Thursday, 20 December 2012

Catholic news in Tamil - 19/12/12


1. வத்திக்கான் உடைமைகளை நிர்வாகம் செய்வதில் வெளிப்படையான வழிமுறைகள் வளர்க்கப்படவேண்டும் - கர்தினால் பெர்தோனே

2. நமது நம்பிக்கை, வரலாற்றிலிருந்து நம்மைப் பிரிப்பதில்லை, மாறாக, வரலாற்றோடு நம்மை ஆழமாகப் பிணைக்கிறது - கர்தினால் Bagnasco

3. அயர்லாந்து ஆயர்கள் - அரசு எடுத்திருக்கும் முடிவு நம் அனைவர் மனதிலும் பெரும் கவலையை உருவாக்க வேண்டும்

4. கனடா நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி

5. ஒடிஸ்ஸா மக்களின் நம்பிக்கைப் பயணம் வருகிற ஆண்டில் இன்னும் எழுச்சியோடு தொடரும் - கட்டக் புபனேஸ்வர் பேராயர்

6. பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட தயாராக உள்ளனர் - எருசலேம் துணை ஆயர்

7. பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து கொடுத்தவர்கள் சுட்டுக் கொலை

8. அகில உலக புலம்பெயர்ந்தோர் நாளையொட்டி ஐ.நா. வெளியிட்ட அறிக்கை

9. உலக மக்களில் 80 விழுக்காட்டினர் மத நம்பிக்கை உடையவர்களே: புதிய ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------

1. வத்திக்கான் உடைமைகளை நிர்வாகம் செய்வதில் வெளிப்படையான வழிமுறைகள் வளர்க்கப்படவேண்டும் - கர்தினால் பெர்தோனே

டிச.19,2012. அகில உலகத் திருஅவையின் பணிகளுக்குப் பயன்படுவதற்கு வத்திக்கான் உடைமைகள் உள்ளன என்றும் இவ்வுடமைகளை நிர்வாகம் செய்வதில் இன்னும் வெளிப்படையான வழிமுறைகள் வளர்க்கப்படவேண்டும் என்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
திருப்பீடத்தின் நிதித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களைக் குறித்து இச்செவ்வாயன்று அத்துறையைச் சார்ந்தவர்களுக்கு உரை நிகழ்த்திய கர்தினால் பெர்தோனே, துல்லியமாகவும், வெளிப்படையாகவும் நிதித்துறை இயங்க வேண்டும் என்ற இரு கருத்துக்களை வலியுறுத்தினார்.
இவ்வுலக உடமைகள் நிரந்தரமற்றவை என்ற கண்ணோட்டம் திருஅவையில் எப்போதுமே நிலவி வந்துள்ளது என்பதை எடுத்துரைத்த கர்தினால் பெர்தோனே, திருத்தந்தை ஆறாம் பவுல் காலத்திலிருந்து நிதித்துறையில் உருவாகிவந்துள்ள மாற்றங்களையும் சுட்டிக்காட்டினார்.
உலகெங்கும் நிதி நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் வெளிப்படையான வழிமுறைகள், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் திருப்பீடத்தாலும் கடைபிடிக்கப்படுவதைத் தன் உரையில் சுட்டிக்காட்டிய திருப்பீடச் செயலர், இந்த வழிமுறையைத் தொடர்ந்து கடைபிடிப்பதில் கவனமும், தெளிவும் அதிகம் தேவை என்று கூறினார்.
திருஅவையின் பல்வேறு பணிகள் உலகெங்கும் பாராட்டப்படுவதுபோல், அதன் நம்பகத் தன்மையும் மக்களின் பாராட்டையும், மதிப்பையும் பெறவேண்டும் என்று தன் உரையின் இறுதியில் கர்தினால் பெர்தோனே வலியுறுத்தினார்.


