Friday, 28 December 2012

Catholic News in Tamil - 25/12/12

1. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இரவுத் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை
2. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கிய ஊருக்கும் உலகுக்கும்(Urbi et Orbi) வாழ்த்துச் செய்தி

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இரவுத் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

டிச.24,2012. இன்று மரியாவும் யோசேப்பும் நம் இல்லத்தின் கதவைத் தட்டினால் நாம் என்ன செய்வோம்? என்ற கேள்வியுடன் கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் மறையுரையை ஆரம்பித்தார்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இரவுத் திருப்பலியை 24ம் தேதி திங்கள்கிழமை, இரவு 10 மணிக்கு உரோம் நகர் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் துவக்கியத் திருத்தந்தை, தன் மறையுரையில், இன்றைய உலகில் வீடற்றவர், புலம்பெயர்ந்தோர் ஆகியோர் மீது நாம் கொள்ளும் அக்கறை குறித்து கேள்விகள் எழுப்பினார்.
இறைமகனுக்கு இடம் மறுக்கும் மனித சமுதாயத்தின் மன நிலையை யோவான் நற்செய்தியில், அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவான் 1: 11) என்ற துவக்க வரிகள் விளக்குகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
செயலாற்றலும், வேகமும் கொண்ட பல கருவிகளின் உதவியுடன் வாழும் நாம், இன்னும் அதிகம் அதிகமாக நேரமில்லாமல் துன்புறுகிறோம் என்றும், இத்தகைய அவசர கதியில் வாழும் நாம், இறைவனுக்கு நேரமும் இடமும் ஒதுக்க மறுக்கிறோம் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
"உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று விண்ணவர் எழுப்பிய பாடலைப்பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் மேற்கொள்வதற்குப் பதில், கண்ணையும், கருத்தையும் கவரும் அக்காட்சியில், அந்த இசையில் நாம் மெய்மறந்து இருப்பதே மேலானது என்று திருத்தந்தை கூறினார்.
நாமும் பெத்லகேம் செல்வோம் என்று நம்மை இன்றைய வழிபாடு அழைக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்வழைப்பானது, நமது பழைய நிலையிலிருந்து புதிய வாழ்வுக்குச் செல்ல நமக்கு விடுக்கப்படும் அழைப்பு என்பதையும் எடுத்துரைத்தார்.


2. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கிய ஊருக்கும் உலகுக்கும்(Urbi et Orbi) வாழ்த்துச் செய்தி

டிச.25,2012. «Veritas de terra orta est!» - «மண்ணினின்று உண்மை முளைத்தெழும்» (திருப்பா. 85,11).
உரோமையிலும் உலகம் முழுமையிலும் உள்ள சகோதர சகோதரிகளே, உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்கள். இந்த நம்பிக்கை ஆண்டில் என் கிறிஸ்துமஸ் வாழ்த்து, திருப்பாடலிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளுடன் வருகிறது. 'மண்ணினின்று உண்மை முளைத்தெழும்'.  உண்மையில் பார்க்கப்போனால், இத்திருப்பாடல் வார்த்தைகளில் வருங்காலத்தைக் காண்கிறோம். 'உண்மை உலகிலிருந்து முளைத்தெழுகிறது'. வாக்குறுதியாய் வரும் இது, ஏனைய வார்த்தை வெளிப்பாடுகளுடன் இணைந்து வருகிறது. அதாவது, 'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்'(திருப்பா. 85,11-14), என்பவையே அவ்வாக்குறுதிகள்.
இன்று இந்த இறைவாக்கு நிறைவேறிற்று. பெத்லகேமில் கன்னிமரியிடம் பிறந்த இயேசுவில் பேரன்பும் உண்மையும் சந்தித்தன, நீதியும் நிறைவாழ்வும் முத்தமிட்டன, மண்ணிலிருந்து உண்மை முளைவிட்டது, விண்ணிலிருந்து நீதி கீழ்நோக்கியது.
புனித அகுஸ்தீனும் மகிழ்வோடு சுருக்கமாக விளக்குகிறார்: உண்மை என்றால் என்ன? இறைமகன். உலகம் என்றால் என்ன? இறைச்சி. கிறிஸ்து எங்கே பிறந்தார் என்ற கேள்வியை எழுப்பும்போதும், ஏன் உண்மை இவ்வுலகில் முளைத்தது என பார்க்கும்போதும்.....உண்மை கன்னிமரியிடம் பிறப்பெடுத்தது. ஒரு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவில் அவர் வழங்கிய உரையில், ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் இந்த விழாவில் நாம் இறைவாக்கு நிறைவேறியதைக் கொண்டாடுகிறோம்,
'மண்ணினின்று உண்மை முளைத்தெழுந்தது; விண்ணினின்று நீதி கீழ்நோக்கியது'. இறைத்தந்தையின் இதயத்தில் இருக்கும் உண்மை உலகிலிருந்து முளைத்தெழுந்தது, ஏனெனில் அந்த உண்மை தாயின் உதரத்திலும் இருந்தது. உலகம் முழுமையையும் தாங்கிப்பிடிக்கும் உண்மை இம்மண்ணிலிருந்து கிளம்பி வந்தது,  ஏனெனில் இது ஒரு பெண்ணின் கைகளிலிருந்து எழுந்து வந்தது. ஆகாயமும் அடக்கிக்கொள்ள முடியாத இந்த உண்மை இவ்வுலகில் எழுந்தருளி ஒரு மாடடைக் கொட்டகையில் படுத்திருக்கின்றது. மேதகு சிறப்பு வாய்ந்த ஓர் இறைவன் இவ்வளவு தாழ்மையுடன் பிறப்பெடுப்பதால் என்ன பயன்?  இதனால் அவருக்கு எவ்வித பலனுமில்லை. ஆனால், நாம் நம்பினால் அது நமக்குப் பயனுள்ளதாகும்.
'நாம் நம்பினால்' இதுவே விசுவாச சக்தி. கடவுளே அனைத்தையும் படைத்தார், அவரே இயலக்கூடாததை இயலக்கூடியதாக்கினார். ஆம். மனு உருவானார். வரம்பற்ற அவரது அன்பின் ஆற்றல் மனிதர்களின் புரிந்துகொள்ளுதலையும் தாண்டி உருப்பெற்றது. முடிவற்றவர் குழந்தையாய் உருவெடுத்து மனித சமுதாயத்தில் நுழைந்தார். இருப்பினும் இதே கடவுள் என் இதயத்திற்குள் நுழைய இயலாது, நான் அதன் கதவுகளைத் திறக்கவில்லையெனில். Porta Fidei! விசுவாசக் கதவு. மறுக்கவும் துணியும் பெருவல்லமை குறித்து நமக்கு அச்சம் வரலாம். இறைவனுக்கும் திறக்க மறுக்கும் சக்தி குறித்து பயம் எழலாம். ஆனால் இந்த எண்ணத்தை விரட்டியடிக்கும் உண்மை உள்ளது, அச்சத்தை மேற்கொள்ளும் நம்பிக்கை உள்ளது. ஆம். உண்மை பிறந்துள்ளது. இறைவன் பிறந்துள்ளார். இவ்வுலகம் கனியைத் தந்துள்ளது. ஆம், நல்ல நிலமுள்ளது, அது நலமான நிலம், அனைத்து சுயநலங்களிலிருந்தும், திறக்க மறுக்கும் நிலைகளிலிருந்தும் விடுதலை தருகிறது. இவ்வுலகிலுள்ள ஒரு நிலம் கடவுள் நம்மிடையே குடிகொள்ள தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வுலகில் அவரின் இருப்பைக் கொண்டுள்ள பூமி. அந்த இடம் இன்றும், இந்த 2012லும் இருக்கிறது.  இந்த நிலமே உண்மையை முளைத்தெழவைத்தது. ஆகவே, உலகில் நம்பிக்கை உள்ளது, நம்பத்தகும் நம்பிக்கை, துன்ப வேளைகளிலும், மிகவும் கடினமான சமயங்களிலும்கூட. அன்பையும் நீதியையும் அமைதியையும் கொண்டதாய் அந்த உண்மை முளைத்தெழுந்தது.
ஆம். சிரியா நாட்டு மக்களுக்காக அமைதி மொட்டவிழ்கிறது, ஆழமாகக் காயமுறவும், பிரிவினைகளைச் சுமக்கவும் காரணமாகும் மோதல், இங்கு, உதவிகள் இல்லா மக்களைக்கூட விட்டுவைக்காமல், அப்பாவி மக்களைப் பலிவாங்கி நிற்கிறது. இந்த இரத்தம் சிந்தல்கள் நிறுத்தப்பட, மீண்டுமொருமுறை அழைப்பு விடுக்கிறேன். அகதிகளுக்கும் குடிபெயர்ந்தோர்க்கும் உதவிகள் வழங்கப்படவும், பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த மோதல்களுக்கு அரசியல் தீர்வு காணவும் விண்ணப்பிக்கிறேன். மீட்பர் பிறந்த மண்ணில் அமைதி மலர்கிறது. இஸ்ரயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாய் நிலவும் பிரிவினைகளையும் மோதல்களையும் முடிவுக்குக் கொணரவும், பேச்சுவார்த்தைகளின் பாதையில் தீர்மானத்துடன் நடக்கவும் அவரே கொடைகளை வழங்குகிறார்.
வடஆப்ரிக்க நாடுகளில், புதிய வருங்காலத்தைத் தேடும் ஆழமான மாற்றத்தின் வழியாக குறிப்பாக எகிப்தில் - இயேசுவின் குழந்தைப்பருவத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த அன்புநிறை பூமியில் - குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூகங்களை எழுப்புவார்களாக; நீதி, விடுதலை மீதான மதிப்பு, மனிதருக்கான மாண்பு ஆகியவைகளின் அடிப்படையில்.
பெரிய ஆசியக் கண்டத்தில் அமைதி முளைத்தெழுகிறது. இப்பூமியில் வாழும் எண்ணற்ற மக்களை குழந்தை இயேசு கருணையுடன் நோக்குகிறார், குறிப்பாக அவரில் நம்பிக்கை கொள்வோரை. அமைதியின் மன்னர் சீன மக்கள் குடியரசின் புதிய தலைவர்கள் மீதும் பார்வையைத் திருப்புகிறார், அவர்கள் எதிர்நோக்கும் பெரும் சவால்களை மனதில்கொண்டு. மதங்களின் பங்களிப்பை அந்நாடு ஊக்குவிப்பதாக, ஒருவர் ஒருவருக்கான மதிப்பில், அவை, நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதாக, அதுவும் அந்நாட்டின் உன்னத மக்கள் மற்றும் உலகம் முழுமையின் நலனுக்காக. கிறிஸ்துவின் இப்பிறப்புப் பெருவிழா மாலி நாட்டில் அமைதியும், நைஜீரியாவில் இணக்கவாழ்வும் திரும்பி வருவதை ஊக்குவிப்பதாக. நைஜீரியாவில் கொடூரத் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து பலிவாங்கி வருகின்றன, குறிப்பாக கிறிஸ்தவர்களை. நம் மீட்பர் உதவிகளை வழங்கி ஆறுதலளிக்கிறார், காங்கோ குடியரசின் கிழக்கில் உள்ளவர்களுக்கு. கென்ய மக்களுக்கு அமைதி எனும் கொடையை வழங்குகிறார். இங்கு இரத்தம் சிந்தும் தாக்குதல்கள் குடிமக்களையும் வழிபாட்டுத் தலங்களையும் அழிவுக்குள்ளாக்குகின்றன.
இலத்தீன் அமெரிக்காவில் இவ்விழாவைச்சிறப்பிக்கும் விசுவாசிகளை குழந்தை இயேசு ஆசீர்வதிக்கிறார். அவர்களின் மனிதாபிமான மற்றும் கிறிஸ்தவ குணநலன்கள் வளர உதவுகிறார். தங்கள் குடும்பங்களையும் குடியிருப்புகளையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரமளிக்கிறார். குற்றங்களுக்கு எதிரான போர் மற்றும் வளர்ச்சி குறித்த அர்ப்பணத்தில் ஆட்சியாளர்களுக்குச் சக்தி வழங்குகிறார்.
அன்பு சகோதர சகோதரிகளே! அன்பும் உண்மையும், நீதியும் அமைதியும் சந்தித்தன. பெத்லகேமில் மரியன்னையிடம் பிறந்தவர், மனுக்குலத்திற்குள் மனுவுரு எடுத்துள்ளார். மனிதனாகப் பிறந்தார் இறைமகன், கடவுள் வரலாற்றில் தோன்றினார். அவரின் பிறப்பு அனைத்து மனித குலத்திற்கும் புது வாழ்வின் முளையானது. ஒவ்வொரு நிலமும் நல்நிலமாக மாறி, அங்கு அன்பு, அமைதி, உண்மை, நீதி ஏற்கப்பட்டு, முளைவிடட்டும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...