Tuesday 11 December 2012

Catholic News in Tamil - 08/12/12

1. அன்னைமரியாவின் அமல உற்பவத் திருநாளில் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை

2. வேளாங்கண்ணி மரியன்னை திருத்தலக் கொண்டாட்டங்களில் திருத்தந்தையின் பிரதிநிதி

3. திருத்தந்தையின் அந்தரங்கச்செயலர் திருப்பீட இல்ல நிர்வாகத் தலைவராகிறார்

4. அனைத்துலக் மனித உரிமைகள் கருத்தரங்கில் திருப்பீட அதிகாரி உரை

5. தலித் விடுதலை ஞாயிறுக்கான ஆயர் நீதிநாதனின் செய்தி

6. இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கைகள் பொய்யாகியுள்ளதாக யாழ் ஆயர் கவலை

7. பிறநாடுகளில் அடைக்கலம் மறுக்கப்பட்டு, அனுப்பப்படும் இலங்கைத் தமிழர்கள் பற்றி மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

8. AIDS நோயுற்றோரிடையே பணியாற்றும் கத்தோலிக்கப் பணி மையத்திற்கு மத்தியப்பிரதேச மாநில அரசின் சிறப்பு விருது

------------------------------------------------------------------------------------------------------

1. அன்னைமரியாவின் அமல உற்பவத் திருநாளில் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை

டிச.08,2012. இறைவனுக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தவராக, இறைவனின் ஒத்துழைப்பாளராகச் செயல்பட்ட அன்னைமரியாவின் அமல உற்பவம் குறித்து நடைபெறும் நம்பிக்கையாண்டில் வலியுறுத்த விழைகிறேன் என்று இச்சனிக்கிழமை வழங்கிய மூவேளை செப உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அன்னைமரியா பேறுபெற்றவர், ஏனெனில், இறைவன் மீது முழு நம்பிக்கைக் கொண்டு, அவருக்கு 'ஆம்' என்று பதிலளித்ததன் வழியாக, இறைமகன் மனு உரு எடுக்க உதவினார் என்று கூறியத் திருத்தந்தை, அன்னைமரியாவின் வழியாக நாம் இறையருளைப் பெறுகிறோம் என்று எடுத்துரைத்தார்.
பழைய ஏற்பாட்டில் காணப்படும் உருவகங்கள், தூய பவுல் எபேசியருக்கு எழுதியத் திருமடலில் காணப்படுபவை, மற்றும் திருஅவைத் தந்தையர்கள் அன்னைமரியாவைப் பற்றி எடுத்துரைத்துள்ளவைகள் போன்றவைகளையும் தன் மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
மூவேளை செப உரையின் இறுதியில், பிலிப்பின்ஸ் சூறாவளியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் பேசியத் திருத்தந்தை, அம்மக்களுடன் தான் உள்ளத்தால் ஒன்றித்திருப்பதாகவும், அவர்களுக்கு தன் செபங்களை அனுப்புவதாகவும் உறுதி கூறினார்.


2. வேளாங்கண்ணி மரியன்னை திருத்தலக் கொண்டாட்டங்களில் திருத்தந்தையின் பிரதிநிதி

டிச.08,2012. வேளாங்கண்ணி மரியன்னை திருத்தலம் மைனர் பசிலிக்காவாகத் திருத்தந்தை 23ம் அருளப்பரால் உயர்த்தப்பட்டதன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் பங்குகொள்ள தன் பிரதிநிதியாக கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனியை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வேளாங்கண்ணி திருத்தலம் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவும், இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவை துவக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவும் வரும் ஆண்டு பிரவரி மாதம் 9 முதல் 11ம் தேதி வரை வேளாங்கண்ணியில் கொண்டாடப்படும்போது திருத்தந்தையின் பிரதிநிதியாக, நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஃபிலோனி கலந்துகொள்வார்.


3. திருத்தந்தையின் அந்தரங்கச்செயலர் திருப்பீட இல்ல நிர்வாகத் தலைவராகிறார்

டிச.08,2012. இதுநாள்வரை திருத்தந்தையின் அந்தரங்கச் செயலராகப் பணியாற்றி வந்த பேரருட்திரு  Georg Gänsweinஐ பேராயராக உயர்த்தி, திருப்பீட இல்ல நிர்வாகத் தலைவராக அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீட இல்ல நிர்வாகத்தலைவராகச் செயபட்டுவந்த பேராயர் ஜேம்ஸ் ஹார்வி கர்தினாலாக உயர்த்தப்பட்டு, உரோம் நகரின் புனித பவுல் பேராலய தலைமைக்குருவாகவும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேரருட்திரு Gänswein அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் Waldshut எனுமிடத்தில் 1956ம் ஆண்டு பிறந்த புதிய பேராயர் Gänswein, 1996ம் ஆண்டு முதல் விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தில் பணியாற்றத் துவங்கி, 2005ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றதிலிருந்து அவரின் அந்தரங்கச் செயலராகத் தொடர்கிறார்.
இவருக்கு ஜெர்மன், இத்தாலியம், இலத்தீன், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம், இஸ்பானியம் ஆகிய மொழிகள் தெரியும்.


4. அனைத்துலக் மனித உரிமைகள் கருத்தரங்கில் திருப்பீட அதிகாரி உரை

டிச.08,2012. திருஅவைக்கோட்பாடுகள், தேசிய மற்றும் அனைத்துலகச் சட்டங்களோடு ஒத்திணங்கிச் செல்வதோடு, அடிப்படை மனித உரிமைகள் பாதுகாப்பில் திருஅவை எப்போதும் ஒத்துழைக்கிறது என்றார் கர்தினால் பீட்டர் டர்க்ஸன்.
போலந்தின் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அனைத்துலக மனித உரிமைகள் கருத்தரங்கில் இச்சனிக்கிழமையன்று உரையாற்றிய திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்ஸன், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு அவைகள் ஊக்குவிக்கவும்படவேண்டும் என்றார்.
வாழ்வதற்கான உரிமை, அடிப்படைத்தேவைகள் நிறைவேறப்படுவதற்கான உரிமை, நலப்பணிகளைப் பெறுதல், வழிபாட்டிற்கான உரிமை, பொருளாதார உரிமைகள், குடியேறுவதற்கான உரிமைகள், அரசியல் உரிமைகள் என பல்வேறு உரிமைகள் பற்றியும் போலந்து கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றினார் கர்தினால் டர்க்ஸன்.


5. தலித் விடுதலை ஞாயிறுக்கான ஆயர் நீதிநாதனின் செய்தி

டிச.08,2012. தலித் விடுதலை ஞாயிறு இந்திய கிறிஸ்தவர்களால் இம்மாதம் 9ம் தேதி சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு சிறப்புச்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், பிற்படுத்தப்பட்டோருக்கான இந்திய ஆயர் பேரவை அலுவலகத்தின் தலைவர் ஆயர் நீதிநாதன்.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 10ம் தேதி கடைபிடிக்கப்படும் மனித உரிமைகள் தினத்தையொட்டிவரும் ஞாயிறன்று தலித் விடுதலை ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது.  இவ்வாண்டு, 'தடைகளை உடைத்து சரிநிகர் உலகை கட்டியெழுப்புவோம்' என்ற தலைப்புடன் தலித் விடுதலை ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது.
சமூகப்பாகுபாட்டு நிலைகள், ஏழ்மை, கல்வியில் பின்தங்கிய நிலை ஆகியவைகளை தலித் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்குவதாக தன் செய்தியில் கூறும் ஆயர் நீதிநாதன், இப்போதும் தீண்டத்தகாதவர்களாக இம்மக்கள் நடத்தப்படுவது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளார்.
சமூகத்தில் மட்டுமல்ல, தலத்திருஅவைக்குள்ளும் இத்தகைய நிலைகள் இருப்பது குறித்து தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் செங்கல்பட்டு ஆயர்.


6. இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கைகள் பொய்யாகியுள்ளதாக யாழ் ஆயர் கவலை

டிச.08,2012. இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில் குடியரசும், நல்லிணக்கமும் இடம்பெறும் என தமிழர்கள் காத்திருக்க, அத்தனையும் பொய்யாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்துள்ளது யாழ் ஆயர் வழிகாட்டுதலின் கீழான குழு.
ஜப்பான், தென்னாப்ரிக்கா, இத்தாலி, அமெரிக்கா உட்பட 13 நாடுகளின் பிரதிநிதிகள் இச்சனிக்கிழமை காலை யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகத்தின் வழிகாட்டுதலின் கீழான குழுவைச் சந்தித்து உரையாடியபோது, தமிழ்மக்களின் ஏமாற்றம் குறித்த கவலை வெளியிடப்பட்டது.
போருக்குப்பின்னர் நாட்டில் ஏற்றத்தாழ்வுகளும் வேற்றுமைகளும் அதிகரித்துள்ளது எனவும், மக்கள் தங்கள் தனித்துவங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உறுதிகள் இல்லை எனவும், தமிழர் பகுதிகளில் இராணுவத்தினரின் அதிகப்படியான இருப்பு குறைக்கப்படவேண்டும் எனவும் ஆயர் வழிகாட்டுதலின் கீழான இக்குழு ஐ.நா. பிரதிநிதிகளிடம் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்தது.


7. பிறநாடுகளில் அடைக்கலம் மறுக்கப்பட்டு, அனுப்பப்படும் இலங்கைத் தமிழர்கள் பற்றி மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

டிச.08,2012. ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடிச் சென்றுள்ள தமிழர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளதாக, ஆஸ்திரேலிய அரசுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் இலங்கையின் மன்னார் ஆயர்.
பிறநாடுகளில் அடைக்கலம் கேட்டு, அது மறுக்கப்பட்டு, சொந்த நாட்டிற்கு மீண்டும் அனுப்பப்படும் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு வன்முறைகளையும், பாகுபாடுகளையும், அச்சுறுத்தல்களையும் சந்திப்பதாக, ஆஸ்திரேலிய அரசுக்கு எழுதியுள்ள ஒரு மடலில் குறிப்பிட்டுள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.
பிறநாடுகளில் அடைக்கலம் மறுக்கப்பட்டு, நாடு திரும்புகிறவர்கள், தேசத் துரோகிகளாக அரசாலும், இராணுவத்தாலும் நோக்கப்பட்டு, நடத்தப்படுவதாக ஆயர் இராயப்பு ஜோசப் தன் மடலில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கும்போது, வேற்று நாடுகளில் அடைக்கலம் தேடி மறுக்கப்பட்ட மக்கள் நாட்டிற்குள் திரும்பிவருவது மிகவும் ஆபத்து நிறைந்ததாக உள்ளதென்று ஆயரின் மடல் வலியுறுத்துகிறது.


8. AIDS நோயுற்றோரிடையே பணியாற்றும் கத்தோலிக்கப் பணி மையத்திற்கு மத்தியப்பிரதேச மாநில அரசின் சிறப்பு விருது

டிச.08,2012. HIV நோய்  கிருமிகளுடன் வாழும் ஏறத்தாழ 4000 பேருக்கு ஆற்றிவரும் உன்னதப் பணிகளுக்கென, கத்தோலிக்கப் பணி மையம் ஒன்றுக்கு, மத்தியப்பிரதேசத்தின் பாரதிய ஜனதா அரசு சிறப்பு விருது ஒன்றை வழங்கியுள்ளது.
AIDS நோயுற்றோரிடையே பணியாற்றும் தூய ஆவியாரின் பணியாளர்கள் (Servants of the Holy Spirit Sisters) என்ற துறவு சபை அருள்சகோதரிகள் நடத்திவரும் Vishwas சமூக அக்கறை மையத்தின் சிறப்புப் பணிகளுக்கு, மத்தியப்பிரதேச மாநில நலத்துறை அமைச்சர் Anup Misra இவ்விருதை வழங்கினார்.
மத்தியப்பிரதேசத்தின் Indoreல் இத்துறவுச் சபையினர் 2008ம் ஆண்டுமுதல் நடத்திவரும் AIDS நோயுற்றோர் பணி மையம், இந்நோயுற்றோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உழைத்து வருகிறது.
 

No comments:

Post a Comment