Tuesday 18 December 2012

Catholic News in Tamil - 17/12/12

1. பாலஸ்தீனத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு

2. திருத்தந்தை : தொடர்ந்த உறுதிப்பாடு, பொறுமை மற்றும் தாழ்ச்சியே வெற்றியின் இரகசியம்

3. திருத்தந்தையின் மூவேளை செப உரை

4. வத்திக்கானுக்கும், தாய்வானுக்கும் இடையே ஒப்பந்தம்

5. திருப்பீடச் செயலர் : திருப்பீடத்தூதர் பேராயர் Ambrose Madtha, ஐவரி கோஸ்ட் நாட்டின் ஒப்புரவுக்குச் சிறப்புப் பணியாற்றியுள்ளார்

6. பேராயர் Maria Celli : திருத்தந்தையின் Twitterல் தொடர்பு கொண்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளது

7. கேரள ஆயர்கள் : மதுபானங்களை அரசே விற்பதை நிறுத்த வேண்டும்

8. 35கி.மீட்டரில் 130 நாளில் ஒரு இலட்சம் பேர் கொலை: ஈழப் போர் குறித்து தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. பாலஸ்தீனத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு

டிச.17,2012. பாலஸ்தீனப் பகுதியின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தையையும் திருப்பீடச்செயலரையும், நாடுகளுடன் ஆன உறவுகளுக்கானத் துறையின் செயலரையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas
பாலஸ்தீனம், உறுப்பினரற்ற பார்வையாளராக ஐ.நா. பொதுஅவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறித்து திருப்பீட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த அங்கீகாரம் வழி பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல்களுக்குத் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என உரைக்கப்பட்டது. அதேவேளை இவ்விருதரப்பினரிடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவக்கப்படவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
பல்வேறு மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்தியக்கிழக்குப்பகுதியில் ஒப்புரவையும் அமைதியையும் ஊக்குவித்தல், பொதுநலனுக்கென கிறிஸ்தவ சமூகம் மத்தியக்கிழக்குப் பகுதியில் ஆற்றவல்லப் பணிகள் ஆகியவைகள் குறித்தும் இத்திங்கள் கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டது எனத் திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

2. திருத்தந்தை : தொடர்ந்த உறுதிப்பாடு, பொறுமை மற்றும் தாழ்ச்சியே வெற்றியின் இரகசியம்

டிச.17,2012. எந்த ஒரு போட்டியிலும் நியாயமான அணுகுமுறைகள், உடலை மதிப்புடன் பேணுதல், போட்டியாளர்களுடன் கொள்ளும் ஒருமைப்பாட்டுணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தி, அவற்றின் வழியாக, மகிழ்வு, மனநிறைவு, மற்றும் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2012ம் ஆண்டு இலண்டன் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்ட இத்தாலிய ஒலிம்பிக் அவையின் உறுப்பினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தொடர்ந்த உறுதிப்பாடு, பொறுமை மற்றும் தாழ்ச்சியே வெற்றியின் இரகசியம் என்று எடுத்துரைத்தார்.
விளையாட்டுக்கள் மனிதருக்கு நல்லவைகளைக் கற்பித்து, அவர்கள் தங்களையே ஆழமாக அறிந்து கொள்ள உதவுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
மனித உணர்வுகளை நன்முறையில் வடிவமைக்கவும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், மனித நேய உணர்வை வளர்க்கவும் உலகளாவிய விளையாட்டுக்கள் உதவுகின்றன என்று மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

3. திருத்தந்தையின் மூவேளை செப உரை

டிச.17,2012. அநீதியான வரிகள், இரக்கமற்ற அதிகாரம், நியாயமற்ற பொருளாதார நெருக்கடி எனக் கூக்குரலிடும் உலகின் பல பகுதிகள், புனித திருமுழுக்கு யோவானின் போதனையில் உண்மை அர்த்தத்தைக் காண முடியும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, நீதியும் பிறரன்பும், வரியும் நேர்மையும், அதிகாரமும் மதித்தலும் போன்றவை ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு, புனித திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் இன்றும் நம் வாழ்வுடன் இயைந்து செல்பவைகளாக உள்ளன என்று கூறினார்.
இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளும்படி வலியுறுத்தும் புனித திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அளவுக்கதிகமாக வைத்திருக்கும் நிலை, மற்றும், அளவுக்கதிகமாகத் துன்புறும் நிலை என்ற இந்த இரு நிலைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்குவதற்கு நீதி அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.
நேர்மையுடனும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலும், அயலவர்மீது அன்புடனும் நடக்க வேண்டியத் தேவை குறித்தும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மூவேளை செப உரையின் இறுதியில், கடந்த வெள்ளியன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் கனெக்டிக்கட் மாநிலத்தில், பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டது குறித்து, தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை.

