Sunday, 23 December 2012

Catholic News in Tamil - 22/12/12

1. திருத்தந்தை : கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வில் கொடுக்கும் முன்னுரிமைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்

2. திருப்பீடம் : பொருளாதார விவகாரங்களை நிர்வகிப்பதற்கு வெளிப்படையான வழிமுறைகளும் விதிமுறைகளும் தேவை

3. எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவரின் கிறிஸ்மஸ் செய்தி

4. சிரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் போரை எதிர்க்கின்றனர்

5. நாகசாகி பேராயர் : கிறிஸ்மஸ் காலத்தில் அதிகத் துன்பங்களை எதிர்நோக்கும் மக்கள்மீது அக்கறை காட்ட அழைப்பு

6. ஜெர்மனியில், டிசம்பர் 26 துன்புறும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்கும் நாள்

7. பாகிஸ்தானில் 2012ம் ஆண்டில் ஒன்பது வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன

8. சிறார் இசைக்குழு ஒன்று உலகினருக்குக் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

9. இந்திய தேசியக் கணித தினம்

10. மது, புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்த "பாவ" வரி விதிப்பு: இந்திய அரசு முடிவு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வில் கொடுக்கும் முன்னுரிமைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்

டிச.22,2012. கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வில் கொடுக்கும் முன்னுரிமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தங்களது இறைநம்பிக்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Financial Times என்ற இதழில் தான் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு கேட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்மஸ் மிகுந்த மகிழ்ச்சியின் காலம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை, அதேசமயம், ஆன்மாவைப் பரிசோதித்துப் பார்ப்பது உட்பட வாழ்வு குறித்து ஆழ்ந்த சிந்திக்க வேண்டிய காலமுமாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டின் இறுதி, பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய தருணமாகப் பலருக்குத் தெரியலாம், ஆயினும், கிறிஸ்மஸ் குடிலின் தாழ்ச்சி, ஏழ்மை, எளிமை ஆகிய பண்புகளிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொண்டோம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்கள் நற்செய்தியை அதிகம் வாசிப்பதற்கு இந்தக் கிறிஸ்மஸ் காலத்தைப் பயன்படுத்துமாறும் பரிந்துரைத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒரு தினத்தாளில் திருத்தந்தை எழுதும் கட்டுரைகளைப் பார்ப்பது சாதாரணமாக இடம்பெறுவது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


2. திருப்பீடம் : பொருளாதார விவகாரங்களை நிர்வகிப்பதற்கு வெளிப்படையான வழிமுறைகளும் விதிமுறைகளும் தேவை

டிச.22,2012. திருப்பீடம், தனது பொருளாதார வளங்களை நிர்வகிப்பதற்கு  வெளிப்படையான வழிமுறைகளை வளர்ப்பதற்கு கொண்டுள்ள ஆர்வத்தை மீண்டும் உறுதி செய்வதாகத் தெரிவித்தார் திருப்பீடத்தின் பொருளாதார விவகாரங்கள் துறைத் தலைவர் கர்தினால் ஜூசப்பே வெர்சால்தி.
எனினும், திருப்பீடம் இந்தத் தனது இலக்கை அடைவதற்குப் புதிய விதிமுறைகள் தேவை என்றுரைத்த கர்தினால் வெர்சால்தி, திருப்பீடத்தின் நிர்வாக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட கர்தினால்களின் சிறப்பு அவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தப் புதிய விதிமுறைகள் அமைந்திருக்கும் என்று கூறினார்.
இவ்வாண்டில் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் அடிப்படையில் திருப்பீட நிர்வாகம் செயல்படுவது குறித்து நிருபர் கூட்டத்தில் விளக்கிய கர்தினால் வெர்சால்தி இவ்வாறு தெரிவித்தார்.
மக்களை நம்பாததால் அல்ல, மாறாக, மிகச் சிறந்த மனிதரும் சோதனைக்கு உள்ளாகக் கூடும் என்பதால் பொருளாதார நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய வழிமுறைகள் தேவைப்படுகின்றன, இதுவே இந்தப் புதிய விதிமுறைகள்   கொண்டுவரப்பட்டதற்குக் காரணம் எனவும் விளக்கினார் கர்தினால் ஜூசப்பே வெர்சால்தி.
மேலும், திருப்பீடத்தின் வரவு செலவுகள் இன்னும் இழப்பிலே போய்க் கொண்டிருக்கின்றது, இதற்கு உலகளாவியப் பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம் என்று, திருப்பீடத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலர்
பேரருட்திரு Lucio Balda இந்நிருபர் கூட்டத்தில் அறிவித்தார்.


3. எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவரின் கிறிஸ்மஸ் செய்தி

டிச.22,2012. பல்சமய உரையாடல் ஒருவரையொருவர் மதிக்கும் செயல்களில்தான் பலன்களைத் தர முடியும் என்று எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal  தனது கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.
ஆலயங்கள், துறவுசபை இல்லங்கள், யூதர்களின் தொழுகைக்கூடங்கள், கல்லறைகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டது ஒவ்வொரு மனிதரையும் புண்படுத்தும் செயல்கள் என்பதைத் தான் மீண்டும் கூற விரும்புவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முதுபெரும் தலைவர் Twal.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் குலைக்கின்றது எனவும், ஜோர்டனிலுள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் சிரியா நாட்டு அகதிகளுக்கு உதவுவதில் தங்களது திருஅவை முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது எனவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே அமைதி ஏற்படுவதற்கு இரு நாடுகள் என்ற தீர்வை நோக்கி உழைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒபாமாவுக்கும் எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.  


4. சிரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் போரை எதிர்க்கின்றனர்

டிச.22,2012. சிரியாவில் குண்டு வெடிப்புகளும் காழ்ப்புணர்வுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி கூறினார்.
இளம் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் 6,500க்கு மேற்பட்ட சூடான உணவுப் பொட்டலங்களை இனம், மதம் என்ற வேறுபாடின்றி, தமஸ்கு நகரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர் என்றும் பேராயர் செனாரி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கிறிஸ்மஸின் மகிழ்ச்சி, சண்டை மற்றும் பயம் நிறைந்த சூழலில் கொண்டாடப்படுகின்றது என்றுரைத்த பேராயர், தற்போது மக்களின் இதயங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் துன்பங்களுக்கும் வெறுப்புக்கும் சவாலாக இந்தக் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி இருக்கின்றது என்று கூறினார்.
இந்தக் கடினமானச் சண்டைச் சூழலில், பிறரன்பும் பகிர்வுமே வெறுப்பையும் கோபத்தையும் மேற்கொள்ளும் உண்மையான ஆயுதங்களாக மக்களுக்கு இருக்கின்றன என்று கூறிய சிரியாவுக்கானத் திருப்பீடத் தூதர், சிரியாவில் அமைதியும் ஒப்புரவும் ஏற்பட செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.
சிரியாவில் இடம்பெறும் சண்டையினால் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளனர்.

   
5. நாகசாகி பேராயர் : கிறிஸ்மஸ் காலத்தில் அதிகத் துன்பங்களை எதிர்நோக்கும் மக்கள்மீது அக்கறை காட்ட அழைப்பு 

டிச.22,2012. அதிகத் துன்பங்களை எதிர்நோக்கும் மக்கள்மீது அக்கறை காட்டி  அவர்களுக்காகச் செபிப்பதற்குத் திருவருகைக் காலமும் கிறிஸ்மஸ் தினமும் சிறந்த காலங்கள் என்று ஜப்பானின் நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami  கூறினார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் அணுசக்திக் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களே ஜப்பானில் அதிகம் துன்புறும் மக்களாக இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்ட பேராயர் Takami, இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் நமது எண்ணங்களும் செபங்களும் துன்புறும் இம்மக்களை அதிகம் நினைப்பதாக இருக்க வேண்டுமெனக் கூறினார்.
தனது உயர்மறைமாவட்டத்தில் கிறிஸ்மஸ் சிறப்பிக்கப்படும் விதம் குறித்து  ஆசியச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த நாகசாகி பேராயர் Takami, முந்தைய ஆண்டுகளைவிட இவ்வாண்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்காது என்று கூறினார்.
அணுசக்திக்கு எதிரான மக்களின் குரல் இக்காலத்தில் ஓங்கி ஒலிக்கின்றது என்றும் கூறிய பேராயர், அரசியல் மற்றும் அணுசக்தி குறித்த விவகாரங்களில் ஜப்பான் நாடு கடுமையான தருணத்தை எதிர்கொள்கின்றது என்றும் கூறினார்.
   

6. ஜெர்மனியில், டிசம்பர் 26 துன்புறும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்கும் நாள்

டிச.22,2012. இம்மாதம் 26ம் தேதியான வருகிற புதனன்று, உலகில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது ஜெர்மன் தலத்திருஅவை.
ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்வாண்டு ஜூன் மாதத்தில் எடுத்த தீர்மானத்தில், உலகில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 26ம் தேதியன்று அந்நாட்டின் அனைத்துப் பங்குகளும் செபிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
முன்னாள் கம்யூனிச நாடுகளில் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய கிறிஸ்தவர்களுக்காக 1994ம் ஆண்டுவரைச் செபித்து வந்த ஜெர்மன் தலத்திருஅவை, தற்போது உலகெங்கும் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்பதற்கும் தீர்மானித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாட்டுக்காகச் சிறப்பாகச் செபிக்கும் ஜெர்மன் தலத்திருஅவை, இவ்வாண்டு எகிப்து நாட்டுக்காகச் செபிக்கவுள்ளது.


7. பாகிஸ்தானில் 2012ம் ஆண்டில் ஒன்பது வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன
டிச.22,2012. பாகிஸ்தானில் 2012ம் ஆண்டில் ஒன்பது வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, அழிக்கப்பட்டுள்ளன அல்லது சூறையாடப்பட்டுள்ளன என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
சிறுபான்மை மக்களுக்குப் புனிதமான இடங்களாக அமைந்துள்ள ஐந்து கிறிஸ்தவ ஆலயங்கள், மூன்று இந்துமதக் கோவில்கள், அஹ்மதி இசுலாமியப் பிரிவின் ஒரு மசூதி ஆகியவை இசுலாமியத் தீவிரவாதக் குழுவால் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று அவ்வறிக்கை மேலும் கூறுகின்றது.
சிறுபான்மை மக்களின் 27 வழிபாட்டுத்தலங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும், பாகிஸ்தான் தலத்திருஅவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2011ம் ஆண்டில் கத்தோலிக்கருக்கெதிரான 68 குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று அந்நாட்டில்
வெளியான ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது.


8. சிறார் இசைக்குழு ஒன்று உலகினருக்குக் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

டிச.22,2012. ஆஸ்ட்ரியாவை மையமாகக் கொண்ட சிறார் இசைக்குழு ஒன்று இசையின் வழியாக விசுவாசக் கதைகளைச் சொல்லும் தங்களது பணியின் ஒரு பகுதியாக, உலகினர் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைச் சொல்லும் ஒலி-ஒளி இசைக்காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாங்கள் மெரி மெரி கிறிஸ்மஸ்  பாடுகிறோம் என்ற ஒலி-ஒளிப்படத்தை, KISI  என்ற கடவுளின் பாடும் குழந்தைகள் குழு வெளியிட்டுள்ளது.
இந்த இசைக்குழு ஐந்து நாடுகளில் 400க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இக்குழுவினர் தங்களது இசையின் மூலம் நற்செய்தி அறிவித்து வருகின்றனர்.
Hannes, Birgit Minichmayr ஆகிய இருவரும் 1993ம் ஆண்டில் இந்த இசைக் குழுவை ஆரம்பித்தனர். 


9. இந்திய தேசியக் கணித தினம்

டிச.22,2012. உலகின் சிறந்த கணித மேதைகளில் ஒருவரான சீனிவாச இராமானுஜத்தின் பிறந்த நாளான டிசம்பர் 22ம் தேதி இந்திய தேசியக் கணித தினமாகச் சிறப்பிக்கப்படுகின்றது.
இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளையோர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், இந்திய தேசியக் கணித தினமாகக் கடைபிடிக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற அறிவியலாளர்களுடன் ஒப்பிடப்பட்ட பெருமை கணிதமேதை இராமானுஜத்துக்கு உண்டு. இவர், 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதியன்று  ஈரோட்டில் பிறந்தார். இவர் தனது 12வது வயதில், கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத ஆறாயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்றார். அப்போது, "மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜனுக்கு சிறு வேலை கிடைத்தது. அவரது கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக நிர்வாகி எஸ்.என்.அய்யர், ராமானுஜன் கண்டுபிடித்த முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப உதவினார். இருப்பினும், 1913ல் இராமானுஜன், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிக்கு மீண்டும் அதனை அனுப்பினார். அதைக் கண்ட ஹார்டி, இதைப் படைத்தவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து, ராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்தார். இதை ஏற்று, 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இராமானுஜனின் திறமை, சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. ராமானுஜனின் உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு.


10. மது, புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்த "பாவ" வரி விதிப்பு: இந்திய அரசு முடிவு
டிச.22,2012. இந்தியாவில் மது மற்றும் புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த 2012-2017ம் ஆண்டுக்கான 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நலவாழ்வு வரவுசெலவுப் பட்டியலில்"பாவ வரி" என்ற புதிய வரியை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
12வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையை தேசிய வளர்ச்சிக் கழகம், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்துள்ளது. அந்த அறிக்கையில் புதிய வரிவிதிப்பின் மூலம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மது, புகையிலை உள்ளிட்ட பொருள்களுக்கு புதிய வரி விதிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனப் பரிந்துரை செய்துள்ளது.
12வது ஐந்தாண்டு திட்டம் குறித்த தேசிய வளர்ச்சிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...