2. நமது நம்பிக்கை, வரலாற்றிலிருந்து நம்மைப் பிரிப்பதில்லை, மாறாக, வரலாற்றோடு நம்மை ஆழமாகப் பிணைக்கிறது - கர்தினால் Bagnasco

டிச.19,2012. கிறிஸ்மஸ் விழா நெருங்கிவரும் இந்நாள்களில் பல்வேறு உணர்வுகள் நம் மனதில் எழும் அதே வேளையில், நமது நம்பிக்கை உணர்வுகளுக்கும் நாம் இடம் தருகிறோம் என்று இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.
நெருங்கிவரும் கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி இத்தாலியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரோம் நகரில் இச்செவ்வாய் மாலையில் திருப்பலி நிகழ்த்தி மறையுரை ஆற்றிய கர்தினால் Bagnasco, நம்பிக்கை ஆண்டில் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் விழா தனி சிறப்பு பெறுகிறது என்று கூறினார்.
நமது நம்பிக்கை, வரலாற்றிலிருந்து நம்மைப் பிரிப்பதில்லை, மாறாக, வரலாற்றோடு நம்மை இன்னும் ஆழமாகப் பிணைக்கிறது என்று கூறிய கர்தினால் Bagnasco, மனிதர்களின் மாண்பை வரலாற்றில் நிலைநாட்டும் ஒரு முக்கிய கருவியாக நமது நம்பிக்கை செயல்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.
கிறிஸ்மஸ் அலங்காரங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் விளக்குகளைப் பற்றி குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Bagnasco, நிரந்தரமான ஒளியாக இருக்கும் கிறிஸ்துவை நோக்கி நாம் பயணம் செல்கிறோம் என்பதையும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் மறப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அரசியல் வழியாக நாட்டுப்பணிகளை மேற்கொண்டுள்ள நீங்கள் பல இன்னல்கள் இடையிலும் நம்பிக்கை தளராமல் உங்கள் பணிகளை மேற்கொள்ள, நம் மத்தியில் மனிதராகப் பிறந்து, நம்முடன் பயணிக்கும் இறைமகன் உதவுவாராக என்று கர்தினால் Bagnasco அங்கு கூடியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தினார்.


3. அயர்லாந்து ஆயர்கள் - அரசு எடுத்திருக்கும் முடிவு நம் அனைவர் மனதிலும் பெரும் கவலையை உருவாக்க வேண்டும்

டிச.19,2012. கருக்கலைப்பைச் சட்டமாக்க அயர்லாந்து அரசு எடுத்திருக்கும் முடிவு நம் அனைவர் மனதிலும் பெரும் கவலையை உருவாக்க வேண்டும் என்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.
கருக்கலைப்பைச் சட்டமாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதென்று டிசம்பர் 18, இச்செவ்வாயன்று அயர்லாந்து அரசு எடுத்துள்ள முடிவுக்கு, கர்தினால் Seán Brady, பேராயர்கள் Diarmuid Martin, Dermot Clifford, Michael Neary, ஆகிய நால்வரும் இணைந்து எதிர்ப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
கருவுற்ற தாய், கருவில் வளரும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் தற்போது அயர்லாந்தில் சட்டங்கள் நிலவி வருகின்றன என்றும், இச்செவ்வாயன்று அரசு எடுத்துள்ள முடிவின் ஒரு தொடர் முயற்சியாக, கருக்கலைப்பு சட்டமாக மாறினால், இந்த பாதுகாப்பு நீக்கப்படும் என்றும் ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
அக்டோபர் மாதம் Savita Halappanavar என்ற பெண்ணுக்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் அவர் இறந்தார் என்ற செய்தி, அயர்லாந்தில் இப்பிரச்சனையைக் குறித்த கருத்து வேறுபாடுகளை வளர்த்துள்ளது.
கருக்கலைப்பை ஆதரிக்காத அயர்லாந்தில் கருவுற்ற ஒரு இலட்சம் பெண்களில் மூன்று பேரே பிள்ளை பிறப்பு நேரத்தில் இறந்துள்ளனர். ஆனால், கருக்கலைப்பை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் கருவுற்ற ஒரு இலட்சம் பெண்களில் 14 பேர் பிள்ளை பிறப்பு நேரத்தில் இறந்துள்ளனர் என்று CNA கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


4. கனடா நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி

டிச.19,2012. பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம் என்ற மூன்று பரிசுகளை கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவுக்குக் காணிக்கையாக்கியதைப்போல், கிறிஸ்துவின் மறை உடலான திருஅவையும் மூன்று பரிசுகளை இவ்வாண்டு பெற்றுள்ளது என்று கனடா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
அண்மித்துவரும் கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, கனடா நாட்டு ஆயர்கள் பேரவையின் சார்பில் செய்தியை வெளியிட்டுள்ள பேராயர் Richard Smith, ஆயர்கள் சிறப்பு மாமன்றம், நம்பிக்கை ஆண்டு, மற்றும் Kateri Tekakwitha புனித நிலைக்கு உயர்த்தப்பட்டது ஆகியவை நாம் பெற்ற மூன்று கொடைகள் என்று கூறியுள்ளார்.
புதிய நற்செய்திப் பணியில் ஈடுபட நம்மை அழைக்கும் ஆயர்கள் மாமன்றம், இவ்வுலகக் கொடைகளையும், தனி மனிதர்களின் மாண்பையும் ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில் நற்செய்திப் பணி அமைய வேண்டும் என்பதை நமக்குச் சொல்லித்தருகிறது என இச்செய்தி கூறுகிறது.
நாம் அனைவருமே பயணிகள் என்பதையும், வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி நாம் எப்போதும் பயணிக்கிறோம் என்பதையும் நம்பிக்கை ஆண்டு நமக்கு சுட்டிக் காட்டுகிறது என்றும் கனடா நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி எடுத்துரைக்கிறது.


5. ஒடிஸ்ஸா மக்களின் நம்பிக்கைப் பயணம் வருகிற ஆண்டில் இன்னும் எழுச்சியோடு தொடரும் - கட்டக் புபனேஸ்வர் பேராயர்

டிச.19,2012. ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் இந்த நம்பிக்கை ஆண்டில், தங்கள் நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்தவும், அர்ப்பண நோக்குடன் வாழவும் வேண்டும் என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அழைப்பு விடுத்துள்ளார்.
கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களின் உயிரும் உடைமைகளும் அழிக்கப்பட்டன. ஆனால், அவர்களின் விசுவாசம் என்ற கொடையை வன்முறையாளர்களால் பறிக்க முடியவில்லை என்று பேராயர் பார்வா, கிறிஸ்மஸ் விழாவையொட்டி, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
மக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காப்பதிலும், வளர்ப்பதிலும் அப்பகுதியில் பணிபுரியும் குருக்கள், மற்றும் துறவற சகோதர்கள், சகோதரிகள் ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று பேராயர் பார்வா சுட்டிக்காட்டினார்.
நாம் கொண்டாடும் நம்பிக்கை ஆண்டு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு கோடை என்பதைத் தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய பேராயர் பார்வா, ஒடிஸ்ஸா மக்களின் நம்பிக்கைப் பயணம் வருகிற ஆண்டில் இன்னும் எழுச்சியோடு தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.


6. பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட தயாராக உள்ளனர் - எருசலேம் துணை ஆயர்

டிச.19,2012. 2012ம் ஆண்டில் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் மனதில் நல்ல உணர்வுகளும், வருத்தமான உணர்வுகளும் நிறைந்திருந்தாலும், கிறிஸ்து பிறப்பு விழா ஓர் ஆன்மீக விழா என்பதால், இவ்விழாவைக் கொண்டாட மக்கள் தயாராக உள்ளனர் என்று எருசலேம் துணை ஆயர் William Shomali கூறினார்.
கிறிஸ்மஸ் விழா நெருங்கி வரும் வேளையில், உலகின் பல நாடுகளில் இருந்தும் பயணிகள் பாலஸ்தீன நாட்டில் உள்ள கிறிஸ்து பிறப்பு ஆலயத்தைக் காண வருவது வழக்கம். அண்மையில், இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதல்களால், பயணிகளின் வரவு பெருமளவு குறைந்துள்ளது.
இந்நிலை குறித்து Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்புக்கு, இச்செவ்வாயன்று பேட்டியளித்த ஆயர் Shomali, உலக நாடுகளின் தலையீட்டால், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனைகள் பெருமளவு தீர்ந்துள்ளது என்று கூறினார்.
பாலஸ்தீனம் ஒரு தனி நாடென்று ஐ.நா.பொது அவையால் ஏற்கப்பட்டது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்குப் பெரும் மகிழ்வைத் தந்துள்ளது என்றாலும், சிரியா போன்ற அண்மைய நாடுகளில் இன்னும் தொடரும் இறுக்கமானச் சூழல் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைப் பெருமளவில் பாதிக்கின்றன என்று ஆயர் Shomali சுட்டிக்காட்டினார்.


7. பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து கொடுத்தவர்கள் சுட்டுக் கொலை

டிச.19,2012. பாகிஸ்தானில் பெஷாவரின் புறநகர்ப் பகுதிகளில் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து வழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மூன்று இடங்களில் இப்புதனன்று மேலும் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
இத்திங்களன்று அந்நாட்டில் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து வழங்கிக் கொண்டிருந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப் பெரிய நகரான கராச்சியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் பெண்கள்.
அந்நாட்டில் பரந்துபட்ட அளவில் போலியோ நோய் காணப்படும் நிலையில், அதை ஒழிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டம், இத்தாக்குதலை அடுத்து, நிறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை எந்தக் குழுவும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தடுப்பு மருந்துகள் மூலம் போலியோ நோய் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தாலிபான்கள் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
நோய் தடுப்பு நடவடிக்கை எனும் பெயரில் அன்னிய நாடுகள் உளவு வேலை பார்ப்பதற்கும், முஸ்லிம்களிடையே குடும்பக் கட்டுப்பாட்டை செயல்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தாலிபான் தலைவர்கள் கூறுகிறார்கள்.
ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலேயே உலகளவில் இன்னும் போலியோ நோய் அதிக அளவில் உள்ளது என்பது ஐ.நா.வின் கணிப்பு.


8. அகில உலக புலம்பெயர்ந்தோர் நாளையொட்டி ஐ.நா. வெளியிட்ட அறிக்கை

டிச.19,2012. நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்தோரின் அயரா உழைப்பால், உலகச் சமுதாயம் பல வழிகளிலும் முன்னேறியுள்ள அதே வேளையில், புலம்பெயர்ந்தோரின் வாழ்வு அதிக முன்னேற்றம் இன்றி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
டிசம்பர் 18, இச்செவ்வாயன்று  கடைபிடிக்கப்பட்ட அகில உலக புலம்பெயர்ந்தோர் நாளையொட்டி ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், புலம்பெயர்ந்தோரின் இன்றைய நிலையும், இப்பிரச்சனைக்கானத் தீர்வுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
தகுந்த ஆவணங்கள் இன்றி, எல்லை கடந்து அடுத்த நாட்டுக்குச் செல்வதும், அங்கே தங்குவதும் ஒரு குற்றம் என்று நோக்கப்படுவது சரியல்ல, அதிகப்படியாக அது அரசுகள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைதான் என்று ஐ.நா. உயர் அதிகாரிகள் François Crépeau மற்றும் Abdelhamid El Jamri ஆகியோர் கூறினர்.
ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2000மாம் ஆண்டு 15 கோடி என்ற அளவில் இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து, தற்போது 21 கோடியே 40 இலட்சம் என்ற அளவில் உள்ளது.
புலம்பெயர்தல் என்பது, மனித சமுதாயத்தில் தொடரும் வரலாற்று நிகழ்வாக இருப்பதால், 2000மாம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியை, அகில உலக புலம்பெயர்ந்தோரின் நாளென்று ஐ.நா. உருவாக்கியது.


9. உலக மக்களில் 80 விழுக்காட்டினர் மத நம்பிக்கை உடையவர்களே: புதிய ஆய்வு

டிச.19,2012. உலக மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களாக இருப்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் சுமார் 600 கோடி பேர் மதத்தை சார்ந்துள்ளனர் என்பது பியூ (Pew) என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் 200 நாடுகளில் செய்யப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள், கருத்துக்கணிப்பு மற்றும் பிறப்பு இறப்பு பதிவேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது, சுமார் 230 கோடிப் பேர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோர் 160 கோடிப் பேர் ஆவர். இந்துக்களின் எண்ணிக்கை 100 கோடியாக உள்ளது.
புத்த மதத்தை பின்பற்றுவோர் 50 கோடியாகவும், பழங்குடி-நாட்டுப்புற மரபுகளைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை 40 கோடியாகவும் உள்ளது. யூத மதத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சமாக உள்ளது.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...