4. வத்திக்கானுக்கும், தாய்வானுக்கும் இடையே ஒப்பந்தம்

டிச.17,2012. உயர்கல்வித்துறையிலான ஒத்துழைப்பு மற்றும் கல்வித்தகுதிகளையும் பட்டங்களையும் அங்கீகரித்தல் போன்றவைகளில் திருப்பீடத்துக்கும், சீனக்குடியரசு என அழைக்கப்படும் தாய்வானுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக இத்திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கானிலும், தாய்வான் தலைநகர் தாய்பேயிலும் இத்திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 23 பிரிவுகளை உள்ளடக்கி ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தாய்பேயில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான இவ்வொப்பந்தம் கடந்த மாதம் 20ம் தேதி தாய்வான் நாடாளுமன்ற அவையில் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
வத்திக்கான் சார்பில் கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Zenon Crocholewskiயும், தாய்வானின் சார்பில் கல்வி அமைச்சர் Wu Ching-Jiயும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

5. திருப்பீடச் செயலர் : திருப்பீடத்தூதர் பேராயர் Ambrose Madtha, ஐவரி கோஸ்ட் நாட்டின் ஒப்புரவுக்குச் சிறப்புப் பணியாற்றியுள்ளார்

டிச.17,2012. அனைத்து மக்களுடனான பேச்சுவார்த்தைகளில் திறந்த மனப்பான்மையுடனும் தாழ்ச்சியுணர்வுடனும் ஆடம்பரமின்றியும் செயல்பட்ட மறைந்த திருப்பீடத்தூதர் பேராயர் Ambrose Madtha, ஐவரி கோஸ்ட் நாட்டின் ஒப்புரவுக்குச் சிறப்புப் பணியாற்றியுள்ளார் எனப் பாராட்டினார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே.
ஐவரி கோஸ்ட் நாட்டுக்குத் திருப்பீடத்தூதராகப் பணியாற்றி இம்மாதம் 8ம் தேதி அந்நாட்டில் வாகன விபத்தில் உயிரிழந்த பேராயர் Madthaவின் நினைவாக இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால் பெர்த்தோனே, தான் பணியாற்றிய நாட்டு மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவராக விளங்கிய அவர் சென்றவிடமெல்லாம் மதிக்கப்படுபவராகவும் இருந்தார் என்றார்.
மறைந்த பேராயர் Madtha தனது கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றியதிலும், கிறிஸ்துவில் முழுவிசுவாசம் கொண்டிருந்ததிலும் நம் அனைவருக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளார் எனவும் கூறினார் கர்தினால் பெர்த்தோனே.
தான் சந்தித்த அனைத்து மக்களிடமும் கருணையுடனும், புரிந்துகொள்ளும் தன்மையுடனும் பொறுமையுடனும் பேராயர் Madtha நடந்து கொண்டார் என்ற பாராட்டையும் தனது மறையுரையில் முன்வைத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே.

6. பேராயர் Maria Celli : திருத்தந்தையின் Twitterல் தொடர்பு கொண்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளது

டிச.17,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இணையதளத்தில் தன் Twitter கணக்கைத் துவக்கிய ஐந்தே நாட்களில், அப்பக்கத்தின் வழியாக எட்டு மொழிகளில் அவரைத் தொடர்பு கொண்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சமூகத் தொடர்புக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli கூறினார்.
இன்றைய உலகில் Twitter இணையதளத் தொடர்பில் உள்ளவர்கள் 14 கோடிப் பேர் எனவும், இதில் 40 விழுக்காட்டினர் 18 வயதிற்கும், 34 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் கூறப்படும் இந்நிலையில், இத்தகைய ஒரு சமூகத் தொடர்புச் சாதனம் வழியாக மக்களைச் சந்திக்க, திருத்தந்தையும் ஆவல் கொண்டுள்ளது இயல்பே என்று கூறினார் பேராயர் Maria Celli.
இன்றைய பரபரப்பான உலகில், சமூகத் தொடர்புச் சாதனங்களின் வேகம் முன்வைக்கும் சவால்களையும் திருஅவை அறிந்தே உள்ளது என்று கூறியப் பேராயர் Maria Celli, இது குறித்து மக்களுக்குக் கற்பிக்கவேண்டிய கடமையும் அதற்கு உள்ளது என்று கூறினார்.

7. கேரள ஆயர்கள் : மதுபானங்களை அரசே விற்பதை நிறுத்த வேண்டும்

டிச.17,2012. சமூக, பொருளாதார, மற்றும் ஆன்மீக வழிகளில் மக்களைச் சுரண்டுவதுடன், அவர்களின் உடல்நல மற்றும் உளரீதியான பாதிப்புக்களுக்கும் காரணமாகும் மதுபானங்களை அரசே விற்பதை நிறுத்த வேண்டும் என்று கேரள ஆயர்கள், மாநில அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மதுபான விற்பனையில் வியாபாரியாகச் செயல்படும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ள கேரள ஆயர்கள், மதுபானங்கள், மற்றும் போதைப்பொருட்கள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவது எவ்விதம் என்பதைக் கூறும் 27 வழிகாட்டுதல் கருத்துக்களையும் அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர்.
அண்மைக் காலங்களில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அடிப்படைப் பொருட்களின் விலையும், மருந்துகளின் விலையும் கூடியுள்ளது குறித்தும் கவலையை வெளியிட்டுள்ள கேரள ஆயர்கள், அத்யாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க அரசின் தலையீடு தேவை எனவும் விண்ணப்பித்துள்ளனர்.

8. 35கி.மீட்டரில் 130 நாளில் ஒரு இலட்சம் பேர் கொலை: ஈழப் போர் குறித்து தகவல்

டிச.17,2012. "இலங்கையில், 130 நாளில், 35 சதுர கி.மீட்டரில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,'' என இலங்கையின் பி.பி.சி., முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹாரிசன் கூறினார்.
இலங்கையில் நடந்த நான்காம் கட்ட போர் குறித்து, அவர் எழுதிய ஆங்கில நூல், ‘ஈழம், சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற தலைப்பில், காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நூல் ஆசிரியர் பிரான்சிஸ் ஹாரிசன், இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்ற நிலையிலும், போரில் இறந்தவர்கள் எத்தனை பேர், படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, காணாமல் போனவர்கள் நிலை என்ன என்பன போன்ற விவரங்கள் வெளியாகவே இல்லை எனக் கவலையை வெளியிட்டார்.
போர் இறப்பு குறித்து, ஐ.நா.நிறுவனம் வெளியிட்ட முதல் தகவலில், 40ஆயிரம் பேர் எனக் கூறியுள்ளதும், கடந்த வாரம் வெளியான ஐ.நா. நிறுவனத்தின் அறிக்கையில், ஒரு இலட்சம் பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், 2006 முதல் 2010ம் ஆண்டு வரை, ஒரு இலட்சம் பேர், இலங்கையில் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை எனவும் கூறினார் பிரான்சிஸ் ஹாரிசன்.
புதிய இலங்கையை கட்டமைப்போம் எனக் கூறும் இலங்கை அரசு, குறைந்தபட்ச உண்மைகளைக்கூட ஏற்க மறுப்பதால், புதிய இலங்கையை கட்டமைப்போம் என்ற வாக்குறுதியை, உலக சமூகம் நம்ப மறுக்கிறது எனக்கூறும் எழுத்தாளர் பிரான்சிஸ் ஹாரிசன், போரின் விளைவுகளைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, புனரமைப்புப் பணிகளைச் செய்ய, இலங்கை அரசு முன்வந்தால்தான், அமைதியான சமூகத்தை அந்நாட்டில் கட்டமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment