தென் கொரியத் தேர்தல்களில் Park Geun-hyeவின் கட்சி வெற்றி பெற்றிருப்பது இருக்கின்றது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
தென் கொரிய அரசுத்தலைவர் தேர்தலில் Park வெற்றி அடைந்திருப்பது பலருக்குத் திருப்தியளிக்கவில்லை எனினும், புதிய அரசுத்தலைவரை இறைவனிடம் அர்ப்பணித்து அவருக்காகச் செபிப்பதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய முடியாது என்று Daejeon ஆயர் You Heung-sik கூறினார்.
60 வயதாகும் செல்வி Park, தென் கொரியாவில் முதல் முறையாக, பெண் ஒருவர் அரசுத்தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட பெருமையைப் பெறுகிறார்.
தற்போது அரசுத்தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள Parkன் தந்தை ஓர் இராணுவப் புரட்சியில் ஆட்சியை பிடித்தபின்னர் 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தவர் மற்றும் 1979 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. பன்னாட்டுக் கிறிஸ்மஸ் குடில் அருங்காட்சியகத்துக்கு முதன்முறையாக இந்தியக் குடில்

டிச.21,2012. இந்தியக் கலாச்சாரத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில் ஒன்று, இயேசு பிறந்த பெத்லகேமிலுள்ள பன்னாட்டுக் கிறிஸ்மஸ் குடில் அருங்காட்சியகத்துக்கு முதன்முறையாக அனுப்பப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெத்லகேமுக்கு அனுப்பப்படுவதற்கென கொல்கத்தாவில் கலைஞர்கள் குழு ஒன்றினால் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில், தற்போது கொல்கத்தா புனித சேவியர் கல்லூரியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
12 உருவங்கள் கொண்ட இந்தக் குடிலில், இரண்டு அடி உயர மனிதர்கள் மற்றும் விலங்குகள் என, பல்வேறு அளவுகளில் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று, இந்த இந்தியக் குடிலைத் தயாரித்த கலைஞர்களில் ஒருவரான Subrato Ganguly கூறினார். 
பெத்லகேமிலுள்ள பன்னாட்டு கிறிஸ்மஸ் குடில் அருங்காட்சியகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடில்கள் இருக்கும்போது இந்தியக் குடில் இதுவரை இல்லாதது வருத்தமளிக்கின்றது என்று Ganguly  மேலும் கூறினார். 

7. ஐ.நா.பொதுச் செயலர் : இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமையே சிறந்த வழி

டிச.21,2012. மக்களுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பால் வறுமையை ஒழிப்பதிலும், சனநாயகச் சுதந்திரத்தை நோக்கிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் அண்மை ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 20, இவ்வியாழனன்று அனைத்துலக மனிதத் தோழமை தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் திட்டங்களிலும் கொள்கைகளிலும் செயலாக்கங்களிலும் மக்கள் ஒன்றுசேர்ந்து பங்கு கொண்டால் நமது இலக்குகளை அடைய முடியும் எனக் கூறினார்.
அரசியல்சுதந்திரம், கடமையுணர்வு, சமத்துவம் ஆகியவை அதிகமாக வலியுறுத்தப்படும் இக்காலத்தில், உலக அளவில் ஒருவரையொருவர் சார்ந்திருப்பது, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தன்மைகளை ஆழப்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன். 
21ம் நூற்றாண்டில் மக்களிடையே உறவுகளை வளர்க்கும் அடிப்படையான மற்றும் அனைத்துலக விழுமியங்களில் ஒன்றாக இருப்பது தோழமையுணர்வு என்பதை ஏற்ற ஐ.நா. பொது அவை, 2005ம் ஆண்டில் அனைத்துலக மனிதத் தோழமை தினத்தை உருவாக்கியது.

8. பெண்கள் கூடுதலாக உழைத்தாலும் ஊதியம் குறைவு: ஆய்வில் தகவல்

டிச.21,2012. கூலித்தொழில் தொடங்கி விண்வெளிப்பயணம் வரை ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் அனைத்துத் துறைகளிலும் இன்று கால்பதிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், ஆண்களுக்குச் சமமாக வேலை பார்த்தாலும் பெண்கள் அவர்களைவிட குறைவான ஊதியமே பெறுகின்றனர் என்று அண்மை ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆண்கள் பார்க்கும் அத்தனை வேலைகளையும் பெண்களாலும் பார்க்க முடிகிறது. உண்மையில் ஆண்களைவிட பெண்கள் திறமையாகவே பணியாற்றுகின்றனர். ஆனால் ஊதியம் என்று வரும்போது மட்டும் ஆண்களைவிட குறைவாகவே பெண்களுக்குத் தருகிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கனடாவின் லேக்ஹெட் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment